புதன், 11 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 18 - சுப்ரமணியன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TASTE YOUR WORDS BEFORE YOU SERVE THEM.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு 


பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிக்கலாம்.  அலுவலகத்தில் நடந்த ஸ்வாரஸ்ய விஷயங்கள் குறித்து பார்த்தோம். அதனைத் தொடர்ந்து பார்க்கலாம். சில ஆண்கள் அலுவலக வளாகங்களில் விளையாட்டில் ஈடுபடுவார்கள். சில ஸ்வாரஸ்யமான காதல் லீலைகளும் உண்டு! (அட அது தானே என்னடா இவன் இன்னும் அந்தப் பக்கமே செல்லவில்லை என எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம். அப்படியான விஷயங்களும் உண்டு - அட எனக்கில்லீங்கோ!, நண்பர்களுக்கு!) வார இறுதிகளில் தொடர்ந்து தில்லியைத் தேடும், சுற்றும் படலமும் தொடர்ந்து கொண்டிருந்தது.  





நமது நண்பர் கூட்டம் அலுவலகத்தில் தேநீர் இடைவேளையின் போது மசால் வடை (ஒரு வடை ஒரு ரூபாய் மட்டுமே!) வாங்கி அடுக்கிக் கொண்டு, தேநீருடன் ருசிப்போம்.  அல்லது Bப்ரெட் வெண்ணைத் துண்டுகளுடன் ரசிப்போம். அதை சகஜமாக டபள் ரொட்டி என்று இங்கே கூறுவது உண்டு. இரண்டு Bப்ரெட் வில்லைகள் (Slice) இருப்பதால் டபள் (Double!) என்று கூறுவார்கள். ஆங்கிலம் யாரையும் விட்டு வைத்ததில்லை. 


1985 நவம்பர் மாதம் என் அலுவலக ஆருயிர் நண்பருடன் வேறு ஒரு இடத்திற்குச் சென்றேன். உறவினரை விட்டு விலகினேன்.  அன்று எனக்குத் தெரியாது ஒரு மிகப் பெரும் நட்பு வட்டத்தில் திளைக்கப் போகிறேன் என்று.  அந்த நட்பு வட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அந்த நட்பு வட்டத்தில் நம்ப ப்ளாக் (Blog) வெங்கட்டும் ஒருவருங்கோ!





அடுத்து அரங்கேறியது நளபாகம். அந்த நண்பர் அருமையாக சமைப்பார்.  அவரின் சிஷ்யனாக கற்கத் துவங்கினேன். அத்தியாவசிய சமையல் பாத்திரங்கள் வாங்கி விட்டோம். மண்ணெணை அடுப்பு தான். அதை அடுப்பு என்பதை விட அடுப்பு ஆலை எனலாம்.  ஒரு ஊசியால் குத்தி பக்கவாட்டில் உள்ள கருவியால் காற்றை வேகமாக அடிக்க, அக்காலங்களில் ஆர்ப்பட்டாத்துடன் நடைமேடையில் நுழையும் நீராவி எஞ்சினைப் போல சத்தம்!  அவ்வளவு கூச்சல் போடும் அடுப்பை (பம்ப் ஸ்டவ்!) முன்னர் கண்டதில்லை.  எங்களுடன் மூன்றாவது நண்பர் சேர்ந்தார். அடுத்து காய்கறி வாங்க வேண்டும். அறை நண்பர் மூன்று வருடங்களாக இருப்பதால், பழக்கப்பட்டவர்.  இருப்பினும் ஹிந்தி கற்கும் வெறியில் நாங்கள் இருவரும் செல்வோம். காய்கறிப் பெயர் எப்படித் தெரிந்து கொள்வது?


இரண்டு வழிகள் கடைபிடிக்கப்பட்டன. எனது வழி ஒரு கடையின் அருகில் நிற்பேன் (பெரும்பாலும் நடைபாதை காய்கறிக் கடைகள் தான்).  அடுத்தவர் வாங்குவதைக் கவனிப்பேன்.  அவர் என்ன பெயர் சொல்லி எந்தக் காயை வாங்குகிறார் என்று! அவ்வளவு தான் - அடுத்து ஐயா ஏறு போல பீடு நடை தான் - ஸ்பீடு நடையும் கூட! கொடுங்கள்/எவ்வளவு என்றெல்லாம் கேட்கத் தெரியாது. ஆனால் முதலில் பணியில் சேர்ந்த போது கிடைத்த அதிகாரி கற்றுத் தந்திருந்ததால், பாவ் (Paav) என்றால் கால், ஆதா (Aadha) என்றால் அரை என்று தெரிந்ததால், சமாளித்து வாங்கி விடுவேன். 


நண்பர் சற்றே வித்தியாசமானவர். ஏதாவது ஒரு கறிகாயைக் காண்பித்து “யே க்யா ஹே?” (இது என்ன?) என்பார். ”இது தெரியாமல்தான் வாங்க வந்தாயா?” என்று முனகிக் கொண்டே காய்கறி பெயர் சொல்வார். உடனே நண்பர், “லேகின் யே க்யா ஹே?” என இன்னுமொரு காய்கறியைக் காண்பிப்பார்.  லேகின் என்றால் “ஆனால் (But)” என்று அர்த்தம். கடைக்காரரோ ஹிந்தியில், “ஆனால் எதற்கு? இதையே வாங்கு” என்பார்.  சரியான அக்கப்போர் தான்.  ஆனால் அதிலேயே நான் நிறைய வார்த்தைகள் (பாஷையை) கற்றேன். அந்த கடைக்காரர் நண்பரை “லேகின் Bபாய்சாப்b” என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்!  Bபாய்சாப்b என்றால் மரியாதையாக சகோதரரே என அழைப்பது!


இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இனிய நண்பர்களுடன் இருந்து வந்தோம். நவம்பர் பின்னிறுதியில் சென்னை தீவுத் திடலில் பொங்கல் சமயத்தில் வரும் பொருட்காட்சி போல, இங்கே (தலைநகர் தில்லியில்) இந்திய சர்வதே வர்த்தக பொருட்காட்சி (India International Trade Fair) பிரகதி மைதான் எனும் பிரத்யேக இடத்தில் கண்டோம்.  மிக மிக பிரம்மாண்டமான பொருட்காட்சி .  மாநிலங்கள், தொழிலகங்கள், அமைச்சகங்கள் என வகை வகையாய் அரங்குகள். இது தவிர, சர்வதேச அரங்குகள்.  எண்பதுகளின் இறுதிவரை வருடா வருடம் நடக்கும் இந்தப் பொருட்காட்சிக்கும் சென்று வருவோம். அதன் பின்னர் அலுத்து விட்டது. மேலும் கட்டுக்கடங்காத கூட்டம் - அரங்குகளில் எதையும் காண விடாமல் அலைமோதும் கூட்டம்.  


பாகிஸ்தான் அரங்கில் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் (Dry Fruits), கர்நாடக அரங்கில் வாசனை மிகுந்த ஊதுபத்தி, குளியல் சலவைக் கட்டி (Bath Soap), வண்ணம்/மணம் மிகுந்த பூச்சுகள் (Scent), ராஜஸ்தான் அரங்கில் மாநிலத்தின் பாரம்பரிய உணவு, தாய்லாந்து, இந்தோனேஷியா அரங்குகளில் அழகிய, கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மரத்தால் ஆன பொருட்கள், இத்தாலியின் சலவைக் கற்கள் என அனைத்தும் ஒரே நிழற்குடையில். ஒரே நாளில் சுற்றி மாளாது. எனவே இரண்டு - மூன்று நாட்கள் செல்வோம்.  அது தில்லியின் மிகப் பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும்.


இன்னும் பல விஷயங்கள் உண்டு சொல்வதற்கு! அவை வரும்   பகுதிகளில்!  கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்!


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. பொதுவான குறிப்புகளில் அந்நாட்களில் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கடந்து வந்த பாதை..

    மனதில் மீண்டும் பல நினைவுகள் அலை மோதுகின்றன...

    வாழ்க வளமுடன்..
    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்குள் நினைவலைகளை எழுப்பி இருக்கிறது - மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மொழி கற்றுக்கொள்ள இப்படியான உத்திகள் தேவை தானே முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கற்கவேண்டும் என்ற உந்துதல்தான் ஒரு மொழியைக் கற்க நம்மைத் தூண்டுகிறது. நல்லவேளை நீங்கள் ஆங்கிலத்தில் சமாளிக்க முடியாத இடத்தில் இருந்தீர்கள். இல்லைனா, இருக்கும் ஆங்கிலத்திலேயே பொழப்பை ஓட்டியிருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்க வேண்டும் என்ற உந்துதல் இருப்பதால் தான் கற்றுக்கொள்ளவே முடிகிறது. தெரிந்த மொழி கொண்டு சமாளிக்க முடிந்திருந்தால், நிச்சயம் ஒரு புதிய மொழியை கற்றிருக்க முடியாது தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அவசியமெனில் எந்த மொழியும் கற்றுக் கொண்டால் சிரமம் இல்லை... இதைப்பற்றி ஐயன் சொன்னதை எழுத வேண்டும்... அந்தக் குறள் ஒரு முக்கிய சிறப்பு பெற்ற குறள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியமெனில் மொழிகளை கற்றுக் கொண்டே ஆக வேண்டும் - வேறு வழியில்லை. குறள் குறித்து எழுதுங்கள். படிக்க நாங்களும் காத்திருக்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய தங்கள் நண்பரின் பதிவு நன்றாக உள்ளது. அவரின் பல அனுபவங்களை சரளமாக பகிர்ந்து வருகிறார். நான் திருமணமாகி சென்னை வந்த புதிதில் இந்த பம்பிங் ஸ்டவ்வில் சமையல் செய்ய கற்றுக் கொண்ட பழைய அனுபவங்கள் மனதில் வந்தது. தொடர்ந்து பத்து வருடங்கள் இதில் பண்ணியுள்ளேன். இதில் சமையல் செய்ய அனைத்தையும் (காய்கறிகள், அரைத்து வைத்துக் கொள்ளும் தேங்காய் விழுதுகள்) ரெடி செய்த பின் ஆரம்பிக்க வேண்டும். மிக வேகமாக சமையலை முடித்துத் தரும் அடுப்பு இது.

    ஒரு மொழி சுலபமாக கற்றுக் கொள்ள வெளியில் (காய்கறி வாங்க, மளிகை கடைக்கு சாமான்கள் வாங்க ) அடிக்கடி சென்று வருவதும், ஒரு நல்ல பயிற்சிதான். நல்ல விபரமான பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கற்க வேண்டும் என்ற ஆர்வம்
    விடா முயற்சி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. படிக்கப் படிக்க சுவாரசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  10. ஒவ்வொரு பகுதியும் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. பழைய நினைவுகளை இவ்வளவு துல்லியமாக நினைவு வைத்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரியான பதிவுகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. நமக்கு ஆதாரமே உணவுதான்.
    அதற்கு நல்ல வழிகளை நண்பரகள் இருவருமே
    கற்றிருக்கிறீர்கள்.
    பம்ப் ஸ்டவ்வின் வேகம் பார்க்க ஆச்சர்யப் பட வைக்கும்.

    ஆனால் சகோதரி சொல்வது போல எல்லாவற்றையும் தயாராக வைத்தால் நொடியில்
    சமையல் முடியும்.
    வெகு சுவையாகச் செல்கிறது திரு சுப்ரமணியனின்
    நினைவலைகள்.
    நன்றி மா வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பம்ப் ஸ்டவ் குறித்த தங்கள் பார்வை நன்று. எங்கள் வீட்டிலும் இருந்தது வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....