வியாழன், 3 ஜனவரி, 2019

செத்துப் போயிடுவான்-ங்க... – புத்தாண்டுக் கொண்டாட்டம்...


“இப்படியே விட்டா செத்துப் போயிடுவான்-ங்க... 3 டிகிரி குளிர்ல இராத்திரியெல்லாம் கெடந்தா என்ன ஆவறது? போடுங்க, போடுங்க, 100-க்கு ஃபோன் போடுங்க...”


ரகாப்கஞ்ச் குருத்வாராவினை அடுத்த பேருந்து நிறுத்தம். வருடத்தின் கடைசி நாள்.  பேருந்துக்கான காத்திருப்பில் நிறைய பேர் நின்றுகொண்டு இருக்க, அதே இடத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் சோமபானம் அருந்தி மகிழ்ச்சியில் திளைத்தவர், வீடு நோக்கிச் செல்லாமல் தன்னிலை மறந்து விழுந்து கிடந்தார். காலில் சாக்ஸ் இல்லாமல் அணிந்திருந்த காலணி அவர் பக்கத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது. அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த அனைவருடைய கைகளையும் தங்களது மூக்கில் வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. அவர் அறியாமலேயே சிறுநீர் பெருக்கு! ஏற்கனவே குளிர் – சிறுநீரில் கிடந்தது இன்னும் அதிக குளிரை அவருக்கு ஏற்படுத்தலாம்.  ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையில் அவர் இல்லை. அசைவே இல்லாமல் கிடந்த அந்த மனிதருக்காக குரல் கொடுத்தார் ஒருவர் – “இப்படியே விட்டா செத்துப் போயிடுவான்-ங்க....”

“ஹலோ, 100-ஆ?”

“இல்லை 99...  100-க்கு ஃபோன் போட்டுட்டு இப்படி கேட்டா என்ன பதில் சொல்ல? சொல்லுங்க, என்ன பிரச்சனை?”

“ரகாப்கஞ்ச் குருத்வாரா பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேசறேங்க. இங்க ஒரு ஆள் கீழே விழுந்து கிடக்கார். சுய நினைவில்லாமல் கீழே கிடக்கிறார்-ங்க... இந்தக் குளிர்ல இப்படியே ராத்திரி பூராக் கிடந்தா செத்துப் போயிடுவான்-ங்க, ஏதாவது பண்ணுங்க... உங்களுக்குப் புண்ணியமா போகும்.” 

“அட புது வருஷங்க... குஷியா இருக்கக் குடிச்சு இருப்பாரு.... அடிச்ச சரக்கு தெளிஞ்சா எழுந்து வீட்டுக்குப் போயிடுவான். இந்த மாதிரி ஆளுக்கு என்ன சொன்னாலும், எவ்வளவு சொன்னாலும் புரியாது விடுங்க....”

“சார், குளிர்ல விறைச்சுப் போய் செத்துப் போயிட்டா, அவனை நம்பி இருக்கறவங்க எல்லாம் பாவம் இல்லையா? கொஞ்சம் மனசு வைச்சு இவனை அழைச்சுட்டு போய் ஏதாவது ஷெல்டர்-ல விட்டுடுங்க. அதான் அரசாங்கம் குளிருக்காக ஷெல்டர் ஏற்படுத்தி இருக்கே?”

“சரிங்க, ரகாப்கஞ்ச் குருத்வாரா பக்கத்துலயா? இதோ ஜிப்சி அனுப்பறோம். நீங்க அங்கேயே இருங்க....”

ஜிப்சியில் வந்த காவலர் – “யாருங்க இங்க ஃபோன் பண்ணது?, எங்கே அந்த ஆளு?”

“தோ... இவருதாங்க.... பாவம், குளிர்ல இங்கேயே கிடந்தா செத்துத் தொலைச்சுடுவான்.... எங்கேயாவது குளிர்கால ஷெல்டர்-ல விட்டுடுங்க....”

“அடக் கருமமே, துணி எல்லாம் மூத்திரம்... ஒரே கப்பு... சரக்கு வாசம், மூத்திர நாற்றம் இரண்டு சேர்ந்து அடிக்குது....., வண்டி சீட்டுல உட்கார வைக்கக் கூட முடியாது போல இருக்கே...”

“யோவ், எழுந்துருய்யா, எழுந்துரு... யோவ்........ ரெண்டு தட்டு தட்டலாம்னா, பொட்டுன்னு போயிடுவான் போல இருக்கு. குடிக்கனும்னா வீட்டுக்குப் போய் குடிக்க வேண்டியது தான.... இப்படி குடிச்சுட்டு நடு ரோட்டுல விழுந்து நம்ம கழுத்தறுக்கரானுங்க....”

“அசையவே இல்லையே.... நல்ல போதைல இருக்கான். சரி சீட்டுக்கு நடுவுல உட்கார வைத்துப் போக வேண்டியதுதான் போல.  ஒரு கை பிடிங்க.....”

“அட.... கை பிடிக்கவா.... அது உங்க வேலைங்க.... ஏதோ பாவம்னு உங்களக் கூப்பிட்டு சொன்னேன். அதோட என் வேலை முடிஞ்சது.... மூத்திர வாடை என் கையிலிருந்து போகாது.... நீங்களே தூக்கி வண்டில ஏத்துங்க.... அதான் ரெண்டு பேரு இருக்கீங்களே....”

“ஆஹா.... நல்ல ஆளுய்யா நீ.... பாவம் பாத்து ஃபோன் பண்ணுவ, ஆனா, ஒரு கைப் பிடிச்சு உதவி பண்ண மாட்ட....  உனக்கு மட்டும் தான் அருவருப்பு. காவல்துறையில் இருக்க எங்களுக்கெல்லாம் அருவருப்பு இருக்கக் கூடாது. ஒண்ணும் பார்க்கக் கூடாது... சரி வாய்யா, ஃபைவ் நாட் டூ... இந்த ஆள ஒரு பக்கம் புடி...”

சிறுநீர் சொட்டச் சொட்ட ஆளைப் பிடித்து ஜிப்சியில் சீட்டுக்கு நடுவே உட்கார வைக்க, “என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க...?” என்ற உளறல் ஒலி.

“யோவ், வீடு எங்கய்யா இருக்கு? உன் பேரு என்ன? இவ்வளவு சரக்கு அடிக்கலாமா?” கேள்விகளுக்கு பதிலே இல்லை! மீண்டும் போதை மயக்கம்.

ஜிப்சி, அந்த குடிமகனுடன் அங்கிருந்து நகர, ‘இங்கேயே குளிர்ல ராத்திரி பூரா இருந்தா என்ன ஆகறது....’ ‘நல்ல வேளை, காவல்துறையினர் அந்த ஆளை அழைச்சுட்டுப் போனாங்க...., இவர் மட்டும் ஃபோன் பண்ணலன்னா அந்த ஆள், இங்கேயே கிடந்து இருப்பான்....’ – ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களைப் பகிர... பேருந்து நிறுத்தத்தில் இருந்த கூட்டம் விலகியது.

2019 – புத்தாண்டின் முதல் தினம் – காலை ஒன்பது மணி - பங்களா சாஹிப் குருத்வாரா அருகே இருக்கும் பேருந்து நிறுத்தம். அங்கே பேருந்துக்காக காத்திருந்த அனைவரும் மூக்கைப் பிடித்தபடி நின்று இருக்கிறார்கள். பக்கத்தில் அதிக நாற்றத்துடன் அதே உருவம் – கால்களில் காலணி இல்லை. மேலுக்குப் போட்டிருந்த சட்டை மேலே ஏறி இருக்க, தொப்பை தெரிய கீழே படுத்திருந்த உருவம் – நேற்றுப் பார்த்த அதே உருவம்! குளிர் காற்று, வெயில், மழை – எதுவும் என்னை ஒன்றும் செய்யாதுல்லா....  சரக்கு அடிக்கலைன்னா தான் இந்த சேகர் செத்துப் போயிடுவான்!

18 கருத்துகள்:

 1. குடிகாரர்களை திருத்த முடியுமா என்ன? இவர்களுக்கெல்லாம் உதவி செய்வதே பாவம் என்று எண்ண வைத்து விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம்....

   குடிகாரர்களை திருத்த முடியுமா என்ன?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. உன்னால் முடியும் தம்பி பட ஜோக் நினைவுக்கு வருகிறது.

  ஜனகராஜ் கமலிடம் "எம்ஜியார் செத்துப் பூட்டாரேன்னு குடிக்கிறம்ப்பா..." என்பார். கமல், "ஓ... அப்போ அதுக்கு முன்னால குடிச்சதில்லையா?' என்று கேட்க, ஜனகராஜ், "அதுக்கு முன்னால் காமராஜ் செத்துப் போயிட்டாருன்னு குடிச்சிக்கிட்டிருந்தேன்பா" என்பார்.

  குடிகாரர்கள் அவர்களை சேர்ந்தவர்களையும் நரகத்துக்கே இட்டுச் சென்று விடுவார்கள். அனுபவம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னுமொரு ரஜினி படத்தில் கூட “சந்தோஷமா இருந்தா கொஞ்சம் போட்டுக்குவேன், துக்கமா இருந்தாலும் கொஞ்சம் போட்டுக்குவேன்” என்று சொல்வார். :)

   இவர்களை யாராலும் திருத்த முடியாது தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. வந்தாச்சு!! இன்று வேலைப் பளுவா ஜி! லேட்டாகிடுச்சு போல...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தாச்சு..... லேட் ஆனாலும் லேட்டஸ்டா வந்தாச்சு..... :)

   வேலைப்பளு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. ஜி! சரக்கு அடிச்சா அவங்களுக்குக் குளிர் தெரியாதாம் சரக்கு உள்ள போய் வேலை செய்யும் போது உடம்பு வார்ம் ஆகுமாம்.....அதான் குளிர் பிரதேசத்துல இருக்கறவங்க, வெள்ளைக்காரங்க சரக்கு அடிக்கறாங்கனு ஜஸ்டிஃபிக்கேஷன் வேற கொடுப்பாங்க...

  இப்படி சொல்லி இங்க இருக்கறவங்க வருஷம் பூரா குடிச்சு வாந்தி எடுத்து...இதுங்கள எல்லாம் திருத்தவே முடியாது...கிடந்தா கிடக்கட்டும்னு விட்டுறனும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... இவர்களிடம் விதம் விதமான ஜஸ்டிஃபிகேஷன் உண்டு. அவர்களாகவே திருந்தாவிடின் நாம் ஒன்றும் செய்ய இயலாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. இன்றைய தமிழகத்தின் நிலைப்பாடும் இதுதான் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல மாநிலங்களின் நிலை இப்படித்தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

  இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

  அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil US
  www.tamilus.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தமிழ் யு.எஸ்.

   நீக்கு
 7. இப்படியான குடிமகன்கள் எல்லா ஊரிலும் இருப்பார்கள் போலும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 8. //நேற்றுப் பார்த்த அதே உருவம்! குளிர் காற்று, வெயில், மழை – எதுவும் என்னை ஒன்றும் செய்யாதுல்லா.... சரக்கு அடிக்கலைன்னா தான் இந்த சேகர் செத்துப் போயிடுவான்!//

  " நல்லதுக்கு காலம் இல்லை" என்ற பழமொழி இவர்களைபார்த்து தான் போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 9. குடித்து இருப்பவர்கள் மெல் குளிர் நீர் ஊற்றக் கூடாதாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியாது ஐயா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....