ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 17 - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


எதையும் உன் சொந்த அறிவு கொண்டு சிந்தி; எதையும் அப்படியே நம்பிவிடாதே; ஏன், எதற்கு, எதனால் என்று கேள்வி கேள் - சாக்ரடீஸ்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு 


பகுதி பதினைந்து பகுதி பதினாறு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


நான் சுருக்கெழுத்தன் அல்லவா? அந்தக் கதைக்கு வருகிறேன். 





வட இந்திய அதிகாரிகளின் ஆங்கிலப் புலமைக்கு அளவே இல்லை. பிரிட்டிஷாருக்கே இவர்கள் தான் ஆங்கிலம் கற்றுத் தந்தவர்கள் போல அப்படி ஒரு பீலா மன்னர்கள். அவர்களது உச்சரிப்பில் நான் எனது ஆங்கிலத்தையே மறந்தேன் என்றால் மிகையாகாது.  நான் தனியாக பட்ட அவஸ்தைகளை விவரிக்காமல், பொதுவாக வடக்கு - தெற்கு மக்களின் அன்றாட ஆங்கிலப் போராட்டங்களை தோராயமாக பின் சொல்லி விடுகிறேன். நீங்களே புரிந்து கொள்வீர்கள். 


  • நாம் படித்தது “ட” எனும் ஓசை வரும் சொல்லுக்கு “T” எழுத்தையும், “த” எனும் ஓசை வந்தால் “TH” என்றும் பயன்படுத்துவோம்.  உதாரணம் நாகையின் பெயரில் வரும் பட்டினம் என்ற சொல்லுக்கு  PATTINAM என்றும், தஞ்சாவூர் என்றால் THANJAVUR என்றும் சொல்வோம். இங்கேயோ, பாடக் என்றால் PATHAK என்றும், பாதக் என்றால் PATAK என்றும் எழுத வேண்டுமாம்.  ஆரம்ப நாட்களில் ஒரு அதிகாரி, “நீ தென்னகத்திலிருந்து வந்திருக்கிறாய். ஆனால் அடிப்படை ஆங்கிலம் கூட உனக்குத் தெரியவில்லை” என்றார். ”நீ வெற்றி பெற்ற தேர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றும் கூறினார்.  


ஐயா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்” - முதல் மரியாதை பட வசனம் போல, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். மேலே சொன்னதில், நான்/அதிகாரி இதில் யார் தவறு, யார் சரி என்று நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்! இங்கே உள்ளவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு மயங்கிய நாட்கள் பல உண்டு. அப்படி என்ன என்கிறீர்களா? சொல்கிறேன். 


School - இச்சொல்லை ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து அண்டார்டிகா வரை அனைவரும் “ஸ்கூல்” என்று தான் அழைக்கிறார்கள். ஆனால் இங்கே அந்த வார்த்தையை “சகூல்” அல்லது “இஸ்கூல்” என்றே சொல்கிறார்கள்.  ஸ்கூட்டர் என்பது சகூட்டர்! Station எனும் ஆங்கிலச் சொல்லை ஸ்டேஷன் என்று தான் சொல்வோம். இங்கேயோ, “ஸடேஷன்” அல்லது “இஸ்டேஷன்” அல்லது “ஸ” எனும் வம்பே தேவையில்லை என “டேஷன்”!  


நாம் அறிந்தவரை PLEASURE என்றால் ப்ளெஷர், TREASURE என்றால் ட்ரஷர், MEASURE என்றால் மெஷர். இங்கு அதுவே மருவி, ப்ளையர், ட்ரையர், மெயர்!  இப்படிச் சொன்னால் எப்படிச் சுருக்கெழுத்த முடியும்.  என்னைப் போல தென்னிந்திய சுருக்கெழுத்தாளர்களை அவர்கள் வார்த்தைகளால் சுளுக்கெடுத்தது தான் மிச்சம்.  இவர்கள் பேசியதை வைத்து நான் ஒரு வாக்கியத்தை எங்கள் நட்பு வட்டத்தில் பரப்பினேன்.  இன்றளவும் வெடிச்சிரிப்பு தரும் வாக்கியம் அது!  “ஐ ஹேவ் க்ரேட் ப்ளையர் இன் மெய்யரிங் யுவர் லெய்யர்லி காட் ட்ரையர் ஏஸ் மிஸ்டர் நய்யர் ஈஸ் எ லையர்!” என்ற வாக்கியம் தான் அது!  அட புரியவில்லையா உங்களுக்கு? ஆங்கிலத்திலும் சொல்கிறேன் - “I have great pleasure in measuring your leisurely got treasure as Mr. Nayar is a lawyer!”. கேரள நாயர் (Nair), பஞ்சாபின் Nayyer இருவருமே இவர்களுக்கு நய்யர் தான் அதை விட வழக்காடுபவரை ”பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்” என்ற பதத்திற்கேற்ப லையர் (Lier) என்றே கூறுவார்கள். 


அடுத்து இவர்கள் “R” என்ற எழுத்தை உச்சரிக்கும் விதம். இவர்கள் கூற்றுப்படி, ஒரு வார்த்தையின் பின் பகுதியில் வரும் ”R”, “ட” என்றே உச்சரிக்கப் படும்.  அதாவது ARORA என்றொரு Surname இருக்கிறது - அதனை நாம் படித்தால், அரோரா என்றே படிப்போம். இவர்களோ அரோடா என்பார்கள் - என்ன அராகரோவோ?  ஆனால் KAMRA (அறை) என்பதை கம்ரா என்றே சொல்வார்கள். ஆனால் HOWRAH என்பதை ஹாவ்டா என்பர். PARA என்பதை பாரா என படிப்பவர்கள்,  BARA என்பதை பாடா என்பார்கள். என்ன கண்றாவியோ? ஒரு வேளை ஆங்கில இலக்கணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வட இந்திய ஆங்கில இலக்கணமாகவும், தென்னிந்திய ஆங்கில இலக்கணமாகவும் கற்பிக்கப்பட்டதோ? KAMRA என்றால் கம்ரா என்றால், BINDRA என்ற பெயர் பிந்த்ரா வே! எந்த இடத்தில் ”டா” உச்சரிப்பு வரும் என்று கேட்டால் யாருக்குமே தெரியவில்லை! 


ஒரு கனவான் அதிகாரி அனைத்தும் தெரிந்த அப்பா டக்கராய், என் சுருக்கெழுத்துப் பிரதியில் ஓரிடத்தைக் காண்பித்து இது என்ன என்பார்.  நான் “ஈஸ்” என்பேன்.  உடனே “அறிவிருக்கிறதா? முன்னும் பின்னும் சேர்த்து சொல்ல மாட்டாயா” என்பார். நான் உடனே நீங்கள் இதைத் தானே கேட்டீர் என்பேன். ஒரு சில நாட்களுக்குப் பின் இனி நீங்கள் எந்த இடம் காட்டி கேட்டாலும் அதன் முழு வாக்கியத்தையும் படிக்கிறேன், ஆளை விடுங்கள் என்றேன். இத்தனைக்கும் அந்த  வாக்கியத்தை கோப்பிலிருந்து தான் படிப்பார். அதற்கே இந்த ரகளை. ஆரம்பகாலத்தில் சுருக்கெழுத்தனாய் இந்த அப்பாடக்கர்களிடம் மாட்டிக் கொண்டு பல்பு வாங்கி, முழி பிதுங்கிய சமயங்கள் ஏராளம்.


அடுத்து இவர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பிற்கு (Casual Leave) பீடிகை போடுவதை கண்டு மிரண்டு போனேன்.  ஆங்கிலேயர்கள் நம்மை எவ்வளவு அடிமைப்படுத்தி உள்ளார்கள் என்பது பட்டவர்த்தனமாய் தெரிந்தது.  அதாவது அவர்கள் துவக்குவது I humbly beg to state that I am…..  எனத் தொடங்கி, Kindly grant me 1 day CL and oblige என்று முடிப்பர்.  இவ்வளவு கெஞ்சுவானேன் எனக் கேட்டால், ”உனக்கு ஒன்றும் தெரியாது நீ கம்முன்னு கெட” என்பர். ஒரு வேளை என் தந்தையை உலகமே தொடர்பு கொண்டு விட்டதோ எனத் தோன்றும் எனக்கு.  இந்த வாக்கியத்தாலேயே நான் வளர்க்கப்பட்டு வந்தேன். வளர்ந்தும் விட்டேன்.  


அடுத்து இவ்வூர்க்காரர்கள், “Oblige” என்ற வார்த்தையை அதன் தனித்துவம் அறியாமல் சர்வ சாதாரணமாய் பயன்படுத்திவிடுவார்கள். இதற்கு அழகான தமிழ்ப்பதம் கடமைப்படுதல்.  ஒரு நாள் தற்செயல் விடுப்புக்கு இவ்வளவு பெரிய வார்த்தையா!!


இன்னும் பல விஷயங்கள் உண்டு சொல்வதற்கு! அவை வரும்   பகுதிகளில்!  கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்!


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


20 கருத்துகள்:

  1. மிக மிக சுவாரஸ்யம்.  வாடா இந்திய உச்சரிப்புகள் ப்பற்றிய குறிப்புகள் சிரிக்க வைத்தன.  இந்த லட்சணத்தில் உங்களை அவர்கள் தவறு என்று சொல்வதும் வேடிக்கை.   இன்னும் இந்நிலை தொடர்கிறதா என்று அறிய ஆவல்!

    இந்த லீவ் லெட்டர் பணிவு லீவ் லெட்டரில் மட்டுமல்லாமல் எல்லா கடித வகைகளிலும் தமிழிலும் அரசாங்க வழக்கமாய் இருக்கிறது.  பணிந்து கேட்கிறேன்,அடிபணிந்து வேண்டுகிறேன், இப்படி...

    அன்னார் என்கிற பதத்தை தமிழ் அரசாணைகளில் உபயோகப்படுத்தப் படும்போது ஏனோ எனக்கு அவர் இறந்து விட்டவர் போலவே தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய உச்சரிப்புகள் பல சமயம் குழப்பிவிடும் - சில சமயம் சிரிக்க வைக்கும் ஸ்ரீராம்.

      அன்னார் - :) தமிழிலும் இப்படியான அலுவலக பிரயோகங்கள் பார்த்திருக்கிறேன். தமிழக அரசிலிருந்து இப்படி வரும் கடிதங்களை சில சமயம் படித்து, மொழியாக்கம் செய்ய என்னிடம் வருவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமை. அவர்கள் புடவையை ஸாடி என்பார்களே:)
    கொடுமைப்பா இவர்களிடம் வேலை செய்வது. பாவம் திரு சுப்ரமனியன்.
    இந்த இ நா சேர்ப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன்.
    இவர்களிடம் தமிழர்கள் போய் மாட்டிக் கொள்கிறார்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா - ஸாடி என்று தான் சொல்வது வழக்கம் - ர வரும் இடங்களில் ட என்றே இங்கே உச்சரிப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து வருவதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வட இந்திய உச்சரிப்புகள் வியப்பைத் தருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே சில உச்சரிப்புகள் எரிச்சலையும் தரும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அக்க வந்திருந்தபோது, குர்கான் என்றுதான் சொல்வேன், ஆனால் ஆபீசிலோ குடுகான் என்றே உச்சரிப்பார்கள். ஒருவேளை ஹிந்தியில் அந்த ஊர் குடுகான் என்றே இருந்திருக்கும். ஆங்கிலேயர்கள்தான் உச்சரிக்க முடியாமல் குர்கான் என்று எழுதிட்டாங்க என்று நினைத்துக்கொள்வேன்.

    நீங்கள் குறிப்பிட்ட ஹிந்தி உதாரணங்கள் அப்படியும் இருக்கலாம் இல்லையா?

    பெங்களூரு எனச் சொல்லத் தெரியாமல் பேங்க்ளூர் என்று அவன் மாத்தினான்னா, அவனுடைய Schoolஐ நாமும் ஸ்கீலு என்று மாத்திட வேண்டியதுதான் ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரு கிராம் என்பதே பின்னர் குர்காவ்ன்/குர்கான்/குட்காவ்ன்/குட்கான் என்றெல்லாம் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் குருகிராம் என்ற பெயரை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நானும் டில்லிக்கு வந்த புதிதில் PLEASURE, TREASURE, and MEASURE என்ற வார்த்தைகளின் உச்சரிப்பை கேட்டுவிட்டு குழம்பியதுன்டு.
    என்ன வார்த்தையாக இருக்கும் என்று டிக்ஷ்னரியில், (அவர்கள் உச்சரித்து போல்) வார்த்தைகள் இருக்கா என்று தேடிவிட்டு, கிடைக்காததால் இறுதியாக அவர்களிடமே சென்று spelling என்னவென்று கேட்டுவிட்டு விடை தெரிந்ததும் மனதிற்குள் (அடா மாங்கா மடையா என்று திட்டிதீர்த்துவிட்டு) முகச் சுளிப்போடு இந்த வார்தைகளை இப்படியா சொல்வது என்று நினைத்து மருகியதுண்டு. நண்பருக்கும் இதே நிகழ்வுகள், ஆஹா யான் பெற்ற துன்பம் நன்பருக்கும் இருந்துள்ளதே என்று மனதிற்குள் மருகினேன். கடந்து வந்த பாதை ரொம்பவும் நெகிழ்ச்சியாக உள்ளது, வாழ்த்துக்கள்.
    R Rengarajan, New Delhi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுருக்கெழுத்தாராக நான் சந்தித்த அனுபவங்களை ஆசிரியர் அப்படியே விபரித்திருப்பதை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதால் ரசிக்க முடியும் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நன்றாக இருந்தது , மொழி உச்சரிப்புகள் பற்றி சொன்னது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மிகவும் சுவாரசியமாக எழுதுகிறார்.
    சிறித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....