சனி, 4 செப்டம்பர், 2021

காஃபி வித் கிட்டு - 125 - chசுக்குடு - கொலு பொம்மை - அவியல் - சோம்பு - அம்மாவின் அன்பு - பண்டிகை - Pied Piper


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Pபுக்தர் மொனாஸ்ட்ரி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மனிதனின் முழுக் கண்ணோட்டமும் இங்கேயே இப்போதே என்றுதான் இருக்க வேண்டும். இது தவிர வேறொரு இடமும் வேறொரு நேரமும் என்றுமே கிடையாது - ஓஷோ.


******


இந்த வாரத்தின் தகவல்  -  காங்கோ நகரிலிருந்து chசுக்குடு



சமீபத்தில், இணையத்தில் உலாவும் போது காங்கோ நாட்டிலிருந்து ஒரு தகவலை படித்தேன்.  அந்தத் தகவல் அந்த நாட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் சுக்குடு (CHUKUDU) எனும் மரத்திலான இரு சக்கர வாகனம் - அதில் தான் அவர்கள் பாரங்களை ஏற்றிச் செல்கிறார்கள் என்று படித்தபோது அந்த வாகனம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதையும் காணொளி வழி பார்த்து ரசித்தேன். அவர்களுடைய வாழ்க்கை எத்தனை கடினமானது என்பதை காணொளி மூலம் பார்க்கும்போது நமக்கு இந்த நாட்டில் இருக்கும் சூழல் எத்தனை அழகானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.  காணொளிகள் காண விரும்பினால் யூட்யூபில் தேடிப் பாருங்களேன். 


******

இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு: கொலு பொம்மை




2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கொலு பொம்மை செய்பவருடன் ஒரு சந்திப்பு....


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


104 வருடங்களாக, நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக கொலு பொம்மைகள், பொம்மைகள் செய்வது தான் இவர்களுக்குத் தொழில். களி மண், மற்றும் வண்டல் மண் கலந்து பதமாக்கி, அதை பொம்மைகளுக்கான அச்சில் [Mould] பதித்து, முக்கிய உருவத்தினை உருவாக்கிய பிறகு, பொம்மையில் இருக்கும் உருவத்திற்கு, கை, கால், தலை என ஒவ்வொரு பாகமாகச் சேர்க்கிறார்கள். அதன் பிறகு சூளையில் சுட வேண்டும். பிறகு வண்ணங்கள் பூச்சு என அதிகம் வேலை உண்டு. இத்தனை வேலைக்குப் பிறகு தான் நாம் பார்க்கும் வண்ணமயமான பொம்மை கிடைக்கிறது.


இந்தப் பொம்மைகளுக்குப் பின்னே எத்தனை உழைப்பு.  அவரது தொழிற்சாலையில் – அதுவும் தொழில் தானே – எங்கு பார்த்தாலும் அச்சுகள் – அதனுள்ளே பலப்பல பொம்மை உருவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பல வருடங்களாக காப்பாற்றி வைத்திருக்கும் அச்சுகள். தவிர புதிது புதிதாகவும் அச்சுகளை காலத்திற்குத் தகுந்த மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அச்சுகளை POP என அழைக்கப்படும் Plaster of Paris கொண்டு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால், அதை வைத்து இத்தனை பொம்மைகள் மட்டுமே செய்யலாம் என்ற கணக்கு இருக்கிறது! தொடர்ந்து ஒரே அச்சைப் பயன்படுத்தினால் பொம்மையின் வடிவம் மாற வாய்ப்புண்டு! ஆனாலும் இந்த அச்சுகளை வைத்து அடுத்த அச்சை தயாரிக்க வேண்டும் என்பதால் அனைத்து அச்சுகளும் இங்கே வைத்திருக்கிறார்கள்.


******


இந்த வாரத்தின் அனுபவம்: அவியல்:



சமீபத்தில் ஒரு ஞாயிறன்று காலையில் உணவு சாப்பிட்டு நண்பர் பத்மநாபன் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டேன்.  பல மாதங்களுக்குப் பிறகு அவர் வீட்டுக்குச் செல்கிறேன்.  தீநுண்மி நமது பல வேலைகளை தள்ளிப்போடவோ, செய்யாமலோ இருக்கச் செய்திருக்கிறது.  அலுவலகம் - வீடு - அலுவலகம் என்றே நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன.  வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது மிகவும் கொடுமை.  நண்பர் பத்மநாபன் அவர்கள் வீட்டில் சில மணி நேரங்கள் இருந்து அளவளாவியது மகிழ்ச்சியான விஷயம். பேசிக் கொண்டிருந்த பின் மதிய உணவுக்காக அவர் வீட்டின் பின்னால் இருக்கும் கர்நாடகா Bபவன் உணவகத்திற்குச் சென்று வரலாம் என சென்றோம்.  மதிய நேரம் என்பதால் THதாலி என இங்கே அழைக்கப்படும் ஃபுல் மீல்ஸ் தான் சொன்னோம்.  தேங்காய் போட்ட ரசம், பூசணிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், இரண்டு பூரி, அப்பளம், ஊறுகாய், பாயசம், ஒரு கப் சாதம் மற்றும் அவியல்! 


அவியல்  என்ற பெயரில் கொடுத்தது “அவியலு”க்கே களங்கம் விளைவித்தது! - சில துண்டு பூசணிக்காய், சுண்டு விரல் நுனி அளவு ஒன்றிரண்டு கேரட் துண்டுகள் மற்றும் ஒரு முழு பச்சை மிளகாய், நீர்க்க மோர் மாதிரி திரவத்தில் மிதந்து கொண்டிருந்தன.  நாகர்கோவில் அவியலுக்குப் பெயர் போன ஊர் - அந்த ஊர்க்காரரான பத்மநாபன் அண்ணாச்சி புலம்பித் தள்ளி விட்டார் - ”டேய் என்னடா இது - இதை அவியல்னு சொல்லி ஏமாத்தறிங்களே - கல்யாணத்துக்கு அவியல் சாப்பிடவென்றே செல்லும் ஆட்கள் எங்க ஊரில் உண்டு - ஒரு காய் குறைஞ்சாலும் எங்க ஊர்ல உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க! அதிலும் சீனி அவரை இல்லாமல் அவியலா என்று சண்டை போட்ட காட்சிகளைப் பார்த்தவன் நான்!  என் கிட்டயே இந்த மாதிரி ஒரு களங்கத்தைக் காண்பித்து, அவியல்னு சொல்லிட்டீங்களே!” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.  அதையும் ருசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் சில வட இந்தியர்கள்.  அவர்கள் “Starter” ஆக சுவைத்தது - ரசமும் அப்பளமும் - ”அப்பளத்தை ஒரு கடி, ரசத்தைக் கொஞ்சம் குடி!


******


இந்த வாரத்தின் நிழற்படம் - சோம்பு:




சமீபத்தில் ஒரு உணவகத்திற்குச் சென்ற போது (உணவகம் குறித்து பிறகு எழுதுவேன்!) அங்கே உணவு சாப்பிட்ட பிறகு, Bill உடன் தரும் Sweetened சோம்பு வைத்திருந்த பாத்திரம் கண்ணைக் கவர்ந்தது.  மயில் போன்ற உருவம் - அதில் ஒரு கண்ணாடிக் குடுவை - அதனுள்ளே சோம்பு! பார்க்க அழகாக இருந்ததால் அதனை படம் எடுத்துக் கொண்டேன். அது உங்கள் பார்வைக்காக இங்கே!


******


இந்த வாரத்தின் காணொளி/விளம்பரம் - Mom’s Magic:


அம்மாவிற்கு இரு குழந்தைகள் இருந்தால் இருவரின் மேலும் ஒரே அளவில் அன்பு செலுத்துவார்கள் என்று சொல்லும் விளம்பரம் இது - மனதைத் தொட்ட விளம்பரம் - பாருங்களேன்!



******


இந்த வாரத்தின் பண்டிகை - Ghee Sankaranthi:





உத்திராகண்ட் மாநிலத்தில் ஆகஸ் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை Ghee Sankaranthi.  பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் சமயத்திலும், பால் கொடுக்கும் விலங்குகளும் ஆரோக்கியமாக இருக்கும் சமயத்திலும் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.  பழம் தரும் மரங்களிலும் பழங்கள் காய்த்துக் கொண்டிருக்கும் சமயம் என்பதால் இந்தப் பண்டிகை சமயத்தில் நிறைய கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும் நிலவும். நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது பணியாளர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்வார்கள்.  இப்படியான பண்டிகை குறித்து கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? 


******


இந்த வாரத்தின் WhatsApp Status - Pied Piper:



Pied Piper தற்போது இருந்திருந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லும் வாட்ஸப் நிலைத்தகவல் - நான் ரசித்ததை நீங்களும் ரசிக்க இங்கே!


******


நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


24 கருத்துகள்:

  1. அவியல் அனுபவம் கொடுமைதான்.  என் பாஸ் அவியலில் ஸ்பெஷலிஸ்ட்.  நண்பர்கள் கலந்து பேசி பொழுது சென்றது மகிழ்ச்சி.  சுக்குடு, கொலுபொம்மை, சோம்பு வைத்திருக்கும் பாத்திரங்கள் ரசித்தேன்.  குறும்படம் மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும்தான் அவியல் ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. அவியல் அனுபவம் கொடுமைதான். உங்கள் பாஸ் அவியல் ஸ்பெஷலிஸ்ட் - ஆஹா. பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஓ நீங்களும் அவியல் ஸ்பெஷலிஸ்ட் - ஆ நெல்லைத் தமிழன்? ஒரு முறை இதற்காகவே பெங்களூரு வந்து விட வேண்டியது தான் - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட். காஃபீ வித் கிட்டு
    மிக சுவாரஸ்யம்.
    ஸ்பெஷல்லி கார்ட்டூன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. Ghee Sankranthi கேள்விப்பட்டதில்லை.
    மிக நல்ல பழக்கமாக இருக்கிறதே.
    படங்களும் சிறப்பு.

    இனிப்பு சோன்ஃப் மும்பையிலும், இங்கிருக்கும் உணவகங்களிலும்
    வித விதமான பாத்திரங்களில் கண்டிருக்கிறேன்.
    இந்த கண்ணாடி+அன்னம் அழகா இருக்கிறது.

    அவியல் கொடுமை அனியாயமாக இருக்கிறது.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ghee Sankranthi - எனக்கும் புதியது தான் வல்லிம்மா.

      பதிவின் மற்ற பகுதிகள் குறித்த உங்கள் கருத்துகள் கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அம்மாவின் மாஜிக் மிகப் பிடித்தது. இந்தப் பையன் பேச குழந்தை தலையைத் தூக்குவது
    மிகப் பிடித்தது.
    பண்ருட்டிக்குப் போய் பொம்மை செய்வதைப்
    பார்த்த நினைவு வந்ததுமா.
    மிக அழகான பொம்மைகளின் விவரங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரமும் கொலு பொம்மை பின்னோக்கிப் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      பன்ரூட்டி பொம்மைகள் குறித்து அம்மாவும் பெரியம்மாவும் சொல்வதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு சார்.
    கொலு பொம்மைகள் குறித்த பழைய பதிவை படித்து மகிழ்ந்தேன்.
    தங்களின் ஏழு சகோதரிகள் தொடரில் கல்கத்தாவிலும் இப்படிப்பட்ட கைவினைஞர்கள் தெரு குறித்த சுவாரசியமான தகவல்களை எழுதியுள்ளீர்கள்.
    கண் முன்னே சங்கை வளைத்து நகை செய்து தருவது குறித்தும் எழுதியுள்லீர்கள்.
    தொழில்நுட்ப உலகில் இத்திறமை வாய்ந்தோர், "Project designer" என்ற வடிவில் பல லக்ஶங்களை சம்பாரிப்பதைக் கான்கிறோம்.

    அவியல் அணுபவம் கொடுமையே.
    எங்கள் சிவகாசியில் ஒரு அசைவ உணவுப் பிரியராக ஒரு மாமா உள்ளார்.
    அவர் சென்னை வந்து ஹைபிரிட் கொளி சாப்பிடும்போதெல்லாம் இப்படித்தான் புலம்பித் தள்ளுவார்.
    உணவு உலகமயமாவதின் பின் விளைவு இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த மேலதிகத் தகவல்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அத்தனையும் அருமை. பைடு பைப்பர் சிந்திக்கவும் வைத்தது .. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இன்றைய கதம்பத்தை (அவியலை?) ரசித்தேன்.... வட இந்தியா என்பதால், எதையேனும் போட்டு, இது தென்னிந்திய ஸ்டைல் என்று சொல்லிடலாமோ என்னவோ... எனக்கு அவியலில் முருங்கை போட்டால் பிடிக்காது. ஆனால் இங்க, காய் எதையுமே போடலை போலிருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தை (அவியலை) ரசித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். எதையேனும் போட்டு தென்னிந்திய ஸ்டைல் - இப்படித்தான் வடக்கில் நிறைய செய்கிறார்கள். அதனால் பொதுவாக நான் தில்லியில்/வடக்கில் தென்னிந்திய உணவுகளை உணவகங்களில் சாப்பிடுவது வெகுவும் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிக சுவாரசியமான பதிவு. Pied piper வாட்ஸப் நிலைத்தகவல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மிக அருமையான கதம்பம்.
    அவியலை இப்படி தண்ணியாக காய் இல்லாமல் பார்த்தால் அண்ணாச்சியை புலம்ப வைக்காமல் என்ன செய்யும்!

    காணொளி மிக அருமை.
    இரண்டு சிறு குழந்தைகளை வளர்ப்பது, அவர்களிடம் இரண்டுபேரும் இரண்டு கண்கள் என்று சொல்லலாம். முன்பு 10 பிள்ளைகளையும் சமமான அன்பு செய்து வளர்த்தார்கள்.
    நன்றி சொல்லும் பண்டிகை மிக அருமை.

    ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லும் தினமாக பண்டிகைகள் இருப்பது தான் விஷேசம்.

    வாட்ஸப் தகவல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. மயில், சங்கராந்தி, காணொளி என கண்ணனுக்கும் மனதுக்கும் விருந்து.

    அவியலை நினைத்தால்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....