வெள்ளி, 10 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி ஆறு


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

பொறுமையாக இருங்கள் - உங்களுக்காக எழுதப்பட்டவை உங்களை வந்து சேர்ந்தே தீரும் - ஏனென்றால் அதை எழுதிய இறைவன் மிகச் சிறந்த எழுத்தாளன்.

 

******



 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து

 

சென்ற பகுதியில் எங்களின் திருமண வைபவமும், புகுந்த வீட்டுக்கு நான் சென்றதைப் பற்றியும் எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் அதைத் தொடர்ந்து அவரும் நானும் முதன்முதலாக எங்கு சென்று வந்தோம், போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்

 

புகுந்த வீட்டுக்கு வந்த மறுநாள் காலையிலேயே என்னை ஒரு இடத்துக்குப் போகலாம் என கிளம்பச் சொன்னார். இரண்டு, மூன்று நாளாக புடவையுடனேயே இருந்ததால் 'சுடிதார் போட்டுண்டு வரவா'என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்..🙂 அன்று peach கலரில் ஒரு சுடிதார் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டேன். அவரும் நானும் சிறிது தொலைவு நடந்து சென்று பேருந்தைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருந்தோம்.

 

அந்த உயரமான கால்களின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை..🙂 வழியில் ஒரு சினிமா ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்களைக் கடந்து செல்லும் போது தான் கவனித்தேன். எங்கள் அருகில் நடிகர் மாதவன்! என்னவர் அங்கு நிற்கவும் இல்லை! நிற்கச் சொல்ல அவரை எப்படி அழைப்பதென்றும் தெரியலை..🙂 என்னங்க! ஏங்க! ஏன்னா! இப்படியெல்லாம் அழைக்க வரவே மாட்டேன் என்கிறது..🙂 இப்போது வரையிலுமே எல்லோர் முன்னிலையில் 'ஒரு நிமிஷம் இங்க பாருங்கோ!' என்று தான் அழைத்துக் கொண்டிருக்கின்றேன்...🙂

 

அங்கு அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது மாதவனும், மீரா ஜாஸ்மினும் நடித்து வெளிவந்த  'ரன்' படத்தின் ஷூட்டிங். இரண்டு வருடங்களுக்குப் பின் அந்தப் படம் வெளியான போது  திருச்சியின் மாரீஸ் தியேட்டரில் பால்கனி டிக்கட் எடுத்து நாங்கள் இருவர் மட்டுமே அமர்ந்து பார்த்தோம்..🙂 அங்கு வேறு யாருமே இல்லை! அவரும் நானும் சேர்ந்து தியேட்டரில் பார்த்த முதல் படம் அது தான்..🙂

 

முதன்முதலில் வெளியே சென்ற கதைக்கு வருவோம். அவர் என்னை அழைத்துச் சென்றது கல்லணைக்கு. கரிகாலன் கட்டிய பரந்து விரிந்த அணையை பார்த்து ரசித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோம்..! இங்கேயும் அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். நான் ம்ம்ம்! ம்ம்ம்! என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன்...🙂

 

மதியம் வீட்டுக்கு வந்து சற்றே ஓய்வு எடுத்த பின் மாலை மலைக்கோட்டைக்கு அழைத்துச் சென்றார். உச்சி பிள்ளையாரையும், தாயுமானவரையும் தரிசித்த பின் இரவு உணவை வெளியிலேயே சாப்பிட்டோம். ஹோட்டலில் சாப்பிடணும் என்றால் எப்போதும் என்னுடைய சாய்ஸ் இட்லியும், மசால் தோசையும் தான்..🙂 நானே உனக்கு ஆர்டர் செய்யறேன் என்று சொல்லி எனக்காக அவர் பரிந்துரை செய்து வாங்கிக் கொடுத்தது சோலா பூரி!

 

அடுத்து நாங்கள் ஊட்டிக்குச் சென்றோம். அப்போது அங்கே என் நாத்தனார் வசித்து வந்தார். அவர் வீட்டிலேயே தான் தங்கினோம். மறுநாள் அருகிலிருந்த பொட்டானிக்கல் கார்டனுக்குச் சென்று வரலாம் எனக் கிளம்பினோம். எங்களுடன் நாத்தனார் தன் பிள்ளைகளையும் அனுப்பியிருந்தார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளலை...🙂  எங்களிருவரையும் தனியே  பேசவும் விடலை!

 

ஒரு கட்டத்தில் அவர் 'மாமாவுக்கும் மாமிக்கும் கல்யாணமாகி மூணு நாள் தாண்டா ஆகுது! படுத்தாதடா! போய் அந்தப் பக்கம் விளையாடு! போகும் போது அழைச்சிண்டு போறேன்!' என்று சொன்னது இன்றும் பசுமையாய் என்  நினைவில்..🙂 

 

அடுத்து நாங்கள் ஊட்டியிலிருந்து கிளம்பி கோவைக்குச் சென்றோம். அம்மா வீட்டில் மறுவீடு அழைப்பு! மாப்பிள்ளைக்கு விருந்து! கோவையில் தான் அவர் எனக்கு 'ஸ்பெஷல் பரிசு' வாங்கித் தந்தார். கொலுசா! வாட்ச்சா! புடவையா! என்று கேட்ட போது பெற்றோரை பிரிந்து வந்த சோகம் ஒருபுறம்! அதுவும் போக அவர் எனக்கு அன்னியமாய் பட்டதால் வேண்டாமென சொல்லி விட்டேன்...🙂 ஆனால்! இப்போது நிலைமை தலைகீழாய் மாறி விட்டது..🙂

 

மறுவீட்டு அழைப்புக்கு அம்மா வீட்டுக்கு சென்ற போதே அங்கு எனக்கு அன்னியமாய் பட்டது ஆச்சரியம்! ஒரு பெண்ணின் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்! எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள அவளால் முடிகிறது! அவள் வாழ்வின் ஓட்டத்துக்கு ஏற்றாற் போல்  தன்னை எளிதாக மாற்றிக் கொண்டு விடுகிறாள்! இந்த வாழ்வில் இன்னும் அவருக்காக என்னென்ன செய்யப் போகிறேன் என்பது கடவுளின் செயல்!

 

ஸ்பெஷல் பரிசாக என்ன வாங்கிக் கொண்டேன். இந்திய தலைநகரத்தில் அடியெடுத்து வைத்த கதைகளை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

26 கருத்துகள்:

  1. //மறுவீட்டு அழைப்புக்கு அம்மா வீட்டுக்கு சென்ற போதே அங்கு எனக்கு அன்னியமாய் பட்டது ஆச்சரியம்!//

    இதுதான் ஆச்சர்யமான மாற்றம்.  நெகிழ்வான கணங்கள். 

    "கொடியோடு தோன்றிய மலர்கள்குழலோடு சேருவதென்ன
    ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
    மறு வீடு தேடுவதென்ன

    பந்தமும் பாசமும் நேசமும்
    அன்னை இல்லத்திலே
    சொந்தமும் காதலும்
    இன்பமும் கொண்ட உள்ளத்திலே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசு மனமே பேசு...பாட்டு கூகுளில் கண்டுபிடித்தேன் ஸ்ரீராம். பாட்டு கேட்டிருக்கிறேன் ஆனால் இந்த வரிகள் சரணம் நினைவில்லை எனவே டக்கென்று கண்டுபிடிக்க முடியவில்லை

      கீதா

      நீக்கு
    2. ஆச்சர்யமான மாற்றம் தான். ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் தருணங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. பாடல் வரிகள் எனக்கும் கேட்ட நினைவில்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சொல்லிச் செல்லும் பாங்கு வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொல்லும் விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பெண்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எந்த ஆணாலும் முழுவதுமாக உணர முடியாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எந்த ஆணாலும் முழுவதுமாக உணர முடியாது - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. ரொம்ப அழகாகச்சொல்றீங்க ஆதி. ரசித்து வாசிக்கிறேன்.

    'மாமாவுக்கும் மாமிக்கும் கல்யாணமாகி மூணு நாள் தாண்டா ஆகுது! படுத்தாதடா! போய் அந்தப் பக்கம் விளையாடு! போகும் போது அழைச்சிண்டு போறேன்!' //

    ஹாஹாஹா ரொம்பவே சிரித்துவிட்டேன் உங்கள் இருவரையும் நினைத்துப் பார்த்து!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகம் நன்றாக இருக்கிறது

    ஆனால் சில சமயம் என்னதான் பொறுமையாக இருந்தாலும் கிடைப்பது தாமதமாகி கிடைக்கும் நேரத்தில் அதன் மதிப்பு காலாவதியாகிவிடுகிறது. டூ லேட் என்று சொல்லும்படியாக. எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால்தான் சரியா இருக்குமோ என்றும் தோன்றுவதுண்டு...இழந்தவற்றை மீண்டும் பெற இயலாதே...குறிப்பாக அந்த மணித்துளிகளை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் எண்ணங்கள் சிறப்பு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மறுவீட்டு அழைப்புக்கு அம்மா வீட்டுக்கு சென்ற போதே அங்கு எனக்கு அன்னியமாய் பட்டது ஆச்சரியம்! ஒரு பெண்ணின் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்! எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள அவளால் முடிகிறது! அவள் வாழ்வின் ஓட்டத்துக்கு ஏற்றாற் போல் தன்னை எளிதாக மாற்றிக் கொண்டு விடுகிறாள்! இந்த வாழ்வில் இன்னும் அவருக்காக என்னென்ன செய்யப் போகிறேன் என்பது கடவுளின் செயல்!//

    ஆமாம் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஷூட்டிங்க் மாதவன் என்று சொல்லியதைப் பார்த்ததுமே படம் ரன் என்று தெரிந்துவிட்டது! மேடி இன்ட்ரோ சாங்க் கோயில் ராஜகோபுரம் அந்தத் தெருவில் எடுத்திருப்பாங்க தொடக்கம் எல்லாம் அந்த இடம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. முகநூலில் உடனுக்குடன் படிக்கும் பதிவு இது. இன்ன்ம் சில சஹானா பதிவுகள். இன்னிக்கு எ.பி. பதிவில் பாடல் பற்றி வெங்கட் பதிவில் எனக் குறிப்பிட்டதைப் படித்து விட்டு ஓடோடி வந்த என்னை ஏமாற்றலாமா? @ஸ்ரீராம், @தி/கீதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கமெண்ட்டை பார்க்கவில்லையா?!!

      நீக்கு
    2. ம்ம்ம்ம், பார்த்தேன், பார்த்தேன். :))))

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. வாசகம் மிக் மிக அருமை.

    //ஸ்பெஷல் பரிசாக என்ன வாங்கிக் கொண்டேன். இந்திய தலைநகரத்தில் அடியெடுத்து வைத்த கதைகளை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.//

    என்ன வாங்கி கொண்டீர்கள் என்று அறிய ஆவல். தொடர்கிறேன்.

    முகநூலில் படித்து மகிழ்ந்தேன். இங்கும் படித்தேன். மலரும் நினைவுகள் மிக அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வாசகம் அருமை.
    இளம் சிட்டுக்களின் இனிய பொழுதுகள். வாண்டுகளும் கூட வந்து விட்டன.

    எங்கள் திருமணத்தின் பின் இவர் வேலை செய்யும் இடத்துக்கு முதல் முதலாக நாங்கள் செல்ல இருந்தபோது அப்பா எங்களை தனியே அனுப்ப பயந்து அண்ணா அண்ணி இரு சிறு குழந்தைகளையும் அனுப்பி விட்டார் அவர்கள் ஒரு வாரம் எங்களுடன் குவாட்டஸ்ஸில் இருந்தார்கள்.புது இடம் வேறு மொழி என்பதில் எனக்கு உதவியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....