திங்கள், 25 அக்டோபர், 2021

வாசிப்பனுபவம் - அவளே என் இதயச் செயலி - பூர்ணிமா கார்த்திக்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SUCCESS IS NOT BUILT ON SUCCESS. IT’S BUILT ON FAILURE; IT’S BUILT ON FRUSTRATION; SOMETIMES IT’S BUILT ON CATASTROPHE - SUMNER REDSTONE.


******






சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் பூர்ணிமா கார்த்திக் அவர்கள் எழுதிய “அவளே என் இதயச் செயலி” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 326

விலை: ரூபாய் 250/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


அவளே என் இதயச்செயலி (Tamil Edition) eBook : Karthic, Poornima


******* 


செயலிகள் இன்றைக்கு நம் வாழ்க்கையில்  இன்றியமையாத ஒரு இடத்தினை பிடித்துக் கொண்டிருப்பதை நீங்களும் உணர்ந்திருக்கலாம். தொடுதிரை அலைபேசிகளை உபயோகிக்கும் அனைவருமே ஏதாவது ஒரு செயலியையாவது பயன்படுத்தாமல் இருப்பதில்லை - பணப்பரிமாற்றம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது வரை, தகவல் தெரிந்து கொள்வது முதல் செல்லும் இடத்திற்கான வழி தெரிந்து கொள்வது வரை என எத்தனை, எத்தனையோ விஷயங்களுக்கு நாம் அனைவருமே ஏதாவது செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் - அதில் இருக்கும் சில ஆபத்துகள் பற்றிய  புரிதல் கூட இல்லாமல் நாம் செயலிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  இப்படியான நூற்றுக்கணக்கான செயலிகளுக்கு இடையில் ஒரு புதிய செயலி குறித்து கனவு காண்கிறார் நூலின் கதாநாயகன் சக்திபிரியன். அப்படி என்ன செயலி அது? வயதானவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் தங்கள் செயலி மூலம் உதவுவது தான் சக்திப்ரியனின் திட்டம்.  அந்தச் செயலியால் என்னென்ன உதவி செய்ய முடியும் என்பதை திட்டமிட்டு செய்ய ஆரம்பிக்கிறார் சக்திபிரியன்.


ஷைலபுத்ரி - பெயர் சொல்லும்போதே கொஞ்சம் அழகாகவே இருக்கிறது அல்லவா?  அந்தப் பெயர் கொண்ட பெண் - கதையின் நாயகி - அவளும் அழகானவளே - அதிலும் அவளது மன அழகு ரொம்பவே சிறப்பு - எல்லோருக்கும் முடிந்த வரை உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருப்பது அழகான விஷயம் தானே!  அவளிடம் உடலளவில் ஒரு குறை இருந்தாலும் அதனை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாமல் எப்போதும் யாருக்காகவேனும் உதவி செய்ய தயாராக இருக்கும் பெண் - அனுபவமிக்கவர்களை வைத்து சக்தி ஹ்யூமன் லைப்ரரி என நடத்தும் பெண் - தங்கள் அனுபவங்களை தேவைப்படுபவர்களுக்குச் சொல்லி வழி நடத்தும் புத்தகங்களாகவே மாறும் மனிதர்களைக் கொண்ட லைப்ரரி - வித்தியாசமான ஒரு முயற்சி!  என்னதான் படித்துத் தெரிந்து கொண்டாலும், அனுபவம் மிக்க ஒருவர் தனது வாழ்வின் அனுபவத்தினை அடுத்தவருக்குக் கடத்துவது சிறப்பான விஷயம் இல்லையா - அப்படி ஒரு விஷயத்தினைச் செய்ய உதவி செய்பவராக ஷைலபுத்ரி. 


இந்த இரண்டு பேரும் எப்படிச் சந்திக்கிறார்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், 80-களில் நடந்த ஒரு காதல் கதை, இரண்டு இணைபிரியாத தோழிகளுக்குள் உண்டான பிரச்சனை, இளமையில் காதலியைப் பிரிந்து, விபத்தில் பழைய நினைவுகளை மறந்திருந்தாலும், தனது வாழ்க்கையில் மிக முக்கியமாக இருந்திருக்க வேண்டிய அந்தக் காதலியைத் தேடி அலையும் முதியவர்,  வேலைக்கு வரும் இளைஞர்கள், படிக்க ஆசையிருந்தாலும் பிரச்சனை இருக்கும் பெண்கள் என பல கதாபாத்திரங்கள் - அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதம் என மிகவும் திறமையாகவே கதையை நகர்த்தி இருக்கிறார் கதாசிரியர் பூர்ணிமா கார்த்திக்.  326 பக்கங்களும் விறுவிறுப்பாகவே செல்கிறது.  கதை என்று இருந்தாலும் வில்லன் கதாபாத்திரமாக ஒருவராவது இருக்க வேண்டுமே - அதற்காக சில கதாபாத்திரங்கள் - ஆனால் அதிகம் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இருந்ததும் நல்லதே!


முதியவரின் காதல் வெற்றி பெற்றதா, சக்திபிரியன் - ஷைலபுத்ரி சேர்ந்தார்களா, சக்திபிரியனின் செயலி வெற்றி பெற்றதா என பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். “அவளே என் இதயச் செயலி” என்ற பூர்ணிமா கார்த்திக் அவர்களின் கதையைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ளலாமே!  நல்லதொரு வாசிப்பனுபவத்தினை நீங்கள் அடைவது நிச்சயம்.  கதாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகள்!


*******


இதுவரை எங்கள் வெளியீடாக வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களால் வெளியிடப்பட்ட நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: எங்கள் மின்புத்தகங்கள்...


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. கதை படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் விமர்சனம். கதை அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. முதியவர் காதல் என்றால் முன்பெல்லாம் பவர் பாண்டி ஞாபகம் வரும்!  இப்போதெல்லாம் அப்பத்தாவை ஆட்டைய போட்டாங்க நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”அப்பத்தாவை ஆட்டைய போட்டாங்க” என்று ஒரு படமா? பவர் பாண்டி பார்த்திருக்கிறேன் - தமிழகம் வந்தபோது - தொலைக்காட்சியில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. கமலஹாசனின் மறைந்த அண்ணன் சந்திரஹாசன் நடித்த படம்.  ஓட்டிட்டியில் வெளியாகி இருக்கிறது.  நல்ல படம் என்றார்கள்.

      நீக்கு
    3. ஓ.... இப்போது தான் கேள்விப்படுகிறேன் ஸ்ரீராம். பார்க்க வாய்ப்பில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படிக்க ஆவலைத் தூண்டும் விமர்சனம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானுமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. மதிப்புரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கரிசனத்துடன் தாங்கள் தந்த விமர்சனம் உண்மையில் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாஞ்சில் சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....