புதன், 16 ஜனவரி, 2019

பீஹார் டைரி – ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா – மின் தூக்கி அனுபவம்சூரிய அஸ்தமனம் - உடன் கட்டோலாவில் அமர்ந்து எடுத்த படம்...
ராஜ்கீர், நாளந்தா, பீஹார்.... 

உடன் கட்டோலா – யாருப்பா அது உடன் கட்டையா எனக் கேட்பது…. உடன் கட்டோலா என்ற ஹிந்தி வார்த்தைகளுக்கு அர்த்தம் மின் தூக்கி – அதாவது மலைப் பகுதிகளுக்குச் செல்லும் ரோப் கார் வசதியைத் தான் இப்படி உடன் கட்டோலா என அழைக்கிறார்கள். பல இடங்களில் இப்படி உடன் கட்டோலாக்களில் பயணித்து இருக்கிறேன். நீங்களும் பயணித்து இருக்கலாம். ஆனால் இது வரை இல்லாத ஒரு அனுபவமாக பீஹார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் இருக்கும் ராஜ்கீர் எனும் இடத்திற்குச் சென்ற போது கிடைத்த உடன் கடோலா அனுபவம் வித்தியாசமானது. மலையுச்சியில் அமைந்திருக்கும் உலக அமைதிக்கான ஷாந்தி ஸ்தூபாவினைப் பார்க்க வேண்டுமெனில் இப்படி ஒரு உடன் கட்டோலாவில் பயணிக்கலாம். படிகள் வழியேயும் ஏறிச் செல்ல முடியும் என்றாலும் நேரம் அதிகம் எடுக்கும்.ஒற்றை இருக்கையுடன் உடன் கட்டோலா

ராஜ்கீர், நாளந்தா, பீஹார்.... 

எல்லா இடங்களிலும் இருக்கும் உடன் கட்டோலாக்களிலிருந்து இங்கே இருக்கும் உடன் கட்டோலா வித்தியாசமானது என்று சொன்னேன். அப்படி என்ன வித்தியாசம். மற்ற இடங்களில் நான்கு அல்லது ஆறு பேர் அமர்ந்து செல்லக் கூடிய கேபிள் கார்கள் என்றால் இங்கே இருப்பது ஒவ்வொன்றும், ஒரு ஆள் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய கார் – அப்படிக் கூடச் சொல்ல முடியாது – ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய ஒரு இருக்கை மட்டுமே! அதிலும் ஒரே ஒரு கம்பி மட்டும் எடுத்து உங்களுக்குக் குறுக்கே வைத்து விடுகிறார்கள். அதுவும் சுலபமாக எடுத்துவிடக் கூடிய கம்பி! உங்கள் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்படியான ஏற்பாடு தான்.சற்றே யோசித்துப் பாருங்கள் – மேலே மேலே நீங்கள் ஒரு இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறீர்கள் – கீழே அதளபாதாளம் – மலைகள், மரங்கள் என எங்கே பார்த்தாலும், கீழே விழுந்தாலும் சிதறு தேங்காய் மாதிரி ஆகிவிடும் நம் உடல்! எந்த வித பாதுகாப்பு அறிவுப்புகளும் சொல்வதில்லை அங்கே இருக்கும் ஊழியர்கள். அந்த இருக்கையில் அமர்ந்து கொள்வதும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.  பின்புறமாகத் திரும்பி பின் இருக்கையில் இருந்த நண்பரை நான் எடுத்த படம்.... கொஞ்சம் கொழுப்பு தான் எனக்கு!


உரிய கட்டணம் செலுத்தி [ஒருவருக்கு எண்பது ரூபாய் என நினைவு] உங்களுக்கான நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றால் – நீண்ட வரிசை – பல காட்சிகளைப் பார்க்க முடிகிறது. கேபிள் கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. எப்படி மனிதர்களை அந்த இருக்கையில் அமர வைக்கிறார்கள் என்பது புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வரிசை நகர நாங்களும் முன்னேறுகிறோம். கூண்டுக்குள் போட்டு வைத்த மிருகங்கள் போல ஒரே வரிசையில் மட்டுமே நகர முடியும். அதுவும் வளைந்து வளைந்து போக வேண்டியிருக்கிறது. கும்பலாக உள்ளே நுழைந்து விடுவதைத் தவிர்க்க, நடுவே ஒரு வட்ட வடிவ அமைப்பு. அந்த அமைப்பில் உள்ளே ஒருவர் மட்டுமே நுழைந்து தள்ளிக் கொண்டே நடக்க வேண்டும்! ஒருவர் அப்புறம் சென்ற பிறகே, அடுத்தவர் அமைப்பினுள் நுழைய முடியும்!


கீழே பாறைகள்...

ராஜ்கீர், நாளந்தா, பீஹார்....


நாங்களும் அப்படியே முன்னேறினோம். தொடர்ந்து கேபிள் இருக்கைகள் நகர்ந்து கொண்டே இருப்பதைத் தான் பார்க்க முடிந்ததே தவிர, எப்படி இருக்கையில் மக்கள் அமர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியவில்லை. சற்றே அருகே சென்ற பிறகு தான் அந்தக் கொடுமையைப் பார்க்க முடிந்தது. கேபிள் இருக்கைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க, ஒரு புறம் இருக்கையைப் பிடித்து மேலேயிருந்து வந்த பயணியைப் பிடித்து இழுக்கிறார் ஒருவர். அப்புறத்திலிருந்து இருக்கை இப்புறம் வர, அதற்குள் அடுத்த பயணியை, சரியாக இருக்கை வரும் இடத்தில் நிறுத்தி வைக்கிறார் மற்றொரு ஊழியர். இருக்கையைப் பிடித்து நிறுத்தி, பயணியை ஒரு தள்ளு, இருக்கையில் அமர்ந்தவுடன், கம்பியை எடுத்து மாட்டி விடுகிறார், பிடித்து நிறுத்தி இருந்த இருக்கை மேல் நோக்கி நகர்கிறது. இது அத்தனையும் ஒரு நிமிடத்திற்குள் நடந்து விடுகிறது!பயனாளிகளுக்கு எந்த வித எச்சரிக்கைகளும் தரப்படுவதில்லை. தப்பித் தவறி கம்பி நகர்ந்து விட்டால் [நகர்கிறது – நாமே எடுத்து கீழே தொங்க விட முடிகிறது] என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை! ஒரு நிமிடத்திற்குள் பிடித்து இருக்கையில் தள்ளிவிடுகிறார்கள். இந்த நாற்காலிப் பாய்ச்சலைத் தொடர்ந்து பார்த்து வந்தால், நாமும் நாற்காலி நோக்கி பின்னோக்கிப் பாய்ச்சல் செய்ய ஒரு வழியாகத் தயாராகி விடுகிறோம்.  பல பயனாளிகள் இந்த முறையில் அமர வைப்பதைப் பார்த்த பிறகு அதில் பயணிக்கத் தயாராக இருப்பதில்லை. ஆனாலும் பிடித்து ஏற்றி விடுகிறார்கள். பல பெண்கள் கூக்குரல் எழுப்பியதைப் பார்க்க முடிந்தது.


ஒரு சில பெண்கள் தங்கள் கைகளில் இருந்த பொருட்களைத் தவற விடுகிறார்கள். சிலரின் காலணிகள் கீழே விழுந்து விடுகின்றன. இப்படி நிறைய காட்சிகளைப் பார்க்க முடிந்தது. உடன் கட்டோவை இயக்கும் நிறுவன ஊழியர்கள், ஓடிப் போய் அவற்றை எடுத்து பக்கத்தில் வீசுகிறார்கள்.  சிலர் மேலே சென்ற பிறகு காலணியைத் தவறவிட, கீழே வந்தால் வேறு காலணி தான் வாங்க வேண்டியிருக்கும். மலைக்கு மேல் விழுந்ததை எப்படி எடுப்பது. ஒரு வழியாக, அந்த இருக்கையில் நீங்கள் பிடித்துத் தள்ளப்பட்டு கம்பியால் குறுக்கே ஒரு தடுப்பை மட்டும் வைக்கப்பட, இருக்கை மேலே நோக்கி நகர்கிறது. உங்கள் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது நினைவில் இருக்கட்டும்!முதல் சில நொடிகள் கொஞ்சம் உதறலாகத் தான் இருக்கிறது! எத்தனை தைர்யசாலியாக இருந்தாலும் இப்படி கேபிள் மீது பயணிக்கும் இருக்கையில் சரியான பாதுகாப்பு இல்லாமல் மேலே மேலே செல்வது த்ரில்லான பயணம் தான். இந்தியாவில் அமைந்திருக்கும் உடன் கட்டோலாக்களில் பழமையானதும் முதலாவதும் இது தான் என்று தகவல் சொல்கிறார்கள். 
அப்படி பயணித்தபடியே எடுத்த சில படங்கள் இந்தப் பதிவினில் சேர்த்திருக்கிறேன். “யோவ் உனக்கு ரொம்பத்தான் கொழுப்புய்யா…. இந்த த்ரில் பயணத்திலும் படம் எடுத்தே ஆகணுமா…. என்று சிலர் மனதுக்குள் யோசிப்பது எனக்கும் கேட்கிறது! – கொஞ்சம் வெளிப்படையாக யோசித்து விட்டீர்கள் போலும். ஹாஹா…. வித்தியாசமான அனுபவம் தான் இந்த உடன் கட்டோலா அனுபவம். மேலே செல்வதாவது பரவாயில்லை. திரும்ப கீழே வருவதற்கும் இதே அனுபவம் தான். அது இன்னும் பயங்கரமாக இருந்தது! கீழ் நோக்கி விழுவதைப் போன்ற ஒரு உணர்வு. அப்போதும் நான் படங்கள் எடுத்தபடியே தான் வந்தேன். கூடவே பிடித்த பாடல்களை விசில் ஒலியில் பாடிய படியே வந்தேன்! இந்த உடன் கட்டோலா பயணம் பற்றிய காணொளி ஒன்று இணையத்தில் இருந்ததை இணைத்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்...

இக்குழந்தைகள் கம்பியைப் பிடித்திருப்பதிலேயே அவர்கள் பயம் தெரிகிறதல்லவா....
ராஜ்கீர், நாளந்தா, பீஹார்....


அது சரி மேலே என்ன பார்த்தீர்கள் எனச் சொல்லவே இல்லையே என்பவர்களுக்கு, அங்கே பார்த்த விஷயங்கள் தனிப்பதிவாக…. விரைவில்! என்ன நண்பர்களே உடன் கட்டோலா அனுபவங்கள் பற்றிய பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லலாமே!

வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

 1. குட்மார்னிங். உடன் கட்டோலா என்று படித்தால் உடன்கட்டைதான் நினைவு வருகிறது! ஹா... ஹா.. ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   ஹாஹா உடன்கட்டை உங்களுக்கு நினைவு வந்ததா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஒற்றை இருக்கை ... சுலபமாக விடுபட்டுவிடக்கூடிய கம்பித்தடுப்பு... திகில்தான்!
  அதில் மிகவும் ரிஸ்க் ஆகா திரும்பி போட்டோ எடுத்திருப்பது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..... இதுவரை விபத்து நடந்தது இல்லை. இனிமேலும் நடக்காது என்ற குருட்டு தைர்யம் அவர்களுக்கு....

   திரும்பி படம் எடுத்தது முட்டாள் தனமான வேலை! நல்ல வேளை.... ஒன்றும் ஆகவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. அதில் அமரவைக்கும் முறை... நடுக்கம்தான் வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் - பிடித்து தள்ளி விடுகிறார்கள். இறங்கும் போது இழுத்து வீசுகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ஆமாம்... கீழே வரும்போது விழுந்து விடுவோமோ என்கிற பயம் இருக்குமே... அதை மறைக்கத்தானே விசில் ஊதி கவனம் திருப்பிக் கொண்டீர்கள்?!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா..... பயத்தை மறைக்க விசில்... இல்லை. ஒரு வித சந்தோஷத்தில் வந்த விசில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. நிச்சயம் த்ரில்லான அனுபவம். வீரர்தான் நீங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் செம த்ரில் பயணம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பயங்கரமான அனுபவம்தான் போலயே... எனக்கும் இப்படி பயணிக்க ஆசையாக இருக்கும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... உங்களுக்கும் இப்படி பயணிக்க ஆசையா? நாளந்தா மாவட்டத்தில் இருக்கும் ராஜ்கீர் செல்ல வேண்டியது தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. உண்மையிலேயே ஒரு திகில் பயணம். எந்த அளவுக்கு உயிரை துச்சமாக எடுத்துக்கொள்கிறோம் என்றிருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bபந்து ஜி.

   நீக்கு
 9. மனசு படபடனுச்சி படங்களை மலை உயரத்தை பார்த்து ..நாங்க ஜெர்மனியில் இப்படி போயிருக்கோம் ஆனா அந்த சீட்டில் பெல்ட் உண்டு ..இதில் கொஞ்சமும் ஹெல்த் safety இல்லவேயில்லை பாவம் சின்ன பிள்ளைங்க பெரியவங்களும்தான் ..கால் மட்டுமா அந்தரத்தில் தொங்குது மனுஷங்க உயிரும்தான் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தரத்தில் தொங்குவது கால் மட்டுமல்ல... மனித உயிரும் தான்... உண்மை


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 10. அந்தரத்தில்...அப்பப்பபா. பார்க்கவே பயமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. கடவுளே, இந்தியாவில் தான் உயிருக்கு மதிப்பு இல்லை. இந்த அரசாங்கம் என்ன தான் செய்கிறதோ! நல்லவேளையா இப்படி எல்லாம் போய் மாட்டிக்கலை. ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான்! நல்லபடியாக் கீழே இறங்கினீங்களே அதுக்கே கடவுளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே உயிருக்கு மதிப்பு இல்லீ என்பது ஒரு சோகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 12. என்னுடைய வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவம் உடன் கட்டோலா பயணம். ஓரு நிமிடம் தவறு செய்து விட்டொமா என்று கூட நினைப்பு வந்து சென்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக நம்மால் மறக்க முடியாத பயணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 13. இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாட்டோடு இருந்தால் பயமின்றி ரசிக்கமுடியும். திகிலான பயண அனுபவத்தை அதே திகிலோடு நாங்களும் உணரும்வகையில் எழுதியமை சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமை அந்த மின் தூக்கி நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால் அவர்கள் பணம் மீது மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 14. Scary experience. But the crowd were enormously enthusiastic. On seeing them , I decided to try. Risk is always there.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 15. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

  பதிலளிநீக்கு
 16. திகிலாக இருக்கிறதே இப்படி ஒற்றையாகப் பயணிக்க வேண்டுமா? உங்களுக்கு மனோதைரியம் அதிகம் தான்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 17. வெங்கட்ஜி நானும் பல கட்டோலாவில் பயணம் செய்திருக்கேன் இது வித்தியாசமான ஒன்றேதான். பீஹார்னாலே இப்படித்தானோ??!! ஹா ஹா அதுவும் பாருங்க இன்டியன் டூரிசம்னு வீடியோ வேற போட்டு கவர்கின்றார்களாம்!!

  ஆனால் எனக்கு இதில் போகணுனு தோன்றிவிட்டது. செம அனுபவம் இல்லையா ஜி? த்ரில்லிங்க்! உங்கள் விவரணம் வேறு ரொம்பவே ஆசையைத் தூண்டி விட்டுருச்சு...என்ன ஷூ போட்டுக்கலாம்..இல்லைனா பேக் வார் வைத்த செருப்பு போட்டுட்டா கழண்டு விழாது....மொபைல்ல படம் க்ளிக்கினால் கேர்ஃபுல்லா பண்ணனும் போல...கீழ விழுந்துடாம இருக்கனூமே... கழுத்துல மாட்டிக்கற காமேரா என்றால் கேர்ஃப்ல்லா எடுக்கலாம் படங்கள்...நீங்க ரெண்டுலயும் எடுத்துருக்கீங்களோ?

  படங்கள் அத்தனையும் சூப்பர் அந்த பாறைகளின் நடுவில் ஏதோ வழி இருப்பது போல இருக்கே அந்தப் படமும் சூப்பர்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....