வியாழன், 2 ஏப்ரல், 2026

தீர்வு - சிவசங்கரி - ஒரு நூல் - இரு வாசிப்பனுபவம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சிவசங்கரி மேம் எழுதிய தீர்வு - எங்கள் இருவரின் வாசிப்பனுபவம் இன்றைய பதிவாக… முதலில் வருவது எனது வாசிப்பனுபவம்! இரண்டாவது என்னவரின் வாசிப்பனுபவம்…



சமீபத்தில் சிவசங்கரி மேம் அவர்களின் நூல் ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது! புஸ்தகாவின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூல் குடும்பக் கதையாகவும் மனதை வருடும் நூலாகவும் இருந்தது! சிறிய நூல் தான் என்பதால் தொய்வின்றி வாசிக்கலாம்! நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் பரிசளிக்கவும் ஏற்ற நூல்!


சிவசங்கரி மேம் அவர்களின் எழுத்தில் எனக்குப் பிடித்த நூல்களில் முதன்மையிடம் என்றால் அது மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்வை படம் பிடித்து காட்டும் ‘பாலங்கள்’ தான்! எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் கூட அந்த புத்தகத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்!


பூரணி கல்லூரியில் ஹோம் சயின்ஸ் படித்துக் கொண்டிருக்கும் மாணவி என்பதோடு இந்தக் கதையின் நாயகியும் இவளே! இந்தக் கதை நடைபெறும் சூழல்களைப் பார்க்கும் போது இந்தக் கதையை ஆசிரியர் எண்பதுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்! பூரணியின் குடும்பம் மிகச்சிறியது தான்! அப்பா சதாசிவம், அண்ணன் பாஸ்கரன், புதிதாக அந்த வீட்டில் ஒரு உறுப்பினராக இணையும் அண்ணி மங்கை!


அப்பா சதாசிவம் குடும்பத்தோடு பற்றில்லாதவராக இருந்தாலும் பூரணியின் ஐந்தாவது வயதில் அம்மாவை அவள் இழந்து விட்டதால் அண்ணனின் முழுமையான அன்பில் வளர்கிறாள் பூரணி! புதிதாக வந்த அண்ணி மங்கையோடும் அவள் தோழி போல் பழகுவதும், இருவரும் சேர்ந்து கோவில்களுக்கும், கடைத்தெருவுக்கும் சுற்றுவதும், அண்ணி இவளுக்கு விதவிதமான சமையல் முறைகளைக் கற்றுத் தருவதும் என இனிமையாக நாட்கள் நகர்கின்றன!


கல்லூரிக் காலத்தை முடிப்பதற்குள் அண்ணனும் அண்ணியும் பார்த்துப் பார்த்து பூரணிக்கு ஒரு இன்ப வாழ்வை ஏற்படுத்த முனைகிறார்கள்! ஆனால் காலம் அவளுக்கு வேறு ஒரு கணக்கை வைத்திருக்கிறது என்பதை அவர்கள் இருவருமே அறியவில்லை! பூரணியின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? என்பதும் அதற்கான தீர்வு என்னவென்பதும் மீதிக்கதையின் பக்கங்களாக தரப்பட்டுள்ளன!


வாழ்வில் நிகழும் எந்த ஒரு செயலுக்கும் இறைவன் ஒரு காரணத்தை வைத்திருப்பது போல் அதற்கான தீர்வையும் எழுதித் தான் வைத்திருக்கிறார்! இறுக்கமான சூழலில் சின்ன ஒரு விஷயமும் கூட அந்தச் சூழலை சட்டென்று இதமாக்கி விடும் என்று சொல்வார்கள்! பூரணியின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களுக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்! - ஆதி வெங்கட் 


*******


தீர்வு - வெங்கட் நாகராஜ்:


எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தீர்வு என்று ஒன்று உண்டு.  ஆனால் அந்த தீர்வு என்பது பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுத்து சாதகமாகவும் பாதகமாகவும் முடிவதுண்டு.  குடும்பங்களில் எப்போதுமே ஈடுபாடு இருக்கும்போது நாம் செய்யும் ஒரு செயலே பிரச்சனையாக இருக்கக் கூடும் என்பதை பலரும் உணர்ந்து கொள்வதில்லை. எத்தனை எத்தனை குடும்பப் பிரச்சனைகள் பலரின் வீடுகளில்.  கோர்ட் கச்சேரி என்று வடக்கில் சொல்வார்கள் - ”யாருய்யா இந்த கோர்ட் கச்சேரிக்கெல்லாம் அலையறது, பஞ்சாயத்துல எல்லாத்தையும் முடிச்சுக்குவோம்” என்று ஆலமரத்தடியில் நம் கிராமங்களில் பேசுவது போல வடக்கிலும் இப்படியான பஞ்சாயத்துகளும் தீர்ப்புகளும் உண்டு.  ஹரியானாவின் Khaap Panchayat என்பது மிகவும் பிரபலம் மட்டுமல்ல, அவர்களின் தீர்வுகளும் தடாலடியாக இருக்கக் கூடியவை. 

 


இங்கே இன்றைக்கு பார்க்கப் போகும் நூல் வாசிப்பனுபவமும் ஒரு தீர்வு குறித்தானது தான்.  அழகான சிறு குடும்பம்.  தாயை இழந்த பெண் பூரணி.  அவளது அண்ணன் - பதினான்கு வயது மூத்தவன் - பாஸ்கரன், அப்பா சதாசிவம் என மூவர் கொண்ட சிறு குடும்பம்.  பல வீடுகளில் அப்பாவை பொறுப்பானவராகவும், அண்ணனை பொறுப்பில்லாதவர்களாகவும் சித்தரிப்பதும், நிஜத்தில் நடப்பதும் உண்டு. இங்கே மாறுபாடு.  அப்பா ஆலயங்களுக்குச் செல்வது, பக்தியில் ஈடுபடுவது என்பதிலேயே அதிக நாட்டம் கொண்டவராக இருக்கிறார்.  அவரது மனைவி இருக்கும்போதே வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகளைக் குறைத்து இறைப்பணிக்குச் செலவு செய்யும் மனிதராக காண்பித்து இருக்கிறார் ஆசிரியர்.  அண்ணனோ பொறுப்புள்ளவனாக இருக்கிறான். தங்கைக்கு திருமணம் செய்து வைக்காமல் தான் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்காது, வரும் மனைவி எப்படிப்பட்டவராக இருப்பார் என்ற கவலை அவனுக்கு!  


எல்லா வீடுகளிலும் இப்படித்தான் - வரப்போகும் மருமகளைப் பற்றியும், மருமகனைப் பற்றியும் ஒரு வித பயத்துடன் தான் அணுகுவது நிதர்சனம்.  பாஸ்கரனும் அப்படித்தான் தனக்கு வரப்போகும் மனைவி தங்கைக்கும் தனக்குமான உறவில் விரிசல் ஏற்படுத்திவிடுவாளோ என்கிற பயத்துடன் தான் இருக்கிறான்.  ஆனாலும் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கவே தான் திருமணம் செய்து கொண்டாக வேண்டிய சூழல் - அதுவும் ஒரு தீர்வு என்று தெரிந்த பிறகு திருமணம் செய்து கொள்கிறான்.  வந்தவளும் - மங்கை - அவனுக்கு இணையாக தனது தங்கையைப் பார்த்துக் கொள்பளாக, தங்கைக்குத் துணையாக இருக்கிறாள் என்பதால் மனதில் ஒரு நிம்மதி.  அப்பா, அம்மா மற்றும் அண்ணி மூவருமாகச் சேர்ந்து பூரணிக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  ஆனால் பார்த்துப் பார்த்து எடுத்த முடிவு அனைவரையும் கலங்கடிக்கச் செய்கிறது.  


இப்படி உருவான ஒரு பெரிய பிரச்சனைக்கு என்ன தீர்வு - அந்தத் தீர்வு யார் கையில்?  சரியான தீர்வை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்தார்களா என்பதை இந்தச் குறு நாவல் மூலம் வாசகர்களுக்குத் தந்திருக்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி.  நாங்கள் படித்தது புஸ்தகா வெளியீடு.  அச்சுப் புத்தகமாகவும் மின்புத்தகமாக புஸ்தகா தளத்தில் மட்டுமல்லாது அமேசான் தளத்திலும் கிடைக்கிறது.  அமேசான் தளத்தில் கிண்டில் கணக்கிருந்தால் படிப்பதற்கான சுட்டி கீழே!


Theervu (Tamil Edition) eBook : Sivasankari: Amazon.in: Kindle Store


முடிந்தால் நீங்களும் இந்த நூலை வாசித்துப் பாருங்களேன் - வெங்கட் நாகராஜ்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

2 ஏப்ரல் 2026


5 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம்.  இருவருமே சஸ்பென்சாக வைத்து விட்டீர்கள்.  என்னவோ போங்க..  நான் எங்கே படிக்கப் போகிறேன்!  சொல்லலாம்ல?!!

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் சுருக்கமாக அழகாகக் கொடுத்திருக்கீங்க ஆதி. குடும்பங்களில் மனம் பக்குவப்பட்டு இருந்தால் தீர்வுகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்தான். அது குடும்பங்களில் இருப்போரையும் குடும்பங்களுக்குள் உறுப்பினராக வருவோரையும் பொருத்து. கதையில் என்ன பிரச்சனை என்ன தீர்வாக இருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. குடும்பங்களில் எப்போதுமே ஈடுபாடு இருக்கும்போது நாம் செய்யும் ஒரு செயலே பிரச்சனையாக இருக்கக் கூடும் என்பதை பலரும் உணர்ந்து கொள்வதில்லை.//

    அப்படியே வழி மொழிகிறேன் ஜி. சில சமயம் நாம் அதீதமான அன்பில் செய்யும் செயல்கள் கூட எதிர்வினை புரியக் கூடும்.

    தீர்வு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் எழுகிறது.

    கீதா


    பதிலளிநீக்கு
  4. நிறைய குடும்பங்களில் கோர்ட்டுக்குப் போவதைத் தவிர்த்து வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் பஞ்சாயத்து, குடும்ப பஞ்சாயத்து என்று முடித்தும் கொள்வதுண்டு கடைசிதான் கோர்ட்!

    நல்ல விமர்சனம்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஒரு புத்தகத்திற்கு கணவன், மனைவி இருவரும் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். ஆதியின் விமரசனம் என்னைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....