வெள்ளி, 3 ஏப்ரல், 2026

மேலூர் ஸ்ரீ சஞ்ஜீவன ஆஞ்சனேயர் திருக்கோவில் - 37 அடி ஆஞ்சனேயர் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தீர்வு - சிவசங்கரி - ஒரு நூல் - இரு வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



திருவரங்கத்தில் உள்ள தெற்கு சித்திரை வீதியில் திரு வாசுதேவன் என்ற பெயர் கொண்ட அனுமன் உபாசகர் நீண்ட காலமாக வசித்து வருகிறார்.  அவரது விடாமுயற்சியாலும் பக்தர்களின் பங்களிப்பாலும், இறைவனின் அருளாலும் திருவரங்கத்தினை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருப்பது தான் ஸ்ரீ சஞ்ஜீவன ஆஞ்சனேயர் ஆலயம்.  பிரம்மாண்டமான ஆஞ்சனேயர் சிலை - 37 அடி - ஆஜானுபாகுவான தோற்றத்தில் பார்க்கும்போதே ஒரு வித பிரமிப்பு நிச்சயம் நமக்குள் வரும். சில வருடங்களாக பாலாலயமாக நடைபெற்று வந்த இந்த ஆலயத்திற்கு கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முழுமையாக திறக்கப்பட்டு இருக்கிறது.  முன்னரே பாலாலயத்திற்குச் சென்றிருந்தாலும் கும்பாபிஷேகம் அன்று சென்று வர இயலவில்லை - காரணம் கும்பாபிஷேகம் நடந்த நாள் அலுவலகம் உண்டு. அதனால் என்ன, அடுத்த 48 நாட்களுக்கு மண்டாலாபிஷேகம் நடக்கும் நாட்களில் சென்று வரலாம் என நினைத்தோம்.  அடுத்த சனிக்கிழமை - அதாவது 28 மார்ச் அன்று நானும் இல்லத்தரசியும் சென்று வந்தோம். 











மேலூர் கிராமத்தில் தற்போது அமைந்திருக்கும் இந்த ஆஞ்சனேயர் சிலை தமிழகத்திலேயே உயரத்தில் முதலாம் இடத்தினை பிடிக்கும் சிலையாக அமைந்திருக்கிறது - 37 அடி சிலை என்றால் நினைத்துப் பாருங்கள் - எத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று.  உங்கள் பார்வைக்காக அவரின் திருவுருவம் காணொளியாகவும் மேலே சேர்த்திருக்கிறேன்.  ஆஞ்சனேயர் ஆலயம் என்று சொன்னாலும், இங்கே ஸ்ரீராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கும் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, நரசிம்மர் சன்னதி, கால பைரவர் சன்னதி போன்ற மற்ற சன்னதிகளும் உண்டு. ஆலய வளாகத்தில் ஆஞ்சனேயர் சன்னதிக்கு வெளியே துவாரபாலகர்களுக்கு பதிலாக ஆஞ்சனேயரின் தந்தை கேசரி மற்றும் தாயார் அஞ்சனி தேவியின் சிலைகள் இருக்கின்றன.  அதைத் தவிர மண்டபத்தில் அங்கதன், ஜாம்பவான், கருடன், விதன், விபீஷணன், யமன் போன்றவர்களின் சிலைகளும், அவற்றுக்கு மேல் பக்கத்தில் நவகிரஹங்களுக்கான தனித்தனி சிலைகளும் இருந்தன.  


இங்கே இன்னும் ஒரு விஷயமும் சொல்லத் தோன்றுகிறது.  எத்தனையோ புராதனமான ஆலயங்கள் சிதிலமடைந்து அழிந்து போய்க் கொண்டிருக்கும் போது அதனை சீர் படுத்தாமல், புதியதாக ஆலயங்கள் அமைய வேண்டுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.  அதிலும் அந்தக் காலத்தில் எழுப்பப்பட்ட கற்றளிகள், சிலைகள் போன்றவற்றில் இருக்கும் நேர்த்தியும், அழகும் இந்தக் கால சிலைகளில் இல்லை என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.  உதாரணத்திற்கு இந்த ஆலயத்தினையே எடுத்துக் கொள்ளுங்கள், எல்லா சன்னதிகளிலும் இருக்கும் சிலைகள் Granite கற்களால் ஆனவை.  பளபளவென்று இருக்கிறது என்றாலும் பழங்காலச் சிலைகள் போல நிச்சயம் இல்லை.  அது போலவே சன்னதி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மற்ற சிலைகள் இரும்புக் கம்பிகள் கொண்டு கட்டி, அதன் மேலே சிமெண்ட் பூச்சு வேலைகள், நகாசு வேலைகள் செய்யப்பட்டவை.  இந்தச் சிலைகள் நீண்ட காலம் நிச்சயம் பொலிவுடன் இருக்காது.  பழைய காலச் சிலைகள் - எத்தனை வருடங்களானாலும் அப்படியே இருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, புதிய சிற்பங்கள் மீது அத்தனை ஈர்ப்பு வருவதில்லை. 


சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ஆலயம் எங்கே இருக்கிறது - மேலூர் கிராமத்தில் சற்றே குறுகிய சாலையின் வழி உள்ளே செல்ல வேண்டியிருக்கும் - இன்னமும் சாலைகள் அகலமாக வருவதற்கு சில காலம் ஆகலாம்.  இப்போதே இந்த ஆலயம் பிரபலமாக இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் மேலும் மேலும் பிரபலம் அடைந்துவிட்டால், சாலைகள், மற்ற வசதிகள் போன்றவையும் வந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.  எங்கள் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.  முன்னரே சென்றிருக்கிறோம் என்றாலும் கும்பாபிஷேகம் முடிந்த சில நாட்களில் இங்கே சென்று வர முடிந்ததில் மனதில் மகிழ்ச்சி.  நிறைய பக்தர்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.  அவ்வளவு பெரிய சிலை - வாசலிலிருந்தே தரிசனம் செய்ய முடியும் என்றாலும் வந்திருக்கும் பக்தர்கள் ஏனோ மிக நெருக்கமாகச் சென்றால் தான் நன்றாக பார்க்க முடியும் என்பது போல தள்ளியடித்துக் கொண்டு செல்கிறார்கள் - பொறுமை இல்லாத மனிதர்களாக இருப்பவர்களை என்னவென்று சொல்வது.

 




அங்கேயும் தங்களுக்கு தனி மரியாதை தேவை என்பது போல நடந்து கொண்ட சிலரையும் பார்க்க முடிந்தது.  சில வட இந்தியர்களும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.  ஏற்கனவே திருவரங்கம் அரங்கனின் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் இங்கேயும் சென்று வருகிறார்கள்.  வரப்போகும் காலங்களில் அனைவருமே இந்த மேலூர் ஆஞ்சனேயர் ஆலயத்திற்கும் சென்று வருவார்கள் என்பது என் எண்ணம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஆலயம் பிரபலம் ஆனால், உள்ளூர் மக்களுக்கும் ஒரு வாழ்வாதாரமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  இப்போதே ஒரு கடை அங்கே உண்டு - பூக்கள், அர்ச்சனை தட்டுகள், தேங்காய், பழம் போன்றவை விற்பனை அந்தக் கடையில் உண்டு. திருவரங்கம் வரும் வாய்ப்பிருந்தால், முடிந்தால் இந்த ஆஞ்சனேயர் ஆலயத்திற்கும் நீங்கள் சென்று வரலாம்.  நாங்கள் சென்ற போது எடுத்த சில படங்களையும், காணொளிகளையும் இங்கே இணைத்திருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்!  மீண்டும் வேறொரு ஆலய தரிசன அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

3 ஏப்ரல் 2026


18 கருத்துகள்:

  1. காலையில் கணினி திறந்ததுமே ஆஞ்சியின் விஸ்வரூப தரிசனம்.. __/\__

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சென்ற வருடம் குடந்தை அருகே ஆலங்குடியில் ஒரு கோவிலை என் மச்சினர்கள் நண்பர்கள் உதவியுடன் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்தார்கள்.  அதற்கு சென்றிருந்தேன்.  அங்கு நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான  ஒரு ஆஞ்சநேயர் ஆலயம் உருவாகி வருகிறது.  அதற்கும் சென்று வந்தேன்.  அந்த ஆஞ்சியின் உயரம் நினைவில்லை.  அதுபற்றி எங்கள் தளத்தில் பதிவும் எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் இந்தப் பதிவு மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி. திருச்சியில் இன்னும் சில இடங்களில் இப்படி உயரமான ஆஞ்சனேயர் சிலைகள் உண்டு. என் பதிவிலும் எழுதி இருப்பது நினைவில்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. புதிய ஆலயம் பற்றிய தகவல்கள் நன்று.

    பழைய ஆலயத்தைப் புதுப்பிக்க காசும் செலவு பண்ணணும், லஞ்சமும் கொடுக்கணும். திருச்செந்தூர் ஆலயத்துக்கு நடந்தது செய்திகளில் வந்திருந்ததே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. மேலூர் ஆஞ்சு ரொம்ப அழகு! கிட்டத்தட்ட நங்கநல்லூர் ஆஞ்சு போலவே இருக்கிறார் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நங்கநல்லூர் ஆஞ்சியை விட ஆகிருதியிலும் பெரியவர் - உயரத்திலும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. நங்கநல்லூர், நாமக்கல்லிலும் வாசலில் இருந்தே தரிசனம் செய்ய முடியும். இப்போது மேலூர் ஆஞ்சுவும் அந்த லிஸ்டில்!

    பிரம்மாண்டமான தரிசனம். கோவில் மிகவும அழகாக இருக்கிறது. ஆஞ்சு இருக்கும் இடத்தில் இராமர் இல்லாமலா! கண்டிப்பாக இருப்பார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. கண்டிப்பாகப் பிரபலம் ஆகிவிட்டால் பிற வசதிகள் வந்துவிடும்.

    இனி உங்கள் வீடிருக்கும் மேலூர் சாலை ரொம்பவே பரபரப்பாகிவிடும் என்று நினைக்கிறேன். ஸ்ரீரங்கம் கோவிலைத் தரிசிப்பவர்கள் ஆஞ்சுவைக் கேள்விப்பட்டு வருவார்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில வருடங்களில் பிரபலமாகி விடும் என்றே தோன்றுகிறது. இப்பொழுதே நிறைய பக்தர்கள் வருவதைக் கவனிக்க முடிந்தது - இன்றைக்கும் அங்கே மகளுடன் சென்றிருந்தேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. படங்களும் காணொளிகளும் மிகவும் நன்றாக இருக்கின்றன ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  8. புதிய - பழைய கால ஆலயங்கள் குறித்தத் தங்கள் கருத்துகள் சரியே. ஆஞ்சநேயர் கம்பீரமாக இருக்கிறார். பெங்களூர் HSR layout_ல் உள்ள ஒரு கோயிலுக்கு மேலே எழுந்து நிற்கும் 102 அடி உயர ஆஞ்சநேயர் சிலையைக் கடந்து செல்பவர்கள் தொலைவிலிருந்தே பார்க்க முடியும். பெங்களூர் தும்கூரிலும் உயரமான சிலையுடன் ஒரு கோயில் உள்ளது.

    படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது பல இடங்களில் பிரம்மாண்டமான சிலைகள் வைப்பது வழக்கமாகி இருக்கிறது. குஜராத்தில் இரண்டு மூன்று இடங்களில் பிரம்மாண்டமன சிவன் சிலைகள் பார்த்திருக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. வாசகம் அருமை.
    அனுமன் கோயில்படங்கள் காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....