அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நேரம் கிடைக்கும் போது மட்டும் நலம் விசாரிக்காமல் நமக்காக நேரம் ஒதுக்கி நலம் விசாரிக்கும் அன்பான உறவு கிடைப்பது கூட ஒரு பெரிய வரமே!
******
இந்த வாரத்தின் எண்ணம் - எனது பதிவுகள் :
கடந்த சில வாரங்களாக எனது பதிவுகள் பெரிதும் இங்கே வருவதில்லை - இல்லத்தரசி, நண்பர்கள் ஆகியோர் எழுதிய பதிவுகளே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தது. அலுவலக சூழல் அப்படி இருந்தது. பாராளுமன்ற கூட்டத் தொடர் இருக்கும் நாட்கள் காலை 08.30 மணிக்குச் சென்றால் இரவு திரும்புவது எத்தனை மணிக்கு என்பதே புரியாத புதிராக இருந்த நாட்கள். முடிந்த வரை நண்பர்களின் பதிவுகளை படிப்பதும், எனது பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளுக்கான கருத்துரைகளை பதில் அளிக்கவும் மட்டுமே நேரம் கிடைத்தது. புதிய பதிவுகள் எழுத விஷயங்கள் உண்டு என்றாலும், எழுத நேரம் அமையவில்லை. பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்போது முடிந்திருக்கிறது. இனிமேல் சிறிது நேரம் கிடைக்கும். இனி வரும் நாட்களில் எனது பதிவுகளும் வரலாம். தொடர்ந்து எழுதி என்ன கிடைத்து விடப் போகிறது என்ற கேள்விகள் சில நண்பரிகளிடம் இருந்து வந்தது! தொடர்ந்து எழுதுவது என் பொழுதுபோக்கு! பிடிக்கும் வரை எழுதிக் கொண்டே தான் இருப்பேன் என்று சொல்லி இருக்கிறேன் - சரிதானே? சொல்லுங்களேன் உங்கள் எண்ணங்களையும் - பின்னூட்டத்தில்!.
******
இந்த வாரத்தின் பொக்கிஷம் - டைவர்ஸ்:
பொக்கிஷம் பகிர்வாக, 60-களின் ஆனந்தவிகடன் இதழிலிருந்து ஒரு துணுக்கு - அதில் ஆதாரம் என்று அராப் டைம்ஸ் பத்திரிகை பற்றி குறிப்பிட்டிருந்தாலும், இது உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள். பொக்கிஷமாக இருக்கும் சில விஷயங்கள் குப்பைகளாகவே கிடைக்கின்றன என்பதை இந்தத் துணுக்கிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது! இது குறித்த உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
******
இந்த வாரத்தின் பின்னோக்கிப் பதிவு - சொல்லாதது வறுமை – இரு குறும்படங்கள் :
2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சொல்லாதது வறுமை – இரு குறும்படங்கள்
பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!
ஒரு மசாஜ் நிலையம். அங்கே வரும் பெண் வாடிக்கையாளருக்கும் மசாஜ் செய்யும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளில் தொடங்குகிறது கதை. தனது கணவர் தன் மீது காட்டும் அன்பு பற்றி மசாஜ் செய்யும் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார் – ஐநூறு ரூபாய் டிப் கொடுத்துச் செல்லும் அந்த நாள் அவரது திருமண நாள். அன்று என்ன நடந்தது என அடுத்த முறை வரும்போது சொல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறாள் மசாஜ் செய்யும் பெண். பிறகு.... படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்! மனதைத் தொட்ட குறும்படம்.
******
இந்த வாரத்தின் உணவு - CHAK-HAO KHEER :
இந்த வாரத்தின் ஒரு இனிப்பாக, மணிப்பூர் மாநிலத்திருந்து ஒரு புதிய சமையல் குறிப்பு. கருப்பு அரிசி என அழைக்கப்படும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு இது. எப்படிச் செய்ய வேண்டும் என்பதை பார்க்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம். இந்த கருப்பரிசிக்கு FORBIDDEN RICE என்ற பெயரும் உண்டு என்பது கூடுதல் தகவல்.
CHAK-HAO KHEER / MANIPURI BLACK RICE PUDDING - YouTube
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் - தின்னா திறம் படுத்தலே :
தமிழ் நாட்டுப் புறப் பாடல்கள் போலவே தெலுகு மொழியிலும் சில நாட்டுப்புற பாடல்களை நண்பர் ஒருவர் பகிர்வது வழக்கம். அப்படி கேட்ட தெலுகு பாடல் ஒன்று இதோ ரசித்த பாடலாக, உங்கள் பார்வைக்கு!
******
இந்த வாரத்தின் தகவல் - சஹானா பரிசுகள் :
வாசிப்பனுபவங்களை இங்கே பகிர்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். சில முகநூல் குழுமங்களில் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்வதும் உண்டு. அப்படி ஒரு குழு, பதிவர் அப்பாவி தங்கமணி அவர்களின் சஹானா இணைய இதழ் நடத்தும் ஒரு குழு. அங்கே கடந்த சில மாதங்கள் நடத்திய வாசிப்பு போட்டிகளில் நானும் கலந்து கொண்டு எனது வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். போட்டியில் அதிக வாசிப்பனுபவங்கள் பகிர்ந்தமைக்கு சில பரிசுகளும், சிறந்த வாசிப்பனுபவம்/விமர்சனம் என ஒரு பரிசும் கிடைத்தது. புத்தகம், ஒரு சாண்றிதழ் மற்றும் மெடல். அந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. போட்டி நடத்தும் அப்பாவி தங்கமணி அவர்களுக்கு நன்றி. போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். கிடைத்த பரிசுகள் மேலே படத்தில்!
******
இந்த வாரத்தின் எண்ணம் - மூன்றாம் அலை:
கடந்த சில நாட்களாக தீநுண்மி பாதிப்பு மீண்டும் அதிகரிக்காது துவங்கி இருக்கிறது. குறிப்பாக கேரளா, வட கிழக்கு மாநிலங்கள் போன்ற இடங்களில். மக்கள் எந்த பயமும் இன்றி சுற்றி வருவதை பார்த்தால் மூன்றாம் அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தோன்றுகிறது. பல பயணங்கள் திடடமிட்டு இருந்தாலும், எங்கேயும் செல்லாமல் இருக்க, இங்கே பலர் பயணங்கள் மேற்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். குறிப்பாக மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வந்த நண்பர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் திகில் தருபவை. ஹிமாச்சலப் பிரதேசம், உத்திராகண்ட், ஜம்மு மாநிலங்களில் அதீத மழையும் அதன் காரணமாக உருவான நிலச்சரிவுகள் ஆகியவை குறித்துப் பேசும் போது அப்படியும் பயணம் செய்ய வேண்டுமா என்று தோன்றியது. நான் சமீபத்தில் திட்டமிட்ட இரண்டு பயணங்களை திட்ட அளவிலேயே நிறுத்தி இருக்கிறேன். தற்போதைக்கு பயணம் செய்ய, அதிலும் சுற்றுலாவாக செல்ல சூழல் இல்லை என்பதே நிதர்சனம்.
******
நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
உண்மை. எழுதுவது என்பது நமது திருப்திக்கு.. முடிந்தவரை எழுத வேண்டியதுதான்! பகிரவேண்டியதுதான்!
பதிலளிநீக்குபொக்கிஷம் : நான் சொல்ல நினைப்பது இதுதான். நல்ல பைண்டிங் போல.. இடதுபக்கம் இவ்வளவு தெரியும்படி பைண்ட் செய்திருக்கிறார்கள்! முழுவதும் தெரியவேண்டும் என்று பிரித்தால் புத்தகம் பைண்டிங் வெளிவந்து விடும் அல்லது கேமிரா நழுவி விடும்! மேலும் அழகாக, தெளிவாக நேராக போட்டோ எடுத்து நீட்டாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
வேறு சில பழைய தெலுங்குப் பாடல்கள் நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
சஹானா பரிசுகள் --- மகிழ்ச்சி, வாழ்த்துகள். சஹானாவுக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டிலும் அதே நிலை. மூன்றாம் அலையை பெரும்பாலானோர் நம்பவில்லை அல்லது மதிக்கவில்லை.
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நெப்போலியன்..விவாக முறிவு பற்றி முன்னர் படித்ததை நினைவுபடுத்தியது பொக்கிஷம்..
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முடிந்த போது எல்லாம் எழுதுங்கள். வேலை பளு அதுதான் நீங்கள் வரவில்லை என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குஆதி வலைத்தளம் வருவது மகிச்சிதான்.
சஹானா பரிசு மழை அருமை, வாழ்த்துக்கள்.
பயணம் செய்ய ஏற்ற காலத்தில் போய் வரலாம், இப்போது ஒத்தி வைத்தது நல்லதுதான்.
முடிந்த போது பதிவுகள் வரும் கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சற்றே நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் அலை... என்று தீருமோ...
பதிலளிநீக்குஅலை என்று ஓயும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
"வித விதமாகச் சாப்பிட்டு என்ன காணப் போகிறோம்.. எதைத்தான் செய்து என்ன காணப்போகிறோம் இல்லை என்ன சாதிக்கப் போகிறோம்" என்று நெகடிவ்வாகச் சிந்திப்பவர்களை அருகில் வைத்திருப்பதே ஆபத்தானது. நிறைய 'என்னத்த கன்னையாக்கள்' பெருகிவிட்டார்களோ? ஹாஹா.
பதிலளிநீக்குசஹானா இதழ், புத்தக வாசிப்பு அதிகமாக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய போட்டிகளை ANNOUNCE செய்து பரிசளிப்பது பாராட்டப்பட வேண்டியது.
என்னத்த கன்னையாக்கள் பெருகிவிட்டால் ஆபத்து தான் நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நாம் தொடர்ந்து ஈடுபடும் சில விஷயங்கள் மற்றவர் பார்வையில் ‘என்ன கிடைக்கப் போகிறது’ எனும் கேள்வியை எழுப்பலாம். நம் மனத் திருப்தியே முக்கியம். தொடருங்கள். சஹானா இணைய இதழிடமிருந்து பெற்ற பரிசுகளுக்காக வாழ்த்துகள். நல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தீநுண்மி மீண்டும் வராதிருக்கட்டும்.
பதிலளிநீக்குதெலுகு பாடல் தாளம் போட வைத்தது ஜி ஆனால் பாடகியின் குரல் பஞ்சாபி பாடல் போலவே இருக்கிறது.
தீநுண்மி மீண்டும் வராதிருக்கட்டும் - அது தான் தேவை கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. இன்றைய காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.
உங்கள் எண்ணம் நன்று. உங்கள் பதிவுகளை எப்போதும் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு சௌகரியபடும் போதெல்லாம் எழுதுங்கள்.
பொக்கிஷம் பகிர்வு நன்றாக உள்ளது. நன்றாக விலை போயிருந்தால்/போனால், விலை கொடுத்து வாங்கியதற்கு நல்லதுதான்.
பின்னோக்கிச் சென்று குறும்படங்கள் பார்த்தேன். முதலாவது வரவில்லை. "வறுமை"மனதை சங்கடபடுத்தியது. யாரேனும் உணவை வீணில் வம்பு செய்வது எனக்கும் வருத்தத்தை தரும். ஒரு ஜாண் வயிறு உணவுக்காகத்தானே இந்த வாழ்வு என எண்ணும் போது குறும் படத்தின் முதியவரின் செயல் மனதை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது.
இன்றைய உணவு பீட்ரூட் கலரை நினைவுபடுத்துகிறது.
நீங்கள் ரசித்த தெலுகு பாடல் நன்றாக இருந்தது. நானும் கேட்டு ரசித்தேன்.
அனைவரையும் கௌரவித்து பரிசுகள் தந்து உற்சாகப்படுத்தும் சஹானா இணைய தளத்திற்கு வாழ்த்துகள். அதில் பல பரிசுகளை வென்றிருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
விரைவில் தொற்று முழுதும் நீங்கிட பிரார்த்தித்து கொண்டேயுள்ளோம். ஆனால் இங்கும் ஒருவருக்கும் பயமில்லை. நமக்குத்தான் எந்நேரமும் பயமாக இருக்கிறது.
இன்றைய அனைத்து பகிர்வினுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் நன்பர்களே.
பதிலளிநீக்குஎழுதுவது அணைவருக்கும் பயனுள்ளதே.
பரிசு வென்றதற்கும் போட்டி நடத்தும் அப்பாவி தங்கமனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நெப்போலியன் வாழ்க்கை வறலாற்றை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது அப்பொக்கிஶம் குறித்த தகவல்.
மூன்றாம் அலை தடுப்பூசி போட்ட வளர்ந்த நாடுகளையே பதம் பார்க்கிறது.
நமக்கு கஶ்டம்தான்.
பயணங்கள் தள்ளிவைக்கப்பட வேண்டியதுதான்.
கருப்பு அரிசி பற்றி படித்தவுடன் தங்களின் குரங்கு அரிசியும் யோங்சா சட்னியும் அணுபவங்கள் நினைவுக்கு வருகிறது.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த். தடுப்பூசி போட்ட வளர்ந்த நாடுகளில் கூட அடுத்த அலை தொடங்கிவிட்டது என்பது வேதனையான உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆம் வெங்கட் ஜி. இனிமேல் ஹிமாச்சலப் பிரதேசம், உத்திராகண்ட், ஜம்மு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வது கடினம் என்றே தோன்றுகின்றது.
பதிலளிநீக்குபயணம் செல்வது கடினம் என்றே தோன்றுகிறது இராமசாமி ஜி. பொறுத்திருந்து பார்க்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவு வழக்கம் போல அருமை...
பதிலளிநீக்குஇத்தனை வேலை சுமைகளுக்கு இடையேயும் பதிவுகளை ஒழுங்கு செய்து வெளியிடுதல் சிறப்பு...
நல் வாழ்த்துக்களுடன்...
முடிந்த வரை பதிவுகள் வெளிவரும் துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பின் வெங்கட் மீண்டும் எழுத வந்தது
பதிலளிநீக்குஅருமை.
நானும் எனக்காகவே எழுதுகிறேன்.
யாராவது வந்து கருத்திட்டால் மகிழ்ச்சி. வந்து படித்துப்
போனாலும் மகிழ்ச்சி.
உங்கள் நல் வார்த்தைகள் எப்பொழுதுமே இனிமை.
சஹானா வலைத்தளம் மிக சிறப்பாக இயங்கி வருகிறது.
அதில் தொடர்ந்து நீங்களும் ஆதியும் பரிசு
வாங்குவது அருமை. நல் வாழ்த்துகள்.
இங்கே மூன்றாவது அலை தொடங்கி
வளர்ந்து வருகிறது.
அப்படியும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத
தொல்லை விரும்பிகள் இருக்கிறார்கள்.
பயணம் மேற்கொள்வதைத் தள்ளி வைக்க வேண்டும்.
வந்தடையும் செய்திகள் விரும்பும்படி இல்லை.
பத்திரமாக இருங்கள்.
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா. முடிந்த வரை எழுதிக் கொண்டே இருப்போம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சஹானா பரிசுகள் கிடைத்ததற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.