வியாழன், 17 ஜனவரி, 2019

ஹாஸ்டல் பேய் – சுதா த்வாரகநாதன்
தில்லி நகருக்கு பணி நிமித்தமாக வந்தது 1987 டிசம்பர் மாதம். எனக்கு வேலை கிடைத்தவுடன், எனக்கு முன்னரே தில்லியில் பணி புரிந்து கொண்டிருந்த தோழிகள் தங்கியிருந்த ஹாஸ்டலில் நானும் வசிக்க ஆரம்பித்தேன். 11 மாதங்கள் வரை அந்த ஹாஸ்டல் வாசம் தான். என் அலுவலகத்தில் பணிபுரிந்த ஏழு பேர் அதே ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். ஒன்றாகச் சேர்ந்து அலுவலகம் செல்வோம். அதைப் போலவே ஒன்றாகவே புறப்பட்டு ஹாஸ்டல் திரும்புவோம்.


ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் தங்க வசதி. கீழே வரவேற்பறை, சமையல் அறை, உணவுக் கூடம், அழகிய புல் தரையுடன் கூடிய தோட்டம், லைப்ரரியும் இருந்தது. முதல் மாடியில் மூன்று பிரிவுகளாய் ஹாஸ்டல். இரண்டாவது மாடி மொட்டை மாடி. ஹாஸ்டலைச் சுற்றிலும் பெரிய சுற்றுச் சுவர் – பாதுகாப்பான இடம் என்பதால் எந்த பயமும் இல்லை. நானும் வேறு இரண்டு தோழிகளும் கிச்சனில் சமைத்துக் கொள்வோம். இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு அவரவர் அறைக்குச் சென்று கொஞ்சம் படிப்பு – இல்லையெனில் உறக்கம் தான்.

ஒரு நாள் காலை உணவு சாப்பிடும் போது பக்கத்து மேஜையில் பக்கத்து அறையில் தங்கி இருந்த பெண்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். 

பார்த்தியா, நேத்தும் நடு இரவு சமயத்தில் கொலுசு சப்தம் கேட்டது. தினம் தினம் இப்படி கொலுசு சப்தம் – நம்ம ஹாஸ்டல்ல பேய் இருக்கோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. என்று பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கோ சிரிப்பு சிரிப்பாய் வந்தது. அது சரி அந்த நடு இரவில் நீங்கள் தூங்காமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டேன். “இல்லைப்பா, தினமும் சரியாய் இரவு 12 மணி சுமாருக்கு கொலுசு சப்தம் கேட்கிறது. நேற்றும் அதே போல கொலுசு சப்தம் கேட்டது. சரியாய் எங்கள் அறைக்கு வெளியே சிறிது நேரம் நின்றுவிட்டது. பிறகு திரும்பவும் அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடி வரைக்கும் யாரோ கொலுசு சப்தத்துடன் நடப்பது கேட்டது என்று அந்தத் தோழிகள் சொல்ல, நான் சிரித்தபடியே இருந்தேன்.

இரவு நேரத்தில் நடுவே ஒரு முறை எழுந்து பாத்ரூம் போக வேண்டியிருக்கும். முதல் மாடியில் முதல் அறை என்னுடையது. அந்தப் பிரிவின் மறு கோடியில் பாத்ரூம்கள் மற்றும் கழிப்பறைகள். இப்போது போல அட்டாச்ட் பாத் வசதிகள் அப்போது இல்லை. போகும்போது கூட பயமின்றிச் சென்று விடுவேன். திரும்ப வரும்போது ரொம்பவே பயமாக இருக்கும். மனது ‘பக் பக்”கென அடித்துக் கொள்ளும். ஒரு பக்கம் க்ரில் கேட் மட்டுமே என்பதால், திறந்தவெளியிலிருந்து வரும் காற்றினால் திரைச்சீலைகள் பறக்கும். ரொம்பவே பயமாக இருக்கும்.  எப்படியோ, மனதுக்குள் ஸ்லோகங்களைச் சொல்லியபடியே, வெளியே பார்க்காமல், “தலையைக் குனியும் தாமரை” போல கீழேயே பார்த்தபடி அறைக்கு வந்து போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கி விடுவேன்.

தனியாகச் செல்வது பயம் தான் எனினும், மற்ற தோழிகளை இதற்காக எழுப்பி அழைத்துச் செல்வது எனக்குப் பிடிக்காது என்பதால் தனியே தான் செல்வது வழக்கம். பக்கத்து அறையிலிருந்த தோழி தனது இன்னொரு தோழியை அழைத்துச் செல்வாள். அவள் தோழி உறக்கம் கலையாத நிலையில் இருந்தாலும் கூட, கிட்டத்தட்ட அவளைத் தள்ளிக்கொண்டு பாத்ரூம் சுவரில் சாய்வாக நிற்க வைத்துவிட்டு, தனது வேலை முடிந்தவுடன் மீண்டும் தள்ளிக்கொண்டு அறைக்குச் செல்வார். எனக்கு அப்படி மற்றவரை தொந்தரவு செய்வது பிடிக்காது என்பதால் தனியே தான் செல்வேன். பயமாயிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிங்கம் போல நடு இரவில் தனியே போய்வருவேன்.

முதல் நாள் இரவிலும் இப்படித்தான் நான் சென்றபோது, தோழிகள் அறையில் பேச்சு சப்தம் கேட்க, சற்றே நின்றேன். “இன்னும் தூங்கவில்லையா என்று கேட்கலாமே என்று தான் நின்றேன். ஆனால் நான் நின்றவுடன் பேச்சு சப்தமும் நின்று விட, சரி என நானும் நடந்து என்னுடைய வேலையை முடித்துக் கொண்டு எனது அறைக்குச் சென்று விட்டேன்.  இப்போது தோழிகள் அதற்கு பயந்து போனதைக் கேட்டு எனக்கு நல்ல சிரிப்பு!

அடியேய், பேயும் இல்லை, பிசாசும் இல்லை. கொலுசுச் சப்தத்துடன் சென்றது நான் தான். எனக்கு தினசரி நடு இரவு நேரத்தில் பாத்ரூம் சென்று வருவது வழக்கம். நானே பயத்தோடு தான் சென்று வருவேன். நேற்று செல்கையில், உங்கள் அறையில் பேச்சுச் சப்தம் கேட்கவே சற்று நின்றேன். பேச்சு சப்தம் நின்று விட்டதால் நான் சென்று விட்டேன் என்றேன். என் தோழிகள் இருவருக்கும் ஒரே கோபம். ”முதல்ல, அந்த கொலுசைக் கழட்டித் தொலை, எப்படி பயந்து போனோம் தெரியுமா?” என்று என்னை அடிக்க வர, நான் அவர்களிடமிருந்து தப்பி ஓட, ஒரே ரகளை தான். 

அந்த ஹாஸ்டல் பேய் பற்றி இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு தான். இன்னும் ஒரு விஷயம் – இன்றைக்கு வரை என் கொலுசை நான் கழற்றவே இல்லை! சலங்கை ஒலியோடு இரவு நேரத்தில் செல்வதையும் விட வில்லை!

வேறு ஒரு பகிர்வுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. நன்கு எழுதும் ஆற்றல் உள்ளது. நன்றாக விவரித்திருக்கிறார். தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள். நல்ல அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து எழுதுவார் என்ற நம்பிக்கை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 2. சுவாரஸ்யம்தான். பலநேரங்களில் பயப்பேய்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயப் பேய்.... ஹாஹா அதே அதே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

   நீக்கு
 4. யாருப்பா இது பயனசித்தர் வலைப்பூவை ஹாக் செய்தது...
  ஆனால் நல்லாத்தான் எழுதுறாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாக்..... ஹாஹா... இல்லை மது.

   வலைப்பூ இல்லாத சில தில்லி நண்பர்கள் இப்பொழுது என் வலைப்பூவில் எழுதி வருகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. Hahaha. நாங்களும் இதை மறக்கவில்லை சுதா. வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் அவை.

  பதிலளிநீக்கு
 7. எநக்கும் பேயைப் பார்க்கநும்நு ணெடுணாள் ஆசை. பயவுள்ள பயண்து எந்முந் வரவே மாட்டிங்கிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 8. பேய் அனுபவம் நல்லா இருக்கு. நாங்களும் ஹாஸ்டல்ல, பாதிரியார் டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்களை பயமுறுத்தியது ஞாபகத்துக்கு வருது.

  பேய் இல்லைனு சொல்றீங்க. ஆனா உங்க கேமராவுல நிஜப் பேய் அழகா வந்திருக்கே.. ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணையத்தில் இருந்து எடுத்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. பேய்க்கதைகள் என்றாலே ஒரு
  சுவாரஸ்யம்தான்

  அதுவும் இதுபோல் என்றால்.
  சொல்லவா வேண்டும்.....

  மிகவும் இரசித்துப் படித்தேன்
  சொல்லிச் சென்ற விதம் அருமை

  வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி. பேய்க் கதை என்றால் ஸ்வாரஸ்யம் தான் எனக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 10. ஹா ஹா ஹா அருமையான நினைவுகள்.. நானும் பேய்தானோ என நினைச்சுக்கொண்டே படிச்சேன்ன்..:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... பேய் என்றால் பயமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 11. பேய் கதை இறுதியில் சிரிப்பை வரவழைத்து விட்டது.
  நன்றாக எழுதி இருக்கிறார்.
  பேய் கதை என்றவுடன் அப்பாதுரை சார் வந்து இருக்கிறாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பேய் கதை சொன்னால் தான் வருகிறார் பல் கொட்டி பேய் ஆசிரியர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. முதல் முதலாய் பேய்க்கு காலுக்கு கொலுசு அணிவித்து தலைக்கு மல்லிகைப்பூ வச்சு விட்ட புண்ணியவான் யாராயிருக்கும் என்கிற கேள்வி எனக்குள் எப்போதும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... நல்ல கேள்வி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 13. நல்ல விவரிப்பு ,பேய்களா,பூதமா ஆவியா அலையுதா,,,,?
  என்கிற கேள்விதான் முன் நிற்கிறது,ஊர்ப்பக்கம் சொல்வார்கள்
  கரெண்டு வந்ததுக்கப்புறம் பேய்கள காணம் என/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 15. கொலுசூப்பேய் கதை சூப்பர். நல்ல வர்ணனை சுதா. வாழ்த்துக்கள்.
  விஜயராகவன்
  தில்லி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 16. ஹா ஹா ஹா சுதா ரொம்ப அழகா எழுதறீங்க. நீங்களும் இதை எல்லாம் வைச்சு கதையே எழுதலாம் போல எனக்குத் தோன்றுகிறது.

  87 என் வாழ்வில் மறக்க முடியாத வருடம். எனக்கு எல் டி சி தேர்வில் நான் பாஸாகி தகவல் வந்தது. ஜூலையில். போஸ்டிங்க், தில்லி, பஞ்சாப், ஹரியானா என்று வட மாநிலங்கள். நான் தில்லி தேர்வு செய்ய நினைத்திருக்க, ஆர்டர் கையில் வரவில்லை. ஆர்வத்துடன் இருந்தப்ப கல்யாணம் திடீரென்று ஃபிக்ஸ் ஆகிட கல்யாணம் முடிந்த 15 வதுநாள் ஆர்டர் என் கிராமத்து வீட்டிற்கு வர அதை அப்பா எனக்கு சென்னைக்கு அனுப்ப....இவர்கள் வீட்டில் போக வேண்டாம் என்றிட...நான் மனம் வருந்திய தினம். நான் கஷ்டப்பட்டு ஸ்டாஃப் செலக்ஷன் தேர்வு எழுதி பெற்ற வேலை...நடப்பதெல்லாம் நல்லதுக்கே என்று எடுத்துக் கொண்டாலும்...ஏனோ....இப்போதும் அந்த வருத்தம் என் அடி மனதில் உண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... நீங்கள் SSC தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் வேலையில் சேராமல் விட்டீர்கள் ஆ.... சில விஷயங்கள் நம் கையில் இல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....