வியாழன், 10 ஜனவரி, 2019

அப்பா!!!


மகள்களுக்கு அப்பா என்றாலே தனிப்ரியம் தான். அவர் தான் அவர்களின் முதல் ஹீரோ. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.


நகம் வெட்டி விட, பேனாவுக்கு இங்க் போட என்று எல்லாவற்றுக்கும் அப்பா வேண்டும். எங்கள் பள்ளிச் சீருடைகளை எங்கள் வேலைகளை நாங்களே செய்யப் பழகும் வரை அப்பாவே துவைத்து தந்திருக்கிறார். செய்யும் வேலையில் நேர்த்தி, சுத்தம் இவை நான் அப்பாவிடம் கற்றுக் கொண்ட பாடங்கள்.

பாடப்புத்தகங்களுக்கு அட்டைப் போட்டு, மைதா பசையில் ஒட்டி, டிரங்க் பெட்டிக்கு அடியில் வைத்து என பாங்காக செய்து தருவார். ஒரு வருடமானாலும் அந்த அட்டைகள் பிரியாது.

அலுவலக கேண்ட்டீனில் தன் டிபன் பாக்ஸில் எங்களுக்காக சுடச்சுட வாங்கி வந்த மெது பக்கோடாவும், பஜ்ஜியும் இன்னும் மறக்கவில்லை.

அப்பாவுக்கு அடிக்கத் தெரியாது. என் சேட்டையால் ஒருமுறை ரேடியோ கீழே விழுந்த போது மண்டையில் ஒரு கொட்டு கிடைத்தது. அதற்கும் மேல் தண்டிக்கத் தெரியாது. அம்மா அதற்கு எதிர்ப்பதம். அடித்து விட்டுத் தான் என்ன நடந்தது என்று கேட்பாள்.

எங்களுக்காக மெனக்கெடுதலும், எங்களைப் பற்றி பெருமை பேசவும் அப்பாவைத் தவிர யாரால் முடியும்!! கடைநிலை ஊழியராக அரசுப் பணியில் சேர்ந்து கஷ்டப்பட்டு முன்னேறி, தன் உடன்பிறந்தவர்களுக்கும், எங்களுக்கும் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்தவர்.

இப்படிப்பட்ட அப்பா, எங்களை விட மேலாக ஒரு வஸ்துவின் மேல் உயிரை வைத்து விடுவாரா என்று தோன்றும்! எவ்வளவு சொல்லியும் அதை விட அவரால் முடியவில்லை. அது என்னவென்றா கேட்கிறீர்கள்?? புகைப்பழக்கம் தான் அது.

அப்பா இவ்வுலகை விட்டு மறைந்து நேற்றோடு பதினோரு வருடங்கள் கடந்து விட்டது. தன்னுடைய புகைப்பழக்கத்தால் தான் நோய் தாக்கி மறைந்தார். இறுதி நாட்களிலும் கூட மருத்துவமனையில் அதையே தான் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தார்.

புகை நமக்கு பகை! புகைப்பிடித்தல் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்!! என்று ஆயிரம் வாசகங்கள் சொன்னாலும், ஒருவரின் மனக்கட்டுப்பாடு மட்டுமே அவரை மீண்டு வரச் செய்யும்.

புகைக்கு செலவிடும் பணத்தை உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உண்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இல்லை காலன் கைகளில் தான்.

இது விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதிய பகிர்வு. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் 'போன அப்பா' திரும்பி வரப் போவதில்லை. யாரேனும் ஒருவராவது இன்றிலிருந்து இப்பழக்கத்தை விட்டால் மிகவும் மகிழ்வேன்.

நட்புடன்…

ஆதி வெங்கட்

40 கருத்துகள்:

 1. குட்மார்னிங். அப்பாவின் நினைவுகளா?

  பதிலளிநீக்கு
 2. எல்லா அப்பாக்களும் அந்தக் காலத்தில் சூடாக பஜ்ஜி, போண்டா வாங்கித் தந்திருக்கிறார்கள் போல! என் அப்பாவும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... அப்போ அதானே... They didn't have other options!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. // அடித்துவிட்டுத்தான் என்ன அடைந்தது என்று கேட்பாள் //

  ஹா..ஹா... ஹா... எங்கள் வீட்டில் நேர் மாறாக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டில் நான் மத்தளம்.... இரண்டு பக்கத்திலும் அடி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு. நான் சொல்லி என் உறவிலேயே ஒருவர் புகைப்பழக்கத்தை விட்டொழித்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் சூப்பர்!!!! சூப்பர்!! வாழ்த்துகள்! மகிழ்ச்சியும்...

   கீதா

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி....

   நீக்கு
 5. மன வருத்தமான பதிவு சகோ. அப்பாவின் நினைவு நாளில் எனது அஞ்சலிகளும்.

  புகையைப்பற்றிய கவலை இன்றைய தேதிவரை எனக்கு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகை நமக்குப் பகை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இந்த பதிவு மிகவும் வருத்தமான நினைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நமது முன்னோர்கள் புகையைப்பற்றிய தீங்கு அறியாமல் இருந்தது மிகவும் கொடுமையான விசயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 7. ஆதி வெங்கட்ஜி இருவருக்கும் இனிய காலை வணக்கம்

  நாளைலருந்து வழக்கம் போ ஆஜர் வைத்துவிடுவேன்...

  ஆதி அப்பாவின் பெருமைகளை வாசித்து வந்த போது மனம் மகிழ்ந்து அப்படியே இறுதியில் மனம் கனத்துவிட்டது.

  ரொம்பவே மனம் கனத்துப் போனது!..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 8. ஃபோட்டோவைப் பார்த்ததும் தலைப்பு அப்பா...அப்புறம் மகள் அப்பா உறவு பற்றி சொல்லி வரவும் ஃபோட்டோவில் யங்க் வெங்கட்ஜியோ ன்னு தோனிச்சு...ஏன்னா குட்டிப் பெண் ரோஷ்னி போலவே தோன்றவும்...அப்படி நினைச்சுட்டேன் ஆனா அருகில் இருப்பவர் நீங்கள் இல்லை என்று தெரிந்தது ஸோ வெங்கட்ஜியின் ஸிஸ்டரோ என்றும் நினைத்து அப்புறம் பார்த்தா அது உங்கள் பெற்றோர் குட்டிப் பெண் நீங்கன்னு தெரிஞ்சது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலில் கூட ஒரு தோழி கேட்டு இருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 9. வருத்தமாக இருக்கிறது... மனக்கட்டுப்பாடு மட்டுமே மீட்கும் என்பது உண்மை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனக் கட்டுப்பாடு தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. புகை பழக்கம் சுடும் ..நம்மை மட்டும் அல்ல குடும்பத்தையும் சமுகத்தையும் ......

  இதை அனைவரும் உணர்ந்தால் நலம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   நீக்கு
 11. என் அப்பாவும் புகை பிடிப்பார். பொண்ணு, பேரப்பசங்கன்னு சொல்லி கேட்காதவர் காய்ச்சல்ன்னு படுத்தவருக்கு உயிர் பயம் வந்திட்டுது போல! இப்ப 2க்கு வந்துட்டார். முன்னலாம் 6 பிடிச்சுட்டு இருந்தார்.

  உங்க அப்பாவோட சாயல்ல நீங்க இருப்பீகளோ!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... உங்கள் அப்பாவும் புகை பிடிப்பாரா.... விட முயற்சி செய்யச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. அப்பா தன்தோளில் ஏற்றி கடவுளைக் க்காண்பித்தார் அப்போதுதெரியவில்லை கடவுளின் தோள் மேலேறி அமர்ந்தது நல்ல வேளை நான் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறுத்தியது நல்லது ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 13. அப்பாவின் நினைவுகள் எப்பவும் பொக்கிஷம்தான் .அதுவும் மகள்களுக்கு அது ரொம்ப ஸ்பெஷல் .
  அம்மாங்க எல்லாம் ஒரே மாதிரித்தான் போல ..எதுக்கு திட்டறாங்கன்னே தெரியாம வாங்கி கட்டியிருக்கேன்
  இறுதியில் மனம் கனத்தது ..அப்பாவுக்கு அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்....

   நீக்கு
 14. இது ஆதியின் பதிவல்லவா. அழகாக அப்பாவின் கைகளைப் பிடித்து நிற்கும் ஆதி அப்படியே ரோஷ்ணி தெரிகிறார்.
  புகை இன்னும் எத்தனை பலி வாங்கப் போகிறதோ.
  அழகான ஆழமான வலி தரும் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 15. அப்பாவின் நினைவுகள் பொக்கிஷம்தான்.
  புகைபழக்கம் கெடுதல்தான்.
  என் அப்பாவிற்கு எல்லோரும் செல்லங்கள்.
  அம்மாவிடம் கண்டிப்பும் கனிவும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.ஜி.ஜி. ஜி.

   நீக்கு
 17. அப்பாவின் அருமை பெருமைகளை உரிய காலத்தில் அறியவில்லை. காலங்கடந்து விளங்கியபோது அவர் இல்லை . உங்கள் பதிவைப் படித்தபோது இந்த எண்ணம் ஏறிட்டு சற்றே மனம் கனத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கும் போது ஒருவரின் மதிப்பு சரியாக உணர்வது இல்லை பலரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமன் ஜி.

   நீக்கு
 18. இது யாருடைய அப்பா?... குழப்பமாக இருக்கு.

  உண்மைதான் சில பழக்கங்கள் உயிர்கொல்லிகள்... ஆனாலும் எல்லாம் விதிதானே... எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதோரையும் விதி எடுத்துக் கொள்கிறதே.... எதுவாயினும்..

  இழந்தவை யாவும் இழந்தவைதானே.. இனி இப்பிறப்பில் காணப்போகிறோமா இல்லையே:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருடைய அப்பா? :)

   பதிவில் நட்புடன் ஆதி வெங்கட் என எழுதி இருக்கிறது. ஆதி என் இல்லத்தரசி. அவரது அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறார்.

   இழந்தவை இழந்தவை தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....