அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - மண்டல் கிராமம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : மாதொருபாகன்
2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மாதொருபாகன் – வாசிப்பனுபவம் - அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக!
குழந்தையின்மை என்பது மிகப்பெரிய கொடுமை என்று தான் இந்த சமூகம் நினைக்கிறது. அதுவும் திருமணம் நடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே “என்ன ஒண்ணும் விசேஷம் இல்லையா?” என்ற கேள்விக்கணைகள் பெண்ணை நோக்கி வீசப்படுகின்றன. ஆண்களிடம் இந்த கேள்விகள் அவ்வளவாக எழுப்பப்படுவதில்லை என்பதல்ல. அவர்களிடம் கேட்டால் கொஞ்சம் சூடாகவே பதில் கிடைக்கும் என்ற பயம் இருக்கும். ஆனால் பல பெண்கள் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும்போது அத்தனை சுலபமாக பதில் சொல்ல முடிவதில்லை.
ஒவ்வொரு முறை இந்த கேள்வி அவளை நோக்கி வீசப்படும்போதும் கிரிக்கெட் விளையாட்டில் வரும் பௌன்சர் பந்து போலவே எதிர்கொள்கிறாள். அப்பந்தை ஹூக் செய்து சிக்சர் அடிக்கும் திறன் பெரும்பாலான பெண்களிடம் இருப்பதில்லை. மௌனமாகத் திரும்புகிறாள் அல்லது அவ்விடத்திலிருந்து விலகி வீடு வந்து கண்ணீர் வடிக்கிறாள். கேள்வி கேட்கும் எவருமே, தமது கேள்வி, கேட்கப்படுபவரை சோகமாக்குமே, அவரது மனதை புண்படுத்துமே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலையே செய்கிறார்கள்.
பல வீடுகளில் திருமணம் ஆன இரண்டு வருடம் வரை சும்மா இருந்தாலும், அதற்குப் பிறகு கல்யாணமான ஆணை வேறு திருமணம் செய்து கொள்ளத் தூண்டும் பெற்றோர்கள் நிறையவே. ஆணுக்கும் குறை இருக்கலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு வருவதே இல்லை! ஏன் பெண்ணுக்கு மட்டுமே குறை இருக்க வேண்டுமா? அந்த ஆணுக்கு ஏதேனும் குறை இருக்கக்கூடாதா? இந்த எண்ணமே வருவதில்லை எவருக்கும். பெண்ணை மட்டுமே குறை சொல்வது தான் இங்கே பல இடங்களில் நடக்கிறது.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் பகிர்வு : உலகின் மிக அசிங்கமான பெண்
சமீபத்தில் முகநூலில் உலவிக் கொண்டிருந்த போது படித்ததில் நெகிழச் செய்தது என்று பகிர்ந்த ஒரு இடுகை தான் இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அசிங்கம் என்பது பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது என்பது பலராலும் சொல்லப்பட்டாலும் பார்வைகள் மாறுவதே இல்லை என்பதே நிதர்சனம். நான் படித்ததை நீங்களும் படிக்க இந்த வாரத்தின் பகிர்வாக கீழே….
'உலகின் மிக அசிங்கமான பெண்'
எந்தக் காலத்திலும் வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரின் அழகின் மதிப்பீட்டில் முதலில் நிற்கும் போலுள்ளது.
மேரி ஆன் பெவன் என்ற இந்த பெண்தான் 'உலகின் மிக அசிங்கமான பெண்' என்று அறியப்பட்டவள். மேரி ஆன் அக்ரோமெகலி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அது அசாதாரண வளர்ச்சியையும் முகச் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பெண்ணையும் ஒரு நல்ல மனிதன் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெற்றிருக்கிறான். விதியின் விளையாட்டு அன்பான அந்தக் கணவனும் விரைவில் அவளையும் குழந்தைகளையும் விட்டு இறந்து விடுகிறான். தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு, வீட்டில் வருமானம் இல்லாத நிலையில், கடன் தொல்லை, நான்கு பிள்ளைகளின் தேவைகள் அவளை அலைக்கழிக்க அவர் ஒரு அவமானகரமான போட்டியில் பங்கேற்க முடிவு செய்து, 'உலகின் மிக அசிங்கமான பெண்' என்ற இழிவான பட்டத்தை வென்றார். பின்னர், அவர் ஒரு சர்க்கஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு, பல நகரங்களுக்குப் பயணம் செய்தார். அங்கு மக்கள் அவரைப் பார்த்துச் சிரிக்கவும் அவமானப்படுத்தவும் வந்தனர். தன் பிள்ளைகளை வளர்த்து, அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்காக, அவர் மற்றவர்களின் கேலி கிண்டல்களைத் தாங்கிக்கொண்டார். அவர் 1933-ல் இறந்தார். அன்று மட்டுமல்ல இன்றும் கூட, சமூகம் மக்களை அவர்களின் உடல் தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடுகிறது. ஒருவேளை நம் கண்களால் உடல்களுக்குப் பதிலாக ஆன்மாக்களைக் காண முடிந்திருந்தால், மேரி ஆன் உலகின் மிக அழகான பெண்ணாக இருந்திருப்பார் அல்லவா?
******
இந்த வாரத்தின் சிறுகதை : காஞ்சி பூசூடா உமையாள் படலம்
சொல்வனம் தளத்தில் படித்த ஒரு சிறுகதை இந்த வாரத்தின் சிறுகதையாக…. அந்துவன் என்பவர் எழுதிய ஒரு சிறுகதை. கதையிலிருந்து சில வரிகள் இங்கே…
இரவு துயிலாட பேருந்து நிலையத்தையே தேர்ந்தெடுத்தாள். குருதி தட்டுப்பாடால் அவளை கொசுக்களும் தீண்ட மறுத்தன- சென்ற ஆண்டு புதுப்பிக்கப்பட்ட தளமது அதற்கு மேலும் அழகூட்ட மக்கள் கக்கி வரைந்த ஆரஞ்சு, பச்சை சித்திரங்கள் கொடுவாயாட்டம் ஆங்காங்கே பளபளத்தன. சித்திரங்கள் எதன்மீதும் பட்டுவிடாமல் தனது கூன் முதுகை நன்கு சுருட்டி புடவையை வளைத்து போர்த்தி படுத்திருந்தாள் கிழவி. வயிறு நிறைய உண்டதால் தூக்கமும் சொக்கியது- பஞ்சுமிட்டாய்க்கு வயிறு நிறையவில்லை, மாலைபோல தெருக்களில் நடக்கையில் ஒருவீட்டுத் திண்ணையில் தண்ணிக்கு உட்கார்ந்து கதையடிக்க தொடங்கி அப்படியே வயிறுமுட்ட உண்டாள். உமையாளிடம் அந்த வீட்டுக்காரி உன்னை காவலர் எவரும் பெரியோருக்கான மாண்புடன் நடத்தவில்லையென இரங்கினாள், பின் அவளுக்கும் நகை காணாமல்போனபோது இவ்வாறே நடத்தினர் என்று புலம்பி தீர்த்தாள். உமையாளோ தான் அவள் புலம்பலை கேட்டால் ஏதாவது நன்மை வந்து சேரும், அதில் ஏதாவது தனக்கு நாளை காவல் நிலையத்தில் உதவும் என்றெண்ணி உன்னிப்பாக வாய் பார்த்தாள்- நல்லவேளை வயிறாவது நிரம்பியது.
ஏப்ரல் இரவுக்கு உமையாளும் அவளது கணவனும் வாசலில் கட்டில்போட்டு அரவணைத்து மிதந்துகொண்டே பள்ளிகொள்வதை சிந்தித்து அசைபோட்டாள்- மூன்று துளி கண்ணீர் மட்டும் இடது கண்ணில் வடிந்தது. கணவன் இறந்துவிட்டாரே என்றெல்லாம் வருந்தவில்லை, எந்த கடினத்தையும் அளிக்காமல் போய்சேர்ந்தவர், அவருடன் வாழ்ந்த மகிழ்ச்சியான நிகழ்வுகள் போதுமான முழுமையை தந்தது, ஒரு துணுக்கு வருத்தமில்லையென உமையாளே விளிப்பாள். கண்ணை துடைத்து கலகத்துக்கு அவளே விடை தேடிக்கொண்டாள், “எப்படி துணி தொவைச்சு, எப்படி வீடு கூட்டி, எவ்வளவு தூய்மையா வாழ்ந்தவ நா! வீட்டுல மத்தவங்கள என் துணிமணியில கைவைக்கவிட்டிருப்பேனா, நானே கைபட தொவைச்சாதான் அதை தொடுவேன்- இப்போ எங்க தொவைக்கமுடியுது, வாடையடிக்கிற புடவைய மூனுநாளா கட்டுறேன்; குடிதண்ணி தூக்கமுடியாம செலவுத்தண்ணியை சூடுபண்ணி குடிக்கிறேன்.”
முழு கதை படிக்க சுட்டி கீழே….
solvanam.com/2026/03/22/காஞ்சி-பூசூடா-உமையாள்-பட/
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் : Lajai Lagyo Here
இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு நேபாளி பாடல். பாடலை மட்டும் கவனித்தால் நலம்! - ஹீரோ ஹீரோயின் பற்றிய சிந்தனை தேவையில்லை. சற்றே நீண்ட பாடல் - கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் - அதனால் சில நிமிடங்கள் கேட்டுப் பாருங்கள் - படம் பிடிக்கப்பட்ட இடங்கள் பிடிக்கலாம், கூடவே இசையும். கேட்டுப் பாருங்களேன்!
******
ராஜா காது கழுதைக் காது - இது என் ப்ராப்பர்டி :
பறவைகள் பூங்காவிற்குச் சென்ற போது காதில் விழுந்த ஒரு விஷயம். அங்கே பறவைகளுக்கு விதைகள் அளித்தால், அவை நம் கைகளிலிருந்து கொத்தித் தின்பதோடு, நம் தோள் மீதும் வந்து அமர்ந்து கொள்கின்றன. அப்படி ஒரு ஆண் மீது கிளி அமர்ந்து கொண்டபோது, அவனது மனைவி/இல்லாள் சொன்ன விஷயம் தான் இந்த வாரத்தின் ராஜா காது கழுதைக் காது விஷயம்!
இது என் ப்ராப்பர்டி, நான் மட்டும் தான் அவன் மீது அமர்ந்து கொள்ள உரிமையானவள், நீ பாட்டு ஏறி உட்கார்ந்துக்கற, இறங்கிப் போ! இறங்கிப் போ!
******
இந்த வாரத்தின் விளம்பரம் : ஒரு குழந்தையாக
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த விளம்பரம் - Axis Bank விளம்பரம் - நம்மை நம் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக ஒரு விளம்பரம்! நீங்களும் கீழே உள்ள காணொளி வழி பார்த்து ரசிக்கலாமே!
******
இந்த வாரத்தின் நிழற்படம் - பார்த்த முதல் வார்த்தை :
எங்கள் பிளாக் பக்கத்தில் குறுக்கெழுத்து வெளிவருகிறது. இங்கே எங்கள் பக்கத்தில் ஒரு நிழற்படம் - பல வார்த்தைகள் இந்தப் படத்தில் உள்ள ஆங்கில எழுத்துக்களில் ஒளிந்து கிடக்கிறது. நீங்கள் பார்த்ததும் உங்கள் கண்ணில் பட்ட ஆங்கில வார்த்தை என்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
18 ஏப்ரல் 2026





மாதொரு பாகம் பற்றி எங்கள் தளத்திலும் எழுதிய நினைவு.
பதிலளிநீக்குஉண்மையிலேயே சமூகத்தின் இப்படியான பல கேள்விகளைத் தவிர்க்கவோ இல்லை எதிர்கொள்ளவோ நாம் நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிக் கேள்வி எழுப்புபவர்களை ஓர் எல்லையில் வைக்க வேண்டும்.
ஆனால் இப்படியான கேள்விகளால் எத்தனை பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்! இப்பவும் கூட. இதோ ஆண் பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆவது கஷ்டமாக இருக்கு என்று எத்தனை பெற்றோர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்!
இதெல்லாம் societal conditioning க்கு நாம் உட்படுத்தப்பட்டு அவை மனதில் ஆழமாகப் பதிந்து போவதால் ஏற்படுபவை.
உங்கள் வரிகளை டிட்டோ செய்கிறேன் ஜி
கீதா
வெளித்தோற்றத்தை வைத்து எடை போடுவது கேலி செய்வது என்பது மனதை மிகவும் கஷ்டப்படுத்தும். உலகின் மிக அசிங்கமான பெண்'// உலகம் எப்படி எல்லாம் கீழ்மைப்படுத்துகிறது.
பதிலளிநீக்குகீதா
சொல்வனம் சிறுகதையை வாசிக்கிறேன் ஜி....
பதிலளிநீக்குஎந்த நாட்டில் படம் பிடித்தாலும் கதைகள் பெரும்பாலும் ஒரே போலதான் இருக்கும் போல!!!
பின் புறக் காட்சிகள் சூப்பர். பாடலும் நன்றாகவே இருக்கிறது. மலைகள், நீரில் படகு என்றாலே மோகனம் பொருந்திப் போகும் ....மலைகள் காட்சியில் மோகன ராகத்தில் பாடல் இணைத்துப் பார்த்தால் அது தனி சுகமாக இருக்கும்...அப்படித் தோன்றியது.
கீதா
ப்ராப்பர்டி - சிரித்துவிட்டேன்
பதிலளிநீக்குஎனக்குக் கண்ணில் முதலில் பட்ட வார்த்தை MONEY!!! ஹாஹாஹாஹா....இப்படிப் படுவதற்கு ஏதேனும் உளவியல் சார்ந்த ஆரூடம் உண்டோ?!!!!!!!!!!!!!!! அடுத்து பட்டது PEACE!!! அட! இரண்டும் இணைத்து ஒன் லைன் ஒன்று வந்துவிட்டதே!!
கீதா
பாடலைக் கேட்டுக் கொண்டே தட்டச்சு!! இசை நன்றாக இருக்கிறது. பெரிய பாடல்தான்...ஆனாலும் இசை கேட்க இதமாக இருந்தது.
பதிலளிநீக்குவிளம்பரம் பின்னர் பார்க்கிறேன் ஜி
கீதா
மாதொருபாகன் பொஅழைய பதிவு சென்று பார்த்து வந்தேன். வருண் கருத்து சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குமேரி ஆன் வரலாறு நெகிழ வைக்கிறது. தாய் எங்கும் தாய்தான் என்று நிரூபித்திருக்கிறார்.
பதிலளிநீக்குசொல்வனம் கதை பிறகு படிக்க வேண்டும். சற்றே ட்ரையாக செல்கிறதோ கதை என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குபாடல் இனிமையாக இருக்கிறது. பாபு கிருஷ்ணா பரியார் குரல் ஹரிஹரன் குரலை ஒத்திருக்கிறது. பாடலின் இனிமை முழுமையாகக் கேட்க வைத்தது. கிட்டத்தட்ட ஒரே டியூன்தான் பாடல் முழுக்க.. ஆனாலும் போர் அடிக்கவில்லை!
ரா கா க கா புன்னகைக்க வைத்தது. இன்னும் புது மோகம் குறையாத தம்பதி என்று தெரிகிறது. கொஞ்சநாள் போனால் சரியாகி விடும்!
பதிலளிநீக்குவிளம்பரம் ரொம்ப ரசிக்க வைத்தது. நான் என்ன பண்ணலாம் என்று மனம் பரபரக்கிறது!
பதிலளிநீக்குFlex எல்லோரும் சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன். எனவே நான் Visa Happiness சொல்கிறேன்!
விளம்பரம் அருமையான கருத்தைச் சொல்லும் விளம்பரம். inner child ஐ நாம் மகிழ்விக்க வேண்டும்! அது மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்! Inner child என்பது நம் subconscious part தான்!
பதிலளிநீக்குகீதா
அப்பவே மூன்றாவதாகப் பட்ட சொல் Happiness தொடர்ந்து Success!! எல்லாம் தொடர்புடையவை!!!!
பதிலளிநீக்குகீதா
கதையின் கரு புரிந்தது. நல்ல கருதான். ஆனால் எழுதிய விதம் பல இடங்களில் புரியாமல் கொஞ்சம் அயற்சி.
பதிலளிநீக்குகீதா
ஏனோ எனக்கு மாதொரு பாகன் நாவலை படிக்கத் தோன்ற வில்லை.
பதிலளிநீக்கு