சனி, 21 ஆகஸ்ட், 2021

காஃபி வித் கிட்டு-124 - எஞ்சாய் மாடி - சூரியன் - மியாவ் - UBER EATS - எட்டு - அத்திமலைத் தேவன் - மழை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட இரயில் பயணங்களில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது - கண்ணதாசன்.


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல்  -  கல் க்யா ஹோகா கிஸ்க்கோ பத்தா



சமீபத்தில் ஒரு பழைய ஹிந்தி பாடல் ஒன்றிற்கு சில முதியவர்கள் நடனம் ஆடுவதை வாட்ஸாப் வழி ஒரு பெண்மணி அனுப்பி வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்தப் பாடலைக் கேட்டேன்.  ஆர். டி. Bபர்மன் அவர்களின் இசையில் ஒரு ஜாலியான பாடல்.  முதியவர்கள் நடனமாடிய காணொளியை இணைக்கவே நினைத்தேன்.  இணையத்தில் கிடைக்குமா என தேடியதில் கிடைக்கவில்லை. உங்களில் யாராவது பார்க்க நினைத்தால், சொன்னால் அனுப்பி வைக்கிறேன்! :) இங்கே அந்தப் பாடல் நீங்கள் கேட்பதற்கு! 


ஹிந்தி தெரியாதவர்கள் வசதிக்காக - பாடல் சொல்ல வரும் விஷயம் இது தான் - நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். அதனால் இப்போதைக்கு இந்த வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்போம்! என்ஜாய் மாடி! என்று சொல்கிறார்கள். “கஸ்மே  வாதே” என்ற படத்தில் வந்த பாடல் இது!


******


இந்த வாரத்தின் நிழற்படம் - சூரியன்





யு.எஸ்.ஏ-வில் இருக்கும் கல்லூரித் தோழி ஒருவர் அவ்வப்போது அவர் வீட்டினர் எடுத்த படங்களை வாட்ஸாப் வழி அனுப்பி வைப்பதுண்டு.  சமீபத்தில் அப்படி அவர் அனுப்பி வைத்த ஒரு படம் மேலே! உதய சூரியனா? அல்லது அஸ்தமிக்கும் சூரியனா?  படம் பார்த்து சொல்ல முடியாது இல்லையா?  :)


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பதிவு  - மியாவ் மியாவ்


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - புதிய ரயில் பெட்டிகள் – நடனத்துடன் துவங்கும் அலுவலகம் – மியாவ்.... மியாவ்....


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


ஒரு சிறிய தட்டில் பால் வைத்து வந்தோம்.  மூன்று நாட்களுக்குப் பிறகு குட்டிகளில் இரண்டினை எங்கோ எடுத்துச் சென்று விட்டது தாய்ப் பூனை. ஒரு குட்டி மட்டும் அங்கேயே. அதற்கு உடல் நிலை சரியில்லை போலும்! வைத்த பாலை தொடக்கூட இல்லை. தாயும் வரவே இல்லை. சோர்ந்து படுத்திருக்க, அலைபேசியில் விலங்குகளுக்கான மருத்துவமனையை அழைத்தோம். அவர்கள் வாகனத்தில் வந்து சேருவதாகச் சொல்ல, அந்தப் பூனைக்குட்டியை மிக பத்திரமாய் கொண்டு போய்க் கொடுத்தோம். 


அரை மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு! போகும் வழியிலேயே பூனைக்குட்டி இறந்து விட்டதாம்!  அன்றைக்கு வெகு நேரம் நினைவில் பூனைக்குட்டியின் மியாவ்... மியாவ்.. கேட்டுக்கொண்டே இருந்தது.  அலுவலகத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்படும்போது தாய்ப்பூனை தனது குட்டியைத் தேடிக்கொண்டு வந்தது! Safety Locker அருகில் சுற்றிச் சுற்றி வந்த பூனையைப் பார்க்கும் போது அதன் சோகம் எங்களையும் ஒட்டிக் கொண்டது....



******


இந்த வாரத்தின் விளம்பரம் - UBER EATS


எத்தனையோ முறை நாம் நமக்கான உணவை ZOMATO, SWIGGY, UBER EATS  போன்ற APP மூலம் வாங்குகிறோம் அல்லவா? அந்த உணவை கொண்டு வரும் நபர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைச் சொல்லும் விளம்பரம்.  மனத்தைத் தொட்டு விடும் இந்த விளம்பரத்தினை பார்த்து ரசிக்கலாமே!  மலையாள மொழி விளம்பரம் இது!

******


இந்த வாரத்தின் WHATSAPP நிலைத்தகவல் - எட்டு விஷயங்கள்


உங்களுக்கான எட்டு விஷயங்கள்! என்று WHATSAPP நிலைத்தகவலாக ஒரு  வைத்திருக்கிறார்.  அந்த எட்டு விஷயங்கள் என்ன? பாருங்களேன்!



******


இந்த வாரத்தின் வாசிப்பு குறித்த தகவல் - அத்திமலைத் தேவன்




காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் பிரம்மாண்ட படைப்பான, ஐந்து பகுதிகள் கொண்ட அத்திமலைத் தேவன் நெடுங்கதையை சமீபத்தில் படித்து   முடித்தேன்.  அப்பப்பா என்னவொரு விறுவிறுப்பு என்று சொல்லும் போதே, முதல் மூன்று பகுதிகளில் இருந்த விறுவிறுப்பு, கடைசி இரண்டு பகுதிகளில் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.  எத்தனை எத்தனை பாத்திரங்கள், பல நூற்றாண்டுகள் கடந்த அத்திமலைத் தேவனின் கதை நிசசயம் படிக்க வேண்டிய ஒரு புதினம்.  சொல்லி இருக்கும் சில விஷயங்கள் படிக்கிற சிலரால் ஒப்புக்கொள்ள முடியாதவை என்றாலும், படிக்க வேண்டிய ஒரு நெடுங்கதை.  தேவ உடும்பர மரத்தினால் ஆன அத்திமலைத் தேவன் சிலைக்காக எத்தனை எத்தனை சூழ்சசிகள், போர், கொலைகள், தேடுதல்கள் என மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறார் நரசிம்மா.  அவரது வேறு சில நூல்கள் குறித்து எனது பக்கத்தில் வாசிப்பனுபவம் பகிர்ந்து  கொண்டதுண்டு.  இந்த நூலுக்கு விரிவான வாசிப்பனுபவம் எழுத நினைத்தாலும் தற்போதைய சூழல் என்னை எழுத விடவில்லை. முடிந்த போது எழுதுவேன்! 


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - வானம் முழுவதும் மழை:


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக, தமிழ் கவிதை எனும் தளத்திலிருந்து வானம் முழுவதும் மழை என்ற தலைப்பிட்ட கவிதை - உங்கள் பார்வைக்கு! 




என் வீட்டுக் குப்பை மேட்டில் வளர்ந்த,

யார் கால் பட்டாலும் கசங்கிவிடும்

சின்னஞ்சிறு செடி தான் அது.


அளவில் அது ஒன்றும் ஆள் உயரமும் இல்லை,

அவ்வளவு பெரிய ஆலமரமும் இல்லை.


ஆனாலும் என்ன….


முழு வானம் கரைந்து மழையாகிப் போனாலும், 

தன் முதுகில் தாங்கி இறக்கிவிடத் 

தயாராகத் தான் நிற்கிறது அந்தச் செடி.


மழை தான் வருவதாயில்லை.

இருக்காதா பின்ன, 

உயரத்திலிருந்த விழ யாருக்குத்தான் விருப்பம்?


– ரகு


******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


32 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை. காணொளி அவர்களும் மனிதர்கள்தானே! மழையில் நனைந்து இரவு நேரஎதிர் வரும் வாகன ஒளி வெள்ளத்தில் கண்கள் கூச மழையில் வண்டி ஓட்டி வருவது சிரமம் தான்.

    பூனை நிலை வருத்தம் தந்தது. கவிதை , சூரியன் படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அடடே....    மிக மிக ஆச்சர்யம்.  முந்தா நாள் திடீரென இந்தப் பாடல் நினைவுக்கு வர, முந்தாநாள் இரவு நானும் இந்தப் பாடலைத் தேடிக் கேட்டேன்.  இந்தப் படத்தில் வரும் டைட்டில் சாங் மிக அருமையாய் இருக்கும்.  மேலும் ஆத்தே ரோஹிங்கி பஹாரே பாடலும் பிடிக்கும்.  இதுதான் தமிழில் தர்மத்தின் தலைவன் என்று வந்தது.


    டெலிவரி பாய் மீது காட்டும் கோபம் அர்த்தமற்றது - அவன் கூடப் பைக்காதவனாக இருந்தால் கூட!


    அத்திமலைதேவன் வாசிப்பனுபவம் சுகம்தான்.  தயங்கித்தயங்கி நான் கையில் எடுத்த புத்தகம்.  கீழே வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.


    கவிதை அருமை...   ஹா...  ஹா..  ஹா...   "இருக்காதா பின்னே?  உயரத்திலிருந்து விழா யாருக்குதான் விருப்பம்?"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெலிவரி பாய் மீது காட்டும் கோபம் - அர்த்தமற்றது தான் ஸ்ரீராம்.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கஸ்மே வாதே பாடல் கேட்டேன் ஜி.

    புகைப்படம் காலைவேளையாக தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வானம் முழுதும் மழை என்று எந்த நேரத்தில் எழுதுனீர்களோ டெல்லி முழுதும் வெள்ளத்தில்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லி முழுவதும் வெள்ளத்தில்! ஆமாம் இரவு முழுவதும் மழை, இடி, மின்னல் என தொடர்ந்து இருக்க காலையில் தில்லியின் பல பகுதிகள் நீர்த்தேக்கம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. போட்டோ. முதலில் அது சூரியனா சந்திரனா என்று தீர்மானிக்கவேண்டும். சூரியனின் உதய பிரகாசம் இல்லை. ஆனால் சந்திரனின் பொன் நிறமும் இல்லை. சூரியன் ஆகத்தான் இருக்க வேண்டும். அமெரிக்காவில் தற்போது கோடைக்காலம். பகல் நீண்டு இருக்கும். இரவு 9 மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும். ஆகவே இது மாலை சூரியன் ஆக இருக்கலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழற்படம் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வழக்கம் போல இன்றைய தொகுப்பும் அருமை..

    நல்வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பூனை சோகம். பாவம் அந்தக் குட்டி.

    ஏதோ பூர்வ ஜன்ம பாக்கியை முடித்துப் போயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூர்வ ஜன்ம பாக்கியை முடித்துப் போயிருக்கிறது - இருக்கலாம் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அது காலைச் சூரியன் இல்லை. மணிரத்தின மாலைசூரியன். அது ஒன்றுதான் இத்தனை சிகப்பாக இருக்கும்.
    வானவெளி இந்த ஊரில் பல வண்ணஜாலங்கள் காட்டும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிரத்தின மாலைச் சூரியன் - இருக்கலாம் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கஸ்மே வாதே பியார் நினைவுக்கு வந்தது!!
    இந்தப் பாடலில் அமிதாப் ஜியின் குரல்
    கம்பீரம். பின்னர் கிஷோர் அவர்களின் குரல்.
    கல் க்யா ஹோகா அவகளுக்கு எல்லாம்
    பிடித்த வசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிஷோர் குரலில் பாடல்கள் - ரசித்தவை, என்றும் ரசிப்பவை வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. உயரத்திலிருந்து விழ யாருக்குத் தான் பிடிக்கும்.?
    திரு ரகு அவர்களின் கவிதை வரிகள் அருமை.
    உயர்ந்தவர் இறங்கி வந்தால் தான் உலகம் செழிக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்தவர் இறங்கி வந்தால் தான் உலகம் செழிக்கும் - உண்மை வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமை. மனதை தொடும் விளம்பரம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பாடல் கேட்ட நினைவாயும் இருக்கு. சிலது அடிக்கடி கேட்டால் தான் மனதில் நிற்கும். இது அந்த வகை போல. அத்திமலைத்தேவன் விமரிசனம் நானும் எழுத ஆரம்பிச்சுப் பின்னர் தொடர முடியலை. ரகுவின் கவிதை. மழை வானிலிருந்து விழுந்தால் தான் பூமி செழிக்கும். ஆகவே விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்தே ஆகணும். வாட்சப் தகவல்கள் எனக்கும் வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. ஹாஹாஹா, பயந்தே போயிட்டேன், என்னடாப்பா, நம்மை "நெல்லை" ஆக்கிட்டாரேன்னு. தவறான நபருக்கு பதில் கொடுத்திருக்கீங்க! :)

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி கீதாம்மா!

      நீக்கு
  15. மிக அருமையான தொகுப்பு.

    சூரியன் மாலை நேரத்தில்தான் இந்த அளவுக்கு நேர்த்தியான வட்டத்தில் இருக்கும், நான் கவனித்த வரையில்.

    ரசித்த கவிதையின் கடைசி வரிகள் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....