சனி, 7 மே, 2022

கதம்பம் - 07052022 - Talent Expo 2022 - வடாம் கச்சேரி - இந்த வருடத்தின் வடாம் - Health Day - யாரிவள் கருத்துரை - இன்றைய பொழுது - சில்லுனு சில ரெசிபீஸ் மின்னூல்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO POISON CAN KILL A POSITIVE THINKER; AND NO MEDICINE CAN SAVE A NEGATIVE THINKER. 

 

******


மகளின் பள்ளியில் Talent Expo - 2022:




 

மகளின் பள்ளியில் இன்று திறமைகள் கண்காட்சி. எல்.கே.ஜி முதல் பெரிய வகுப்புகள் வரை எல்லோருக்குமே அவரவருக்கான திறமைகள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டது! ஏறக்குறைய பத்து அறைகளில் கண்காட்சி! 

 

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்று ஒவ்வொன்றிலுமே நமக்கான விளையாட்டுகள், விளக்கங்கள், சரித்திரம் என்று அனைத்தும் இருந்தது.

 

பாரதியார், திருவள்ளுவர், பாரதிதாசன், விவேகானந்தர், இந்திரா காந்தி, அதியமான், ஒளவையார், கண்ணகி, கபீர்தாஸ்  என்று ஒவ்வொரு அறையிலும் ஒருவர் வரவேற்று அவரைப் பற்றி நமக்கு அழகாக சொல்கிறார். இறுதியாக நன்றி! வணக்கம்! வாழ்க தமிழ்! இப்படி...!

 

குட்டி திருவள்ளுவர் வரிசையாக  குறள்களை கொஞ்சு தமிழில் சொல்லிக் காண்பித்தார்..🙂 குட்டி பாரதியார் தன் மெலிதான குரலில் சொல்ல குனிந்து கேட்கத் துவங்கினேன். அவரின் ஒட்டிய நார் மீசை என் முகத்தோடு உரசியது..🙂

 

பெரிய வகுப்புகளுக்கு அவர்களுக்கு ஏற்றாற் போல் Man power குறைப்பதற்கான இயந்திர பயன்பாடு குறித்தான பிராஜெக்ட்டுகள். மகள் Stop drop gravity transport, Stem mechanics Robots குறித்து விளக்கம் சொன்னாள். எல்லோரையுமே மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்து வந்தேன். 

 

******

 

வடாம் கச்சேரி - 2022:


 

வருடந்தோறும் காரடையான் நோன்பு முடிந்ததுமே வடாம் போட ஆரம்பித்து விடுவேன். இந்த வருடம் கொஞ்சம் லேட்! 

 

சென்ற வருடம் போட்ட வடாமே இன்னும் இருக்கு என்றாலும் அம்மாவை நினைத்துக் கொண்டு  பழக்கத்தை விட்டுடக் கூடாதென்று முடிவெடுத்து நேற்றும் இன்றும் போட்டிருக்கிறேன்..🙂

 

******

 

இந்த வருடம் செய்த வடாம்:


 

மகளுக்கு விடுமுறை இருக்கும் நாட்களில் தான் காலைநேரத்தில் அடுப்பு காலியாக இருக்கும்! இல்லையென்றால் அவள் கிளம்பிய பின் மாவைக் கிளறி ஆற வைத்து செய்வதெல்லாம் சாத்தியமில்லை!அதனால் கிடைத்த இரு நாள் விடுமுறையையும் விடக்கூடாது என்று பயன்படுத்திக் கொண்டேன்.

 

அரிசியை ஊறவைத்து கிரைண்டரில் அரைக்க நேரமில்லாததால், பரிசோதனை முயற்சியாக கோலத்துக்காக அரைத்து வைத்திருந்த அரிசிமாவில் செய்து பார்த்தேன்..🙂 அதுவும் கோதுமை மாவில் அரைத்த மிஷினில் அரைத்தது! நிறம் மட்டும் சற்று  சிவந்து விட்டது! மற்றபடி வெற்றி தான்!!!

 

என்னவருக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைத்தால் பயணம் செய்வார்! நான் பரிசோதனை செய்து பார்க்கிறேன்..🙂

 

******

 

சொர்க்கம் என்பது நமக்கு - WORLD HEALTH DAY:


 

சுத்தமும், சுகாதாரமும் நம் இரண்டு கண்களைப் போன்றது. சுகாதாரம் இல்லாத இடங்களில் தான் ஈக்களும் கொசுக்களும் உற்பத்தியாகி நோய்த்தொற்று விரைவில் பரவுகிறது. நாம் சுத்தமாக இருப்பதோடு மட்டும் நின்று விட வில்லை ஒவ்வொரு மனிதனின் கடமை! தன்னைச் சுற்றியுள்ள சூழலையும் தன்னால் முடிந்தவரையில் சுத்தமாக பேணிப் பாதுகாக்க வேண்டும்!

 

எனக்கென்ன என்று சாலைகளில் குப்பைகளை வீசியெறிந்து செல்லாமல் அதற்குரிய இடங்களில் மட்டுமே கொட்டப் பட வேண்டும்! தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் அரக்கனை தவிர்ப்போம். மண்ணோடு இணைந்த இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வோம்! சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம். 

 

ஒவ்வொரு மனிதனின் உடல்நலமும், மனநலமும் பாதுகாக்கப்பட்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்வதே நம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும். உலக சுகாதார தினமான இன்றைய நாளில் இதற்கான உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வோம்.

 

******

 

யாரிவள் - ஒரு கருத்துரை:



 

யாரிவள் தொடரை தொடர்ந்து வாசித்து வரும் என்னுடைய மாமி யாரிவளை பற்றி தன்னுடைய கருத்தாக எழுதி அனுப்பியிருந்தார். அவரின் கையெழுத்திலேயே இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மாமியின் அன்பிற்கு ❤️❤️

 

******

 

இன்றைய பொழுது - 10 ஏப்ரல் 2022:

 

தகிக்கும் வெயிலும் புழுக்கமுமாக சென்ற பொழுதுகளில் சற்றே ஒரு மாற்றமாக இந்தக் கோடையில் பூமியை குளிரவைக்கும் மழையின் வருகை! இறைவனுக்கு நன்றி!

 

######


 

ஒரு சொல்! ஒரு வில்! ஒரு இல்! என்பதை தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டிய, சத்தியத்தை நிலைநாட்ட இங்கு அவதரித்த உதாரணப் புருஷனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதார தினம் இன்று!

ஜெய் ஸ்ரீ ராம்! நல்லதே நடக்கணும் ராமா!

 

######

 

நேற்று மாலை டெல்லியிலிருந்து ஒரு நட்பின் வருகை! தம்பதிகள் ஒருவருக்கொருவர் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு நேரம் போனது தெரியாமல் பேச்சும், சிரிப்புமாக கடந்தது. வெற்றிலைத் தாம்பூலத்துடன் வடாமும் பேக் செய்து கொடுத்து விட்டேன்..🙂 மாவடு இந்த வருஷம் போடலை! என்றேன்.

 

சென்ற முறை நான் டெல்லிக்குச் சென்றிருந்த போது, வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்த சாலையின் எதிர்ப் பக்கத்திலிருந்து ஒரு குரல்! 

 

! மாகாளிக்கிழங்கு! எப்ப ஊர்ல இருந்து வந்த?? என்று:)

 

அந்த அண்ணாவுக்கும் எனக்கும் இடையே எப்போதும் ஒரு கேலியும் கிண்டலும் இருந்து கொண்டே இருக்கும்..🙂 எனக்கு மாகாளிக்கிழங்கின் வாடை அறவே பிடிக்காது! அவருக்கு அது மிகவும் பிடித்தமானது..🙂

 

நேற்றும் கிளம்பும் போது கூட வடாமெல்லாம் குடுத்து விடற! ஏம்மா! அப்படியே அந்த.என்று சிரித்தார்! 

 

எனக்கு புரிந்து விட்டது:))

 

######

 

உலகத்துப் பூவெல்லாம் 

உன் போல அழகில்ல!

நானும் உன் அம்மாவும்

பண்ணாத தவமில்லை!

தென்பாண்டி மன்னவனும்

முழுகித் தான் முத்தெடுத்தான்!

தேனே உன் அம்மாவோ

முழுகாம முத்தெடுத்தா!

 

நேற்று முழுவதும் இந்தப் பாடல் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது! பாடல் வரிகளில் நாட்டம் வந்துள்ளது! இந்தப் பாடலின் முதல் வரியைச் சொல்லுங்களேன்!!! இந்த நாள் இனிய நாளாக அமைய என் பிரார்த்தனைகள்.

 

******

 

மின்னூல் - சில்லுனு சில ரெசிபீஸ்:


 

கோடைக்காலங்களில் சில்லென்று ஒரு ஜூஸோ, ஐஸ்க்ரீமோ எல்லோருக்குமே சாப்பிடத் தோன்றும். அப்படி எங்கள் வீட்டில் சட்டென்று செய்த சில ஜூஸ் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றின் செய்முறைகளை தான் மின்னூலாக தந்துள்ளேன். பெரும்பாலும் இவை யாவும் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து செய்த ரெசிபிக்கள் தான். உடலுக்கு கெடுதல் விளைவிக்காததாகவும், குறைந்த செலவிலும் செய்யப்பட்டது என்றும் சொல்லலாம். 

 

ஸ்வீட் எடு கொண்டாடு என்று சொல்வதைப் போல் கொண்டாட்டம் இருந்தால் தான் ஸ்வீட் செய்ய வேண்டுமா என்ன? எளிதில் நிமிடங்களில் செய்யக்கூடிய ஸ்வீட் ரெசிபிக்களையும் இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

 

இந்த வெயிலுக்கு ஏற்ற 25 ரெசிபிக்களை கொண்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரெசிபிக்களை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து நிறை குறைகளை சொல்லுங்களேன். அமேசானில் வெளியாகும் என்னுடைய 8வது மின்னூல் இது. புத்தகத்தை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கீழே...

 

சில்லுனு சில ரெசிபீஸ் (Tamil Edition) eBook : Venkat, Adhi: Amazon.in: Kindle Store

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, ரசிக்கத்தக்கவை.  குழந்தைகளின் ஆர்வம் ரசிக்க வைக்கும்.

    சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு வடாம் போட்டு முடிக்கும்போது முதல் வரிசை காய்ந்து பொரிக்க தயாராய் இருக்கும்!

    அந்த மாமி எக்கெனவே என்னவர் தொடருக்கும் ரசித்து கடிதம் எழுதி  இருந்தார் இல்லை?

    " சின்னச்சின்னப் பூவே - சங்கர் குரு பாடப்பாடல் https://www.youtube.com/watch?v=74ctkAm5MQU


    ரெசிப்பீஸ் புத்தகத்துக்கு வாழ்த்துகள்.  புதிதாய் ஒரு ரெசிப்பி எங்களுக்கு அனுப்பப் கோருகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஶ்ரீராம். ரெசிப்பி அனுப்ப சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இன்றைய பதிவில் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது.

    பாடலின் முதல் வரிகள் எனக்கு தெரியும் யாராவது சொல்லி விட்டார்களா ? என்று வேகமாக கீழே வந்து பார்த்தேன் நினைத்தபடியே ஸ்ரீராம்ஜி சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. அனைத்து பகுதிகளும் அருமை...

    ஐ ஐயன் ம்ஹீம் தாத்தா வேடம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  4. பல்சுவை விருந்து படங்களோடு அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  5. குட்டிச் தெய்வங்களின் திறமைக்கும் ,ரோஷணிக்கும் வாழ்த்துகள்.
    கோடையும் வற்றல், வடாம்,ஊறுகாய் நம்மைக் கைவிடுவதில்லை :)

    சில்லென்று சில ரெசிப்பீஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    இன்று கதம்பமாக எல்லா பகுதிகளும் நன்றாக உள்ளது. உங்கள் அம்மாவின் பழக்கங்களை இன்றும் விடாது நிறைவேற்றும் தங்களுக்கு வாழ்த்துகள். குழந்தை ரோஷ்ணியின் பள்ளியில் பயிலும், குழந்தைகளின் மாறுவேட போட்டி விபரங்கள் நன்றாக உள்ளது போட்டியில் கலந்து கொண்ட ரோஷிணிக்கும், குட்டி குழந்தைகளுக்கும், அன்பான பாராட்டுக்கள். வெயிலுக்கு இதமாக அறிமுகப்படுத்திய ரெஸிபிகளுக்கு நன்றிகள். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. கதம்பம் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இது போன்ற திறமைகள் கண்காட்சி சூப்பர் நல்ல விஷயம். குழந்தைகளுக்குத்தங்கள் திறமையைக் காட்ட வாய்ப்பு. அத்தனைக் குழந்தைகளும் அழகு.

    //மகள் Stop drop gravity transport, Stem mechanics Robots குறித்து விளக்கம் சொன்னாள். //

    வாவ்! வாழ்த்துகள்! ரோஷிணிக்குட்டிக்கு!

    வீட்டில் இப்படியான டாப்பிக். வகுப்புகளுக்குக் கணவரின் குரல் பதிவுக்கு பிபிடி செய்து கொண்டிருப்பதால் கொஞ்சம் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  8. வடாம் கச்சேரி நன்றாக இருக்கிறது ஆதி. பொரித்ததும் நன்றாக வந்திருப்பது தெரிகிறது. ஹாஹாஹா பரிசோதனைக்காரர் வெங்கட்ஜி!!!

    இம்முறை நான் வடாம் கச்சேரி முடித்து விநியோகமும் முடித்து இப்போது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்க நினைத்த போது மழை வந்துவிட்டது. பார்ப்போம் போட நினைத்துள்ளேன்

    அரிசிவடாம், ரவை வடாம் மரச்சீனிக் கிழங்கு அப்பளம் சின்ன சின்னதாகப் போட்டேன். உளுந்து அப்பளம் எல்லாம் போட்டேன். இந்த இன்னிங்க்ஸில் தொடங்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் இரண்டாம் முறை வடாம் கச்சேரி - வாழ்த்துகள் கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  9. சில்லுனு ரெசிப்பிஸ் - வாழ்த்துகள் ஆதி!

    உங்கள் மாமியின் கையெழுத்தில் கருத்து மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். பொக்கிஷம் லேமினேட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் ஆதி.

    உங்களுக்கு மாகாளி பிடிக்காதா....ஆமாம் சிலருக்குப் பிடிக்காது.. எனக்குப் பிடிக்கும்.

    கதம்பம் எல்லாம் ரசித்தேன் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மின்னூல் வெளியீடு - வாழ்த்தியமைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....