திங்கள், 27 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பதினேழு



 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.  முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர். 

 

******

 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு


 

சென்ற பகுதியில் அவரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றியும், வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் சேர்த்து நான் சமைக்கத் தெரிந்து கொண்ட விதத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன்! ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத் தருணங்கள் அமையும் வரை காத்திருக்கணும்! அதற்கான நேரமும், காலமும் கூடி வரும் வரை பொறுத்திருக்கணும்! அனுபவங்களால் தான் அன்பு வலுப்படணும்!

 

என்னை முதன்முதலாக வெளியில் சாப்பிட டெல்லியில் உள்ள ஆந்திர பவனுக்கு அழைத்துச் சென்றார். பருப்புப் பொடி, நெய், ஆவக்காய் ஊறுகாய் என ஒவ்வொன்றாக பரிமாறப்பட்டது. இனிப்புக்காக ப்ரெட்டை நெய்யில் பொரித்து ஜீராவில் போட்டது போல் ஒன்று பரிமாற, என்னவென்று கேட்டதில் அதன் பெயர் 'டபுள் கா மீட்டா' என்று சொன்னார்கள். அந்த இனிப்பு மிகவும் சுவையாக இருந்தது!

 

குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சட்டென தலை நிமிர்ந்த நான் எதிர் டேபிளில் ஒருவர் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததும் குழப்பமானேன்! என்ன இது! இது நான்வெஜ் ஹோட்டலா! என்று அதிர்ந்தேன்..🙂 அவரிடம் தயங்கித் தயங்கி சொன்னதும், வெளில வந்துட்டா இதெல்லாம் பார்க்கக்கூடாதும்மா! உன் தட்டுல இருக்கறத மட்டும் பார்த்து சாப்பிடு! என்று நிதானமாகச் சொன்னார்..🙂  

 

என் உலகம் மிகவும் சிறியது! அப்பாவின் சட்டையை பார்த்துக் கொண்டு அவரின் கையை பிடித்துக் கொண்டு பின்னாடியே செல்பவள். அப்பாவுக்கு எனக்கு என்ன பிடிக்கும்! எந்த மாதிரியான சூழல் என் மனதை இயல்பாக வைத்திருக்கும் என்பது தெரியும்! இது போன்ற ஹோட்டல்களில் நான் சாப்பிட்டதில்லை..🙂 

 

இவருக்கு என்னைப் பற்றி புரியுமா! ஒரு வேளை கோபப்படுவாரோ! இல்லையென்றால் தான் சொல்வதை கேட்கணும் என்று கட்டாயப்படுத்துவாரோ! என்றெல்லாம் குழப்பம் வந்தது அப்போது..🙂 ஆனால்! நான் அவரை புரிந்து கொள்வதற்கு முன் அவருக்கு என்னைப் பற்றி புரிந்தது ஆச்சரியம்! அதன் பின் நான் அங்கு செல்லவே இல்லை..🙂

 

சில இடங்களில் கிடைக்கும் சிறப்பான உணவுகளைப் பற்றி சொல்லி, அங்கெல்லாம் நீ சாப்பிட மாட்ட! அதனால தான் உன்னை கூட்டிண்டு போகலை! என்று சொல்வார். அவரால் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள முடிந்தது! என்னையும் சேர்த்து! அதன் பிறகு வெளியூர் சென்றாலும் கூட எனக்காக தேர்ந்தெடுத்து அழைத்து செல்வார்..🙂

 

திருமணமான புதிதில் ஒரு சமயம் காலை நேரத்தில் வாங்கிய பால் காய்ச்சும் போது திரிந்து போக, அதை எடுத்துக் கொட்டவே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது அப்போது...🙂  என் முகத்தைப் பார்த்து விட்டு அவர் தான் அதை சிங்க்கில் கொட்டி சுத்தம் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..🙂 இது தான் நான்..🙂 

 

பொதுவாக இந்த மாதிரியான வேலைகளை அம்மா தான் செய்வார் என்று நான் அந்தப் பக்கம் சென்றதில்லை! இப்போது எனக்கே எனக்கான வேலைகளும், பொறுப்புகளும் இருக்கின்றது! அதை நான் தான் செய்தாக வேண்டும்! என்று புரிந்த தருணம் அது!

 

அதன் பின் குழந்தை பிறந்ததும் எல்லாமே விட்டுப் போயிற்று! நான் சாப்பிடும் போது தான் குழந்தை பாத்ரூம் போயிருப்பாள்..🙂 ஒன்று! வேகமாக சாப்பிட்டு விட்டு ஓடணும்! இல்லையென்றால் அந்த வேலையை முடித்து விட்டு வந்து சாப்பிடணும்! இது தான் நிதர்சனம்! அம்மாவாக மாறிய பின்னர் சூடாக சாப்பிடணும்! நிதானமாக ரசித்து சாப்பிடணும்! என்பதெல்லாம் மறந்து போய் விடும்..🙂

 

பொதுவாக எனக்கு அதிர்ந்து பேசவோ, கலகலப்பாக இருக்கவோ தெரியாது. நான் உண்டு என் வேலை உண்டென அமைதியாக இருந்து விடுவேன். இதை ஒரு குறையாக எண்ணாமல் புரிந்து கொண்டதால் வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்தது.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

  1. தாயாகி விட்டால் குழந்தைக்காக எல்லாவற்றையும் இழந்து விடணும் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுதல் பொறுப்புகள் வரும்போது இப்படியும் சில விஷயங்கள் நடந்து விடுகின்றன, நமக்கு பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும அருமையாக உள்ளது.

    ஒவ்வொரு பதிவையும் அழகாக துவக்கி உங்களின் அருமையான எண்ணங்களுடன் முடிக்கிறீர்கள்.

    /அம்மாவாக மாறிய பின்னர் சூடாக சாப்பிடணும்! நிதானமாக ரசித்து சாப்பிடணும்! என்பதெல்லாம் மறந்து போய் விடும்..🙂/

    அம்மாவான பிறகு ஒவ்வொரு பெண்ணிற்கும் நிகழும்,அதை அவர்கள் உணரும் நிதர்சனங்கள். அதுதான் தாய் பாசம். தனக்காக வாழாமல் குழந்தைகளுக்காக அவர்களுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து செய்வதில் ஒரு திருப்தியும் கூட.

    பதிவை நன்றாக எழுதி வருகிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. இந்த பதிவின் வழி பகிர்ந்த வாசகமும் விஷயங்களும் நல்லதாக அமைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. ஆதி, அம்மா என்ற இடம் நம்மை நிறைய மாற்றும் என்பது நிதர்சனமான உண்மை.

    ஒவ்வொரு அனுபவத்தினாலும் கற்கும் பாடங்கள் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா எனும் இடம் பலவற்றை மாற்றி விடுவதோடு பல புதிய அனுபவங்களையும் தரக்கூடியது என்பது நிதர்சனம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. அன்பின் ஆதி,
    நலமுடன் இருங்கள் .
    நடுவில் சில பதிவுகளைப் படிக்க முடியாமல் போனது.

    இந்தப் பதிவை முகனூலில் படித்தேன்.
    எல்லாத் தம்பதிகளுக்கும் முதலில் வரும் சாப்பாட்டு அனுபவம்.:)
    நல்ல புத்திமதிதான் சொல்லி இருக்கிறார்.

    அம்மாவான அனுபவமும் உண்மை. பாப்பாவுக்கு
    அம்மா எப்போது சாப்பிடப் போகிறாள் என்று தெரியும் .
    எல்லா அட்டூழியமும் அப்பதான் செய்யும்.
    மிக இனிமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வல்லிம்மா, பதிவு குறித்த தங்களது கருத்துக்களை அழகாக எடுத்துக்கூறிய உங்களுக்கு உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  6. சில அடிப்படை விஷயங்களில் நம்ம மாற்றிக் கொள்ள முடியாதபோது துணை நம்மைப் புரிந்து கொண்டால் அதுவே பேரானந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான புரிதல் இருந்துவிட்டால் வாழ்க்கை பேரானந்தம் தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. 'அவரால் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள முடிந்தது என்னையும் சேர்த்துதான் ' நல்லதொரு மனிதர் குடுத்து வைத்தவர் நீங்கள்.
    அம்மாவின் விட்டுக்கொடுப்புகள் சொல்லி முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா எனும் பொறுப்பு மிகப்பெரிய ஒன்று. அதனைப் புரிந்து கொண்டால் எல்லாம் நலமே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....