ஞாயிறு, 26 டிசம்பர், 2021

வாசிப்பனுபவம் - கவிதை செய்க! - முத்துக்குமார்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மற்றவர் மனதை உடைக்கும் போது நினையுங்கள் - நாளை நம் மனதையும் இரு மடங்கு உடைக்க யாராவது வருவார்கள் என்று!

 

******

 





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் முத்துக்குமார் அவர்கள் எழுதிய கவிதை செய்க! எனும் கவிதைத் தொகுப்பு. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: கவிதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 33

விலை: ரூபாய் 49/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

கவிதை செய்க - Kavidhai Seiga (Tamil Edition) eBook : Kumar, Muthu: Amazon.in: Kindle Store

 

******* 

 

புல்லும் பூவும், மண்ணும் மலையும், பெண்ணும் சோலையும், முழுமையும் வெறுமையும், கண்டு கேட்டு கவிதை செய்து களிப்புறுவது என்பது சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் முதல் நடைபெறுவதாகச் சொல்லும் நூலாசிரியர் முத்துக்குமார் தனது அனுபவங்களைக் கவிதைகளாகச் செதுக்கி, ஒரு கவிதை நூலாக கவிதை செய்க!! என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார். கவிதைகளுக்குக் கீழே அதனுடைய பின்புலம் மற்றும் சூழ்நிலையை விளக்கியிருப்பதும் நல்ல யுக்தி! கவிதைத் தொகுப்புக் குறித்துப் பார்ப்பதற்கு முன்னர், அவரது தொகுப்பில் இருக்கும் 28 கவிதைகளிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதை வரிகளைப் பார்க்கலாமா?

 

தேனே! தென்பாண்டி நாடே! என்ற தலைப்பிட்ட கவிதையில்

 

தொட்டுத் தொடரும் மலைவளம் - அதைப்

பட்டுப் படரும் மேக ஊர்வலம்

கட்டுக்கடங்கா தென்றல் தேர் வரும்

விட்டு விட்டுக் கொஞ்சம் தூரல் விழும்

வாழையும் தென்னையும் வரப்பும் வாய்க்காலும்

சோலையும் கிளியும் சுவையான மக்களும் இங்குண்டு

வாழிய வாழிய என்றுரைத்து - செவ்வனே

வாழ வைக்கும் தென்பாண்டிநாடே

வாழிய வாழியவே!

 

என்று மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் குறித்து எழுதி இருப்பது சிறப்பு. 

 

தொலைபேசி என்ற தலைப்பிட்ட கவிதையில், அலைபேசிகளில் மூழ்கிக் கிடக்கும் நிலையை வலையில் சிக்கிய மீனுடன் ஒப்புமை செய்தது சிறப்பாக இருக்கிறதுஅப்படி சிக்கித்தானே கிடக்கிறோம் பலரும்! 

 

பிரியாணி என்றொரு பேரமிர்தம் என்ற கவிதையில் பிரியாணி மீது அவருக்கிருக்கும் ஈர்ப்பு தெரிகிறது.

 

இசைக்கப்படுகின்றேன் - செயப்பாட்டு வினை என்ற தலைப்பில் வரும் வரிகளான 

 

வாழ்ந்தாலும் வசை பாடும்

தாந்தாலும் வசை பாடும்

வஞ்சகமான மாந்தரன்றோ - இங்கு

தந்திரமாக வாழவில்லையெனில்

எந்திரமாய் நமை எண்ணிச்

சிறிது இயக்கி விட்டுச் சென்று விடுவர்!”  என்று சொல்லும்போது, அதில் இருக்கும் நிதர்சனம் நமக்கும் உரைக்கிறது. 

 

கடைசி கவிதையின் விளக்கமாகச் சொல்லும் போது அவரவர் தொழில்களை அவரவர் செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் மலரும் மலரைப் போல புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்போம். சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து அனைவரிடமும் பேரன்பு கொள்வோம்”  என்று சொல்வதைப் போல அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.

 

நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  தொடரட்டும் அவரது எழுத்துப் பயணம். 

 

 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

12 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. ரசனையான கவிதை உதாரணங்கள். கடைசி கவிதை வேறு விதமாக சிந்திக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பதிவில் எடுத்துக் காட்டிய கவி வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  3. கவிதைகள் செய்க!! நமக்குச் செய்ய வராது ரசிக்கலாம்!!

    கவிதைகள் மிகவும் நல்ல பொருளுடன் இருக்கும் என்று தெரிகிறது விமர்சனம் வழியும் கொடுக்கப்பட்டுள்ள க்விதைகளை வைத்தும். இயற்கைபற்றிச் சொல்லியிருப்பது வாசித்ததுமே அட நம்மூர்ப் பக்கமாச்சே என்று தோன்றியது. கடைசி கவிதை யதார்த்தம். என்றாலும் நாம் நாமாகவே இருப்போம். தந்த்திரமில்லாமல்!!

    நல்ல பகிர்வு வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமக்கும் கவிதை செய்ய வராது ரசனை மட்டுமே கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கவிதை வரிகள் மிகவும் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் கவி வரிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. நல்லதோர் அறிமுகம். தென்பாண்டி நாடு பற்றியும் சொல்லி இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி அறிமுகம் செய்த நூல் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  6. நூல் வாசிப்பனுபவம் அருமை.
    முத்துக் குமரன் எப்பொழுதுமே பிடிக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்துக்குமரன் எப்பொழுதுமே பிடிக்கும்... மகிழ்ச்சி வல்லிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....