புதன், 18 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 20 - சுப்ரமணியன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WITH TRUST, EVEN SILENCE IS UNDERSTOOD. BUT, WITHOUT TRUST, EVERY WORD IS MISUNDERSTOOD.  “TRUST IS THE SOUL OF RELATIONSHIP”.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு 


பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு 


பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


இயற்கையும் தில்லியும்:



குளிர்காலம் வந்தபின்பு தான் தில்லி தன் சுயரூபத்தை காட்டியது. அதற்கு முன் கடுமையான வெப்பம் நிலவும். ஆனால் தொடர்ந்து 2-3 நாட்கள் கடும் வெப்பத்திற்குப் பின் ஒரு அகில உலக மகாபுழுதிக் காற்றடிக்கும். சாலையில் கிடக்கும் சகல குப்பை/மண் துகள்களை நம் கண்/மூக்கு/காது/வாய்த் துவாரங்களில் துப்பிவிட்டு அடங்கும்.  ஊரே பழுப்பு நிறமாகி விடும்! கேட்டல் “ஆந்தி” (Aandhi) என்பார்கள் - அடி ஆத்தி!  


மழை என்றால் அப்படி ஒரு பேய் மழை கொட்டித் தீர்க்கும்.  பல்லாண்டு காலமாய் வளர்ந்து செழித்த பல விருட்சங்களை வேருடன் மேலுலகுக்கு அனுப்பி விடும். அது நிதர்சனமான உண்மையும் கூட. அவ்வாறு காற்றில் விழுந்த மரங்கள் கூறுபோடப்பட்டு தில்லியின் மயானங்களுக்கு விற்கப்படும். இறுதியில் உயிர் நீத்தோருடன் மேலுலகம் சென்று விடும். 


நம் ஊரில் கண்டிராத மிகக் கடுமையான வெப்பம் தில்லியில் கண்டேன். ஒரு சொட்டு கூட வேர்க்காது. அனைவரும் தீச்சட்டி கோவிந்தர்கள் போல அலைவோம். எவ்வளவு நீர்/குளிர்நீர்/ குளிரூட்டப்பட்ட பானங்கள் பருகினாலும் தாகம் தீரவே தீராது. முட்ட முட்ட நீர்/திரவங்கள் பருகினாலும், சிறுநீரே வராது எனும் அளவுக்கு வறுத்தெடுக்கும். 


இனி குளிருக்கு வருவோம். ஆஹா… வெய்யிலில் பகலவன் காலை 05.15-க்கு வந்து பந்தல் போட்டு படுத்து விடுவான். இரவு 07.30 மணிக்குப் பின் தான், வடிவேலுவை டப்ஸா கண்ணன் காரில் அழைத்துப் போனது போல, ”சரி போவோம்”, என முடிவெடுக்கும். 


நேர்மாறாய், குளிர் நாட்கள் காலை எட்டு மணியானாலும் கடும் வெண் மேகப் பொதியின் பின், ”எனக்கு வெளியே வர வெக்காச்சியாய் இருக்கு!” என  வரத் தயங்கும்.  மாலை ஐந்து மணியானதும், “ஆஹா வுடு ஜூட்” என்பது போல ஒளிந்து கொள்ளத் துவங்கும். காட்டுக் குளிர் தான். அனைவரும் மிகப் பருமனாகும் காலை இந்த குளிர் காலம்! முதலில் ஒரு சூடேற்று ஆடை (Innter/Warmer)! அடுத்து முழுக்கை சட்டை, முழுக்கால் சட்டை! அதன் மேல் வண்ணச் சாக்கு மூட்டை - அது தாங்க ஸ்வெட்டர் (Sweater)! அதன் மேல் ஒரு மறைப்பான் - பல வடிவங்களில், பல பெயர்களில் ஜெர்கின் (Jerkin), ப்ளேசர் (Blazer), ஓவர் கோட் (Over coat), செம்மறியாட்டுத் தோலினால் ஆன ஃபர் கோட் (Fur Coat) இப்படி ஏதாவது ஒன்று.


குளிர் நாட்களில் ஆங்காங்கே சாலைகளில் புகை மூட்டம். ஒரு தள்ளு வண்டியில் ஓடுடன் கூடிய நிலக்கடலை குவியல். அதன் நடுவே ஒரு சிறிய தீச்சட்டி குடுவை.  அதனுள் சகல குப்பைகளையும் கொட்டி புகைய விடுவார்கள். அதைப் பிடிக்க ஒரு கைப்பிடி இருக்கும். அதனை நிலைக்கடலைக் குவியலில் இடம் மாற்றி மாறி வைத்து சூடேற்றுவார்கள்.  இதை வாங்கினால், கூடவே மூக்குப் பொடி கலரில் ஒரு மசாலா பொடி. ”இது எதுக்குடா?” என்று கேட்டால், வாயுத் தொல்லை வராதாம்! வராதா? இப்படி கடலை சாப்பிட்டு அருகில் அமர்வோரிடம் பட்ட கொடுமைகள் சொல்லி மாளாது! இதில் மேலும் ஒரு கொடுமை - குளிர் காலத்தில் பலர் தினசரி குளிப்பதை பாவம் என்று நினைப்பார்கள். இங்கு பேருந்துகளில் பக்கவாட்டில் முழுக்க கண்ணாடிக் கதவுகள்! அவை அனைத்தும் அசையாமல் இருக்கும். மூடினால் திறக்காது, திறந்தால் மூடாது! 


மூடப்பட்ட கதவுகள், அழுக்கு மூட்டை குவியலாய் உடைகள், குளிக்காத கொடுமை, பீடி வலித்தல் என அனைத்தும் பேருந்துக்குள்! இதற்கு முத்தாய்ப்பாய், நிலக்கடலையை வாங்கி வந்து விடுவார்கள். இடது கையில் நிலக்கடலை பொட்டலம், வலது கையில் நிலைக்கடலை ஒன்றை படுக்க வைத்து, பற்களால் முதல் பாதி ஒடெடுத்து “தூ…” என துப்ப வேண்டியது தான்.  அதனுடன் மேற்தோலும் சேர்ந்து விமான உலா தான்! அக்கம் பக்கம் உள்ளோரின் மீது அவ்வப்போது அபிஷேகமும் நடக்கும். மீதமுள்ள ஓட்டில், ”மூக்குப் பொடி” - அட மசாலா பொடி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மீதமிருக்கும் பொடியுடன் தோலை வீச, அது அடுத்தவர் கண்ணுக்கு அருவருப்பு விருந்தாக்குவர். ஓட்டுனரும் நடத்துனரும், “மூங்க்ஃபலி கா சில்கா மத் கிராவ்” (நிலக்கடலை தோல்களை கீழே போடாதீர்கள்) என்று சொன்னாலும், ம்ஹூம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! 


தில்லியில் பழங்கள் எக்கச்சக்கமாய் கிடைக்கும். ஆனால் அவற்றையும் கூறுபோட்டு அதன் மேல் மந்தகாசகப் பொடிகளை தூவி, இரண்டு குச்சிகளை (Tooth pick) நட்டு ஃப்ரூட் சாட் (Fruit Chaat) எனக் கொடுப்பார்கள்.  தில்லியைப் பொறுத்தவரை மசாலா இல்லையேல் மனிதன் இல்லை. அந்தளவுக்கு உயிருடன் ஒட்டியது இந்த மசாலா பொடி.  மற்ற தின்பண்டங்களில் என் மனது லயித்தது இல்லை. எனவே அவை பற்றி ஸ்லாகிக்க விரும்பவில்லை. 




இப்படியாக நாளொரு சம்பவமும் பொழுதொரு அனுபவமுமாய் தில்லியுடன் ஒன்றி வாழ்ந்து வந்தோம். 1994-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் தந்தையிடமிருந்து அழைப்பு. “நீ தனியாய் அனுபவித்தது போதும்! ங்கொய்யால கிளம்பி வா, உனக்கு பெண் பார்க்க வேண்டும்” என்றார்.  வேறென்ன மீண்டும் பூம் பூம் மாடு தான்! 


இன்னும் விஷயங்கள் உண்டு சொல்வதற்கு! அவை வரும்   பகுதிகளில்!  கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்!


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


24 கருத்துகள்:

  1. அனுபவம் ரசிக்கவைக்கிறது. அதற்குள் திருமணமா? ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வறுத்தெடுக்கும் வெயில்; வாட்டியெடுக்கும் குளிர்... இரண்டு மூலைகள்.. பஸ் அனுபவத்தை வஹத்தினை கலந்த ரசனையுடன் விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மூலைகள் - உண்மை தான். பல சமயங்களில் வெறுப்பு வந்து விடுவதுண்டு ஸ்ரீராம்.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.
    எனக்கு டில்லி என்றாலே பயம்.
    இருபது ஆண்டுகள் முன்பு பயண நிமித்தமாக மே மாதம் வந்தேன்.
    தமிழர்கள் புழுக்கம் வியர்வை என்றாலேயே வெறுப்பதுண்டு.
    வியர்ப்பதின் பயனும் அருமையும் எனக்கு டில்லியில்தான் புரிந்தது.
    அவ்வளவு வெயிலிலும் வியர்க்காது, ஆனால் தலைவலி வந்து முழு உடல் திறனையும் விழுங்கிவிடும்.
    குளிர்க்காலம் அதர்க்கும் மேல்.
    அதற்குரிய உணவுகளையும் உடைகளையும் பயன்படுத்தனும்.
    குளித்தல் பற்றியும் பேருந்து பயணம் பற்றியும் தனது டில்லி அணுபவங்களாக சாரு கூட நிறைய எழுதியிருக்கிறார்.
    அவருடைய 'எக்ஸ்ஸிஸ்டென்ஶியலும் ஃபேன்ஸி பனியனும்' நூல் இதில் மிகவும் பிரபலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியர்ப்பதின் பயனும் அருமையும் தில்லியில் புரிந்ததா... ஹாஹா... நல்ல அனுபவம் தான் உங்களுக்கு அரவிந்த். தற்போது தில்லியில் வியர்வை வர ஆரம்பித்திருக்கிறது - குறிப்பாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்!

      சாரு புத்தகங்கள் வாசிக்க ஏனோ பிடிப்பதில்லை. ஒன்றிரண்டு கட்டுரைகள் படித்தேன். அவ்வளவாக பிடிக்கவில்லை அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //ஊரே பழுப்பு நிறமாகி விடும்! கேட்டல் “ஆந்தி” (Aandhi) என்பார்கள் - அடி ஆத்தி!

    அனைவரும் தீச்சட்டி கோவிந்தர்கள் போல அலைவோம்.

    ”எனக்கு வெளியே வர வெக்காச்சியாய் இருக்கு!” என வரத் தயங்கும். //

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் சில பகுதிகளை ரசித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. டெல்லி அனுபவங்களை மிக அருமையாக சொல்லி இருக்கிறார்.

    இப்படியாக நாளொரு சம்பவமும் பொழுதொரு அனுபவமுமாய் தில்லியுடன் ஒன்றி வாழ்ந்து வந்தோம்

    இந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாழ்வில் இணைய போகிறவரை அறிந்து கொள்ள தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லி அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சிரமங்களை கூட சொன்ன விதம் மிகவும் ரசிக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு ரசிக்கும்படி இருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தில்லி நகரின் பருவ காலக் காட்சிகளின் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்கள் நண்பரின் கடந்த கால தில்லி நினைவுகளை மிக சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரித்துள்ளார். ஒவ்வொரு பருவ நிலை மாற்றங்களை அவர் நகைச்சுவையுடன் கூறியுள்ளது வாய் விட்டு சிரித்து ரசிக்கும்படி இருந்தது. தில்லி, குளிரும், வெய்யிலும், ஒரு உறவு மூலம் கேள்விபட்டுள்ளேன். இங்கும் அவ்வளவாக எந்த ஒரு கடுமையான வேலை செய்தாலும் வியர்ப்பதில்லை. அதுதான் இங்கு வந்த முதலில் ஒரு வரமாக இருந்தது. ஆனால் வியர்வையின் வெளியேற்றமும் உடல் நலத்திற்கு அத்தியாவசியமாயிற்றே.. .

    தங்கள் நண்பரின் திருமணத்திற்காக பெண் பார்க்கும் படத்திற்கு கிளம்பி வரச் சொல்லி அவர் தந்தையார் தகவல் அனுப்பியதும் அவர் கிளம்பிச் சென்று நல்லபடியாக திருமணம் முடித்து வந்தாரா? அறிய ஆவலுடன் இருக்கிறேன். நல்ல பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தில்லி நினைவுகள் குறித்த நண்பரின் இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பின் வெங்கட்...
    நலம் தானே... வெகு நாட்களுக்குப் பின் வருகின்றேன்...

    வாழ்க நலமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துரை செல்வராஜூ ஐயா, நலமே. தங்கள் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்.

      முடிந்த போது வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அன்பின் வெங்கட்,
    தங்கள் சினேகிதரின் பதிவுகள் மிக சுவாரஸ்யமாக

    இருக்கின்றன.
    ஆந்தி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    தில்லியிலேயே மண வாழ்வின் பெரும்பகுதிகளைக்
    கழித்த அத்தைகளும் மாமாக்களும் நிறைய சொல்லி இருக்கிறார்கள்.
    இருந்தும் தில்லியை விட்டு வராமல்
    அங்கேயே இருந்து மறைந்தார்கள்.
    அது என்ன தில்லிப் பாசமோ தெரியாது:)))

    கோடைகாலத்தின் போது சென்னை வந்து விடுவார்கள்.
    குளிர்காலத்தை ரசித்துக் கொண்டாடுவார்கள்.

    நண்பரின் நிலக்கடலை அனுபவம் மிக நல்ல நகைச்சுவை.
    இப்படியும் மனிதர்கள்!!!!!!

    நல்ல எழுத்தைப் பதிவதற்கு மிக நன்றி மா.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வல்லிம்மா, பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. தில்லி அனுபவங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....