சனி, 11 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி ஏழு


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள் இந்த உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதும் மட்டுமே!

 

******

 




அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு

 

சென்ற பகுதியில் 'அவரும் நானும்' முதன்முதலாக வெளியில் சென்ற அனுபவங்களும், ஊட்டிக்கும், கோவைக்கும் பயணம் மேற்கொண்டதைப் பற்றியும் எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் அவர் முதன்முதலில் பரிசளித்தது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

 

மறுவீடு அழைப்புக்காக கோவைக்குச் சென்ற போது 'இங்கேயே என்ன வேணும் என்றாலும் வாங்கிக்கோ'! என்றார். கொலுசும், வாட்ச்சும் தான் இருக்கே! என்று புடவையே வாங்கிக்கறேன் என்று சொன்னேன். அப்போது 'குமரன் சில்க்ஸ்' என்ற பெயரில் கோவையிலும், திருப்பூரிலும் மட்டுமே இருந்த கடை, பின்பு சென்னை சில்க்ஸாக மாறியது. நாங்கள் குமரனாக இருந்த சமயத்தில் தான் அங்கு  சென்றிருந்தோம்.

 

என்ன புடவை வாங்குவது என்றெல்லாம் தெரியவில்லை..🙂 முதலில் ஒரு செக்ஷனுக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தோம். பொதுவாக ஆண்கள் துணிக்கடையில் பொறுமை காத்து வாங்குவது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...🙂 'அவர்' பொறுமைக் காப்பாரா! கோபப்படுவாரா! எப்படிப்பட்டவர்! என்றே எனக்குத் தெரியலை..🙂 அதனால் அச்சமயம் பார்த்துக் கொண்டிருந்த புடவைகளில் ஒன்றைக் காண்பித்து இது பிடிச்சிருக்கா! என்று கேட்டார்.

 

வழக்கம் போல் 'ம்ம்ம்!' என்று தான் சொன்னேன்..🙂 அந்தப் புடவை ராமர் பச்சை நிறத்தில் அழகாகவே இருந்தது. அவர் வாங்கித் தந்த முதல் பரிசல்லவா! புடவையுடனே சேர்ந்து வரும் அட்டாச்டு ப்ளவுஸெல்லாம் வராத நாட்கள் அப்போது! ஆனால் இந்தப் புடவைக்கு மேட்சிங்காக எம்ப்ராய்டரி போட்ட ப்ளவுஸுடன் கிடைத்தது!

 

அடுத்த நாளே கோவையிலிருந்து திருச்சிக்கு கிளம்பி விட்டோம். பேருந்துப் பயணத்தில் அயர்ந்து தூங்கி விட்டேன்! காங்கேயத்தில் சிறிது நேரம் பேருந்து நின்ற போது அவர் இறங்கி ஃபோன் பேச போயிருக்கிறார். திடீரென விழித்த நான் பக்கத்து இருக்கை காலியாக இருக்கவே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளைக் காணலை! பேருந்தும் புறப்படும் நிலையில் இருக்கவே பயம் என்னை தொற்றிக் கொண்டது!

 

சிறுவயது முதலே அப்பாவுடன் வெளியில் செல்லும் போது அப்பா என்னை பத்திரமா பார்த்துப்பார் என்று எதையும் கவனிக்காமல் இருந்து விடுவேன். அப்பாவின் சட்டையை மட்டும் பார்த்துக் கொண்டு பின்னாடியே சென்று விடுவேன். அப்பாக் கூட என்னையும் தம்பியையும் வைத்துக் கொண்டு சொல்வார். 'அவன் எங்கே விட்டாலும் வழிக் கேட்டு வந்துடுவான்! ஆனா நீ அங்கேயே அழுதுண்டு இருப்ப! என்று! உண்மை தான்..🙂  அதே மனநிலை இப்போதும்! அவரின் சட்டையும், உயரத்தையும் வைத்துக் கொண்டு எவ்வளவு கும்பல் இருந்தாலும் பின்னாடியே ஓடுவேன்! நான் இன்னும் குழந்தை தான் இல்லையா!!..🙂

 

இந்தப் பேருந்தில் கண்கள் குளமாகி நான் அழ ஆரம்பிக்கும் முன்னர் சிரித்துக் கொண்டே கண்முன் வந்து நின்றார்..🙂 இது போன்று பல சமயங்களில் என்னை பயமுறுத்தி விடுவார்...🙂 தமிழகத்தை தாண்டி எங்கும் சென்றிராத நான் டெல்லிக்கு போகும் போது என்ன செய்திருப்பேன்எங்கேயும் தொலைந்து போய்விடக் கூடாதென்று மிகவும் பயந்து கொண்டே தான் சென்றேன்..🙂 ஆனால்! நான் நினைப்பது தவறென்று அவர் தன் ஒவ்வொரு செயலிலும்  உணர்த்தினார். மிகுந்த அக்கறையுடனும், கவனமாகவும் என்னை அழைத்துச் சென்றார். 

 

ரயில் பயணத்தில் வழியெங்கும் தகவல் பெட்டகமாக நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் என்று சென்ற இந்த ரயில் பயணம் போல் தான், இந்த நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்திலும் என் சுகதுக்கங்களில் இவர் எனக்கு உற்ற துணையாக இருப்பார் என்று புரிந்து கொண்டேன்.  ஆமாம்! என் வாழ்க்கை இவரோடு தான்!

 

இரண்டு நாள் பிரயாணம் செய்து ஒரு சுபதினத்தில் டெல்லியில் அடியெடுத்து வைத்தேன். அங்கு திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் ஒன்றை  வாங்கியிருந்திருக்கிறார். வீட்டினுள்  ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே சென்றேன். 

 

ஒரு பேச்சிலர் இருந்த வீடாக இல்லாமல் சுத்தமாக இருந்தது என்னை முதலில்  கவர்ந்தது. என்னைக் கேட்டால் கணவனுக்கும், மனைவிக்கும் ஒத்து போக வேண்டிய விஷயங்களில் சுத்தத்திற்கு தான் முதலிடம் என்பேன்! ஒருவர் சரியில்லை என்றாலும் சண்டை தான் உண்டாகும்! குடித்தனம் செய்வதற்கு தேவையான அத்தனையும் அவரிடம் இருந்தது! அதை விட அவர் வீட்டை பளிச்சென்று வைத்திருந்தது மனதை நிறைத்தது! டெல்லியில் என் வாழ்க்கையை துவங்கினேன்.

 

புதுக் குடித்தனக் கதைகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்.  என்னுடைய பயணங்களின் மிக ஆரம்பத்தில் பஸ்ஸிலிருந்து நடுவில் இறங்கவே மாட்டேன்.  பயம்!  திரும்ப ஏறும்போது ஏகப்பட்ட பஸ்ஸில் இதில்  என்கிற குழப்பம் ஒருமுறை ஏற்பட்டதன் விளைவு.  பின்னர் பழகி விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேருந்திலிருந்து இறங்காமல் இருப்பது என்னால் முடியாது! :) பெரிதும் குழப்பம் ஏற்பட்டதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகம் அருமை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

    //ரயில் பயணத்தில் வழியெங்கும் தகவல் பெட்டகமாக நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் என்று சென்ற இந்த ரயில் பயணம் போல் தான், இந்த நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்திலும் என் சுகதுக்கங்களில் இவர் எனக்கு உற்ற துணையாக இருப்பார் என்று புரிந்து கொண்டேன். ஆமாம்! என் வாழ்க்கை இவரோடு தான்!//

    ரசித்தேன்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உணர்வுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் செல்கிறது தொடர்.

    தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. அருமை. உணர்வுகளை அருமையாக வெளியிடுகிறீர்கள். பலருக்கும் அவரவர் திருமணம் குறித்து நினைவலைகள் ஏற்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் பலருக்கும் அவரவர் திருமணம் குறித்த நினைவலைகளை எழுப்பி இருந்தால் மகிழ்ச்சியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தொடர் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்திருந்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நினைவுகளை சுவாரசியமாக உணர்வுகளோடு வெளிப்படுத்தி எழுதுகிறீர்கள். நினைவுத் திறனைக் கண்டு வியப்பும் ஏற்படுகிறது. வாசகம் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்களும் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்திருந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. 'உற்ற துணையாக இருப்பார் என புரிந்து கொண்டேன் ' இருவருமே ஒருவருக்கொருவர் ஏற்ற புரிந்து கொண்ட தம்பதிகள். உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். வாழ்க நலமுடன் வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....