எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 28, 2013

நெய்வேலியின் ஏலச் சந்தை.....

[மனச் சுரங்கத்திலிருந்து......]

மனச் சுரங்கத்திலிருந்து எழுதி ரொம்ப நாளாயிற்று நண்பர்களே.....  இன்று காலையிலேயே நண்பர் சே. குமார் எழுதிய கிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி படித்தவுடனே எனது நெய்வேலி நினைவுகள் மனதில் கும்மியடித்தன. 

நெய்வேலியில் மூன்று நாட்களில் வார சந்தை உண்டு செவ்வாய் கிழமை அன்று வட்டம் பத்தொன்பதிலும், வியாழன் அன்று வட்டம் மூன்றிலும், ஞாயிறன்று திடீர் குப்பத்திலும் சந்தை உண்டு. காய்கறி மட்டுமல்லாது, அசைவ பதார்த்தங்களும், பழ வகைகளும் எல்லாமே மலிவாக கிடைக்கும். இப்போதைய நாட்கள் போல வீட்டின் அருகிலேயே காய்கறிக் கடைகளோ, தள்ளு வண்டிகளோ நெய்வேலியில் கிடையாது.  காய்கறிகள் வாங்க வேண்டுமென்றால் சந்தைக்குத் தான் செல்ல வேண்டும்.

நாங்கள் இருந்த பதினொன்றாம் வட்டத்திலிருந்து செவ்வாய் சந்தைக்குச் செல்ல நெய்வேலியின் பேருந்தில் எனக்குத் தெரிந்து பதினைந்து பைசா கொடுத்திருக்கிறேன் [1990-களில் இருபத்தி ஐந்து பைசா]. அப்பா, அம்மா ஐந்து பைசாவிற்குச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். அதுவும் சில சமயங்களில், ஒரு கையில் அக்காவைப் பிடித்துக் கொண்டு, வயிற்றில் என்னையும் சுமந்து கொண்டு, ஐந்து பைசா மிச்சம் பிடிக்க மறு கையில் காய்கறி பையைச் சுமந்தபடி அந்த நீண்ட தூரத்தினை நடந்தே வருவாராம்.....

சந்தையில் பல சந்துகள், ஒவ்வொரு சந்திலும் காய்கறிக் கடைகள், கடைசி சந்துகள் மீன், கருவாடு போன்ற அசைவ வகைகளுக்கு.  அதைத் தாண்டி மளிகை வகைகளான புளி, மிளகாய், போன்றவற்றிற்கு. அம்மா ஒரு கையில் என்னைப் பிடித்துக் கொண்டு, காய்கறிப் பையை தோளில் மாட்டிக்கொண்டு மறு கையால் மூக்கை மூடிக்கொண்டு மீன், கருவாடு சந்தினைத் தாண்டி புளி வாங்க ஓடியது இன்னும் நினைவில்........

முதலில் எல்லா சந்துகளிலும் சென்று என்ன என்ன காய்கறி என்ன என்ன விலையில் விற்கிறது என காதால் கேட்டபடியும், விசாரித்தபடியும் ஒரு ரவுண்டு.....  பிறகு எங்கு மலிவாக என்ன காய் கிடைக்கிறது என்பதை முடிவு செய்து அங்கே சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வாழைப்பழம் ஏலத்தில் கொடுக்கும் சந்திற்கு வருவோம்.....

அந்த சந்தில் பல மாட்டு வண்டிகள் முழுவதும் வாழைப்பழங்களோடு நிறுத்தி வைத்திருப்பார்கள். வண்டியின் மேலே, பின்புறத்தில் நின்று கொண்டு வாழைப் பழங்களை சீப்பு சீப்பாக ஏலம் விடுவார். ஒரு சீப்பு பழத்தினை கையிலெடுத்து மூன்று ரூபாயில் ஆரம்பித்து ஐம்பது ஐம்பது பைசாவாக குறைத்துக் கொண்டே வருவார். எடு ஒரு ரூபாய் ஐம்பது பைசா! என ஒரு கூவு....  எல்லாரும் இன்னும் குறைப்பார் என நினைத்துக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு கூச்சல் “எடு ஒன்றரை ரூபாய்! ஏதோ குறைத்து விட்டார் என சில கைகள் நீளும்! உடனே காசு வாங்கிக் கொண்டு பழங்கள் கை மாறும்.

அம்மாவின் கைபிடித்துக் கொண்டு போன காலம் போய், நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகு நானே சந்தைக்குச் செல்லும் காலம் வந்த பின் இந்த ஏலம் இடும் இடத்தில், பழம் வாங்குகிறேனோ இல்லையோ இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கே நின்றதுண்டு! வண்டிக்காரர் மேலே நின்று கொண்டிருப்பதால், அங்கிருக்கும் அத்தனை மனிதர்களின் தலைகளும் அண்ணாந்து பார்த்தபடியே சாமி வரம் எப்போ கொடுப்பார் என பார்த்தபடி நிற்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான்!செவ்வாய் சந்தைக்குச் செல்லும் பல வண்டிகள் எங்கள் வீடு இருந்த திருச்சி சாலை [இப்போது சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் சாலை] வழியாகத் தான் செல்லும்.  சில சமயங்களில் வழியிலேயே வண்டி சென்று கொண்டிருக்கும்போதே பின்னாடியே ஓடி கீரைக்கட்டுகள் வாங்கியதுண்டு. பல சமயங்களில் மிகவும் சல்லிசான விலையில் கொடுத்ததுண்டு.

அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றை சந்தைக்குப் போகுமுன் வாங்கினால் ஒரு லாபம் சந்தைக்குச் சென்றதும் கட்டுகள் சின்னதாகி விடும்!. வண்டியில் பெரிய கட்டுகளாக இருக்கும். அதனால் மாட்டு வண்டியின் பின்னாலேயே ஓடிப்போய் கீரைகளை வாங்குவோம். என்னைப் போலவே லூசாக இருக்கும் அரை ட்ராயரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையில் காசு வைத்துக் கொண்டு ஓடுவோம்! கீரைக்கட்டைக் கையில் வாங்கி வீடு திரும்பும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி நடுவே அரை ட்ராயர் கீழே விழுந்திருந்தால் கூட தெரிந்திருக்காது!

அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அந்த வழியே சைக்கிளில் வரும்போது, கையில் காய்கறி பையோடு அம்மா நடந்து வருவதைப் பார்த்தால், பைகளை வாங்கி சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டிக் கொண்டு வீட்டில் வந்து கொடுத்து விடுவார்கள். இப்போது போல பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்று தெரியாத நிலை இல்லையே அப்போது!

இனிய நினைவுகள்....  இப்போது தில்லியில் ஒரு கிலோ காய்கறி நாற்பதிற்கும் எண்பதுக்கும் வாங்குகிறேன். அதில் பத்தில் ஒரு பங்கு விற்கும்போது பேரம் பேசியது மனதில்.....  இனிய நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க வைத்த சே. குமார் அவர்களுக்கு நன்றி.

மீண்டும் வேறொரு பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.
40 comments:

 1. . ”எடு ஒரு ரூபாய் ஐம்பது பைசா!” என ஒரு கூவு.... எல்லாரும் இன்னும் குறைப்பார் என நினைத்துக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு கூச்சல் – “எடு ஒன்றரை ரூபாய்”! ஏதோ குறைத்து விட்டார் என சில கைகள் நீளும்! உடனே காசு வாங்கிக் கொண்டு பழங்கள் கை மாறும்.

  வியாபார நுணுக்கம் ...!

  மலரும் நினைவுகள் அருமை..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. இனிய நினைவுகள் மனதை கவர்ந்தன... சே. குமார் அவர்களுக்கு நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபால்ன்.

   Delete
 3. அந்தநாள் ஞாபகம் இனிமைதான் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 4. மனச் சுரங்கத்திலிருந்து வந்த பதிவு அருமை
  எனக்குள்ளும் அன்றைய சந்தை குறித்த
  நினைவுகளை கிளறிப் போனது
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. என்னைப் பற்றி இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி அண்ணா...
  நான் உங்கள் தளம் வந்து வாசிக்கும் முன்னர் எனக்குத் தெரிவித்த நண்பர் திரு. தனபாலன் அவர்களுக்கும் நன்றி.

  கிராமத்து நினைவுகள் சுகமானவை அண்ணா... நினைக்க நினைக்க அட்சய பாத்திரமாக எதாவது ஒன்று என்னை எழுது என்று வந்து நிற்பதே அந்த வாழ்க்கையின் சந்தோஷம். 2004 வரை எனக்கு வாய்த்திருந்த அந்த வாழ்க்கை, திருமணம். வேலை என மாறி இப்போது வருடம் ஒரு முறை இரண்டு நாளோ மூன்று நாளோ தங்கும் நிலையில் இருக்கிறது என்பது வேதனை என்றாலும் இதுதானே வாழ்க்கை.

  சந்தை பற்றிய உங்கள் பகிர்வில் டவுசர் கழண்டாலும் பரவாயில்லை சந்தைக்குப் போகுமுன் கீரையை வாங்கிவிட வேண்டும் என ஓடியது, ஏலம், மாட்டு வண்டிகள் என எனக்குள் சந்தைக்குச் சென்ற ஞாபகத்தை விதைத்து விட்டீர்கள்....

  அழகாக எழுதியிருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா...

  தொடர்ந்து அசை போடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினைப் படித்ததும் எனக்கும் நினைவுகள்..... அதான் உடனே எழுதி வெளியிட்டு விட்டேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 7. அது ஒரு கனாக்காலம் தான் வெங்கட்ஜி.
  அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கி நிற்கலாம் ஆனால் வராது என்பதே உண்மை.
  இந்தக் கால் இளைஞர்களைக் கிட்டுப் பாருங்கள் ஐந்து பைசாவா என்று வாய் திறந்து நர்பார்கள்......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. பொள்ளாச்சி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கையடி ...பாட்டை நினைச்சுகிட்டு படிச்சேன் ,நீங்க டௌசர் கழன்று கீரை வாங்கியதை நினைச்சா ...அவ்வ்வ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. என் அண்ணன் நெய்வேல்யில் வேலை செய்வதால் அடிக்கடி நெய்வேலி போவதுண்டு.நாங்கள் தங்கி இருந்த இடம் செவ்வாய் சந்தைக்கு அருகில்தான் . பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்த விடுவார்கள். பழம் ஏலம் விடுவதை நானும் பார்த்திருக்கிறேன். கிராமத் இயல்பும் நகர்ப்புறத்தின் அல்ட்ரா மாடர்ன் வசதிகளும் இனைந்து நெய்வேலியின் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 10. சுவையான பழைய நினவலைகளுக்குப் பாராட்டுக்கள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. தஞ்சையிலும், மதுரையிலும் இருந்தபோது சென்றுவந்த சந்தை நினைவுகள் எனக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. சந்தைகளிலே சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த வேறெந்த சந்தையையும் நீங்கள் பாற்கமுடியாது.அத்தனையும் என் எல் சி உபயம். மாதத்தின் முதல் வாரங்களில் நிகழும் சம்பள நாள் சந்தையும் இன்றும் கவர்ச்சியானதுதான்.
  வில்லவன் கோதை

  ReplyDelete
  Replies
  1. உண்மை......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாண்டியன் ஜி!

   Delete
 13. வணக்கம் சார் ...

  வாழைப்பழ ஏலம் நானும் பார்துருக்கிறேன் எங்க ஊர் பக்கம் ... என்ன வியாபார நுணுக்கம் ...
  மாட்டுவண்டி , சந்தை கூட்டம் மனதில் நிழலாடுது ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்....

   Delete
 14. //“எடு ஒன்றரை ரூபாய்”! ஏதோ குறைத்து விட்டார் என சில கைகள் நீளும்! உடனே காசு வாங்கிக் கொண்டு பழங்கள் கை மாறும். //

  It's auction but the amount goes in reverse order. I experienced this in 1994 or so in ThiruNaangur festival.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

   Delete
 15. மலரும் நினைவுகள் அழகு.

  தற்செயலாக நானும் இன்று ‘சந்தைக்குச் சென்று திரும்பும் மாட்டு வண்டி’யின் ஓவியத்தைப் பகிர்ந்திருக்கிறேன்:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. சந்தை பற்றிய சிந்தனைகள் ரசித்துப் படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. அருமையான மலரும் நினைவுகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 18. Dear Kittu,

  And banal gnabhagam nenjile vandhadu. Marakka mudiyada ninaivugal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 19. சந்தை அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம். காலத்தின் கட்டாயமாக எல்லா விலைவாசியும் இப்போது ஏற்றம் தான். அக்கம்பக்கத்து கடைகள், மெயின் பஜார் விலையை ஒப்பிடும் போது சந்தை சற்று பரவாயில்லை. ஒருவாரத்துக்கு வேலை மிச்சம் என்பதும் சந்தைக்கு செல்ல காரணமாகிறது. சகலரும் வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டியும் மற்றொரு காரணம். கடைக்காரர்கள் பேசி வைத்துக் கொண்டு ஒரே விலை சொல்லும் வியாபாரத் தந்திரம் பேரம் பேசும் சுவையை காணாமல் போக்கி விட்டது. கண்ணுக்குப் பிடிக்கிறதா என்பதே ஒரே அளவுகோல். ஐந்து பைசாவையும் மிச்சம் செய்து குடும்பம் பெருக்கிய அம்மா பதிவால் பெருமிதம் அடைவார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்....

   Delete
 20. சந்தை அனுபவங்கள் எங்களையும் பழைய காலத்திற்கு கொண்டு சென்றன. அம்மாவின் சிக்கனம், உங்களின் ஓட்டம் எல்லாமே சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....