வியாழன், 2 டிசம்பர், 2021

அவரும் நானும் - புதிய தொடர் - பகுதி ஒன்று



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தமிழகப் பயணம்  பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வலிகளைக் கடந்து வழிகளைத் தேடுவோம்.


******


முகநூலிலும் இங்கேயும் கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் எழுதி வந்த தொடர் குறித்தும், அந்தத் தொடர் ”கல்லூரி முதல் கல்யாணம் வரை” என்ற தலைப்பில் மின்புத்தகமாக வெளியிட்டு இருப்பதைக் குறித்தும் இங்கே முன்னரே எழுதி இருக்கிறேன்.  தற்போது அடுத்த தொடரை முகநூலில் ஆரம்பித்து விட்டேன். இங்கேயும் இன்றிலிருந்து வெளிவருகிறது.  கல்லூரி நாட்கள் தலைப்பில் எழுதியது கல்லூரி முதல் கல்யாணம் வரை! இந்தத் தொடரில் கல்யாணம், அதன் பின்னான வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து எழுத இருக்கிறேன்.  வாருங்கள் முதல் பகுதியைத் தொடங்கலாம்! 


******


அவரும் நானும்!





எங்கோ பிறந்த இருவர் மனதால் இணைக்கப்படுவதே திருமணம்! அப்படி மனதால் இணைந்த இருவரின் கதை தான் இது! ஆமாம்! இது 20 வருடத்துக் கதை! ரசனைகளும், விருப்பங்களும் வெவ்வேறாக இருக்கும் இருவர் காலத்தின் ஓட்டத்தால் ஒத்துப் போவதைப் பற்றி தான் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 


எனக்கு இருபது வயதில் திருமணம் நிகழ்ந்தது. கல்லூரிக்குப் பின் இரண்டே ஆண்டுகள் தான். குடும்பச் சூழலை உணர்ந்து கொண்டு சம்மதம் தெரிவித்தேன். திருமணத்தைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மாப்பிள்ளை என்பவர் எப்படி இருக்க வேண்டும்! என்ன சம்பாதிக்கிறார்!  என்ன வேலை செய்கிறார்! இப்படி எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.


நான் வேலை பார்த்த இடத்தில் என்னைப் பார்த்த உறவினர் ஒருவர் மூலம் தான் இந்த வரன் அமைந்தது. புகைப்படம் எதுவும் பார்க்காமலே வயது வித்தியாசத்தால் வேண்டாமென சொன்னவர், வேறு வழியில்லாமல் சில மாதங்களுக்குப் பின் சம்மதம் சொல்ல, முடிவானது எங்கள் திருமணம். இதைப் பற்றியெல்லாம் 'கல்லூரி நாட்கள்' தொடரில் விரிவாக  எழுதியிருக்கிறேன்.


இருவரும் நேரிலோ, புகைப்படத்திலோ பார்த்துக் கொள்ளாமலே ஜாதகப் பொருத்தம் மட்டுமே பார்த்து நிச்சயத்திற்கு ஏற்பாடும் செய்தாச்சு. மாப்பிள்ளை வீட்டில் காண்பிப்பதற்காக ஸ்டூடியோவிற்குச் சென்று ஃபோட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டேன். ஆனால் அதை அவருக்கு அனுப்பவே இல்லை..:) 


Kerala expressல் டெல்லியிலிருந்து நேரே கோவைக்கு பெண் பார்க்க வந்தார். அவரின் அப்பாவும், அம்மாவும், அக்காவும்  திருச்சியிலிருந்து வந்தார்கள். வழமை போல கேசரியும், பஜ்ஜியும் பெண் பார்க்கும் படலத்திற்கு சிறப்பைக் கூட்டின..:) 


மார்ச் மாதத்தில் வந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை தான் பெண் பார்க்கும் படலம். அன்று பேபி பிங்க் நிறத்தில் தான்  பட்டுப்புடவை கட்டியிருந்தேன். எப்போதும் போல பின்னல் தான் என்றாலும் கூடுதலாக தலையில் மல்லிகை சூடிக் கொண்டிருந்தேன். கைகளில் கண்ணாடி வளையல்கள். இவ்வளவு தான் என் ஒப்பனை..:) 


பெண் பார்க்கும் படலத்தில் எல்லோரையும் நமஸ்கரித்துக் கொண்டேன். அப்போது தான் முதல்முறையாக இருவரும் பார்த்துக் கொண்டோம். அன்று நீல நிறத்தில் முழுக்கை சட்டையும், ஜீன்ஸும் அணிந்திருந்தார். அவரின் ஆறடி உயரமும், அடர்த்தியான கேசமும், மீசையும் என்னைக் கவர்ந்தது! அன்று ஏற்பட்ட ஈர்ப்பு இன்று வரை குறையவில்லை..:) 


ஒரு விரலை காண்பித்து ஒரு நிமிஷம் உள்ளே வா!  என்றார். நிஜமாகவே என்னைப் பிடித்திருக்கிறதா! என்று கேட்டார். ம்ம்ம்..என்றேன். அப்படியே ஐந்து நிமிடங்கள் போல பேசிக் கொண்டோம்.


கிளம்பும் போது உங்க ஷர்ட் சைஸ் என்ன?? என்று கேட்டேன். 42 என்றார். அடுத்த நாளே நிச்சயத்திற்காக கருநீலத்தில் கட்டங்கள் போட்ட சட்டை வாங்கிக் கொண்டோம். அவர்கள் வீட்டில் எனக்கு மயில் கழுத்துக் கலரில் மெரூன் நிற பார்டர் போட்ட பட்டுப்புடவை வாங்கியிருந்தார்கள். அதற்கு ஏற்ற ப்ளவுஸ் பிட்டை வாங்கி பெண் பார்க்க வரும் போது எடுத்து வந்திருந்தார் என் மாமியார்!


பெண் பார்த்ததுக்கும், நிச்சயத்துக்கும் இடையே ஒரே ஒரு நாள் தான். வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் சனிக்கிழமை காலை தெரிந்த அக்காவிடம் ப்ளவுஸ் தைக்க கொடுத்து விட்டார் அப்பா. மாலையே அதை தைத்தும் கொடுத்து விட்டார்கள்.


பெண் பார்க்க வந்த போது அவரின் அக்கா உனக்கு பாடத் தெரியுமா! என்று கேட்டார். பாட்டெல்லாம் பாடத் தெரியாது என்றேன். வசீகரா கூட பாடலாம். சும்மாப் பாடு! என்றார்..:)


இப்படியாக பெண் பார்க்கும் படலம் சிறப்பாக நிகழ்ந்தது. அடுத்து அவரின் வீட்டில் நிச்சயதார்த்தம்! அதைப் பற்றியெல்லாம்  அடுத்த பகுதியில் சொல்கிறேன்..


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதிவின் தொடக்கம் உங்களுக்கும் பிடித்த வகையில் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அனுபவப்பகிர்வு உங்களுக்கும் பிடித்ததாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. அன்புள்ள ஆதி, இன்று இனிமையாய் தொடங்கியது தங்கள் அடுத்த தொடர!என்னுடைய பெண் பார்க்கும் வைபவம் மற்றும் திருமண நிகழ்வுகளை அசை போட வைத்தது. அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவு உங்கள் பெண் பார்க்கும் வைபவம் மற்றும் திருமணம் ஆகியவற்றை நினைவூட்டியது அறிந்து மகிழ்ச்சி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் சுவாரஸ்யமான ஆரம்பம். உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லோர் வாழ்விலும் இது மறக்க முடியாத அனுபவம் அல்லவா... எங்களின் பெண் பாரத்த பழைய நினைவுகளும் உங்கள் பதிவை படிக்கையில் வந்து போயின. அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறேன். தொடருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவின் தொடக்கமும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி. இந்தப் பதிவு வாசிப்பவர்களின் நினைவு ஓடைகளை மீட்க வைத்திருக்கிறது என்பதில் சந்தோஷமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. ஆதி நிஜமாகவே சுவாரசியமான தொடக்கம். ரசித்தேன். உங்களைப் பற்றிச் சொல்வதோடு அதுவும் வெங்கட்ஜியைப் பற்றியும் சொல்லப் போறீங்களே! ஹாஹாஹா...சும்மா கலாய்க்கத்தான்!

    அட வெங்கட்ஜி கூப்பிட்டுப் பேசவும் செய்தாரா!! தில்லி வாசமாச்சே அதான்!

    ஆதி, எல்லாமே நல்ல நினைவு வைத்து எழுதுவதற்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வாசம் முதல் முறை பார்க்கும்போதே பேச வைத்தது என்று சொல்ல இயலாது. கல்லூரி கால அனுபவங்களும் கை கொடுத்தன என்று வேண்டுமானால் சொல்லலாம் கீதா ஜி :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. நினைவலைகள் மறக்காமல் இருப்பதே வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்கும்.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்கும் நினைவலைகள்.... மறக்கக் கூடாததும் கூட கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. சுவராஸ்யமான அநுபவம், நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு. உங்கள் கதையை படிக்கும்போது, 25 ஆண்டிற்கு முன்பு நானும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டியது ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூம்பூம்மாடு.... :) அந்தச் சமயத்தில் பார்க்காமல் போய்விட்டேனே என்று இப்போது சொல்ல முடியாது.... :)

      உங்கள் நினைவலைகளை இப்பதிவு மீட்டு இருப்பதில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நினைவலைகள் என்றுமே இனியவைதான்
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவலைகள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. உங்கள் நினைவுத்திறன் வியக்க வைக்கிறது. உடை முதல் நுணுக்கமான நிகழ்வுகள் வரையான அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுத்திறன் அதிகம் தான்.... அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. இனிய தருணங்கள். அழகாக எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. //அதற்கு ஏற்ற ப்ளவுஸ் பிட்டை வாங்கி பெண் பார்க்க வரும் போது எடுத்து வந்திருந்தார் என் மாமியார்!// உங்க மாமியாரே அருமையாகத் தைப்பார் என நீங்க சொல்லி இருப்பது நினைவில் வந்தது. பல்வேறு கைவேலைகள் தெரிந்தவர் இல்லையா? நீங்களும் தான்! அதான் ரோஷ்ணியும் வெளுத்துக் கட்டுகிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா முன்பு நிறைய தைத்துக் கொடுப்பார். இப்போதும்கூட சகோதரிகளுக்கும் அவருக்கும் தைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார் கீதாம்மா. நாங்கள்தான் அனுமதிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....