புதன், 2 ஜனவரி, 2019

நடுநிசியில் வந்த தேவி...


“நான் தேவி வந்திருக்கேன்டா....”

குரல் மட்டுமே கேட்கிறது. எங்கேயிருந்து குரல் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனாலும், உத்தேசமாக ஒரு திசை நோக்கி குரல் கொடுத்தேன்.

“தேவியா, யார் தேவி, எந்த தேவி? எனக்கு எந்த தேவியையும் தெரியாதே....”

என்னடா கிண்டலா? நான் இந்த உலகத்தையே ஆளும் ஆதிபராசக்தி தேவிடா. என்னை உனக்குத் தெரியாதா?ஓ, ஆதிபராசக்தி தேவியா...  வரணும் வரணும்.  என் பணிவான வந்தனம். என்ன விஷயமாக வந்தீர்கள் தாயே? பொதுவாக கடும் தவம் இருந்தால் தானே நீங்கள் தரிசனம் தருவீர்கள் என்று சொல்வார்களே... ஒரு ஏளனக் குரல் வந்தது என்னிடமிருந்து. நான் எதுவுமே செய்யாமல், நீங்களாகவே இப்படி வருகை தந்தமைக்கு நன்றி தாயே.... குரல் கேட்டதே தவிர இன்னமும் தேவியை நான் பார்க்கவில்லை.

அப்போது இன்னும் ஒரு குரல் – கொஞ்சம் கரகரப்பிரியாவாக இருந்தது குரல். குரலுக்குரிய உருவமும் தெரிந்தது. நீண்ட முடி, கழுத்தில் நிறைய மணி மாலைகள், நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. பார்க்கும்போது அரசியல் சாமியார் சந்திராசாமி போன்ற உருவம் அவருக்கு. “தேவி அழைக்கிறாள் வா....” என்றபடியே, என் கையைப் பிடித்து அழைத்துச்சென்றார் அவர். அடுத்த அறையை அடைந்தோம். அறையின் மூலையில் முழு உருவத்தில் மஹாராணி மாதிரி அமர்ந்திருந்தார் தேவி. பார்க்கும்போதே ஒரு வித பயம் கலந்த மரியாதை தோன்றியது எனக்குள். சாமியார் நெடுஞ்சாண்கிடையாக தேவியின் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தார். நானோ ஆதிபராசக்தி தேவியை நேரில் பார்த்ததில் பிரமித்து நின்றுகொண்டு இருந்தேன். சந்திராசாமி எழுந்து என் முதுகில் இடிக்க, தேவியை நமஸ்கரித்தேன்.

தேவி என்னை நோக்கி புன்னகை புரிந்தார். “என்ன வேண்டும் கேள்... உனக்காகவே இன்று இங்கே தோன்றினேன்” என்று சொல்ல, எப்போதும் போல, “தேவி, யாருக்கு என்ன தர வேண்டும் என உனக்குத் தெரியாதா? எல்லாரையும் நல்ல படியா வைத்திருந்தால்” போதும், என்றேன். “எல்லாமே நல்லபடியா இருக்க முடியாது. அவரவர் வாழ்க்கையில் புரியும் செயல்கள் படியே அதற்கான பலனும் கிடைக்கும்”. உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மீண்டும் தேவி கேட்க, நானும் என்னைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.  எல்லாம் நல்ல படியாகவே நடக்கும். ஆனால் இந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிப்பதை உன்னால் தடுக்க முடியாது – அது அவரது தலைவிதி. மரணம் விரைவில் சம்பவிக்கும் என்று தேவியின் குரல் வந்த பிறகு அந்த மூலையில் தேவியை என்னால் காண முடியவில்லை.

எனக்குள் ஒரு வித பயம். அந்த குளிர்ந்த இரவிலும், வியர்த்து. விக்கித்து நின்ற என்னை சந்திராசாமி, பயப்படாதே வா, என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம் என அங்கிருந்து கைத்தாங்கலாக அழைத்து வந்தார். தூரத்திலிந்து நாய் ஊளையிடும் சப்தம். அதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னுமொரு நாயின் அழுகுரல் என்னை பயமுறுத்துகிறது. நடக்கும்போது காலில் எதோ தட்டுப்பட, கீழே பார்த்தால், இரண்டு பொம்மைகள்! முட்டைக்கண் கொண்டு விழித்துப் பார்க்க, நானும் பொம்மையைப் பார்க்க, அந்த பொம்மைக்கு கைகள் வெட்டுப்பட்டு இருக்கின்றன. உடம்பில் ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்க, அதிலிருத்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. பயங்கர விகாரமாக இருந்த அந்தப் பொம்மையைப் பார்க்கும்போதே ஒரு வித பயம் எனக்குள். தட்டுத் தடுமாறி நான் அடுத்த அறைக்குச் செல்ல  அங்கே ஒரு கட்டில். கட்டிலில் ஒரு உருவம் படுத்திருக்கிறது.

சற்றே நெருங்கிப் பார்க்க என்னிடமிருந்து அலறல் குரல் தன்னாலே வெளிவருகிறது. பார்க்கும்போதே உடம்பு நடுங்குகிறது. கட்டிலில் இருந்தது ஒரு பெண் உடல் – முகத்தில் நிறைய கட்டிகள் – அவை வெடித்து அதிலிருந்து நீரும் ரத்தமும் கலந்த ஒரு திரவம் வடிந்து கொண்டிருக்கிறது. தலைமுடி முழுவதும் கருகிப் போய், அப்பெண்ணைப் பார்கவே படு விகாரமாக இருந்தது. அப்பெண்ணைப் பார்த்ததால் வந்த என் அலறலில் சந்திராசாமியே கொஞ்சம் நடுங்கிவிட்டார். நடுங்கிக் கொண்டிருந்த என் உடல் மீது வைத்திருந்த சந்திராசாமியின் கையும் நடுங்குகிறது. எங்கிருந்தோ மணியோசை கேட்கிறது. திடுக்கிட்டு விழிக்கிறேன். வியர்வையில் குளித்திருந்தேன். அடக் கடவுளே, கனவு கண்டிருக்கிறேனா.  

மணியோசை இன்னமும் கேட்க, எங்கிருந்து ஓசை வருகிறது என்று பார்க்க, பக்கத்தில் இருந்த அலைபேசியின் மணியோசை. அலைபேசியை எடுத்து காதில் வைக்க, எதிர்முனையிலிருந்து, “மகேஷு.... நம்ம செண்பகம் செத்துப் போயிட்டாடா... கேன்சராம். இருந்ததே தெரியல அவங்களுக்கு. பத்து நாளா மாமாவும் மாமியும், ஆஸ்பத்திரில வச்சு பார்த்தாங்க... உடம்பல்லாம் கேன்சர் கட்டி வந்துடுச்சாம். இராத்திரி செத்துப் போயிட்டாடா” அழுதபடியே சொல்லிக் கொண்டிருந்தார் அம்மா....

பின்குறிப்பு: சில சமயங்களில் கனவுகள் மெய்ப்படலாம்!

52 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. வெங்கட்ஜி முதல் வரிகளே அட்டகாசமான கதை...ஆஹா வெங்கட்ஜி சூப்பரா எழுதறீங்க...கதை இன்னும் இன்னும் எழுதங்க ஜீ!!

  முழுவதும் வாசித்துவிட்டு வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி.... நீங்கள் அனைவரும் தரும் ஊக்கத்தினால் இதை எழுதினேன்... இன்னும் எழுத முயற்சி செய்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. அரசியல் சாமியார் சந்திராசாமி போன்ற உருவம் அவருக்கு.//

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திராசாமி :) ஏனோ சாமியார் என்றாலே அவர் தான் நினைவுக்கு வருகிறார்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. குட்மார்னிங் வெங்கட். ஆரம்பமே மிக சுவாரஸ்யமாய் இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   நல்ல ஆரம்பம் என நீங்கள் சொன்னதில்.... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. வெங்கட்ஜி!! சத்தியமா சொல்லறேன் செமையா எழுதியிருக்கீங்க...கதை...வாவ்!!

  ஆமாம் இப்படிக் கனவில் வருவது மெய்ப்படுவதுண்டு...

  ரொம்ப நல்லா இருக்கு..ஒரு நல்ல சுப முகூர்த்த செவ்வாயில், எபில வந்திருக்கலாமோன்னும் தோனிச்சு..ஜி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப முகூர்த்த செவ்வாயில் எபியில்... வேறு கதை - நடந்த நிகழ்வினை எழுதி அனுப்பி இருக்கிறேன். விரைவில் வரலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 6. கரகரப்ரியா குரல்... அரசியல் சாமி சந்திராசாமி போல...

  ஹா... ஹா... ஹா...

  //கைத்தலாங்க //

  கைத்தாங்கலாக

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சு செய்த போது ஏற்பட்ட தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பொம்மை, உடைந்த முட்டை, கட்டிலில் பெண் உடல், முகத்தில் கொப்புளங்கள், தலைமுடி கருகி...

  அம்மா....டி... பயமுறுத்துகிறீர்களே.... குறும்படம் எடுக்கலாம் நீங்கள்! ஹாரர் ஜானர்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் எடுக்கலாம்...... ஹாஹா... நல்ல நகைச்சுவை. :) சும்மா முயற்சி செய்தேன் அவ்வளவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. இது உங்களுக்கு மெய்ப்பட்ட ஒரு கனவா? ஆச்சர்யம். எனக்கும் ஓரிரு சமயங்களில் கனவு நடந்திருக்கிறது. பெரும்பாலும் நடந்ததில்லை. யானை எல்லாம் என்னைத் துரத்த வேண்டாம். எனவே நடக்காமல் இருந்தாலே நல்லது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவு கலந்த கதை. சில மாற்றங்களோடு..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. லேபிளில் சிறுகதை என்று இருப்பதால் இதை முழுவதும் கற்பனை என்று எடுத்துக் கொள்கிறேன். ரொம்ப ஜோரா எழுதி இருக்கிறீர்கள். பழகுங்க... பழகுங்க... கே வா போ வுக்கு உங்களிடமிருந்து இந்த வருடம் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் வெங்கட்ஜி சிறுகதையிலேயே மிரட்டரார் இல்லையா....நானும் நினைச்சேன் குறும்படம் எடுக்கும் அளவிற்கு செமையா இருக்கு கதைன்னு....போட நினைத்து எபில ஒரு சின்ன ஆட்டம் போட்டு வரலாம்னு போய் போட்டா அங்கு யாருமே இல்லை ஸோ இங்க வந்தா உங்க கருத்துல அது இருக்கு...ஹைஃபைவ் ஸ்ரீராம்...

   வெங்கட்ஜி நெஜமா சூப்பரா இருக்கு....இந்த மாதிரி கனவு எல்லாம் வந்தால் ஹையோ ராத்திரி வியர்த்து பெருகி இருக்கும்..

   எனக்கு இதெல்லாம் ரொம்பச் சின்ன வயதில் வந்தவை...ஆனால் அதன் பின் கனவு என்பதே அதிகம் இல்லை...படுத்தால் செம தூக்கம்...

   நிறைய எழுதுங்க ஜி!!! நன்றாக வருகிறது..

   கீதா

   நீக்கு
  2. பழகுங்க.... ம்ம்ம். பார்க்கலாம்.

   கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கற்பனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஆஹா... உற்சாகம் தரும் கருத்து. மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. சிலசமயங்களில் கனவுகள் நனவாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம மாதேவி.

   நீக்கு
 12. ஜி தொடக்கத்தில் அரசியல் சந்திராசாமி மாதிரியே இருந்தார் என்று உவமைக்காக சொல்லி விட்டு கனவு முடியும்வரை அவரை சந்திராசாமியாகவே சித்தரித்தது நியாயமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... குழப்பம் தவிர்க்க அப்படி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 13. இது நிஜமா , கற்பனை யா ன்னு தெரில..

  ஆன சிறப்பான எழுத்து நடை ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனை கலந்த நிஜம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   நீக்கு
 14. //பெண் உடல் – முகத்தில் நிறைய கட்டிகள் – அவை வெடித்து அதிலிருந்து நீரும் ரத்தமும் கலந்த ஒரு திரவம் வடிந்து கொண்டிருக்கிறது. தலைமுடி முழுவதும் கருகிப் போய், அப்பெண்ணைப் பார்கவே படு விகாரமாக இருந்தது.

  படிக்கவே பயமாய் இருக்கே!
  திகில் கதை நன்றாக எழுதவரும் உங்களுக்கு.
  பயங்கரமான கதையை படித்து அதனால் வந்த கனவா கதையின் நாயகருக்கு.
  உண்மையில் இது போல் கனவுகள் நிஜமாகும் சாத்தியம் உண்டு.
  கெட்டகனவு என்றால் கை , கால், முகம் கழுவி விட்டு சாமி கும்பிட்டு விபூதி பூசி படுக்க சொல்வார்கள் பெரியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. சொந்த அலுவல் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர இயலா நிலை. பதிவினைக் கண்டேன். சற்றொப்ப இதைப்போன்ற ஒரு நிகழ்வினை என் நண்பர் கூறியிருந்தார். இதனைப்படித்ததும் அந்த நினைவு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 16. அப்போ வந்தது செண்பகமாக இருக்குமோ?:).. நீங்க என்ன பண்ணினீங்க அவவுக்கு நன்கு யோசிச்சுப் பாருங்கோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தது செண்பகமா இருக்குமோ? ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 17. இதில் பயணம் எங்கே என்று தேடினேன் உங்கள் பதிவுகளில் இல்லாத அருமையான சிறு கதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம்... ஹாஹா... நான் எழுதுவது அனைத்தும் பயணமாக இருப்பது இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 18. பதில்கள்
  1. கனவும் நிஜமும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 19. இந்தக் குளிரில் இந்தக் கனா பற்றிப் படிக்க இன்னும் சில்லிட்டது. வெங்கட்டுக்குள்
  இந்தக் கதையா. ஆஹா.
  எனக்கு நேற்று கனவில் ப்ரௌன் கலர் நாய் ஒன்று வந்து பேசி
  குடசலம் விசாரித்தது.
  அருமையாக எழுதி இருக்கிறீர்கள் மா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 20. வெங்கட்ஜியின் எழுத்தின் புதிய பரிமாணம்!

  மிக மிக அழகாக எழுதியிருக்கின்றீர்கள்! ஒரு த்ரில்லர் படம் போன்று. உங்களுக்குக் கதையும் நன்றாக எழுத வருகிறன்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.

  வாழ்த்துகள்! பாராட்டுகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து எழுத வேண்டும். பார்க்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 21. நல்லவேளை..
  இப்படியொன்றும் நடக்கவில்லை!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 23. Your writing is in its best. Good story. Dreams can come true in real life. Ya it happens.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 24. கனவு காணுங்கள். கதைகள் வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  கனவு கதை நன்றாக உள்ளது. சில சம்பவங்கள், நம்முள் கனவாக பிரதிபலிக்கின்றன. சில சமயம் கனவுகள் வாழ்வில் அதே மாதிரியோ, இல்லை சற்று மாறியோ நடக்கின்றன. எது எப்படியோ கதை உங்களுக்கு கட்டுபடுகிறது. அதுவும் நகைச்சுவை கதைகள் தங்கள் எழுத்தாற்றலு க்குள் வசமாகின்றன. நிறைய கதைகளும் எழுதுங்கள்.

  /அப்பெண்ணைப் பார்த்ததால் வந்த என் அலறலில் சந்திராசாமியே கொஞ்சம் நடுங்கிவிட்டார்./

  இவ்வரிகளுக்கு சிரித்து விட்டேன். அருமை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....