ஞாயிறு, 22 நவம்பர், 2015

மயூர் நிருத்ய – மயில் நடனம் – மதுராவிலிருந்து


கண்ணனுக்கும் ராதைக்கும் இருந்த காதல் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமா?  காதல் என்று வந்து விட்டாலே ஊடலும் வரத்தானே செய்யும். அப்படி ஒரு சமயம் ஊடல் வந்து ராதையும் கண்ணனும் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.  ராதை சோகமே உருவாக இருக்கிறாள்.  கண்ணனோடு தானே ஊடல். கண்ணனின் சிகையில் சூடிக்கொள்ளும் மயிலிறகு கொண்ட மயில்களோடு எனக்கு என்ன ஊடல்?“ என்று நினைக்கிறாள் ராதை.  அழகிய மயிலின் நடனத்தைக் கண்டு கொஞ்சம் மனதைத் தேற்றிக்கொள்ள நினைக்கிறாள் ராதை.

மயில்கள் நடனமாடுவதைப் பார்க்கலாமே என தனது வீட்டை விட்டு வெளியே வருகிறாள். எல்லாம் உணர்ந்தவன் ஆயிற்றே அந்தப் பொல்லாத கண்ணன் – ராதை மயில் நடனமாடுவதைப் பார்க்கவா போகிறாள்? என்று சிரித்துக் கொண்டே, ஊரில் உள்ள அத்தனை மயில்களையும் மறைந்து போகச் செய்கிறான். ராதை வெளியே வந்து பார்க்க, ஊரில் ஒரு மயிலும் இல்லை. அனைத்துமே மாயமாக மறைந்து போயிருந்தன. என்ன கொடுமை இது – கண்ணனைக் காணாத சோகத்தை மயில் நடனம் பார்த்தாவது போக்கிக்கொள்ள நினைத்தால் அதுவும் முடியவில்லையே..... 

சோகத்துடன் தோட்டத்து மரத்தடியில் அமர்ந்து கொள்கிறாள் ராதை.  ராதைக்கு இத்தனை வருத்தமா?  தாங்கவில்லை கண்ணனுக்கு.....  தானே மயில் போல வேடமிட்டு ராதையின் முன் வருகிறான் – அழகிய மயூர் நிருத்ய – அதாவது மயில் நடனம் ஆரம்பிக்கிறது. கண்ணனே மயிலாக வந்த பிறகு மறைந்த மயில்களும் வந்து விடுகின்றன.  அங்கே அற்புதமாக ஒரு நடனம் அரங்கேறுகிறது.  ராதையின் மனமும் மகிழ்ச்சி கொள்கிறது.  வந்திருப்பது கண்ணன் தான் என்று தெரிந்த பிறகு அவளுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஊடலும் வெட்கம் கொண்டு விட்டு விலகுகிறது.

[வ்]ப்ரஜ் பூமி என அழைக்கப்படும் மதுராவில் இந்நிகழ்ச்சி நடந்ததாக சொல்லப்படுகிறது.  இன்றைக்கும் இந்த நிகழ்ச்சியை ஒரு நாட்டிய நாடகமாக மதுரா நகரின் சில நாட்டிய குழுக்கள் நடத்தி வருகிறார்கள்.  அப்படி ஒரு குழு சமீபத்தில் தில்லியில் Indira Gandhi National Centre for the Arts நடத்திய National Cultural Festival of India இந்த மயூர் நிருத்யத்தினை ஆடி காண்போர் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தார்கள்.  இந்த நடனம் போலவே வேறு ஒரு நடனமும் இப்பகுதியில் உண்டு. அந்நடனத்திற்குப் பெயர் சக்ர நிருத்ய.... 

விஷ்ணுவின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரம் கையில் வைத்து ஆடும் நடனம்.  சக்கரத்திற்குப் பதிலாக இவர்கள் பயன்படுத்துவது ஒரு பெரிய தாம்பாளம் – ஹிந்தியில் தாம்பாளத்தினை ‘பராத்என அழைப்பார்கள். அந்த தாம்பாளத்தை சுழற்றி விட்டு ஒரு விரலில் பிடித்துக் கொண்டே நடனமாடுகிறார் கிருஷ்ணர்.  நடுநடுவே தாம்பாளத்தை மேலே தூக்கிப் போட்டு மீண்டும் பிடித்து ஆடுகிறார்.  இப்போது இந்த மயூர் நிருத்ய மற்றும் சக்கர நிருத்ய இரண்டுமே சேர்ந்தே ஆடுகிறார்கள்.

பின்னணியில் இசையோடு கூடிய பாடல் ஒலிக்க, நடுநடுவே மயிலின் அகவல் ஓசையையும் நீங்கள் கேட்க முடியும். நடனத்தினைப் பார்க்கும் போது நாமும் கண்ணனும் ராதையும் ஆடிய வ்[ப்]ரஜ் பூமிக்குச் சென்று விடுகிறோம்....














நடனத்தினை நான் ரசித்த போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நடனம் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் படங்களாவது உங்களால் பார்க்க முடியுமே என்ற எண்ணத்தில் தான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  நடனத்தின் சில காணொளிகள் Youtube-ல் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் பார்க்கலாமே!

என்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்......

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

சனி, 21 நவம்பர், 2015

படமும் ‘ப”வில் வரும் பெயர்களும்!


சில வாரங்களுக்கு முன்னர் “பொக்கிஷம்பகுதியில் கவிதைப் போட்டி-2015 மற்றும் ஒரு போட்டியும்! என்ற பதிவில் ஆறுவது சினம் என்று படம் வெளியிட்டு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வார்த்தைகள் எழுதச் சொல்லி இருந்தேன்.  இன்று மீண்டும் ஒரு படம் – மீண்டும் ஒரு போட்டி!



படத்தைப் பாருங்கள். “ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை உடைய பொருட்களாகச் சொல்லுங்கள். கவனமாகப் பார்த்தால் 20 பெயர்கள் வரையில் சொல்லலாம்!

எனக்குத் தெரிந்த வார்த்தைகள் நாளை மாலை இதே பதிவில் வெளியிடப்படும்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

வெள்ளி, 20 நவம்பர், 2015

ஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்! – குற்றம் கடிதல்



நல்ல மனம் வாழ்க!

இவர் பெயர் ராஜ்குமார், டிரைவர் வேலை. நேற்று இரவு சுமார் 1.00 மணியளவில் தரகம்பட்டி-ல் இருந்து அய்யலூர்-க்கு திருமணதிற்காக பெண் அழைத்து வந்தார். அப்போது அய்யலூர் ரயில்வே கேட் போட்டு இருந்தது.

அங்கு 10 நிமிடம் வண்டி டிரைவர் ராஜ்குமார் கேட் திரபதற்காக காத்து இருந்தார். ரயில் சென்றது. பிறகு கேட் திறந்தது. வண்டியை ஒட்டிக் கொண்டு சுமார் 300 மீட்டர் சென்றார். அது முத்துனயக்கன்பட்டி பகுதி-யில் இரண்டு பெண்கள் நடு ரோடில் இருப்பதைக் கண்டார்.

ஒரு தாய் தனது நிறைமாத கர்ப்பிணி மகளுடன் அழுதுகொண்டு இருந்ததை பார்த்தார். சற்றும் தயங்காமல் வண்டியை நிறுத்தி அழுவதற்கான காரணத்தை கேட்டார். அவர்கள் அழுதுகொண்டே நிறைமாத கர்ப்பிணி-க்கு இடுப்பு வலி இருப்பதாக சொன்னார்கள்.

108 ஆம்புலன்ஸ்-க்கு சொல்லியாச்சா என்று ராஜ்குமார் கேட்டார் . அவர்கள் அதற்கு 108 வண்டி வருவதற்கு 1/2 மணிநேரம் ஆகுமாம் என்றார்கள். சற்றும் தயங்காமல் தனது வண்டியில் இருந்த 10 நபர்களை (மணப்பெண் உட்பட) அதே இடத்தில் இறக்கிவிட்டு அந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த பெண்-க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு 1/2 மணி நேரத்துக்கு பிறகு வந்து மணமகள் மற்றும் 10 நபர்களும் திருமண வீட்டுற்கு அழைத்துச் சென்றார்.

மனித நேயம் மிக்க திரு ராஜ்குமார் அவர்களை பாராட்டலாமே!

ஃபேஸ்புக் பக்கத்தில் திரு ம. ராஜா, அய்யலூர் என்பவர் பகிர்ந்தது இங்கே மீண்டும்.

நம் சார்பாகவும் திரு ராஜ்குமார் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!


புத்தகமும் அதன் ஒரு பக்கமும்:



கோபம் கொள்வது என்ன நியாயம்?





தில்லிக்கு வந்த திருப்பதி:

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்லியில் வைபவோத்ஸவம் நடந்தது. தினம் தினம் திருப்பதியில் என்னென்ன பூஜைகள் நடக்குமோ அவற்றை அப்படியே செய்தார்கள். அதற்காகவே தற்காலிகமாய் கோவில் அமைத்து தில்லி வாழ் மக்களும் திருப்பதி போகாமலேயே அங்கே நித்தம் நடக்கும் பூஜைகளைக் கண்டு மகிழ வசதி செய்திருந்தார்கள்.  அப்போது அங்கே எடுத்த திருப்பதி பாலாஜி சிற்பத்தின் புகைப்படம் இப்பதிவில்.....




எதையும் தாங்கும்!:

பத்து வருடங்களுக்கு முன்னர் வந்திருந்த விளம்பரம் – ஆனால் நான் இப்போது தான் பார்க்கிறேன் – வெளி நாட்டு விளம்பரம் என்பதாலோ! நீங்களும் பாருங்களேன்.  எத்தனை ஓட்டம் ஓடினாலும் தாங்கும் – ஒரு Hot Dog சாப்பிட எத்தனை ஓட்டம்!



குற்றம் கடிதல்:

குற்றம் கடிதல் படம் பற்றி இணையத்தில் நிறையவே எழுதி விட்ட பிறகு இன்றைக்கு அப்படம் பற்றி சொல்ல என்ன இருக்கு?  சில நாட்களாகத் தான் அப்படத்தில் வரும் ஒரு பாடலைக் கேட்க முடிந்தது – காலை நிலா காலை நிலா பாடலைத் தான் சொல்கிறேன்.  அருமையாக படம் பிடித்திருக்கிறார்கள்.  நான் ரசித்த அப்பாடலை நீங்களும் ரசிக்க இதோ.....




படித்ததில் பிடித்தது:

பெயர் உதிர்தல்



கருவேல மரத்தின்
முள்ளடர்ந்த புதர்க் கிளையில்
பெயரறியாத மஞ்சள்குருவி
கட்டிமுடித்த கூட்டிற்கு
பெயரொன்றை சூட்டினேன்
பெயரை நிலைநாட்டத் துடிக்கும்
மனித இனத்தின் இயல்பில்.
முட்டைகள் இடப்பட்டு,
அடைகாக்கப்பட்டு
குதூகலமாய் வெளிவந்த குஞ்சுகள்
இதமாக இரை ஊட்டப்பட்டன
அன்பாக அரவணைக்கப்பட்டன
சிறகடிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
தானாக தனக்காக
குஞ்சுகள் பறக்க அறிந்ததும்
கூட்டினைச் சிறிதும்
சட்டை செய்யாமல் பறந்து போயின
அனைத்துக் குருவிகளும்
அதனதன் திசையில்
வாழ்வதற்கு வீடு அல்ல
தம் வாழ்வே வீடென்று
சொல்லாமல் சொல்லி.
அடுத்தொரு தினம்
காற்றுடன் கூடிப்பெய்த மழையில்
பறவைகளற்ற கூட்டோடு
சிதைந்து உதிரத் தொடங்கியது
மரத்திலிருந்து
நான் சூட்டிய பெயரும்!

-          கீர்த்தி.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….
நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

வியாழன், 19 நவம்பர், 2015

நாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்கள் - புதினா போட்ட தேநீர்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 23

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22

எங்களுடைய இப்பயணத்தில் பஞ்ச் துவாரகா மட்டுமே தரிசிக்கும் எண்ணத்துடன் சென்றதால் பக்கத்தில் உள்ள மற்ற இடங்களுக்குச் செல்ல நேரம் ஒதுக்க முடியவில்லை. பொதுவாகவே பஞ்ச் துவாரகா பயணம் செய்பவர்கள் எட்டு அல்லது ஒன்பது நாட்கள் வரை அங்கே இருந்து பஞ்ச் துவாரகா என அழைக்கப்படும் கோவில்கள் மட்டுமல்லாது, பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்களுக்கும் செல்வது வழக்கம்.  ஆனால் எங்களுக்கு கிடைத்ததோ நான்கு நாட்கள் மட்டுமே என்பதால் பஞ்ச் துவாரகா கோவில்களும், இரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் மட்டுமே. 

ஏக்லிங்க்ஜி! - படம் இணையத்திலிருந்து....

நாத்துவாராவின் அருகிலேயே சில பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு. நாத்துவாராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஏக்லிங்க்ஜி மஹாதேவ் கோவில் இருக்கிறது.  மேவார் பிரதேசத்தினை ஆண்ட மஹாராணா ராஜாக்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ஐந்து முகங்களைக் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மேற்கில் பிரம்மா, வடக்கில் விஷ்ணு, கிழக்கில் சூர்யன், தெற்கில் ருத்ரன், மேற்புறம் லிங்க ஸ்வரூபம் என ஐந்து முகங்களைக் கொண்ட சிவலிங்கம்.  இக்கோவிலின் கட்டிடக் கலை மிகவும் சிறப்பாக இருக்கும். சிற்பக்கலைகளை ரசிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.

கங்க்ரோலி துவாரகாதீஷ் கோவில் - படம் இணையத்திலிருந்து....

கங்க்ரோலி துவாரகாதீஷ் கோவில்: உதைப்பூர் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் ராஜ்சமுண்ட் நதிக்கரையில் அமைந்திருப்பது கங்க்ரோலி கிருஷ்ணர் கோவில். நாத்துவாரா கோவில் போலவே இக்கோவிலும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கே கோவர்த்தனில் இருந்து கிருஷ்ணர் சிலை கொண்டுவரப்பட்டது என்றால் இங்கே உள்ள சிலை மதுராவிலிருந்து!

மஹாராணா பிரதாப் மான்சிங் உடன் போரிடும் காட்சி - படம் இணையத்திலிருந்து....

ஹல்தி[dhi]கா[g]ட்டி: நாத்துவாராவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இவ்விடம் மேவார் மஹாராஜா மஹாராணா பிரதாப் மற்றும் முகலாய மன்னர் அக்பரின் படைத்தளபதியான மான்சிங் உடன் போரிட்ட இடம்.  இப்போரில் வெற்றி தோல்வி இல்லை என்றாலும் வரலாற்றில் முக்கிய இடத்தினைப் பெற்ற இடம். ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள இவ்விடமும் பார்க்க வேண்டிய இடம்.

லால் பாக் - படம் இணையத்திலிருந்து....

லால்[b]பாக்[g]: நாத்துவாரா கோவிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள அழகிய தோட்டம் லால்[b]பாக்[g]. அழகிய நீருற்றுகளும், நீர் நிலைகளும் இங்கே உண்டு. இந்த நீருற்றுகளை மாலை நேரத்தில் விளக்குகளின் ஒளியில் பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும்.  இங்கே ஒரு அருங்காட்சியகமும் உண்டு.

நாங்கள் பார்க்காத இவ்விடங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்வது நீங்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான். ராஜஸ்தானிலும் நிறைய இடங்கள் பார்க்க இருக்கிறது.  இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தையும் பார்க்க எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ? இந்த ஒரு பிறவி நிச்சயமாக போதாது!

பிச்ச்வாய் ஓவியம் - படம் இணையத்திலிருந்து...

இப்படி சில இடங்களை விட்டு, நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜியை தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டோம். கோவிலின் வெளியே நிறைய கடைகள். ஒவ்வொன்றிலும் பல்வேறு விதமான ஸ்ரீநாத்ஜி படங்கள், அவருக்கான அலங்காரப் பொருட்கள் என விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.  இங்கே ஒரு அழிந்து வரும் ஓவியக்கலை பற்றியும் சொல்ல வேண்டும். நாத்துவாரா கோவில் இருக்கும் இடத்தில் பழங்காலத்திலிருந்தே ஒரு ஓவியக்கலை இருந்தது. அந்த ஓவியங்களுக்கு பிச்ச்வாய் ஓவியங்கள் என்று பெயர்.


பிச்ச்வாய் ஓவியம் - படம் இணையத்திலிருந்து... 

துணியில் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரையப்படும் இந்த ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. இந்த ஓவியங்களில் பெரும்பாலும் வரைபொருள் கிருஷ்ணர் மற்றும் அவரது லீலைகள், பராக்கிரமங்கள் ஆகியவை மட்டுமே.  இயற்கை வண்ணங்களைக் குழைத்து துணிகளில் வரைந்து கொடுக்கிறார்கள். நாத்துவாரா கடைகளில் இம்மாதிரி ஓவியங்கள் கிடைத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஓவியக் கலை அழிந்து வருகிறது என்பது வருத்தம் தரும் விஷயம்.

இக்கடைகளில் சில ஓவியங்களையும் வேறு சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தங்குமிடம் நோக்கி நடந்தோம். இவ்விடத்தில் கிடைக்கும் தேநீர் மிகவும் பிரபலமான ஒன்று. அதைப் பற்றியும் சொல்லாவிட்டால் எப்படி! தேநீரின் சுவை அபாரமாக இருந்தால் ஒன்று மட்டும் போதுமா என்ன! இரண்டு கப் [மிகச் சிறிய அளவு!] தேநீர் அருந்தினோம்.  ஒரு கப் தேநீர் பத்து ரூபாய் மட்டுமே.  அந்த தேநீரில் அப்படி என்ன விசேஷம் என்பதையும் சொல்லாமல் விடக்கூடாதே!

புதினா, இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றை கல்லில் தட்டிப் போட்டு, தேநீர் தயார்!  வாங்க!

சாதாரணமாக நாம் தேநீர் தயாரிக்கும்போது, பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவை மட்டுமே போடுவோம். சில சமயங்களில் ஒரு சிறு துண்டு இஞ்சியும், ஏலக்காயும் தட்டிப் போடுவதுண்டு.  இங்கே இஞ்சி, ஏலக்காய் தவிர, புதினா இலைகள், மிளகு மற்றும் கற்பூரப் புல் [Lemon Grass] ஆகியவையும் தட்டிப் போட்டு தேநீர் தயாரிக்கிறார்கள். அப்படி ஒரு சுவை அந்த தேநீரில். கண்டிப்பாக ஒரு கப் தேநீரோடு நிறுத்த முடியாது!

தங்குமிடத்தில் இருந்த சிலை....

இரண்டு கப் தேநீரை உள்ளே தள்ளியபிறகு தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.  தங்குமிடத்தில் கொடுக்க வேண்டிய கட்டணம் கொடுத்து அஹமதாபாத் நோக்கிய பயணத்தினைத் தொடங்கினோம்.  மாலைக்குள் அஹமதாபாத் சென்று விடுவதாகத் திட்டம். வழியில் இன்னும் இரு கோவில்கள் பார்க்கவும் வேண்டும்.  நாத்துவாராவிலிருந்து நாங்கள் புறப்பட்ட போது காலை ஒன்பது மணி.  வரும்போது இரவு நேரத்தில் வந்த இடங்கள் பகலில் பார்க்கும் போது அத்தனை அழகாய் இருந்தது. பயணித்தபடியே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். 

ஓட்டுனர் [ch]சிராக்[g] இளைஞர் என்பதால் வண்டி அசுர வேகத்தில் தான் பயணித்தது! வண்டியும் அவர் சொல் பேச்சு கேட்டு அவர் வளைத்த வளைவுக்கும், இழுத்த இழுப்புக்கும் வந்தது! தொடர்ந்து பயணித்த நாங்கள் அடுத்ததாய் என்ன செய்தோம், என்ன இடத்தில் நிறுத்தினோம், அங்கே என்ன பார்த்தோம் என்பதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்லட்டா!

நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

புதன், 18 நவம்பர், 2015

சாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா

படம்: www.biharandjharkhand.com தளத்திலிருந்து

பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா கொண்டாடப்படும் சமயம் இது.  தீபாவளி முடிந்த ஆறாம் நாள் இப்பூஜா கொண்டாடப்படுகிறது. சூரியனையும் சூரியனின் சகோதரியையும் இந்த சமயத்தில் பூஜிக்கிறார்கள்.  ச்சட் பூஜா பற்றிய விவரங்களையும் அது பற்றிய கதைகளையும் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்தப் பூஜா பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பீஹார் மாநிலத்தவர்கள் வசிக்க ஆரம்பித்து விட்டதால் எல்லா இடங்களிலும் கொண்டாட்டங்கள் உண்டு!

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது இந்தச் சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா.  குறிப்பாக குளிர் நாட்களில் இவ்வுணவை தயாரித்து சாப்பிடுவது வழக்கம்.  இதைச் செய்வதற்கு சற்றே அதிக நேரம் எடுக்கும் என்றாலும், சத்தான உணவு வகை. தேவையான பொருட்கள் என்ன என்பதைப் பார்த்து விடுவோம்....

லிட்டி செய்ய:

கோதுமை, ஓமம், நெய், தயிர், சோடா உப்பு மற்றும் உப்பு. இது தவிர லிட்டியின் உள்ளே வைக்கும் பித்தி எனும் பூரணம் செய்ய, சத்து [கடலைப் பருப்பில் செய்யப்படுவது], இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, ஜீரகம், ஓமம், கடுகு எண்ணை, மாங்காய் ஊறுகாய் விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு!

[ch]சோக்கா செய்வதற்கு:

பெரிய கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், தனியா, இஞ்சி, உப்பு, கடுகு எண்ணை

எப்படிச் செய்யணும் மாமு:

படம்: http://www.myspicykitchen.net/ தளத்திலிருந்து...

லிட்டி செய்ய:

கோதுமை மாவு, சோடா உப்பு, நெய், மற்றும் ஓமத்தினை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல பிசைந்து மூடி வைத்து விட வேண்டும்.

பித்தி எனும் பூரணம் செய்ய:
இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் தனியா ஆகியவற்றை சுத்தம் செய்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சத்து [கடலைப் பருப்பினை வறுத்து பொடி செய்வது] எடுத்துக் கொண்டு அதில் பொடி செய்த இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, எலுமிச்சை சாறு, உப்பு, ஜீரகம், ஓமம், கடுகு எண்ணை, மாங்காய் ஊறுகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.  இரண்டு மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.  

இதற்குள் மாவு நன்கு ஊறி இருக்கும்.  அதை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து கொழுக்கட்டைக்குச் செய்வது போல கையால் செய்து ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் பித்தி எனும் பூரணத்தினை சேர்க்கவும். அதை சத்து வெளியே வராமல் மூடி உருண்டையாக்கி பின் கொஞ்சம் அழுத்தி எடுத்து வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இப்படிச் செய்த பிறகு, இதை நெய்யில் பொரித்து எடுக்கலாம். அல்லது Microwave Oven அல்லது Electric Oven கொண்டு bake செய்யலாம்.  

[ch]சோக்கா செய்ய:

பெரிய கத்திர்க்காய் எடுத்து அடுப்பில் மிதமான தீயில் நேராக வைத்துச் சுடவும். அவ்வப்போது திருப்பி விட்டுக் கொண்டிருந்தால் சில நிமிடங்களில் நன்றாக வெந்து விடும்.  அதை எடுத்து தனியே ஆற விடவும். அதே போல தக்காளியையும் தணலில் வாட்ட வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.

கத்திரிக்காய் [ch]சோக்கா:  சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காயை எடுத்து மேலே கருகியிருக்கும் தோலை நீக்கி, கத்திரிக்காயை மட்டும் நன்றாக மசித்து விடுங்கள். அதிலே நறுக்கி வைத்த தனியா, பச்சை மிளகாய், உப்பு மற்றும் எண்ணை சேர்த்து கலக்கி வைத்தால் [ch]சோக்கா தயார்.

உருளைக்கிழங்கு [ch]சோக்கா: வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மிளகாய்ப் பொடி, உப்பு, பொடித்து வைத்த இஞ்சி, தனியா, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொண்டால் இதுவும் தயார்.

சுட்டு வைத்திருக்கும் தக்காளியையும் நன்கு மசித்து கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

லிட்டியை எடுத்து இரண்டாக பிளந்து நெய்யில் முக்கி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும், ஒரு சிறிய கிண்ணத்தில், கொஞ்சம் உருளைக்கிழங்கு [ch]சோக்கா போட்டு, அதன் மேல் கத்திரிக்காய் [ch]சோக்கா போடவும். அதன் மேலே கொஞ்சம் மசித்து வைத்த தக்காளியையும் சேர்த்து, பிறகு பொடிப்பொடியாக நறுக்கிய தனியாவை தூவிக்கொள்ளவும்.  லிட்டியைக் கொஞ்சமாக எடுத்து இந்தக் கலவையைத் தொட்டுகொண்டு சாப்பிட வேண்டியது தான்!

அம்மாடி ஒரு வழியா முடிஞ்சது! இவ்வளவு வேலையும் செய்ய சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். நான் இங்கே எழுதி இருப்பதை காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் லிட்டி [ch]சோக்கா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்!

இவ்வளவு வேலையா இதுக்கு செய்யணும்னு நினைச்சா, யாராவது பீஹார் மாநில நண்பர் இருந்தால், அவரை அழைத்து இதோ உங்க வீட்டுக்கு லிட்டி [ch]சோக்கா சாப்பிட வந்துட்டே இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிடுங்க! தராமலா இருந்துடுவாங்க!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.