செவ்வாய், 17 செப்டம்பர், 2013

பெண்களின் மானமும் மனமும்


லா.ச. ராமாமிருதம் அவர்களின் கதைகளை என்னைப் போன்ற இளைஞர்கள் அதிகம் படித்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் தான் அவருடைய புத்தகம் ஒன்றினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அவர் எழுதிய கதை அல்ல – அவரின் சுய சரிதம். அமுதசுரபியில் தொடராக வந்த “பாற்கடல்ஐ வானதி பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்

முதலாவது பதிப்பு ஆகஸ்ட் 1994 ஆம் ஆண்டு. நான் படித்த இரண்டாம் பதிப்பு நவம்பர் 2005. விலை ரூபாய் 100.  கிடைக்குமிடம் வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை 600017.  இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது எனக்குப் பிடித்த சில வரிகளை குறித்து வைத்தேன்.  அதையெல்லாம் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அது சரி ஏன் இப்படி ஒரு தலைப்பு? இதுவும் லா.ச.ரா அவர்களின் இப்புதகத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். சும்மாவேனும் பாற்கடல் என வைத்திருந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது எனத் தோன்றவே இந்த தலைப்பு. சரி, இன்னும் கதையளக்காது நான் குறித்து வைத்திருந்த சில பகுதிகளுக்குப் போகலாம்.
தங்க அணிலைக் கண்டால், “எங்கே புரண்டாய்?என்று விசாரிக்க மாட்டோம், அதன் தோலை உரிக்க என்ன வழி!..... அதனால் தான் தங்க அணில் கண்ணில் படுவதில்லை.

வசதிகளின் பெருக்கம் தான் இப்போ. வாழ்க்கையின் குறிக்கோள் – கடன் வாங்கியோ, ஏமாற்றியோ, எப்படியோ, ஜப்தி ஆகிறவரையில் அனுபவித்தது லாபம். [இப்போதைக்கும் எவ்வளவு பொருத்தம்!]

பணக்காரன் ஸ்வர்கத்துள் நுழைவது ஊசிக்காதில் ஒட்டகம் நுழைவதைக் காட்டிலும் கடினம்.

புருஷன், மனைவி, பெரிய குடும்பம். கணவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான். பல வருஷங்கள் கழித்து தான் திரும்பி வந்தான். குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள். “இதுகளை நானும் இல்லாமல் எப்படி வளர்த்தாய்?” என்று கேட்டானாம். “நீங்களும் இல்லை. என்னவோ, புல்லையும் மண்ணையும் போட்டு வளர்த்தேன்!” என்றாளாம். “புல்லைக் கொடுத்து வளர்த்தாயா? என்ன அக்கிரமம்? இதுகளுக்கு இப்படி நாக்கை வளர்க்கணுமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்? இது கட்டுப்படியாகுமா?என்று கணவன் கோபம் பொங்கி வழிந்தானாம்....

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி! துப்பாக்கி வயிற்றில் பீரங்கி.

ஆங்கிலம் ஜீவ பாஷையாக இருப்பதற்குக் காரணம் – அது இந்தியாவின் அந்நிய நாட்டுக் கடன்களைக் காட்டிலும், ராக்ஷஸ அளவுக்குத் தொன்று தொட்டு அந்நிய மொழிகளிலிருந்து கடன் வாங்கியிருக்கிறது. அது திருப்பிக் கொடுப்பதில்லை!

பெண்களுக்கு மானத்தைப் பற்றி மாறி மாறி உபதேசம் செய்வதே ஒழிய, அவர்களுடைய மனத்தைப் பற்றி ஆண்களே ஆகட்டும், வெளிப்படையாக்க் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. [அப்பாடா தலைப்புக்கு வந்துட்டாண்டா இவன்!]

வாழ்க்கையில் வயிறு ஒரு அத்தியாயம். வயிறு மட்டும் வாழ்க்கையில்லை.

பளபளப்பான டைனிங் மேசை மேல், தலைகீழ்ப் பிம்பம் பளபளப்பு அடித்த சீன மண் காப்பிக் கலர் கிண்ணத்தில், ஐந்து ஆப்பிள்கள் மனோகரமான லஜ்ஜையில் வெட்கித்துக் கொண்டிருந்தன. அந்தக் கன்னச் சிவப்பு கடி! கடி! என்று அழைத்தது. ஆனால் அவை வெறும் ஆசை காட்டத்தானா? அல்லது அவற்றை அடுக்கியிருக்கும் அழகைப் பார்ப்பவன் வியக்கவா? வீட்டு எசமானியைத் தான் கேட்க வேணும் – கானல் நீர் எழுத்துக்கு எடுத்துக்காட்டு.....

நம் பண்டைய வைத்தியப் புத்தகங்களில் தினப்படிக்கே ஆரோக்கிய வளர்ச்சியை முன்னிட்டு விதித்திருக்கும் உணவு விமரிசை, இந்நாளில் கட்டுப்படியாகாது. நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. உதாரணம், “பாலைக் கறந்த அரை மணி நேரத்துக்குள் காய்ச்சிச் சாப்பிட்டாக வேணும். காய்கறிகளைச் செடியினின்று பறித்த ஒரு மணி நேரத்துக்குள் சமைத்தாக வேண்டும். இல்லாவிடில் பலன் இல்லை. பைப்பாலையும் புட்டிப்பாலையும் குடித்துக்கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டையில் குமுங்க கீழே கொட்டிய கோசையும் வெங்காயத்தையும் தின்று கொண்டிருப்பவர்களுக்குச் சாத்தியமா? விட்டுத்தள்ளு.

காய்ந்த வயிற்றில் எந்தக் கலையும் வளராது. அதுவும் இலையும் காயும் போலத்தான்.

முதல் துரயம் [அல்லது முதல் காதல்] பிறவியின் முதல் கவிதையாக அமைந்து விடுகிறது. எழுதினால் தான் கவிதை அல்ல. வார்த்தைகள் தான் கவிதை அல்ல. கவிதையென்று தானே உணர்ந்தால் தான் கவிதை அல்ல.

எழுத்து ஒரு அராபியக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டால், அப்ப்ப்பா? என்னென்ன வேகங்கள், அழகுகள், தொடுவானமும் தாண்டிய தூரங்கள்.

யாரைச் சுற்றியுமே வெட்ட வெளிச்சத்தை எதிர்பார்க்க முடியாது. ஸ்டூடியோவில், நூற்றுக்கணக்கான CANDLE POVER-இல் headlights arc lamp நடுவில் கேமிரா எவ்வளவு பெரிய பொய்களைச் சொல்கிறது தெரியுமா? கேமரா மேதை கே. ராம்நாத் சொல்வார்: “The Camera never lies இல் வளர்ந்து விட்ட பேச்சு வழக்கு பெரும் புளுகு. பொய்யைத் தவிர வேறெதுவும் அது சொல்லவில்லை. பொய்க்கென்றே பிறந்தது.

ஒரொரு சமயம் தோன்றுகிறது – சே, இந்த வாழ்க்கை ஏன் தன் உயிருக்கு வந்தது? சின்னப் பையன் தும்பியுள் துடைப்பக்குச்சியை ஏற்றினால் ‘பாவிஎன்று திட்டுகிறோம். சுண்டெலி வாலில் கயிறு கட்டித் தலைகீழாகப் பிடித்தால், தாங்க முடியவில்லை. அட்டையில் பட்டுப் பூச்சியை ஊசியால் குத்தித் தைக்கிறான். கண்ணை மூடிக் கொள்கிறோம். கவணால் பறவையை அடித்துக் கீழே வீழ்த்துகிறான். அத்தனையும் அவனுக்கு விளையாட்டு. ‘உருப்படுவியா நீ?என்று சபிக்கிறோம். ஆனால் இப்புவனமே ஆண்டவனின் பரீக்ஷைக் கூடமாக விளங்குகிறதே, அவனை யார் என்ன செய்வது? ‘ஆண்டவனே! உனக்கு அடுக்குமா?என்று அப்பவும் அவனையே தான் சரணடைகிறோம். நமக்கும் வேறு கதியில்லையா? அவனும் தான் இப்படியெல்லாம் நம்மைச் சோதனை செய்து என்ன தேடுகிறான்?

இந்தப் புத்தகத்தில் நான் ரசித்த சில வரிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். முழுப் புத்தகத்தினையும் வாசிக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் – சீக்கிரமாக பாற்கடல் புத்தகத்தினை தேடிப்பிடிக்க வேண்டியது!

என்ன நண்பர்களே....  “படித்ததில் பிடித்ததுபகுதியில் வேறொரு புத்தகம் பற்றிய அனுபவத்துடன் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. படித்ததில் பிடித்தது.. தொடந்து நிறைய புத்தகங்களை படித்து எங்களுக்கும் சொல்லுங்கள் நண்பரே.. பகிவுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேடந்தாங்கல் கருண்.

   நீக்கு
 2. ம்ம்ம்ம் நன்றி. பாற்கடல் படிச்சிருக்கேன். அநேகமா லா.ச.ரா.வோட எல்லாக் கதைகளுமே வாசித்திருப்பேன். ஆனால் பாற்கடல் அவரோட சுயசரிதைனு படிச்ச நினைப்பில்லை. திரும்பப் படிக்கணும். :)) பகிர்வுக்கு நன்றி.:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரும்பப் படிச்சு பாருங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 4. அக்கால நடை போலுள்ளது. இலகுவில் மனதில்
  ஒட்டவில்லை.
  ஏதாவது சுயமுன்னேற்ற நூல்களின் விமர்சனம்
  இருந்தால் போடவும். நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 5. படிக்க வேண்டிய புத்தகம்தான். லா ச ரா என்றால் எனக்கு லேசாக பயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் பயம் தான்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. :)

   தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. லா.ச. ராமாமிருதம் அவர்களின் கதையின், சிலவரிகளை படித்து ரஸிக்கச் செய்ததற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 8. //வாழ்க்கையில் வயிறு ஒரு அத்தியாயம். வயிறு மட்டும் வாழ்க்கையில்லை. //
  ரசித்த வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 9. லாசராவின் இரண்டு நாவல்கள் தான் படித்திருக்கிறேன். சிறுகதைகள் பத்திரிக்கைகளில் வந்த போது படித்த நினைவு லேசாக உண்டு.
  மேலும் படிக்கப் பொறுமை இல்லை.
  நீங்கள் படித்துச் சொன்னால் தட்டில் அல்வா கொடுத்த மாதிரி:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 10. ஆமாங்க என்ன புத்தகம் வாங்குவது என்று நிறைய யோசிப்பேன் இது போன்ற பகிர்வு நல்ல பலனை தரும் தொடர்ந்து பதிவிடுங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

   நீக்கு
 11. தலைப்பே அதிரவைத்தது வெங்கட்.. அதான் திடுதிடுப்புனு வந்தேன்பா... லா.ச.ராமாமிர்தம் அவர்களின் எழுத்தை இப்ப தான் வாசிக்கிறேன் உங்க பகுதியில்.. அசால்டா சொல்லிக்கிட்டே போறாங்க.. அற்புதமான ஆழ்ந்த சிந்தனை எழுத்து... தங்க அணில் எதிர்ல வந்தா எங்க புரண்டுட்டு வந்தேன்னு குசலம் விசாரிக்காம தங்கத்தை அபகரிக்கும் முயற்சியில் இதனால் உயிர் பாதகம் ஏற்பட்டாலும் கத்தி கதறும் திராணி இல்லாத அணிலைப்பற்றி கவலை இல்லாம தைரியமா அதன் தோலை உரிப்போம்னு சொல்லும்போதே மனம் சட்டுனு சில்லிடுகிறது.. அத்தனை பயங்கரமான எண்ணங்கள் கொண்டு அலையும் மனிதன் உண்டா உலகில்?

  ஆரம்பமே அசத்தலா தொடங்கியாச்சு. அதன்பின் சொல்லனுமா? துப்பாக்கி வயிற்றில் பீரங்கி... நச் நச் நச்னு.... எழுத்துகளின் வீரியம் வாசிக்கும்போதே அதிரத்தொடங்குகிறது மனசு.. பெண்களோட மானத்தைப்பற்றி மட்டுமே கவலைப்படும் வர்க்கம் அவர்களுக்கென்று ஒரு மனம் இருப்பதை அறிய முற்படுவதே இல்லை....

  அருமையான எழுத்துகள்.... படிகக்வேண்டும்பா... சுயசரிதைன்னு சொன்னதால இன்னும் ஆர்வம் கூடுகிறது....

  அன்பு நன்றிகள் வெங்கட் பகிர்வுக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தங்க அணில் எதிர்ல வந்தா எங்க புரண்டுட்டு வந்தேன்னு குசலம் விசாரிக்காம தங்கத்தை அபகரிக்கும் முயற்சியில் இதனால் உயிர் பாதகம் ஏற்பட்டாலும் கத்தி கதறும் திராணி இல்லாத அணிலைப்பற்றி கவலை இல்லாம தைரியமா அதன் தோலை உரிப்போம்னு சொல்லும்போதே மனம் சட்டுனு சில்லிடுகிறது.. அத்தனை பயங்கரமான எண்ணங்கள் கொண்டு அலையும் மனிதன் உண்டா உலகில்? //

   இருப்பதிலேயே மோசமான விலங்கு மனிதன் தான் என்று யாரோ எழுதியதை படித்த நினைவுக்கு வருகிறது மஞ்சுபாஷிணி. மனிதன் பல சமயங்களில் மோசமான ஒரு ஜீவனாகவே இருக்கிறான்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   நீக்கு
 12. ”லா.ச.ரா முத்துக்கள் பத்து” என்கிற புத்தகத்தை சில மாதங்கள் முன்பு படித்திருக்கிறேன். இந்த புத்தக வரிகள் ஒவ்வொன்றுமே அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகே.. அந்தப் புத்தகம் பற்றி எழுதியிருக்கலாமே!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதி!

   நீக்கு
 13. லா.சா.ரா வின் எழுத்துகளை படிக்கச் பொறுமை தேவை. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது அமுதசுரபியில் தொடராக வெளி வந்தது. புரியாவிட்டாலும் படித்திருக்கிறேன். பாம்பு பற்றி அதில் ஏதோ எழுதி இருப்பார் நினைக்கிறேன் சரியாக ஞாபகம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 14. லா.ச.ரா வின் சிந்தா நதி படித்திருக்கிறேன். அவ்வளவு சுலபமாகப் புரியாது. திரும்பத்திரும்ப படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   நீக்கு
 15. இந்தப்பதிவில் இருக்கும் தங்க அணிலை வரைந்தது யார்? ரோஷ்ணி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லைம்மா..... இது கூகிளில் இருந்து எடுத்தது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 16. லா.ச.ரா.வோட கதைகளை நூலகத்தில் எடுத்து நிறைய படித்து இருக்கிறேன்.
  அவர் கதை பாத்திரத்தில் அவரே ஆழந்து போய் விடுவார் நம்மையும் ஆழ்த்தி விடுவார்.
  நாமும் அவர் சொன்ன விஷ்யத்திலிருந்து வெளியில் வர சில நேரங்கள் பிடிக்கும்.

  “பாலைக் கறந்த அரை மணி நேரத்துக்குள் காய்ச்சிச் சாப்பிட்டாக வேணும். காய்கறிகளைச் செடியினின்று பறித்த ஒரு மணி நேரத்துக்குள் சமைத்தாக வேண்டும். இல்லாவிடில் பலன் இல்லை. பைப்பாலையும் புட்டிப்பாலையும் குடித்துக்கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டையில் குமுங்க கீழே கொட்டிய கோசையும் வெங்காயத்தையும் தின்று கொண்டிருப்பவர்களுக்குச் சாத்தியமா? விட்டுத்தள்ளு.//

  நடைமுறையில் சாத்தியப்படுவதைதான் செய்ய முடியும் என்பதை அழகாய் சொல்லி இருக்கிறார்.
  மறுபடியும் அவர் கதைகளை படிக்க ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 17. Dear Kittu,

  La.sa.ra. Avargalin yezhuthukkalai iduvarai padithdhillai. Indru un moolamaga Padikka sandharpam kidaithadhu.
  Sandhoshama.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 18. லா.ச.ராவின் தங்கவரிகளைப் பற்றிய அருமையான பகிர்வு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 19. பாற்கடலில் கிடைத்த அமுதத்தை பகிர்ந்துண்ணமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....