புதன், 25 மே, 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு - பகுதி ஒன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க தவறாதீர்கள்….. 

 

******



கங்கைக் கரையில்… 

தீநுண்மி வந்தாலும் வந்தது, என் பயணங்களில் பெரிய இடைவெளி வந்து விட்டது.  இந்த இடைவெளி என்னைப் பொறுத்தவரை, என் பயணங்களில் நீண்ட இடைவெளி என்றாலும், இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு என்பது தீநுண்மி காலத்தில் பலர் இழந்த வாழ்க்கையை விட பெரிய இழப்பல்ல! எத்தனை எத்தனை உயிரிழப்புகள், வேலை இழப்புகள், பல குடும்பங்கள் நிராதரவாக நின்ற நிலை, என பலரின் இழப்புகளையும் சோகங்களையும் ஒப்பிடும்போது எனது பயணிக்க முடியாத சூழல் ஒன்றும் பெரிய விஷயமில்லை.  இன்னமும் வாழ்க்கை இருக்கிறது; நேரமும் இருக்கிறது; இந்தியாவில் மட்டுமே பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கிறது - இந்த ஒரு ஜென்மம் இந்தியாவை மட்டும் சுற்றிவிடக் கூட போதாது என்றாலும் முடிந்தவரை பயணிப்போம் என்பது மட்டுமே எனது எண்ணம்.  


 சரயு நதிக்கரையில்…

இப்படியான சூழலில் கடந்த பிப்ரவரி மாதத்தில், நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு.  தற்போது சென்னை வாசி என்றாலும் பல ஆண்டுகளாக, அதிலும் சிறு வயதிலிருந்தே தில்லிவாசி அவர்.  தில்லியிலேயே இத்தனை வருடங்கள் இருந்திருந்தாலும் ஏனோ சில இடங்களுக்குப் பயணிக்க அவருக்கும் அவரது துணைவிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  ஏப்ரல் மாதத்தில் அவரது சகோதரி வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு வர இருப்பதாகவும், ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு உத்திர பிரதேசத்தில், சில நதிக்கரை நகரங்களில் சுற்றி வரலாமா என்றும் கேட்க, தீநுண்மியும் அதன் கோரமுகத்தினை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்ததால், நண்பர் கேட்ட உடனேயே நிச்சயம் பயணம் செய்யலாம் வாருங்கள், நான் ரெடி என்று சொல்லிவிட்டேன். நாங்கள் பயணிக்க நினைத்த இடங்களில் இரண்டு இடங்களுக்கு நான் ஏற்கனவே சில முறை பயணித்து இருக்கிறேன். இங்கே தொடராகவும் எழுதி இருக்கிறேன். என்றாலும் மற்ற இரண்டு இடங்கள் நான் பயணிக்காத இடங்கள். 


கோமதி ஆற்றங்கரையில்…
 

நாங்கள் பயணிக்கத் திட்டமிட்ட இடங்கள் என்ன? ஏன் இந்தத் தொடருக்கு “நதிக்கரை நகரங்கள்” என்ற தலைப்பு? சொல்கிறேன்! நாங்கள் செல்வதாக திட்டமிட்ட நகரங்கள் அனைத்துமே நதிக்கரையில் அமைந்த நகரங்கள்! கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும், திவ்யதேசங்களில் ஒன்றான நைமிசாரண்யம், சரயு நதிக்கரையில் அமைந்திருக்கும் அயோத்யா ஜி (அயோத்யா என்று சொல்லாமல் வடக்கில் இருப்பவர்கள் ஜி சேர்த்து, மரியாதையாக அயோத்யா ஜி என்றே சொல்வது வழக்கம்!), யமுனை/கங்கை கரையில் இருக்கும் பிரயாகை (முன்பு இலாஹாபாத்/அலஹாபாத்) மற்றும் கங்கைக் கரையில் இருக்கும் பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் குடிகொண்டிருக்கும் வாரணாசி! இந்த நான்கு நதிக்கரை நகரங்களில் நான் ஏற்கனவே பிரயாகை மற்றும் வாரணாசி சென்று வந்திருக்கிறேன் - இங்கே தொடர்களாகவும் எழுதி இருக்கிறேன்.  மற்ற இரண்டு இடங்களுக்கு பயணிக்க வாய்ப்பு அமையவில்லை - அழைப்பு வரவில்லை! இப்போது நண்பர் வாயிலாக அழைப்பு வந்து விட்டது! ஒப்புக் கொண்டு விட்டேன்.    


 யமுனை ஆற்றிலே…

ஏப்ரல் மாதம் நான்காம் தேதி - என் மகளின் பிறந்த நாள் - அன்று இரவு தில்லியிலிருந்து புறப்படுவதாகத் திட்டம். முதலில் செல்ல திட்டமிட்டது கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நைமிசாரண்யம். நைமிசாரண்யம் குறித்தும், அங்கே பார்க்க இருக்கும் இடங்கள் குறித்தும் இங்கே எழுவதற்கு முன்னர் இங்கே செல்வது எப்படி என்பதை பார்த்துவிடலாம்!  நைமிசாரண்யம் ஒரு சிற்றூர் தான் - உத்திர பிரதேச மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் இருக்கும் ஊர்.  மிஸ்ரிக், நீம்சர், நேமிசார் என பல பெயர்கள் இந்த இடத்திற்கு உண்டு என்றாலும் நாம் இங்கே நைமிசாரண்யம் என்றே தொடர்ந்து பார்க்கலாம். சரி இந்த இடத்திற்கு எப்படிச் செல்வது?  இரயில், பேருந்து என இரண்டு வழிகள், வசதிகள் உண்டு.  தில்லியிலிருந்து நேரடியாக நைமிசாரண்யம் வரை பேருந்து/இரயில் வசதி இல்லை.  தில்லியிலிருந்து லக்னோ வரையோ, ஹர்(dh)தோய் எனும் இடம் வரையோ அல்லது சீ தாபூர் வரையோ இரயிலில்/பேருந்தில் சென்று அங்கே இருந்து பேருந்து/இரயில் என மாறி செல்ல வேண்டும்.  அல்லது தில்லியிலிருந்தே வாகனம் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.  நாங்கள் எந்த வழியில் பயணித்தோம் என்று சொல்கிறேன்!  


கங்கா மையா எனும் கங்கைத் தாய்க்கு ஆரத்தி!
 

தில்லியிலிருந்து சாலை வழி பயணிப்பது என்றால் 450 கிலோமீட்டருக்கு அதிகம்.  இரயில் குறைவு தான்.  லக்னோ வரை செல்லும் லக்னோ மெயிலில் (எண்  12230) ஹர்(dh)தோய் வரை பயணிக்க நாங்கள் 8 மார்ச் 2022 அன்று முன்பதிவு செய்து கொண்டோம்.  3AC பெட்டியில் கட்டணம் ஒருவருக்கு 720/- மட்டும். கூடுதலாக வங்கி விதிக்கும் கட்டணம்/இணையவழி பதிவுக்கான கட்டணம் (Convenience Fee!) உண்டு.  எங்கள் மூன்று பேருக்கும் இந்த இரயில் பயணத்திற்கான மொத்த தொகை - ரூபாய் 2242 மூன்று பைசா! (25 பைசாவுக்கு கீழே செல்லாதே என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்! இணைய வழி என்னும்போது மூன்று பைசா என்ன, ஒரு பைசா கூட வசூலித்து விடுவார்கள்.      ஸ்லீப்பர் வகுப்பு எனில் கட்டணம் ஒருவருக்கு 275 ருபாய் மட்டும் தான் என்றாலும் வடக்கில் இந்த வகுப்பில் பயணம் செய்வது சரியல்ல! நீங்கள் முன்பதிவு செய்திருந்தாலும் பலர் உங்களுடன் பயணிக்கக் கூடும். அதுவும் கோடை காலம் என்பதால் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிப்பதே நல்லது.  ஒருவழியாக பயணிக்க வேண்டிய ஏப்ரல் நான்காம் தேதியும் வந்தது.  எங்கள் பயணம் தொடங்கியதா, பயணத்தில் கிடைத்த அனுபவங்களென்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து… 

28 கருத்துகள்:

  1. நதிக்கரை நகரங்கள் - அழகான தலைப்பு.  சூப்பர்.

    உற்சாகத்துடன் நாங்களும் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத் தொடரின் தலைப்பு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஶ்ரீராம். பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க வேண்டுகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  2. வாரணாசி தவிர மற்ற இடங்களுக்கு ஒரு முறைக்கு மேல் சென்றிருக்கிறேன். வாரணாசி ஒரு முறைதான். இந்த இடங்கள் எல்லாவற்றிர்க்கும் திரும்பவும் செல்ல இருக்கிறேன்.

    உங்கள் பயண அனுபவங்களை வாசிக்கத் தொடங்குகிறேன். எந்த எந்த இடங்களுக்குச் சென்றீர்கள் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வந்திருப்பதில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். மீண்டும் செல்லப்போவதும் சிறப்பு.

      பதிவுகளை தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  3. பதிவைப் படிக்க ஆரம்பித்ததும் ஒரு வரலாற்று நூலைப் படிக்க ஆரம்பித்ததுபோன்ற உணர்வு. காசிக்கோயிலுக்கு சென்றுள்ளோம். கங்கா ஆர்த்தி பார்த்துள்ளோம். (அதைப் பார்த்தபின் கங்கா ஆர்த்தி பற்றி விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை ஆரம்பித்தேன்.) உங்கள் தொடர் மூலமாக பல புதிய இடங்களைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணாசிக்கு சென்று கோவிலும் கங்கா ஆரத்தியும் கண்டு களித்தது சிறப்பு. மிகவும் அற்புதமான விஷயம்! தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. பயணத்தின் அனைத்து குறிப்புகளும், விவரங்களும் அதன் விளக்கங்களும் சிறப்பு... பலருக்கும் உதவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் குறிப்புகளும் தகவல்களும் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே! தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. ஆரம்பமே வழக்கம் போல அமர்க்களம்! விவரமான தகவல்கள்.

    ஆமாம் முன்பே நீங்கள் வாரணாசி, கயா பதிவு எழுதியிருக்கீங்க. நினைவு இருக்கிறது.

    ஆம்! வடக்கே கண்டிப்பாக குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணிப்பதே நல்லது. குளிர்காலமாகவே இருந்தாலும்!!!!

    எப்படிச் செல்ல வேண்டும் என்பதையும் குறித்துக் கொண்டேன்.

    முதல் படம் மற்றும் இரண்டாவது படம் செம...சரயு அழகு!!

    தலைப்பு அருமை. நானும் Time travel ல் பின்னோக்கிச் செல்கிறேன். காத்திருக்கிறேன்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி. தகவல்கள் சிலருக்காவது பயனுள்ளதாக அமைந்தால் நல்லதே! தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி.

      நீக்கு
  6. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு ஆடினீங்களா வெங்கட்ஜி!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யமுனையாற்றிலே கண்ணனோடு ஆட்டம் - ஹாஹா… good one! தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. நதிக்கரை நகரங்கள் மூலம் உங்கள் பயணம் திரும்பவும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் மீண்டும் தொடங்கியது. பயணம் குறித்த தகவல்களை நீங்களும் வாசிக்க இருப்பதில் மகிழ்ச்சி இராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  8. நதிக்கரை பயணம் இனிதான ஆரம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் இனிதே தொடங்கியது. தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. படங்கள் அழகு. ஆரம்பிக்கப் போகும் பதிவின் தலைப்பும் ஆகா.. என்று சொல்ல வைக்கிறது. வரும் பயண கட்டுரைகளுடன் தொடர நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவின் தலைப்பும், பதிவு வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிக்க இருப்பதற்கு நன்றி. தங்களது வருகைக்கும் கருத்துரைப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  10. வாசகம் அருமை.

    புதிய பயணத்தொடர் தொடங்குவது மகிழ்ச்சி. படங்களே சொல்கின்றன கோயில்கள் சம்பந்தப்பட்டவை என்று. பயண விவரங்கள் மிகவும் பயனுள்ளவை அங்கு செல்வோருக்கு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. இந்தப் பயணத்தில் கோவில்கள் தான் பிரதானம். மற்ற விஷயங்களும் வரும்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  11. வாசகம் அருமை.
    நதிக்கரை நகரங்கள் பயணதொடரை தொடர்கிறேன்.

    //நீங்கள் முன்பதிவு செய்திருந்தாலும் பலர் உங்களுடன் பயணிக்கக் கூடும்.//

    வ்டநாட்டில் இந்த அனுபவங்கள் இருக்கே எங்களுக்கும். நீங்கள் அதை சொன்னது நல்ல விஷயம் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. பயணத் தொடரின் தலைப்பு - நன்றிம்மா. வட இந்திய இரயில் பயணம் உங்களுக்கும் அனுபவம் இருக்கிறதே! அதனால் உங்களுக்கும் நான் சொன்ன விஷயங்கள் தெரிந்திருக்கும். பயணக்குறிப்புகள் சிலருக்காவது பயன்பட்டால் மகிழ்ச்சியே! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. அழகான தலைப்பு மற்றும் விளக்கங்கள் சார்.
    அடுத்த பயண நூல் தயாராகிக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். அடுத்த பயண நூல் - ஹாஹா… தொடர் முடிந்ததும் வெளியிடலாம்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  13. படங்களும் பகிர்வும் நன்று. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. நதிக்கரை நகரங்கள் - அழகான தலைப்பு....முக நூலில் இப்பயண காட்சிகளை கண்டு ரசித்தேன் ,,,ஆனாலும் வலை தளத்தில் வந்து வாசிக்கும் நேரம் இப்பொழுது தான் கிட்டியது ...


    இனி தொடர்ந்து வாசிக்க வேண்டும் ...வருகிறேன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....