செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

நாளை முதல் குடிக்க மாட்டேன்....



தலைக்கு மேல் வேலை... ஆனால் அந்த வேலையை நான் செய்ய வேண்டியதில்லை. தலையைக் கொடுத்து விட்டு நிம்மதியாக அமர்ந்து கொள்ளலாம்.... அப்படி இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் என் தலையை அப்துல் என்ற நாவிதரிடம் ஒப்படைத்து அமர்ந்திருந்தேன். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் என் தலைப்பகுதி முழுதும் ஆடிக்கொண்டிருந்தது.... சில சமயங்கள் தலையினை மறுபுறம் தள்ளியும், அவரது  பக்கம் சாய்க்க காதைப் பிடித்து இழுப்பதுமாய் அதகளம் செய்து கொண்டிருந்தார் அப்துல்.

பெரும்பாலும் ஒரே கடையில் தான் இந்த வேலைக்கு வருவது வழக்கம். போலவே அங்கே இருக்கும் பெரியவரிடம் தான் தலையைக் கொடுப்பேன்.... ஆளுயர நாற்காலியில் அமர்ந்து கொண்ட பின் அவர் கேட்கும் ஒரே கேள்வி - சோட்டா கர்தூன்... நான் சொல்லும் ஒரே பதில் ம்ம்ம்ம்ம். வேறு பேச்சே கிடையாது. அவர் தொழிலில் மும்மரமாக இருக்க நான் யோசனையில் மூழ்கிவிடுவேன்.  கற்பனைக் குதிரையத் தட்டி விட்டால் தறிகெட்டு ஓடும் சில நிமிடங்கள் அவை...

இம்முறை சென்றபோது பெரியவர் வேறு தலையின் மீது தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தார். எனவே அவராகவே 'அப்துல்..' என விளித்து அவரிடம் என் தலையை ஒப்படைத்தார். பெரியவர் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார் என்றால் அப்துல் நேரெதிர்.... ஈராயிரம் வார்த்தைகளுக்குக் குறைவாகப் பேச மாட்டேன் என்று சபதம் போட்டவராக இருந்தார். இருக்கையில் உட்கார்ந்த என்னிடம், ”கொஞ்சமா எடுக்கணுமா, லைட்டா ட்ரிம் பண்ணணுமா, இல்லை காதோரம் இருக்கும் நீட்டு முடி மட்டும் எடுக்கணுமா, மெஷின் போடவா இல்லை கத்திரிக்கோலா” என எண்ணிடலங்கா கேள்விகள்….

வேறு வழியில்லை – சில வார்த்தைகளை பேசியே ஆகவேண்டும் – ம்ம்ம்ம் என்று சொல்லி தப்பிக்க முடியாது! பதில் சொன்ன பிறகு மேலும் கேள்விகள் தொடர்ந்தது – வெறும் கட்டிங் மட்டுமா, இல்லை ஷேவிங் பண்ணனுமா, தலை முடி வெளுத்துருக்கே டை அடிக்கணுமா, மசாஜ் பண்ணவா எனக் கேட்டுக் கொண்டே இருக்க, வெறும் தலைமுடி மட்டும் வெட்டுப்பா எனச் சொல்லி அமைதியானேன்.  ஆனால் அவரோ பேசிக்கொண்டே இருப்பவர் போலும், தானாகவே பேசிக் கொண்டிருந்தார்.

“வேண்டாண்டா அப்துல், இப்படியே இருந்தா, செத்துடுவ, நாளையிலிருந்து குடிக்காதடா அப்துல்” என தனக்குத் தானே சொல்லிக் கொள்ள, நான் கொஞ்சம் ஸ்வாரஸ்யமாகக் கதை கேட்க ஆரம்பித்தேன்.  அவருக்கு வயிற்று வலி என மருத்துவரிடம் சென்றபோது, “குடிக்காதே எனச் சொன்ன மருத்துவரை “போய்யா வெண்ணை” என்று சொல்லிவிட்டு வந்தாராம்.  தொடர்ந்து குடித்துக் கொண்டே வர, வயிற்று வலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்.  தனக்கே தனது பிரச்சனைக்குக் காரணம் தான் குடிப்பது தான் என்பது இப்போது புரிந்து விட்டதாம்.  

அதனால் “அப்துல் நாளையிலிருந்து குடிக்காதடா!” என்று அவருக்கு அவரே அறிவுரை சொல்லிக் கொள்ள, நான் சும்மா இருக்காமல், “அது சரி அப்துல், அது ஏன் நாளையிலிருந்து குடிக்காம இருக்கணும், நல்ல முடிவு எடுத்துருக்கீங்க, அதை இன்னிக்கே செயல்படுத்துங்களேன்…. இன்னிலிருந்தே குடிக்காம இருக்கலாமே” என்று கேட்க, அவர் சொன்ன பதில், “இல்லை சார் நேத்திக்கே வாங்கி வச்சுட்டேன்… அதுனால நாளைல இருந்து குடிக்க மாட்டேன்!” என்ன ஒரு கடமை உணர்வு! 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார் – இப்பதானே நாளைக்கு வேணும்னு வாங்கிட்டு வந்த! என்று சொல்ல, அப்துல் சொன்ன பதில்…. நாளைக்கும் இதே தான் சொல்வேன் – ”நாளை முதல் குடிக்க மாட்டேன்!”

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

திங்கள், 6 பிப்ரவரி, 2017

காளி Gகாட், கொல்கத்தா – சின்னம்மா - மிருக பலி….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 97

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


காளி Gகாட் கோவில்...

கொல்கத்தாவின் ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி மற்றும் விவேகானந்தர், ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்திருக்கும் பேலூர் மட் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தாவின் புகழ்பெற்ற காளி Gகாட்! ஆமாம் காளி கோவில் தான்…. தேவியின் சக்தி பீடங்களில் காளி Gகாட்-உம் ஒன்று.  இங்கே சதி தேவியின் வலது கால் விரல்கள் விழுந்ததாகச் சொல்கிறார்கள்.  கோவில் என்றாலே கதைகள் இல்லாமலா? நிறைய கதைகள் உண்டு.  ஒரு விஷயம் – கதை உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை.  கதையை மட்டும் ரசிப்போமா….

காளி Gகாட் கோவில் பின் பகுதியில்...
நண்பர்களுடன்

நதியின் உள்ளிருந்து ஒரு ஒளிப்பிழம்பு வெளி வருவதைப் பார்த்த பக்தர் ஒருவர் எங்கிருந்து இந்த ஒளிப்பிழம்பு வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள நதியின் கீழே சென்று பார்க்க அங்கே வலது கால் விரல் உருவத்தில் ஒரு சிலை கிடைக்கிறது. அந்த சிலையிலிருந்து தான் ஒளிப்பிழம்பு வருவதைக் காண்கிறார்.  பக்கத்திலேயே நகுலேஷ்வர் பைரவ், லிங்க உருவச் சிலையும் கிடைக்கிறது. இரண்டு சிலைகளையும் நதியிலிருந்து வெளியே எடுத்து வந்து அந்த காட்டுப் பகுதிக்குள் வைத்து பூஜிக்க ஆரம்பிக்கிறார்.  இந்தக் காட்டுப் பகுதிக்குள் இன்னுமொரு கதைக்கான விதை வந்து சேர்கிறது….. அது என்ன கதை…..



காளி Gகாட் கோவில்...
மாலைகள் காளிக்கு..... 

பெங்கால் பகுதியை ஆண்டு வந்த தேவபாலா எனும் அரசன் தனது மனைவி, மற்றும் குழந்தை சௌரிங்கி நாதா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி இறந்து போக, ராஜா இன்னுமொரு திருமணம் செய்து கொள்கிறார். தாயை இழந்த சௌரிங்கி நாதா சின்னம்மாவின் வளர்ப்பில்… [தலைப்பில் சின்னம்மா எனப் பார்த்து அரசியல் பதிவோ என நினைத்தவர்களுக்கு…. இந்த சின்னம்மா வேற!] சின்னம்மா பொறுப்பில் வந்த சௌரிங்கி நாதாவுக்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது. சின்னம்மாவுக்கும் குழந்தை பிறக்க, திட்டம் தீட்டுகிறார் சின்னம்மா… சௌரிங்கி நாதா இருந்தால் ராஜாவுக்குப் பிறகு தனது மகன் ராஜ பொறுப்பில் வர முடியாது என்பதால் சௌரிங்கி நாதாவினைத் தீர்த்துக் கட்ட வேண்டும்…..

காளி Gகாட் கோவில்...
வெளியே நடக்கும் பூஜைகள்.... 

சௌரிங்கி நாதா காட்டுக்குள் – மேலே சொன்ன அதே காடுதான் – அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப் படுத்தப் படுகிறார். அது மட்டுமல்லாது, கைகள், கால்கள் என நான்கு அங்கங்களும் துண்டிக்கப்படுகின்றன.  கை, கால்கள் இல்லாமல் இருக்க அவரை காட்டு விலங்குகளிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள இயலாது என்பதால் இந்த கொடூர செயல்! அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது காலகாலமாக நடப்பது தானே…. ஆனால் சௌரிங்கி நாதாவின் நல்லகாலம், அவர் காட்டுப்பகுதியில் மத்யேஸ்ந்திர நாதா கண்களில் படுகிறார் சௌரிங்கி நாதா.  கோரக்நாதா என்பவரின் பொறுப்பில் சௌரிங்கி நாதா விடப்பட, அவருக்கு, யோகா முதல் பல விஷயங்கள் சொல்லிக் கொடுக்கிறார்.


காளி Gகாட் கோவில்...
குங்கும விற்பனை....


காளி Gகாட் கோவில்...
சிவப்பில் எத்தனை வகை.... 

பன்னிரெண்டு வருடங்களில் யோகா மூலம் அவருக்கு கைகளும் கால்களும் வளர்கின்றன.  அந்த யோகாவிற்கு கண்ட மண்ட யோகா என்ற பெயரும் சொல்கிறார்கள். சௌரிங்கி என்ற வார்த்தைக்கு நான்கு அங்கம் என்ற அர்த்தம் உண்டு…. கொல்கத்தாவின் வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் நால்வழிப் பகுதிக்கு சௌரிங்கி என்ற பெயர் உண்டு என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.  இப்போதைய காளி Gகாட் அமைக்கப்பட்டது இந்த சௌரிங்கி நாதா அவர்களால் என்பதையும் சொல்லி விடுகிறேன்…. 

காளி Gகாட் கோவில் செல்லும் பாதையில்...

முதலில் ஒரு சிறிய கோவிலாக, ஒரு குடிசை போல இருந்த கோவில், பல்வேறு ராஜாக்கள், மஹாராஜாக்கள் வழி வழியாக தந்த ஆதரவினால் பெரிதாக கட்டப்பட்டன.  இப்போதைய கோவில் சுமார் இரு நூறு ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறார்கள்.  


காளி Gகாட் கோவில்...
காத்திருக்கும் பண்டாக்களும் மக்களும்....

கோவில் பகுதிக்குச் சென்ற போது, வாயிலில் அத்தனை பண்டாக்கள்…. வரும் பக்தர்களை ஈ மொய்ப்பது போல மொய்த்துக் கொள்கிறார்கள்.  நேரடியாக காளியிடம் உங்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கிறேன் என வலை வீசுகிறார்கள். மாட்டினால் சுரண்டி விடுவார்கள்….


காளி Gகாட் கோவில்...
இந்தப் புன்னகை என்ன விலை.... 
குங்குமம் விற்பவரின் பெண்....

காளி Gகாட் கோவில்...
மேலே இருக்கும் நான் எடுத்த குழந்தையின் படம் காண்பித்த போது மகிழ்ச்சியில் அந்தக் குடும்பம்....

பொதுவாகவே இம்மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது. கொஞ்சம் விட்டாலும் பிரித்து மேய்ந்து விடுவார்கள். வரும்போது சட்டை, பேண்ட் பாக்கெட் காலியாக நிறையவே வாய்ப்பு உண்டு. முன்பே தெரியும் என்பது மட்டுமல்லாது, பெங்காலி நண்பரும் எச்சரிக்கை செய்திருந்ததால் ஜாக்கிரதையாக எவர் கையிலும் மாட்டாது தப்பித்தோம்.


காளி Gகாட் கோவில்...

நேற்றைய பதிவுக்கு இந்தப் படமும் பொருத்தமாக இருந்திருக்கலாம்....  கட்டிலில் படுத்திருக்கும் நபர் இல்லாதிருந்தால்.... 

கோவிலின் பின் பகுதியில் மிருகபலி உண்டு! ஆடுகள் நிறைய காத்திருந்தது. சில இடங்களில் மாலை போட்டுக்கொண்டு வெட்டுப்பட காத்திருந்த ஆடுகளைப் பார்த்ததும் அங்கிருந்து புறப்பட்டோம் – வெட்டுப்படுவதைப் பார்க்கும் சக்தி மனதுக்கு இல்லை. மிருக பலி தவறென்று சொல்லும் பலரும் இறைச்சி சாப்பிடுவதை மட்டும் தவறாக நினைப்பதில்லை என்பதையும் நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.  இந்த பலி பற்றி நண்பர் விவரித்ததை சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்…


காளி Gகாட் கோவில்...
பலியிடப்பட்ட ஆடுகள்....

பெரும்பாலும் ஆடுகளை மட்டுமே இங்கே பலி கொடுக்கிறார்கள். ஆட்டின் பின்பக்கத்தில் சிலர் ஆட்டைப் பிடித்துக் கொள்ள பெரிய கத்தியால் ஒரே வெட்டு… கழுத்தும் உடலும் தனியாகும். வெட்டிய பிறகு சில நிமிடங்கள் வரை துடிக்கும் உடலைப் பார்க்காமல் வெளியே வருவார்கள் அனைவரும் – ஆடு இறந்தது உறுதியான பிறகு அந்த ஆட்டின் தலை மீது சூடம் வைத்து காளிக்கு ஒரு ஆரத்தி…. அதன் பிறகு ஆட்டின் தலை பூஜாரிக்கு – உடல் பகுதி முழுவதும் பலி கொடுத்தவருக்கு… அதை அவர் கிராமத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இப்படித்தான் மிருக பலி நடக்கும் என்பதை விவரித்து நண்பர் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் ஆடிப்போயிருந்தேன் நான்.  கொடுமையான விஷயம்……


மேலுள்ள கொடூர படத்தினை மறக்க.....
கொல்கத்தா நகரின் சாலை சந்திப்பொன்றில் இருக்கும் பசுமைச் சிலை.....

எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது இந்த காளி Gகாட் கோவில். காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், மாலை ஐந்து மணி மணி முதல் இரவு பத்தரை மணி வரையும் கோவில் திறந்திருக்கும். முடிந்த போது பார்த்து வரலாம். கோவில், கோவில் பகுதிகளில் இப்படி பல விதக் காட்சிகளைப் பார்த்து அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

Clicks and Colours – Theme 132 – மூன்று – புகைப்படங்கள்….


ஃபேஸ்புக் – எத்தனை எத்தனை குழுக்கள் இங்கே உண்டு என்பதற்கு ஒரு கணக்கே இல்லை.  புகைப்படங்களுக்காகவே நிறைய குழுக்கள் இயங்குகின்றன. எல்லாவற்றிலும் உறுப்பினராக இருந்தால் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்தால் கூட பார்த்து முடிக்க முடியாத அளவிற்கு இற்றைகள் வந்த வண்ணமே இருக்கும்…  நானும் ஒன்றிரண்டு குழுக்களில் இருக்கிறேன்.  அப்படி ஒரு குழு Clicks and Colours! நமது வலையுலக நண்பர்கள் சிலரும் அக்குழுவில் உண்டு. வாராவாரம், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு Theme அறிவித்து உறுப்பினர்களை அதற்குத் தகுந்த புகைப்படங்கள் வெளியிட அழைப்பு விடுவது வழக்கம்.

இந்த வார இறுதியின் மையக்கரு – மூன்று! Clicks and Colours குழுவில் குறிப்பிட்டு இருப்பதை அப்படியே இங்கே தருகிறேன்.

Concept 132
C & C Welcomes..
Weekend Concept : Three
வாரயிறுதி மையக்கரு : மூன்று
மூன்று என்னும் எண்ணிக்கையில் உள்ள பொருட்களின் புகைப்படங்கள், மூன்று என்பதை சொல்லும் வித்தியாசமான புகைப்படங்கள் இதற்குள் அடங்கும்.
ஐந்து புகைப்பட வரைமுறை உண்டு.
அதிகம் போட விரும்பினால்,
For Desktop :
நமது C & C குழுவின் Photos பிரிவில், Albums என்பதில்,
Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
For Mobile :
நமது C & C குழுவின் Info Tab யில் Photos பிரிவில், View All கொடுத்தால் Albums இருக்கும். அதில் இருக்கும் Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
Happy Posting..
Admin
Ahila Puhal
Admin Desk
Geetha Mathi
Ezhil Arul
Krishna Ranjani

நேற்று தில்லியை அடுத்த சூரஜ்குண்ட்-ல் நடக்கும் வருடாந்திர மேளா சென்றிருந்த போது இந்த வார மையக்கரு நினைவுக்கு வர, இதற்குத் தகுந்த புகைப்படங்கள் எடுக்கலாமே என்று நிறைய படங்கள் எடுத்தேன்.  அவற்றில் சில இந்த ஞாயிறின் புகைப்படங்களாக…. 


படம்-1: ஹரியானாவில் வீடுகளின் மண் சுவர்களில் இப்படி ஓவியங்கள் வரைவதுண்டு...... 


படம்-2: எலிஃபண்டா குகைகளில் இருக்கும் சிலையின் ஒரு பிரதிமை - மேளாவிலும்.....



படம்-3: சத்தீஸ்கர் மாநிலத்தில் தயாராகும் டோக்ரா கலைவடிவங்கள்.... 



படம்-4: டெரக்கோட்டாவில் மூன்று பிள்ளையார்கள்... 



படம்-5: டெரக்கோட்டா விளக்குகள்.... 



படம்-6: குட்டி குட்டி பொம்மைகளோடு கீ செயின்....



படம்-7: ஆனை ஆனை அழகர் ஆனை.....



படம்-8: மூணு வண்டி ரெடியா இருக்கு...  எதுல வேணும்னாலும் போலாம்.....



படம்-9: சிலைகள்...  



படம்-10: ஹரியானா பாரம்பரிய உடையில் மூன்று ஆண்கள்....



படம்-11: மண் பானைகளின் மூன்று வரிசை!



படம்-12: அகாடா என அழைக்கப்படும் குஸ்தி பயிற்சிக்கள மாடல் முன் குஸ்தி செய்யும் மூன்று இளஞ்சிட்டுகள்....


என்ன நண்பர்களே இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

ராமகிருஷ்ணா மட் – பேலூர், கொல்கத்தா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 96

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

கொல்கத்தாவின் சில சிறப்பு மிக்க இடங்களை பார்த்து இரவு உணவுக்குப் பிறகு நல்ல ஓய்வு. அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டு நாங்கள் முதன் முதலில் சென்ற இடம் ராமகிருஷ்ணா மட். கொல்கத்தா – ஹௌரா என்ற இரண்டு இடங்களும் ஹைதராபாத், செகந்திராபாத் போல ஒட்டி இருக்கும் இரட்டை நகரங்கள்.  நதிக்கு இப்புறம் கொல்கத்தா என்றால் அப்புறம் ஹௌரா.  நாங்கள் சென்ற ராமகிருஷ்ணா மட், ஹௌரா பகுதியில் அமைந்திருக்கிறது.  காலையிலேயே நானும் நண்பர்களும் அங்கே புறப்பட்டுச் சென்று விட்டோம்.

பேலூர் மட்...
படம்: இணையத்திலிருந்து....

நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில், ஹூக்ளி நதியைக் கடந்து பேலூர் மட் சென்று சேர்ந்தோம்.  பேலூர் மட், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் அன்னை சாரதா தேவியின் நினைவிடம் என மிகவும் ரம்மியமான சூழல் அங்கே அமைந்திருக்கிறது. இந்த மடம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.  நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு நிறைய பேர் வருவதுண்டு. அமைதியான சூழல், நதிக்கரை ஓரத்தில், மனதுக்கும் நிம்மதி வழங்கும் ஒரு இடம் என்பதால் மொழி, மதம், நாடு கடந்து நிறைய பேர் இங்கே வருகிறார்கள். 

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடராக இருந்த ஸ்வாமி விவேகானந்தர் காலத்தில் தனது குருவிற்கு அமைத்த நினைவிடம், அவரது நற்கருத்துகளை பரப்ப அமைத்த ஆஸ்ரமம் இது தான். இந்த பேலூர் மடத்தில் தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது கடைசி நாட்களை கழித்தார்.  ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் ஸ்வாமி விவேகானந்தர் ஆகிய மூவருக்கும் நினைவிடங்கள் இங்கே உண்டு. மிகவும் அருமையான இடம்.  அமைதியான சூழல்…. அங்கே சில மணி நேரங்கள் இருந்து அமைதியை ரசிக்க வேண்டும்….. 1938-ஆம் ஆண்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. மேலே இருப்பது அந்த புதிய கட்டிடம்.…..

நதிக்கரையிலிருந்து பேலூர் மட்...
படம்: இணையத்திலிருந்து....

ஸ்வாமி விவேகானந்தர் தங்கி இருந்த அறை இன்னமும் இருக்கிறது. அங்கே அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் என அப்படியே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து வந்தது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.  மற்ற இடங்களைப் போல அல்லாமல் இங்கே சென்ற போது, இந்த உலகத்தில் பெரிய மாற்றம் கொண்டு வந்த ஒரு மஹாபுருஷனின் அறைக்குள் நானும் இருக்கிறேன் என்ற உணர்வு கிடைத்தது.  மனதில் ஒரு வித அமைதி நிலவ, ஒரு ஆனந்த நிலை… கொல்கத்தா சென்றால் நிச்சயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இந்த பேலூர் மட்….

அன்னைக்கு ஹூக்ளி நதியைப் பார்த்தபடி இருப்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்பதால் அன்னை சாரதா தேவியின் நினைவிடம் மட்டும் நதியை நோக்கியபடி இருக்கிறது. எங்கும் அமைதி நிலவ அங்கேயே இருந்துவிடலாம் என்று தோன்றுவது இயற்கை.  முழுமையாக எல்லா இடங்களையும் நின்று நிதானித்து பார்க்க குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது வேண்டும். கொல்கத்தா செல்வதென்றால் பேலூர் மட் பார்ப்பதற்கு அரை நாளையாவது ஒதுக்கிக் கொள்வது நல்லது…..

இங்கே ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும். பெரும்பாலான இந்திய நினைவிடங்கள்/வழிபாட்டுத் தலங்கள் போலவே இங்கேயும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை!  அற்புதமான கட்டிடக்கலையை இங்கே காண முடியும்! அதை புகைப்படமாக எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை!  சாலையிலிருந்து எடுத்த ஒன்றிரண்டு படங்கள் தவிர வேறு படங்கள் எடுக்க இயலவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமுண்டு! இங்கே பகிர்ந்து கொண்டிருக்கும் படங்கள் கூட இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான்.

காலை 06.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை நேரத்தில் 04.00 மணி முதல் 07.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மற்ற நேரங்களில் உள்ளே சென்றாலும் நினைவிடங்களைப் பார்க்க இயலாது.  போலவே குளிர் காலங்களில் திறந்திருக்கும் நேரத்தில் சற்றே மாற்றம் உண்டு.  மேலே சொன்னது போல குறைந்தது அரை நாளாவது இங்கே இருக்கும்படிச் சென்றால் நிதானமாய் எல்லா பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்..

பேலூர் மட் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் எது? அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 1 பிப்ரவரி, 2017

புகைப்படக் கவிதைகள் – கவிதை எழுத அழைப்பு - மின்னூலாக்க முயற்சி…..



நான் எடுத்த புகைப்படங்களை/பிடித்த ஓவியங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்கேற்ற கவிதைகளை எழுதுமாறு நண்பர்களிடம் கேட்டு எனது பக்கத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி சில கவிதைகள் எனது வலைப்பூவில் வெளியிட்டது உங்கள் நினைவில் இருக்கலாம். அப்படி வெளியிடும் பொழுது, படங்களுக்கு வரும் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடும் எண்ணம் உண்டு என்று எழுதி இருந்தேன். மின்னூலாக்க முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறேன்.  அவற்றை தொகுக்கும் இந்த சமயத்தில் இன்னும் சில படங்களை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

இந்தப் பதிவில் உள்ள படங்களில் ஏதாவது ஒன்றிற்கு அல்லது எனது வலைப்பூவில் நான் வெளியிட்ட எந்தப் புகைப்படத்திற்கு வேண்டுமானாலும் நீங்கள் கவிதை எழுதி அனுப்பலாம். நீங்கள் அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி – venkatnagaraj@gmail.com உங்கள் கவிதைகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 28-02-2017.  அதாவது இந்த மாதம் முழுவதும் அனுப்பலாம்… மார்ச் மாதம் எல்லாவற்றையும் தொகுத்து மின்னூலாக தொகுத்து வெளியிடலாம். 

இதோ சில படங்கள்…..


படம்-1:   படம் எடுத்த இடம், குஜராத், கட்ச் பகுதி.


படம்-2:   படம் எடுத்த இடம், ஆந்திரப் பிரதேசம்.


படம்-3:   படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-4:   படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-5:   ஆதிவாசிகள் நடனம்....  படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-6:   படம் எடுத்த இடம்,  ஆந்திரப்பிரதேசம்.


படம்-7:   படம் எடுத்த இடம், ஒரு கோவில் அருகே, ஆந்திரப்பிரதேசம்.


படம்-8:   படம் எடுத்த இடம், அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேசம்.


படம்-9:   படம் எடுத்த இடம்,  ஆந்திரப்பிரதேசம்.

படம்-10:   படம் எடுத்த இடம், புவனேஷ்வர். 

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரவும், அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.