தில்லி-ஹரித்வார் நெடுஞ்சாலை. ஹரித்வார் செல்லும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் இன்னோவா, மாருதி, டவேரா, பேருந்துகள் மற்றும் லாரிகள் என்று பலவிதமான வாகனங்கள் மணிக்கு 80-100 கிலோ மீட்டர் வேகத்தில் சர்ரென்று பறந்து கொண்டிருக்கும் ஒரு சாலை. சாலையின் இரு மருங்கிலும் நிறைய [Dhabha]தாபாக்கள் அதாவது உணவகங்கள்.
இத்தனை உணவகங்கள் இருந்தால் அத்தனையிலும் வியாபாரம் ஆகுமா என்ன? அதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களை நிறுத்தி அதில் பயணிக்கும் பயணிகளை அழைக்க இந்த உணவகங்கள் பணிக்கு அமர்த்தி இருப்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? பெரும்பாலும் சிறுவர்கள்தான்.
அதுவும் அவர்கள் சாலையின் ஓரத்திற்கே வந்து கையை ஆட்டி அழைக்கும் போது வேகமாக வரும் வாகனங்கள் அவர்கள் மேல் மோதி அடிபட்டால் அவர்கள் கதி அதோகதிதான்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பருடன் ஹரித்வார் சென்றபோது சாலையின் இருமருங்கிலும் இப்படிப் பல சிறுவர்களைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு சிறுவனும் பயணிகளை அவன் வேலை செய்யும் உணவகத்திற்கு அழைக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறான்.
நானும் நண்பரும் அப்படி ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிடும்போது பார்த்தால், வெளியே இருக்கும் சிறுவனைப் போலவே இன்னொரு சிறுவன் கையில் நீண்ட குச்சியுடன் நின்று கொண்டிருந்தான். அவனது வேலை என்னன்னு பார்த்தா பக்கத்திலிருக்கும் மரத்தில் அமர்ந்திருக்கும் நான்கு குரங்குகள் சாப்பிடும் நபர்களிடமிருந்து உணவைப் பறித்துக்கொள்ளாமல் தடுப்பதுதான். அந்தச் சிறுவனுக்கு இதுவும் கஷ்டமான வேலை தான்.
மொத்தத்தில் அந்த உணவகத்தில் நான்கைந்து சிறுவர்கள் இது போல பல வேலைகள் செய்து கொண்டு இருந்தனர். இதையெல்லாம் யாரும் கேட்கவும் மாட்டேன் என்கிறார்கள். ஒரு சிறுவனை அழைத்து ”படிக்கவில்லையா, இப்படி சிறு வயதில் வேலைக்கு வந்து விட்டாயே?” என்று கேட்டவுடன் அவன் கண்களில் ஒருவித மிரட்சியுடன் வேகமாக அடுத்த வேலையை கவனிக்கச் சென்று விட்டான்.
வெளியே இருந்த சிறுவனிடம் கேட்கலாம் என்றால் அவனும் வாகனங்களை நிறுத்துவதில் கவனமாய் இருக்க, உணவகத்தின் உரிமையாளர் வேறு எங்களையே முறைத்துக் கொண்டு இருக்கிறார் – “வந்தமா, சாப்பிட்டமா, போனமான்னு இரு!” என்று சொல்லாமல் சொல்லி.
இரண்டொரு நாட்களுக்கு முன்பு பேப்பரில் ஒரு செய்தி. தில்லியில் உள்ள ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த 40 சிறுவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக. தோலைப் பதப்படுத்தப்படும் போது வெளியாகும் அனைத்து நச்சுப் பொருட்களும் இந்த சிறார்களின் உடல் நிலையை எவ்வளவு பாதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ!
குழந்தைத் தொழிலாளிகள் இல்லை என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்னமும் நமது நாட்டில் நிறைய குழந்தைகள் இப்படிப்பட்ட உணவகங்களிலும் தொழிற்சாலைகளிலும், தீப்பெட்டி, பட்டாசு தயாரிக்கும் இடங்களிலும் வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களது சிறு வயது ஆசைகளை, கல்வியை, விளையாட்டை பறித்து... ச்சே! நினைக்க நினைக்க மனசு வலிக்கிறது. எப்போது மாறும் இந்த நிலை? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்னதான் செய்யப் போகிறார்கள் இந்த ஆட்சியாளர்களும், அரசும்? மனதில் அடுக்கடுக்காய் கேள்விகள். விடைதான் தெரிந்தபாடில்லை.
மீண்டும் சந்திப்போம்.
வெங்கட்.


