ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 19 - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உண்மையான அன்பில் தான் கோபங்களும் கட்டுப்பாடுகளும் அதிகம். இதை புரிந்துகொண்டவர்களை விட பிரிந்து சென்றவர்களே அதிகம்.


******


தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் படித்திருக்கலாம்!  படிக்காதவர்கள் வசதிக்காக முந்தைய பகுதிகளின் சுட்டிகளை கீழே இணைத்திருக்கிறேன். படித்து விடுங்களேன்!  


கடந்து வந்த பாதை - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று


பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு 


பகுதி ஒன்பது  பகுதி பத்து  பகுதி பதினொன்று  


பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு 


பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு


பகுதி பதினெட்டு


வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்


அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  
முதலில் பணிக்குச் சேர்ந்த UPSC-இல் “தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்” (Tamil Youth Cultural Association) என்ற அமைப்பு இருந்தது.  சுருக்கமாக TYCA என அதனை அழைப்போம். அதில் அங்கத்தினர் ஆகி, அவ்வப்போது வார இறுதி நாட்களில் தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தமிழ்த் திரைப்படங்களை காண்பிப்பார்கள் (இது நமக்கு ஒத்துவராதே!). தவிர இலக்கிய/நகைச்சுவை/சங்கீத நிகழ்வுகள் நடக்கும். ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபடுவோம். அத்துடன் மூன்று-நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தில்லியிலிருந்து வார இறுதி சுற்றுலா செல்வோம்.  அப்படி நான் சென்றது - (1) ஜெய்பூர்/அஜ்மேர்/புஷ்கர் (2) நைனிதால் (3) மசூரி மற்றும் (4) ஷிம்லா பயணங்கள். அவர்கள் இன்னும் சில பயணங்களை மேற்கொண்டாலும், நான் செல்ல இயலவில்லை.  அனைவரும் தமிழன்பர்கள் என்பதால், படு குதூகலமாக இருக்கும். 


இளைஞர்களாக இருந்தோம்.  குழுவில் உடன் சேர்ந்த இளைஞிகளையும் நண்பர்களாக்கி வைத்தோம். அதன் விளைவு! தில்லியில் இருக்கும் பல பிரசித்தி பெற்ற (அட) உழைக்கும் மகளிர் உறைவிடங்களுக்கு (Working Women’s Hospital) வார இறுதிகளில் படையெடுக்கத் தொடங்கினோம். ஆஹா வாழ்க்கையில் தென்றல் வீசத் தொடங்கியது.  நண்பர்களாய்த் தான் இருந்தோம் - இன்றைக்கும் இருக்கிறோம்.  பரஸ்பர உதவிகள் செய்து வந்தோம். அதிலேயே ஒரு சிலர் வாழ்க்கைத் துணைகளையும் - தாமாகவோ அல்லது நண்பர்கள்/பெற்றோர்/உற்றார்/உறவினர் மூலமாகவோ அமைத்துக் கொண்டனர்.  நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லீங்கோ! ஆதங்கத்தில் அல்ல, அமைதியாகவே தான் சொல்கிறேன்!  அப்படி எனது ஆருயிர் நண்பர் ஒருவர் ஒரு நண்பியை முறைப்படி பெற்றோர்கள் மூலம் நிச்சயிக்கப்பட்டு மணமுடித்து, எங்களுக்கு அண்ணியாய் வலம் வருகிறார்.  இது இரட்டை இன்பம் அல்லவா! அது தான் Double Treat! 


இதை ஏன் Double Treat என்று சொல்கிறேன் என்றால் அவர்களது திருமண நாள் - ஆங்கிலத்தில் சொல்ல அட்டகாசமாக இருக்கும் - Double One Double One Double Eight - அதாவது 11-11-88!  எப்படி? அனைத்தும் Double.  ஏனெனில் இருவரும் எமது நண்பர்களே.  எனது இத்தொடர் முழுவதும் தனியுரிமை (Privacy) கருதி எவர் பெயரையும் வெளியிட விரும்பவில்லை.  இப்படி இரு பால் நட்புகளுடன் இனிமையாய் தொடர்ந்தன நாட்கள்.  அனைத்து நண்பர்களின் சுக துக்கங்களில் முழு ஈடுபாட்டுடன் உறுதுணையாக நின்று வந்ததால் தான் இன்றும் நட்புலகத்தில் நலமுடன் நடமாடுகிறோம். ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. ”நீ உன் நண்பனைக் காட்டு. உன்னை யார் என்று கூறுகிறேன்” என்று! அதற்கு இலக்கணமாய் திகழ்ந்தோம். 


நட்பை பற்றி  மிகவும் விவரிக்கிறேன் என எண்ண வேண்டாம். இத் தலைநகர் நட்பு மூலம் நாங்கள் இழந்தது என்று எதுவும் இல்லை. ஆனால் பெற்றதோ மிக மிக அதிகம்.  அந்நாட்களில் தங்க வீடு/அறை கிடைப்பது சற்று கடினமாகிக் கொண்டு வந்த நேரம். காரணம், அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வருடா வருடம் ஆயிரக் கணக்கில் பணியில் சேர்ந்தனர்.  1990-களின் துவக்கம் வரை இது தொடர்ந்தது.  இப்போது தேர்வுகளும் முறையாய் நடப்பதில்லை. நூற்றுக்கணக்கில் கூட வருவதில்லை - குறிப்பாக தமிழகத்திலிருந்து மத்திய அரசுப் பணிக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு! வேலை வாய்ப்பு மிகவும் குறைந்து வருவது மிகவும் வேதனையான விஷயம். இளைஞர்களின் வாழ்க்கையை கடுமையாக புரட்டிப்போட்டு பாதிக்கிறது இந்த வேலையின்மை திண்டாட்டம்.  


இப்படி இருக்க, அந்நாளில் மத்திய அமைச்சரவை அமைச்சர்களின் அலுவலகத்தில் பணி அமர்த்தப்பட்டால் சுழற்சி முறையைத் தாண்டி (Out of Turn) அரசு வீடு கிடைக்கும் நிலை இருந்தது.  இன்றும் உண்டு ஆனால் பல தடைகள், தடைக்கற்கள்.  அன்று சற்று சுலபமாக இருந்தது.  அப்படி ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் நான் சேர்ந்து கொள்ள, 1988 ஜூலையில் அரசின் வீடு ஒன்று எனக்காக ஒதுக்கப்பட்டது.  அவ்வளவு தான் நண்பர்களின் பட்டாளத்தை என்னுடன் அதே வீட்டில் சேர்த்துக் கொண்டேன்.  ஆனால் 1995-ஆம் வருடம் என் திருமணம் நடந்த வரை உடன் இருந்த எந்த நண்பரிடமும் உள் வாடகை என எந்த பொருளாதார நன்மையும் நான் பெற்றதில்லை. ஒற்றுமையாய் இருப்போம், உயர்வுடன் இருப்போம், உறுதுணையாய் இருப்போம் என்றே இருந்தோம். 


1989 நவம்பரில் தில்லியின் புகழ்பெற்ற ராமகிருஷ்ணபுரம் (ஆர்.கே.புரம்) பகுதியில் அரசு வீடு மாறினேன் - ஒரு பெரும் நட்புப் பட்டாளத்துடன்.  அந்த மொத்தப் பட்டாளமும் இன்றளவும் நண்பர்காக உள்ளோம். எவ்வளவு பேர் என்கிறீர்களா? ஒரு கட்டத்தில் 11 பேர் இருந்தோம். பின் அவரவர் திருமணம் அல்லது வேலை மாற்றம் நிமித்தம் அனைவரும் மாறினர்.  ஆனால் சேர்ந்திருந்த வருடங்கள் முழுவதும் அது ஒரு கனாக் காலம் தான். இளமைக்குரிய அனைத்து ரம்மியமான அனுபவங்களும் அங்கே நிகழ்ந்தன.  இளமைக்குரிய என்றதால் என்னவோ என கற்பனைக் குதிரையை தட்டாதீர்கள். அனைத்து நடவடிக்கைகளும் வரையறைக்குட்பட்டே இருந்தன.  


அந்நாட்களில் அந்த வீட்டிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சாணக்யா என்ற திரையரங்கம் இருந்தது.  தில்லியில் ஆங்கிலப்  படங்கள் திரையிடும் மிகச் சில திரையரங்குகளில் அது ஒன்று. அடுத்தது ப்ரியா எனும் திரையரங்கம் (இதன் உரிமையாளர் தான் இந்நாளில் இந்தியா முழுவதும் வியாபித்து இருக்கும் PRIYA VILLAGE ROADSHOW (PVR) திரையரங்கு குழமங்களின் தலைவர்).  அந்த சாணக்யா திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு விட்டது. அங்கு இரவுக் காட்சிப் படங்கள் பார்த்து கூட்டமாய் நடந்து வருவோம். காவல் துறை இடைமறித்தால் திரைக்காட்சி அனுமதிச் சீட்டையும், அலுவலக அடையாள அட்டையையும் காண்பித்து வருவோம். வீட்டின் எதிரேயே ஒரு திரையரங்கம் (சங்கம் திரையரங்கம்).  அங்கே பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்கள் தான். 


அருகிலேயே உத்திர ஸ்வாமி மலை முருகன் கோவில். அதை இவ்வூரார் மலை மந்திர் என அழைப்பர்.  இங்கே வந்த போது (1989) நன்கு ஹிந்தி மொழி கற்றுக்கொண்டு விட்டேன்.  பெருமைக்காக அல்ல தேவைக்காக! ஆர்.கே.  புரம் இல்லத்தில்  ஒரு நண்பர் மிகவும் ரசித்து சமைப்பார். அட்டகாசமாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்வோம். கூட்டுறவே நாட்டுயர்வு என்ற தத்துவத்தில் அனைவரும் பணியில் இருந்ததால் எந்த பேதங்களும் இன்றி பணியாற்றுவோம்.  முதலாவதாக, நண்பர் ஒருவர் திருமணம் முடிந்து முனீர்கா என்கிற இடத்தில் குடியேறினார்.  


வாரம் தவறாமல் அவர் இல்லம் சென்று விடுவோம். இருவரும் அனைவரையும் அறிந்தவர்கள் என்பதால் படு ரகளை தான் போங்கள். அவர்களது இரு குழந்தைகளும் கூட எங்கள் அனைவரையும் மிக நன்கு அறிவார்கள்.  ஏனெனில் பிறந்தது முதல் அவர்களுடன் ஒன்றி இருந்ததால்! 


இன்னும் விஷயங்கள் உண்டு சொல்வதற்கு! அவை வரும்   பகுதிகளில்!  கடந்து வந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்!


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


18 கருத்துகள்:

 1. பொதுவான விவரங்கள் ஆயினும் சுவாரஸ்யமான விவரங்கள்.  முன்பு அளவு இப்போது வேலைவாய்ப்பு இருப்பதில்லைதான்.  இந்நிலை கொரோனா காலத்துக்கும் முன்பிருந்தே இப்படிதான் இருக்கிறது.  காரணம் பெரும்பாலான இளைஞர்கள் பொறியியல் படிப்பையே தேர்வு செய்வதும், அது சம்பந்தமான வேலைக்கே முயற்சி செய்வதும்தான் என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது எண்ணங்கள் கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. //ஒரு நண்பர் மிகவும் ரசித்து சமைப்பார். அட்டகாசமாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்வோம். கூட்டுறவே நாட்டுயர்வு என்ற தத்துவத்தில் அனைவரும் பணியில் இருந்ததால் எந்த பேதங்களும் இன்றி பணியாற்றுவோம்.//


  மிக அருமையான நட்பைப்பற்றி சொல்கிறது இந்த பதிவு. புரிந்து கொண்ட நண்பர்கள் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி.

  நினைவுகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்பு குறித்த பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. நாடு வாழ்க..
  நாடெங்கும் நலம் வாழ்க...

  சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன்..
  துரை செல்வராஜூ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நப்பைப்பற்றி குறிப்பிட்டவை மிகவும் உயர்வான விடயங்களாக இருந்தது வாழ்த்துகள் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்பு குறித்த இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அருமை... பேச்சலராக இருந்தபோது மட்டுமன்றி பின்பும் நட்பு தொடர்வது சந்தோஷத்துக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடரும் நட்பு - பல வருடங்களுக்கும்! அது தானே தேவையும் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அருமையான நட்பை காண்கிறேன்...

  இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. இனிய நட்புகளின் கொண்டாட்டம் படிக்க சுவைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 8. TYCA சுற்றுலாவில் நைநிடால் சென்று வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ நீங்களும் அந்தப் பயணத்தில் பங்கு கொண்டீர்களா? மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நட்பைப் பற்றி இதைவிட அருமையான அனுபவம்
  எழுதி இருக்க முடியாது.
  உயர்ந்த நண்பர்களாக இருந்து குடும்பங்களாக வளர்ந்து
  இன்னும் நட்புடன் இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

  நட்புகளின் மனைவிகளும் ஒற்றுமையாக
  இருந்ததே முக்கிய காரணம்.
  இந்த ஒற்றுமை மிகவும் போற்றத்தக்கது. அருமையான பதிவு மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரை மகிழ்ச்சி அளித்தது. நண்பர் சுப்ரமணியன் அவர்களும் தங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....