சனி, 19 ஜூன், 2021

காஃபி வித் கிட்டு-115 - காய் - பயணச் சீட்டு - அம்மா - தரிசனம் - ஆம் கா லாஞ்சி - ரத்தபூமி - காலை வணக்கம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வேண்டாம் என்கிற இடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள்.  இல்லையேல்… முதலில் அவமதிப்பார்கள்; அடுத்தது வெறுப்பார்கள்: அடுத்து உங்களை தவறானவன் என்ற பட்டம் சூட்டி விடுவார்கள்! 


******




இந்த வாரத்தின் நிழற்படம் - இது என்ன காய்?





இந்தச் செடியின் இலையும், பூவும் உங்களில் பலர் பார்த்திருக்கக் கூடும்! நினைவிலும் இருக்கலாம்.  ஆனால் காய் பார்த்திருக்கிறீர்களா?  மேலே உள்ளது எந்த செடியின் காய் என்று தெரிகிறதா? சொல்லுங்களேன் பார்க்கலாம்! 


******


இந்த வாரத்தின் எண்ணம் - விமானச் சீட்டு விலை: 


தில்லி திரும்ப வேண்டும் நேரம் வந்து விட்டது. விமானத்தில் தில்லி திரும்ப, எவ்வளவு கட்டணம் என இணையம் வழி பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது!  வரும்போது இருந்ததை விட தற்போது அதிகக் கட்டணம் - சமீபத்தில் தான் அரசாங்கம் குறைந்த பட்ச பயணச் சீட்டு விலையை அதிகரித்தது என்பதால் எல்லா பயணச் சீட்டுகளும் அதிக கட்டணத்தில்! முன்பு தில்லியிலிருந்து திருச்சி வரை வர எவ்வளவு கட்டணம் இருந்தததோ அந்த கட்டணம் இப்போது சென்னை-தில்லிக்கே கேட்கிறார்கள்.  திருச்சியிலிருந்து சென்னை வழி தில்லி என்றால் முன்பை விட மூன்றிலிருந்து நான்காயிரம் அதிகம்!  இந்தத் தொற்று காலத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஏனோ இத்தனை அதிகமான கட்டணம் ஏனோ!  விமானச் சேவை தரும் நிறுவனங்கள் பலவும் நஷ்டத்தில் தான் ஓடுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  பார்க்கலாம்!  இன்னும் எவ்வளவு கடினமான சூழல்களை இந்த உலகம் சந்திக்கப் போகிறது என!  முடிந்த வரை பாதுகாப்புடன் இருப்போம்!  வரும் காலத்தில் நமக்கு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! 


******


இந்த வாரத்தின் விளம்பரம் - Mother Knows Best:


மகனுக்கு/மகளுக்கு மிக முக்கியமாக என்ன தேவை என்பதை அம்மாவே அறிவாள்!  மகன், மகள் எவ்வளவு தான் அதிக புத்திசாலியாக இருந்தாலும், அம்மாவுக்குத் தெரியும் அவரது மகன்/மகளுக்கு தேவை என்பது - அவளுக்கு மட்டுமே தெரியும்!  தாய் இன்சூரன்ஸ் விளம்பரம் ஒன்று, இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக…. பாருங்களேன்!

விளம்பரம் மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியவில்லை எனில் யூட்யூப் தளத்தில் நேரடியாக இங்கே பார்க்கலாம்!



******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - தரிசனம்:


இந்த வாரம் ரசித்த கவிதையாக சொல்வனம் தளத்திலிருந்து ஒரு கவிதை - தென்கரை மகாராஜன் அவர்களின் சொல்வண்ணத்தில். மனதைத் தொட்டது கவிதையும், படமும்.  


தரிசனம்





நீண்ட பிரகாரங்களின்

பழுப்பேறிய தூண்களில்

சாய்ந்து

எதற்கோ காத்திருக்கும்

முதியவரைக் கடந்து செல்கிறேன்

கடவுளை தரிசிக்க…


நடை சார்த்தும்

நேரத்தைக் கடத்துகிறார்கள்

பூக்கடை பெண்ணும்

நெய் விளக்கு விற்பவளும்

போட்டியிட்டுக் கொண்டு…


எந்தச் சலனமுமின்றி

சிறகடித்து

திரும்பி வருகின்றன

இரை தேடிச் சென்ற

கோயில் புறாக்கள்…


காலணிகளை

மாட்டித்திரும்புமிடத்தில்

மழலை ஒன்று தந்த

சில்லைறக் காசினை

நடுங்கும் விரல்களில் பற்றிடும்

முதியவளின் முகவரிகளின்

பின்னே இழையோடுகிறது

வலி மிகுந்த வாழ்க்கை…


தேடிச் சென்றதை

தொலைத்து வருகிறேன்

கோபுரமும் கொடிமரமும்

பார்த்துத்

திரும்பி வருகையில்…


கடவுளின் வேண்டுதல்

பொதுவாகத்தானிருக்கிறது

கோவிலுக்கு வெளியே

கையேந்துபவர்களைப் பொறுத்து…



******


இந்த வாரத்தின் சமையல் - ஆம் கி லாஞ்சி (மார்வாடி உணவு): 


இப்போது கோடை காலம் என்பதால் மாங்காய் நிறைய கிடைக்கிறது.  ராஜஸ்தானி/மார்வாடி மக்கள் இந்த நாட்களில் மாங்காய் கொண்டு தயாரித்து சப்பாத்தி/பராட்டா உடன் தொட்டுக்கொள்ள புளிப்பும், இனிப்பும் கலந்த சட்னி போன்று செய்யும் ஒரு சைட் டிஷ் இந்த ஆம் கி லாஞ்சி!  கொஞ்சம் நம் ஊர் பச்சடி போல இருக்கும் என்றாலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அதிகம் என்பதால் சுவையில் வேறுபாடு இருக்கும்!  முடிந்தால் இந்த ஆம் கி லாஞ்சி செய்து பார்த்து சுவைக்கலாம்!  இணையத்தில் நிறையவே செய்முறை குறிப்புகள் உண்டு - மார்வாடி மொழியிலேயே இருக்கும் காணொளி இங்கே இருக்கிறது - புரிந்தவர்கள் பார்க்கலாம்! கொஞ்சம் ஹிந்தி மாதிரி தான்! ஹிந்தி தெரிந்தவர்கள் கொஞ்சம் குன்ஸா புரிஞ்சுக்கலாம்! ஹாஹா.    


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - சர்வேஷ்வர் மஹாதேவ்:


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சர்வேஷ்வர் மஹாதேவ் - ரத்தபூமி பயணத்தொடரின் ஒரு பகுதியாக.  அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு!


பிரம்ம தேவரே இந்தக் கோவிலில் இருக்கும் சர்வேஷ்வர் சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்ததாக நம்பிக்கை உள்ளது. பாண்டவர்களின் தாயான குந்தி தேவியும் இந்த சிவலிங்கத்தினை தான் பூஜித்ததாகவும், அந்த இடத்தில் இப்போது இருக்கும் கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் பாபா க்ஷ்ரவன் நாத் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்றும் கோவிலில் உள்ள பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.


கோவில் உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. வேறு விஷயங்கள் சொல்வதற்கும் எவரும் இல்லை! அதனால் உள்ளே சென்று என் வழியில் [வேறென்ன ஒரு கும்பிடு! அவ்வளவு தான்] வழிபட்டு வெளியே வந்தேன்.


இந்தக் கோவிலையும், கோவில் அமைந்திருக்கும் பிரம்ம சரோவரையும் ஒரு முறை சுற்றி வந்தால் குருக்ஷேத்திரத்தில் இருக்கும் அத்தனை தீர்த்த ஸ்தலங்களையும் சுற்றி வந்த பலன் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். ஹிந்தியில் கோஸ் [Kos] எனச் சொல்லும் அளவில் 48 கோஸ் [முட்டைக்கோஸ் இல்லீங்க இந்த கோஸ்!] உடையது இந்த குருக்ஷேத்திரத்தின் சுற்றளவு. ஒரு கோஸ் என்பது 1 முதல் 4 கிலோ மீட்டர் அளவு உடையது.


முழுப்பதிவும் படிக்க வசதியாக சுட்டி கீழே!


சர்வேஷ்வர் மகாதேவ் [ரத்த பூமி பகுதி 3]


******


இந்த வாரத்தின் வாட்ஸப் தகவல்கள் - தினம் தினம் காலை வணக்கம்:





சில வட இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள் - அவர்களது அலைபேசியிலிருந்து தினம் தினம் வாட்ஸப் வழி காலை வணக்கம் படங்களும், வாழ்த்துகளும் வந்த வண்ணம் இருக்கும் - நாளுக்குத் தகுந்த மாதிரி - திங்கள் என்றால் சிவன், வியாழன் என்றால் சாய்பாபா என - படங்களும், வாழ்த்துகளும் - அதிலும் அனைதுமே ஹிந்தி மொழியில் தான் இருக்கும்!  தவறாமல் தினம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  கடமை உணர்வு பார்த்து விவேக் ஜோக் ஒன்று நினைவுக்கு வரும் - “உன் கடமை உணர்வுக்கு ஒரு அளவே இல்லையா?” ஒரு டீ ஆத்தும் சர்தாரைப் பார்த்துச் சொல்வார்!  நாள் தவறினாலும் தவறும், அவரிடமிருந்து காலை வணக்கம் - அதுவும் இரண்டிரண்டு தகவல்கள் வராமல் இருப்பதே இல்லை!  நல்ல நண்பர்! இப்படி அனுப்பாதீர்கள் என்று சொல்லி விடலாம்! முடியவில்லை! இவருக்கு அண்ணாத்தே ஒருவர் இருக்கிறார் - தினமும் நான்கு நான்கு படங்கள் இணைத்து அனுப்புவார்! அவரையும் ஒன்றும் சொல்ல முடியவில்லை!  பதில் அனுப்பாமல் வாரத்திற்கு ஒரு முறை வணக்கம் 🙏 போட்டுவிடுவேன்! தினம் தினம் டெலீட் செய்யாமல், Disappearing Messages Option-ஐ On செய்து வைத்திருக்கிறேன்! 


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


34 கருத்துகள்:

  1. // என இணையம் வழி தில்லி திரும்ப விமானத்தில் எவ்வளவு கட்டணம் எனப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது //

    "திரும்ப விமானத்தில் எவ்வளவு கட்டணம் என இணையம் வழி பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது...!"


    இணையம் வழியாக தில்லி திரும்ப முடியாது!    ஹிஹிஹி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி! மாற்றி விட்டேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அதுவே இலை போலதான் இருக்கிறது.  என்ன காய் என்று தெரியவில்லை.  விளம்பரக்குறும்படம் நன்று.  கவிதை மனதை என்னவோ செய்கிறது.  நான் பெரும்பாலும் யாருக்கும் காலை வணக்கம் மாலை வணக்கம் மெசேஜ் அனுப்புவதில்லை.  பத்து பேருக்கு மட்டும் ஏதோ ஒரு நெருங்கிய சந்தர்ப்பத்தில் ஆரம்பித்தது தவிர்க்க முடியாமல் தொடர்கிறது.  அதுவும் காலை வணக்கம் மட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலை போல இருக்கும் காய் - யாராவது சொல்கிறார்களா எனப் பார்க்கலாம் ஸ்ரீராம்.

      குறும்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கவிதை - மனதை ஏதோ செய்யும் கவிதை தான் - படமும்!

      காலை வணக்கம் - நானும் அனுப்பவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாட்சப்பில் குட்மார்னிங்... அந்தத் தொல்லையை நிறைய குழுக்களில் செய்கிறார்கள். ஆனால் எதையோ கச்சா முச்சாவென அனுப்பிவிட்டு, இதனை உடனே பத்து பேருக்கு ஃபார்வர்ட் செய்தால் நல்ல செய்தி உடனே தேடி வரும், பரமாச்சார்யார் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லச் சொல்லியிருக்கார், வேத்த்தில் இருக்கு, புராண நூல்களில் இருக்கு என்றெல்லாம் வித வித டூப் மாஸ்டர்களையும், ஒரே காணொளியை அதே நாளில் பலமுறை பகிரும் வேலையற்ற மறதி மன்னர்களையும் கண்டால்தான் கடுப்பு அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுக்களில் மட்டுமல்ல, தனியாகவும் அனுப்புகிறார்கள் நெல்லைத் தமிழன்.

      நல்ல வேளை நல்ல செய்தி தேடி வரும் போன்ற தகவல்கள் எனக்கு வருவதில்லை.

      மறதி மன்னர்கள் - ஹாஹா... அவர்கள் மறப்பதால் நம்மை அல்லவா படுத்துகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் எனது மனதை உலுக்கி விட்டது நிதர்சனமான உண்மை.

    கவிதை அற்புதம் இந்த காலை வணக்கம் தொல்லை எங்கும் நிலவுகிறது.

    மொழி மாறினாலும் வழி மாறாது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதர்சனம் சொல்லும் வாசகம் - உண்மை கில்லர்ஜி.

      கவிதை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      காலை வணக்கம் தொல்லை - பெரும் தொல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஊமத்தங்காய்.

    ஆம் கி லாஞ்சி செய்துபார்க்கச் சொல்கிறேன். நான்தான் சாப்பிடணும்.

    பிராகாரப் படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊமத்தங்காய் - இல்லை நெல்லைத் தமிழன்.

      ஆம் கி லாஞ்சி - முடிந்த போது செய்து பாருங்கள்.

      படம் - அழகு! எடுத்தவருக்கு பாராட்டுகள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பல்சுவைத் தொகுப்பு அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்சுவைத் தொகுப்பு உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இனி எல்லாமே கடினமான சூழல் ஆகிவிடும் போல...

    விளம்பர காணொளியும், கவிதை வரியும் அதற்கான படமும், மற்ற பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினமான சூழல் - ஆகலாம்!

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காணொளி பார்க்கணும். இன்றைய வாசகங்கள் பொருத்தமானவை. ஆம் கி லாஞ்சி ஒரு தரம் சாப்பிட்டேன். அவ்வளவாப் பிடிக்கலை. :) இங்கே பண்ணினாலும் போணி ஆகாது. கவிதை அருமை. வாட்சப்பில் எனக்கு அவ்வளவாக் காலை வணக்கம் செய்திகள் வருவதில்லை. ஊரில் இருந்து (கருவிலி) ஒரே ஒருவர் அனுப்பி வருகிறார். நாலைந்து நாட்களாக அதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி- முடிந்தபோது பாருங்கள் கீதாம்மா.

      வாசகங்கள் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பயணிகள் இல்லாமல் சில இடங்களுக்கு விமானச் சேவை ரத்தும் ஆகி விட்டுள்ளது. குறிப்பாக பெங்களூர்-தூத்துக்குடி நேராகச் செல்லும் சேவை. கட்டணம் உட்பட நிலைமை சீராக எவ்வளவு நாளாகுமென்பது கேள்விக் குறியே.

    சொல்வனத்திலும் வாசித்த கவிதை. நல்ல பகிர்வு.

    வாட்ஸ் அப் காலை வணக்கங்கள்.. சொல்லித் தவிர்க்க முடியாமல் தவிக்க வைப்பவர் பலர்:).

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில Sector-களில் விமானங்கள் ரத்து செய்திருக்கிறார்கள். சில Sector-களில் எண்ணிக்கையைக் குறைத்து இருக்கிறார்கள். சீராக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் - அடுத்த அலை வராமல் இருந்தால்!

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துகள் கண்டு மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இன்றைய வாசகம் அருமை.
    சொல்வனத்தில் வந்த கவிதை அருமை.
    வாட்ஸ் அப் காலை வணக்கம் இரண்டு பேர்தான் ஆனால் பகிரவும் , என்பதும் மருத்துவ செய்திகளும், கோவில்களும் நிறைய வருகிறது. அவர்கள் மனம் புண்படாதவாறு சொல்லியும் பார்த்து விட்டேன். அப்படியும் நிற்க வில்லை. இப்போது பார்த்து விட்டு டெலிட் செய்து விடுகிறேன்.
    பழைய பதிவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாசகம் நன்று வெங்கட்.
    இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால்
    பல சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாம்.

    கோயில் கவிதையும் காத்திருக்கும் பாட்டியும்
    வேதனை. நிஜமும் அதுதான்:(

    விமானப் பயணச் சீட்டின் விலை ஆயிரக்கணக்கிலா
    உயர்த்துவார்கள்!!! அனியாயம் தான்.
    வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொன்னால்
    நன்றாக இருக்கும். இறைவன் அருள் செய்யட்டும்.

    எனக்குக் காலை வணக்கம் அனுப்புபவர்கள் மூன்றே
    நபர்கள். அனைவரும் எனக்கு விருப்பமானவர்கள்.

    தொற்று காலங்களில் வேண்டாத செய்தி வந்தால்
    மனம் ரசிப்பதில்லை.
    ஸ்டிரெஸ் கொடுக்கிறது. அனைவரும் வளமுடன்
    வாழப் பிரார்த்திக்கலாம் அப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. காணொளி மிக மிக அருமை வெங்கட்.
    நன்றி மா. கண்ணீர் தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி மனதைத் தொடும் காணொளி தான் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வேண்டாம் என்கிற இடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். இல்லையேல்… முதலில் அவமதிப்பார்கள்; அடுத்தது வெறுப்பார்கள்: அடுத்து உங்களை தவறானவன் என்ற பட்டம் சூட்டி விடுவார்கள்!

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. வாசகம் - உண்மை. யதார்த்தம் யாரோ ஒரு மிக நொந்த அனுபவசாலி எழுதிவைத்துவிட்டார் போலும்!

    அந்தக் காய் எருக்கன்செடி காய்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - நொந்த அனுபவசாலி எழுதி வைத்ததோ? ஹாஹா இருக்கலாம் கீதா ஜி.

      எருக்கன் செடி காய் - சரியான விடை! பாராட்டுகள் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. விமானத்தில் குறைந்த பயணிகள் என்பதால் மீதமுள்ள டிக்கெட்டுக்கும் சேர்த்துத் தாளிக்கிறார்கள். இடையில் வேறு விமானச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் நஷ்டம் என்றும் சொன்னார்கள். எனக்கு இங்கு கோ ஏர் ல் வேலை செய்யும் விமானப்பணிப்பெண் எனது நட்பு - பஞ்சாபி - அவருக்கு இடையிடையே சம்பளம் இல்லா விடுமுறை கொடுத்துவிடுகிறார்கள்.

    விமான பயணச் சீட்டு இப்போ ரொம்பவே கூடுதல் என்று தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானத்தில் குறைந்த பயணிகள் - இல்லை கீதாஜி. நான் திரும்பி வரும்போது கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தார்கள்.

      ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா விடுமுறை - வேதனை தான். பலருக்கும் கடினமான காலகட்டம் இது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  17. ஆம் கி லாஞ்சி நம் வீட்டில் மிகவும் பிடிக்கும். (என் தங்கை ஜபல்பூரில் இருந்தாள். அவளிடம் கற்றது. என் அம்மாவின் சித்தி போபாலில் இருந்தார்) காஷ்மீரி மிளகாய்த் தூள் போட்டுச் செய்யவில்லை. நாம் பயன்படுத்தும் மிளகாய்தூள்தான் போட்டேன். இப்ப நீங்க கொடுத்த சுட்டில சொல்லியிருக்காங்க. செய்துவிடலாம். மார்வாடி மொழியிலேயே வாசித்துக் கொண்டேன். ஹிந்தி போலத்தான் இருக்கு...நான் ஒரு சப்ஜி செய்தது பற்றி சொன்ன போது .இந்தச் சுட்டி பற்றி தங்கை சொன்னாள். ஆனால் எனக்குதான் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

    அது போல ஆம் கா panna வும் ரொம்பப் பிடிக்கும். (இங்க நம்ம வீட்டில் பிடிக்காது என்பது இருக்கா என்று யோசிக்கிறென் ஹாஹாஹா) அதுவும் கொஞ்ச நாள் முன்னர் செய்தேன். ஆம் கி லாஞ்சியும் செய்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கா பன்னா, ஆம் கா லாஞ்சி எனக்கும் பிடிக்கும் கீதா ஜி. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      மார்வாடி - ஹிந்தி - பல வார்த்தைகள் ஒன்று போலவே இருக்கும். பேசுவதில் வித்தியாசம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....