புதன், 20 அக்டோபர், 2021

தலைநகரிலிருந்து - காளி மா - சர்க்கரை மிட்டாய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகரிலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வலிகளை மறந்து சுமந்து வந்த சுமை இறக்கியதும் ஓரங்கட்டப்படும் கழுதையின் நிலையும், சுகங்களை மறந்து உறவுகளைச் சுமந்து கரையேற்றியதும் ஒதுக்கப்படும் முதியோர் நிலையும் ஒன்றே!


******


மீண்டும் சந்திப்போம் காளி மா - காணொளி



காளி பாடி(ரி) என்று அழைக்கப்படும் காளி கோவில் எங்கள் வீட்டின் அருகே இருக்கும் மந்திர் மார்க் பகுதியில் பல வருடங்களாக இருக்கிறது. சாதாரண நாட்களில், மக்கள் கூட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும். அந்த சமயங்களில் எப்போதாவது சென்று வழிபடுவது எனக்கு வழக்கம். ஆனால் நவராத்திரி சமயங்களில் அங்கு நிறைய மக்கள் குவிந்து விடுவார்கள் - குறிப்பாக பெங்காலிகள்.... கோவிலே அவர்கள் அமைத்தது தானே. நவராத்திரி சமயத்தில் மண்டபங்கள் அமைத்து பெரிய பெரிய காளி சிலைகள் பரிவார சிலைகள் வைத்து தினம் தினம் பூஜை நடைபெறும். அங்கே நிறுவும் சிலைகள் தவிர, தலைநகர் தில்லியின் மற்ற பூஜா பந்தல்களுக்கு உண்டான சிலைகளையும் இங்கேயே தயாரிப்பார்கள். இந்த வேலைகள் தவிர கொண்டாட்ட சமயத்தில் மேற்கு வங்கத்திலிருந்து நிறைய இசைக்கலைஞர்களும் வருவார்கள் குறிப்பாக, டாக் (Dhak) எனப்படும் மேளம் வாசிக்கும் கலைஞர்கள். அந்த மேளத்தை இசைத்தபடி நடனமும் ஆடுவதைப் பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கும். மேளத்தின் ஒலி இசைக்க இசைக்க பார்க்கும் அனைவருக்குமே நடனம் ஆடத் தோன்றும். 


நவராத்திரி பூஜைகள் முடிந்தபிறகு காளி சிலைகளும் மற்ற சிலைகளும் பந்தலில் இருந்து அகற்றப்பட்டு முறையாக வழிபாடுகள் நடத்தி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் செல்வார்கள். இந்த வருடம் அப்படி நடந்த கடைசி கொண்டாட்டங்கள் ஒரு சிறு காணொளியாக எனது யூட்யூப் சேனலில் பகிர்ந்திருக்கிறேன். மேளத்தின் இசையைக் கேட்டு நீங்களும் ரசிக்கலாமே. காணொளிக்கான சுட்டி கீழே.....


Send off to Maa Kali at Kalibari Mandir, Mandir Marg, Gole Market, New Delhi 2021 - YouTube


******


தீபாவளியும் சர்க்கரை மிட்டாயும்



இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி.... கடந்த தீபாவளி, தொற்று காரணமாக கொண்டாட்டங்கள் இல்லாத ஒன்றாகக் கடந்தது. இந்த தீபாவளி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் அனைவரும் இருக்கிறோம். தலைநகர் தில்லியில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒரு நாளோடு முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து ஐந்து தினங்கள் வரை ஒவ்வொரு பண்டிகையாக வர ஐந்து நாட்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். நம்மூரில் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வது போல, இங்கே தீபாவளி சமயத்தில் வீட்டுக்கு வெள்ளையடிப்பது, சுத்தம் செய்வது, விளக்குகளால் அலங்காரம் செய்வது, என கோலாகலமாக கொண்டாடுவார்கள். 


தீபாவளி சமயத்தில் லட்சுமி பூஜையும் உண்டு. லட்சுமி பூஜைக்கு எது வாங்குகிறார்களோ இல்லையோ, ஒரு பிள்ளையார் லட்சுமி சேர்ந்த பொம்மை சிலை வாங்குவார்கள். கூடவே சர்க்கரை பாகில் செய்த வெள்ளை வண்ணத்தில் இருக்கும் சின்னச்சின்ன இனிப்புகள், அதுவும் பல வடிவங்களில், கிலோனா என அழைக்கப்படும் பொம்மைகளாக, சிலைகளாக வாங்குவார்கள். சர்க்கரையை தண்ணீரில் கரைத்து, பாகு ஆக்கி, மரத்தினாலான அச்சுகளில் வார்த்து, பொறுமையாக அதிலிருந்து எடுத்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டிய விஷயம். கொஞ்சம் ஏமாந்தாலும் உடைந்துவிடும். இன்றைக்கு பலவகையான இனிப்புகள் உண்ணக் கிடைத்தாலும், இந்த மிகச் சாதாரணமான சர்க்கரை இனிப்புக்கும் இன்றைக்கும் கிராக்கி இருக்கிறது....


தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் இன்னும் இருந்தாலும், இதோ இந்த சர்க்கரை இனிப்புகள் விற்பனைக்கு வந்து விட்டன. இன்று எடுத்த படம் இணைத்திருக்கிறேன். இந்த மாதிரி இனிப்புகளை நீங்கள் சுவைத்ததுண்டா?


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. இந்த மாதிரி இனிப்புகளை இப்போது தான் பார்க்கிறேன்... ஆனாலும் அதிக நேரம் பார்த்தால் சிரமம் வரும் என்று மருத்துவர் சொல்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்புகள் பார்த்தாலே சிரமம் வருமா... :) பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. தனித்த சர்க்கரை இனிப்பு இதுவரை அறியாதது..படத்தைப் பார்த்தாலே நாவில்நீர் சுரக்கிறது...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித்த சர்க்கரை இனிப்பு - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சர்க்கரை இனிப்பு செய்யும் வழக்கம் கன்னடியர்களுக்கு உண்டு. 7ம் வகுப்பு படிக்கும்போதே (தாளவாடி, கர்நாடகா மாநிலம் அருகில்) கன்னடியர்கள் கொண்டுவந்து தருவார்கள். வளர்ந்த பிறகு இந்த இனிப்பு, வெறும் ஜீனி என்பதால் பிடிப்பதில்லை.

    //ஒதுக்கப்படும் முதியோர் நிலையும்// - கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நாம் எப்படி நம் மூத்தோர்களை வைத்திருக்கிறோமோ அதைத்தான் நமக்கும் நம் வாரிசுகள் செய்யும். (விதிவிலக்குகள் இருக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாளவாடி - வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஊர் பெயர் கேட்கிறேன் நெல்லைத் தமிழன்.

      வாரிசுகள் நமக்கு அதையே செய்யும் - ம்ம்ம்... இதுவும் நடக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வெங்கட்ஜி காணொளியும் பார்த்துவிட்டேன். நல்ல ரிதம்..

    எங்கள் வீட்டுத் திருமணங்களில் பங்களூரில் இருந்து வரும் உறவினர்கள் கொப்பரையில் செய்திருக்கும் பொருட்களையும், சர்க்கரையில் செய்யும் இது மாதிரியான பொம்மைகள் உருவங்கள் கொண்டு வருவார்கள். லக்ஷ்மி, பிள்ளையார் என்று. எனக்குத் தோன்றும் எறும்பு வராதோ என்று. இப்படி வைத்திருப்பதால். படத்தில் கூட ஒரு பொம்மையில் ஈ? பெரிய ஈ? எறும்பு? இருக்கிற்தே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      எறும்பு வராதோ? வரும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகம் மனதை என்னவோ செய்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - மனதைத் தொட்டு ஏதோ செய்து விடுகின்ற வாசகங்களில் இதுவும் ஒன்று கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இந்த சர்க்கரைப் பாகு பொம்மைகள் தஞ்சாவூரில் பார்த்திருக்கிறேன். இங்கு நீங்கள் வெளியிட்டிருக்கும் படம் மிகக் கவர்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவர்ச்சியாக - :) பார்க்க நன்றாகத் தான் இருக்கும்! சுவை அப்படி ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. எங்கள் மாமியார் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கர்நாடகாத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்ப நண்பர்களாக இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பவர்கள். அவர்கள் வீட்டில் திருமணம் என்றால் வித விதமான தோற்றத்தில் சீனீ மிட்டாய்கள் வண்ணத்தில் உண்டு. மைசூருக்கு திருமணம், மற்றும் விழாக்களுக்கு போய் வந்தால் கொண்டு வந்து கொடுப்பார்கள் எங்களுக்கு.

    தைபொங்கலுக்கு சிறுமிகளுக்கு கைநிறைய இந்த மிட்டாய்கள், பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய் வில்லைகள் வெல்லத்தை அழகாய் சின்னதாக வெட்டியது என்று கொடுப்பார்கள்.

    காணொளி பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் இன்னும் சில மாநிலங்களிலும் இருப்பதாகத் தெரிகிறது கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. காணொளி நன்றாக இருக்கிறது, இசையும், ஆட்டமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வலிகளை மறந்து சுமந்து வந்த சுமை இறக்கியதும் ஓரங்கட்டப்படும் கழுதையின் நிலையும், சுகங்களை மறந்து உறவுகளைச் சுமந்து கரையேற்றியதும் ஒதுக்கப்படும் முதியோர் நிலையும் ஒன்றே!/////////////




    முதியோர் விஷயத்தில் நம் சொற்களும் செயல்களும்
    வெகு ஜாக்கிரதையாக இருக்கணும்.

    அந்தக்கால இளைஞன் இன்றைய முதியோன்.
    அந்தக் கால மருமகள் இன்றைய மாமியார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதியோர் விஷயத்தில் நம் சொற்களும் செயல்களும் வெகு ஜாக்கிரதையாக இருக்கணும் - உண்மை வல்லிம்மா. மிகச் சரியாக சொன்னீர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வங்காள துர்க்கா காணொளி மிக அருமை மா.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    வாசகம் உண்மை. பதிவு அருமையாக உள்ளது. நவராத்திரி மா காளி தரிசனம் பெற்றுக் கொண்டேன். தீபாவளி இனிப்பு படம் நன்றாக உள்ளது. தீபாவளிக்கு மக்கள் தயாராகி வருவதை பார்க்க நன்றாக மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

    இங்கும் மஹா சங்கராந்திக்கு (பொங்கல் பண்டிகை) இந்த இனிப்பு மிட்டாய்களை குட்டி குடடியாக செய்து அத்துடன் பச்சை வேர்கடலை, பொட்டுக் கடலை. கொப்பரை தேங்காயின் சின்ன கீற்றுகள், சின்னஞ்சிறு கலரான மிட்டாய்கள், வெள்ளை எள்ளு எனச் சேர்த்து ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு டப்பாவுடன், அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவுகள், என அனைவருக்கும் வெற்றிலை பாக்கு பழங்களுடன் வைத்து தரும் பழக்கம் உள்ளது. அப்போது எல்லா கடைகளிலும் இந்த விற்பனை அமோகமாக இருக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் தருகிற இந்த இனிப்பை சங்கராந்திதோறும் சுவைத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. இங்கும் நவராத்திரி பந்தல்கள் சமீப வருடங்களாக ஆங்காங்கே மைதானங்களில் அமைத்து வந்தார்கள். கொரானா காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களாக இல்லை. சர்க்கரை மிட்டாய் தகவல்கள் சுவாரஸ்யம். இதுவரை பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....