செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கல்லூரி நாட்கள் பகுதி ஏழு - தொழிற்கல்வி - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்வதற்கு அவர்கள் தான் உளி கொடுக்கின்றனர்.


******கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை ஆறு பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


இயந்திரவியல் துறையை ஏதோ ஒரு காரணத்தால் ஏற்றுக் கொண்டாலும் எங்கள் மூவருக்கும் தியரியை விட வொர்க்‌ஷாப்புக்கு சென்று இயந்திரங்களுடன் பணிபுரிவது மிகவும் பிடித்திருந்தது என்று தான் சொல்லணும். இந்தப் பகுதியில் மூன்றாண்டுகளில் நாங்கள் கல்லூரியில் கற்றுக் கொண்ட தொழிற்கல்வி என்னவென்று பார்க்கலாம். இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் நான் 21 வருடங்களுக்கு முன் கற்றுக் கொண்டதை நினைவில் வைத்து எழுதியிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.


வாரத்தில் இரண்டு நாட்கள் மதிய வகுப்புகளுக்கு பதிலாக மூன்று மணிநேரங்கள் வொர்க்‌ஷாப்புக்கு சென்று பணிபுரிய வேண்டும். தலையில் கொண்டையுடன், காலில் கட் ஷூவுடன், கையில் வளையல், மோதிரம், வாட்ச் என்று ஏதும் அணியாமல் தான் வொர்க்‌ஷாப்புக்குள் செல்ல வேண்டும். உடையில் கூட முழங்கைக்கு கீழே வராதவாறு ஆண்கள் முழுக்கை சட்டையை மடித்து விடுவார்களே அது போல் ஓவர்கோட்டுக்குள் மடித்து விட வேண்டும்.


அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் கட் ஷூ அணிந்திருந்ததால், கால் பாதங்கள் வறட்சி மற்றும் பித்த வெடிப்பின்றி மென்மையாக இருக்கும். டெல்லியில் இருந்த போது கூட குளிர்காலங்களில் வீட்டிற்குள்ளும் சாக்ஸ் அணிந்திருந்ததால் பாதங்கள் மென்மையாக இருக்கும். சரி! வொர்க்‌ஷாப்புக்குச் செல்வோம்.. வாருங்கள்.


முதல் ஆண்டிலிருந்தே Fitting, carpentry, sheet metal, blacksmith என்று வொர்க்‌ஷாப் துவங்கி விட்டன. இதில் blacksmith மட்டும் தான் எனக்கு பிடிக்காதது. அனல் ஜ்வாலையிலிருந்து எடுத்த  சிவந்திருக்கும் இரும்புத் துண்டை சுத்தியலால் அடித்து சமன் செய்ய வேண்டும்! அப்போதைய என் உடல்வாகுக்கு அந்த பெரிய சுத்தியலை தூக்கவே சிரமப்படுவேன்..:)


பொதுவாக வொர்க்‌ஷாப் முடித்து வெளியே வரும் போது அங்கே தகர டின்களில் மரத்தூள் வைக்கப்பட்டிருக்கும். அதை கைநிறைய அள்ளி வருவோம். எதற்கா! கைகளில்  இயந்திரங்களின் grease ஒட்டியிருக்குமே. அதை சுத்தம் செய்யத் தான்..:) ஆனால் அதற்கெல்லாம் அந்த பிசுக்கு போகாது என்பதால் பெண்கள் அறையில் எங்களுக்கென்று தனியாக சோப் வைத்திருப்போம். மரத்தூளுக்கு பின் சோப்பால் சுத்தம் செய்வோம். ஆனாலும் நகங்களின் ஓரங்களில் கறுப்பாகத் தான் இருக்கும்..:) கைகளிலும் grease வாடை தான் அடிக்கும்..:)

இரண்டாம் ஆண்டிலிருந்து lathe, welding, foundries, special machines என்று வேறுபட்ட இயந்திரங்களில் பணி செய்யத் துவங்கினோம். இதில் 'லேத்'தில் பணிபுரிவது எங்களுக்கு பிடித்திருந்தது. இயந்திரம் ஓடும் போது அதில் பொருத்தியிருக்கும் pieceல் எவ்வளவு dimension என்று குறித்துக் கொண்டு depth வைத்தால் இரும்பு துருவல் துருவலாக வந்து விழும். வீடுகளில் நாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்துவோமே steelwool.. அது போன்று கம்பி மாதிரி வந்து விழும்..:) எங்கே போனாலும் பாத்திரம் தேய்க்கும் புத்தி போக மாட்டேன் என்கிறது..:))
Welding வைப்பதும் ஒரு த்ரில்லான அனுபவம் தான். தீபாவளி கம்பி மத்தாப்பு மாதிரி இருக்கும் Electrodeஐ மின்சாரம் மூலம் இணைத்து வெல்டிங் செய்ய வேண்டும். பொதுவாக goggles என்று சொல்லப்படுகிற கண்ணாடி அணிந்து செய்தால் சற்றே எளிதாக இருக்கும். அரசுக் கல்லூரி என்பதால் அதெல்லாம் எங்களுக்குத் தரவில்லை..:) 

சாலைகளில் போகும் போது வெல்டிங் செய்பவர்களை பார்த்திருப்பீர்கள்.. ஒரு கையில் Shield என்று சொல்லப்படுகிற கண்ணாடி போன்ற ஒன்றால் முகத்தை மறைத்துக் கொண்டு செய்வார்கள். அந்த shield வழியாக பார்த்தால் இருட்டாகத் தான் இருக்கும். Electrodeஆல் செய்யும் போது அந்த இடம் மட்டும் பச்சையாகத் தெரியும். பழக்கப்பட்டவர்களுக்கு அது எளிதாக புரியும்.. 


எங்களுக்கு அப்படிப் பார்த்தால் புரியாது என்பதால் shield-ஐ எடுத்து விட்டு வெறும் கண்களால் பார்த்து அப்படியே வெல்டிங் செய்வோம்..:) விளைவு!!  அப்போது ஒன்றும் பெரிதாகத் தெரியாது! இரவு தான்  தூங்கவே முடியாது! கண்களில் பயங்கர எரிச்சலாக இருக்கும். அதன் பிறகு வெல்டிங் செய்து விட்டு வந்த அன்றைக்கெல்லாம்  eye drops வாங்கி கண்களில் விட்டுக் கொள்வோம்! அப்போது தான் தூங்க முடியும்.


செமஸ்டர் தேர்வின் போது ஆளுக்கொரு electrode கொடுக்கப்பட்டது. Alphabetical order படி நான் தான் எங்கள் வகுப்பில் ரோல் நம்பர் ஒன்று! வரிசையில் முதலில் சென்று ஒரு முழு electrode தீர்ந்தும் விட்டது. ஆனால் இரண்டு துண்டங்களை வெல்டிங் செய்து என்னால் இணைக்கவே முடியலை..:) என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து குழம்பிக் கொண்டிருந்தேன். நல்லவேளை! கடைசியாக எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது!  எனக்குப் பிறகு சென்ற வகுப்புத் தோழர்கள் மிச்சம் வைத்து தந்த electrode ஐ வைத்து வெல்டிங்  செய்து முடித்தேன்..:)


Foundries இலும் பணிபுரிய எங்களுக்கு பிடித்திருந்தது. மணலில் வீடு கட்டி விளையாடுவோமே! அதுபோல் iron castingக்கு மண்ணில் mold தயார் செய்ய வேண்டும். இரும்பை காய்ச்சி mouldல் ஊற்றும் வேலையெல்லாம் இல்லை..:) மோல்டு மட்டும் செய்து காண்பித்தால் போதும்.


Special machinesல் Milling machineஇல் பணிபுரிந்தோம். அதுவும் எங்களுக்கு பிடித்திருந்தது. செமஸ்டர் தேர்வில் spur gear அதாங்க பற்சக்கரங்கள் என்று சொல்வோமே அது தான்..:) அதை அபாரமாக செய்து காட்டினோம்.


இறுதியாண்டில் Elective Subject என்று இரண்டு பிரிவாக பிரிந்து கொள்ளலாம் என்று எங்களுக்கு option தரப்பட்டது. ஒன்று Automobile technology! இரண்டாவது special machines!


இதில் நாங்கள் மூவரும் எதைத் தேர்வு செய்திருப்போம் என்று யோசித்துக் கொண்டிருங்கள்..! நாங்கள் தேர்வு செய்த பிரிவுக்கும் விவேக் சாரின் காமெடிக்கும் சம்பந்தம் உண்டு..:) அதை அடுத்த பகுதியில் சொல்கிறேனே..:)


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்ஆதி வெங்கட்


16 கருத்துகள்:

 1. விவரங்கள் சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 2. உங்கள் நினைவுகளை , அனுபவங்களை அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள் ஆதி.
  விவேக எலுமிச்சை காமெடியா?
  அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக கணித்து விட்டீர்கள் அம்மா.அடுத்த பகுதியில் விவரிக்கிறேன்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. இந்தப் படிப்பில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? நிறைய தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொண்ட உணர்வு. ஜாதகத்தைப் பார்த்து என்னை ஏஎம்ஐஐ படிக்க வைக்கலாம் என என் அப்பா முடிவு செய்தார்... நல்லவேளை கணிணி பக்கம் ஒதுங்கினேன்.

  ஷீல்ட் இதுவரை பொறி கண்களில் படாமல் இருக்கத்தான், அது கண்ணாடி என நினைத்துக்கொண்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார். வாழ்க்கைக்கு உதவும் நிறைய விஷயங்களைப் பற்றி இந்த டிப்ளமோ படிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

   ஷீல்ட் வழியே ஒன்றும் தெரியாது. வெல்டிங் வைக்கும் இடம் மட்டும் தான் தெரியும்.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   நீக்கு
 5. புதுமையாகவும் சுவாரசியமாகவும் ுள்ளது மேடம்.
  தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அரவிந்த் சார்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

   நீக்கு
 7. பாலிடெக்னிக் பற்றிய அறிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....