வெள்ளி, 24 ஏப்ரல், 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அம்ருத் கங்கா அருவி - பகுதி பதிமூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட “பண்புடன்” தமிழ் புத்தாண்டு மொழிபெயர்ப்பு சிறப்பிதழில் என் படைப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இந்தத் தொடரின் சென்ற பகுதியில் அத்ரி முனி குகையைப் பற்றியும் அங்கே செல்வதற்கு செய்த சாகசங்ககளைப் பற்றியும் எழுதினாலும், அங்கே இருக்கும் அம்ருத் கங்கா அருவி பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.  அந்த அனுபவங்களை தனி பதிவாகவே வெளியிட வேண்டியிருக்கிறது. காரணம் அதன் அழகும்  அந்த அனுபவங்களும் தனியாக சொல்லப்பட வேண்டியவை. அத்ரி முனி குகையில் இருந்த சிவபெருமானுக்கு பூஜை செய்த பிறகு அங்கிருந்து மெல்ல நகர்ந்தோம். குகைக்கு வரும்போது சங்கிலி பிடித்து மேலே ஏறியது போல, கீழே இறங்குவதற்கும் அதே வழியில் வரத் தேவையில்லை.  குறுகிய மலைப் பாதையில் முன்னேற வேண்டியிருக்கும்.  குகை, அருவி எல்லாமே அருகருகே இருப்பதால் குகையிலிருந்து முன்னேற நாம் காண்பது அம்ருத் கங்கா அருவி தான்.  மேலேயிருந்து கீழ்நோக்கி பாயும் நீரின் திவலைகள், குகையைத் தாண்டியதுமே நம் மீது தெறிக்கத் துவங்கி விடும்.  வார்த்தைகளில் விவரிக்கும் முன்னரே படங்களும் சில காணொளிகளும் இங்கே சேர்த்து விடுகிறேன் - அதனைப் பார்த்த பிறகு சொல்லும் விவரங்களை நீங்களும் உணர அது கொஞ்சம் உதவியாக இருக்கும்.




















கொஞ்சம் மேலே குதித்து ஏறினால், நாம் நேரடியாக அருவி விழும் இடத்தின் பின்னால் இருக்கும் பாறைகளின் விளிம்பில் நின்று கொண்டிருப்போம்.  அதாவது நாம் அந்த அருவி விழும் இடத்தின் பின்புறம் இருப்போம் - நாம் கையை முன்னே நீட்டினால் மேலேயிருந்து விழும் அருவியை நாம் தொட்டு விடலாம்!  அருவியின் பின்னால் நாம் இருப்பதால் அருவியில் கொட்டும் நீர் நம் மீது அதிகம் படாது - நீர்த்திவலைகள் மட்டுமே படும் - ஆனால் விழுவதை மிக அருகில் நின்று பார்க்க முடியும் - அற்புதமான அனுபவம் அது!  இணைத்திருக்கும் காணொளிகள் வழி அந்தச் சூழல் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.  தொடர்ந்து நீர் விழுந்து கொண்டே இருப்பதால் நாங்கள் நின்று கொண்டிருக்கும் பாறைப் பகுதிகளில் ஈரப்பதம் இருப்பதோடு, பாசியும் இருக்கும் என்பதால் மிக மிக கவனமாகவே நிற்க வேண்டியிருக்கும்.  அது போலவே அந்தப் பகுதியைக் கடக்கும் போதும் அடி மேல் அடி வைத்து தான் நகர வேண்டியிருக்கும்.  ஆனாலும் அந்த இடத்தில் நாங்கள் சில நிமிடங்கள் இருந்தோம் - நகர மனதில்லை.


நமக்கு வெகு அருகே மலைமுகட்டிலிருந்து விழும் நீரானது அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்க, அதன் வேகம் எத்தனை இருக்கும் என்பதை அங்கே நின்று கொண்டிருந்த சில நிமிடங்களில் உணர முடிந்தது - நாம் அப்படி விழும் அருவிக்கு ஒரு அடிக்கும் குறைவான தூரத்தில் அதன் பின்னே நின்று கொண்டிருக்கிறோம் என்பதால் காற்றின் வழி அந்த அருவி நீரின் திவலைகள் நம் மீதும் பட்டுக் கொண்டிருக்கிறது.  அந்த இடத்தில் நின்று கைகளை நீட்டினால் அப்படி ஒரு வேகம் அந்த அருவியிடத்தில்! கொஞ்சம் ஆபத்தான விஷயமாக ஆகக் கூடும் என்பதால் சில நொடிகளில் கைகளை அகற்றி விட்டோம்.  சில நிமிடங்கள் அங்கே நின்று கொண்டிருந்த பிறகு ஒவ்வொருவராக அந்த இடத்தினை விட்டு அகல ஆரம்பித்தோம்.  வழுக்கும் பாறைகள் என்பதால் ஆங்காங்கே கைகளை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தோம்.  சில இடங்களில் கீழே அமர்ந்தும், மெதுவாக கால்களை கீழே வைத்து இறங்கவும் வேண்டியிருந்தது.  சில இடங்களில் பாறைகளில் குதித்து இறங்கினால் அந்த அருவி விழும் இடத்திலிருந்து கீழே அருவி நீர் ஓடும் பாதைக்கு நாம் வந்துவிடலாம்.  


அந்தப் பாறைகளில் அமர்ந்து “ஓம்” என்று உச்சரித்து தியானிப்பதும், அருவி நீரை விழுங்குவது போல படங்கள் எடுத்துக் கொள்வதும் என எங்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை. போகும்போதே ஒரு துண்டு எடுத்துக் கொண்டு போயிருந்தோம் - முடிந்தால் அருவியில் குளிக்கலாம் என்று ஒரு உத்தேசம்.  ஆனால் நாங்கள் அந்தப் பகுதியில் இருந்தபோது மாலை ஆகியிருந்தது.  மீண்டும் காட்டுப் பாதை வழி நடந்து செல்ல வேண்டும் என்பதை உணர்ந்திருந்ததால் அங்கே குளிக்க முடியவில்லை.  நண்பர் Bபிஷ்ட் அவர்கள் சில முறை அங்கே குளித்திருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.  நாங்கள் சென்ற சமயம் குளிர்காலம் வேறு என்பதால் தண்ணீர் அதிக அளவில் சில்லென்று இருந்தது.  கைகளால் நீரைத் தொட்டுப் பார்க்கும்போதே உடல் முழுக்க அந்த சிலிர்ப்பு பரவ, மொத்தமாக அந்த அருவி நீர் கீழே இருக்கும் நம் உடலில் விழும்போது அதிக அளவில் சிலிர்ப்பும், வலியும் கூட ஏற்படுமோ என்ற அச்சமும் தோன்றியது.  அதனால் குளிக்கும் எண்ணத்தினை கைவிட்டோம். 


நாங்கள் மூவரும் மேலே சென்று கீழே வந்திருக்க, எங்களுடன் பயணித்த இளைஞர் கீழே பாறைகள் வழி அந்த அருவி அருகே வந்து, தூரத்திலிருந்து எங்களை படம் எடுப்பதும், காணொளி எடுப்பதுமாக இருந்தார். கூடவே அவரையே செல்ஃபி எடுத்துக் கொண்டும் இருந்தார்.  நாங்கள் கீழே இறங்கி வந்ததும் “நான் மேலே வருவதற்கு பயம் இருந்தது - நீங்கள் ஏறிச் செல்லும் போது பார்த்ததில் அந்த பயம் இன்னும் அதிகரித்ததே தவிர குறையவில்லை. அத்தனை எடையுடன் நீங்கள் அந்தச் சங்கிலியைப் பிடித்து மேலே ஏறும்போது என் மூச்சுத் துடிப்பு அதிகரித்ததுடன் பயமும் வந்தது” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  நாங்களோ அவரை உற்சாகப் படுத்தும் விதமாக அப்படி ஒன்றும் பயமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  


அந்தக் காட்டாற்றின் குறுக்கே அமைந்திருந்த மரப் பாலம் (அமைத்தது சென்ற பகுதிகளில் பார்த்த, காட்டிலேயே தங்கி விட்ட மருத்துவர்) வழி அடுத்த கிராமம் நோக்கித் திரும்ப வேண்டிய பாதையினை நோக்கி நகர்ந்தோம்.  மரப் பாலங்களிலும் சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.  நிச்சயம் மறக்க முடியாத பயணம் இது என்பதோடு, என்னதான் மனதை விட்டு அகலாத நினைவுகள் என்றாலும், அந்த இடத்தில் படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டால் எதோ ஒரு சமயத்தில் அவற்றைப் பார்த்தேனும் மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுமே என்ற நோக்கத்தில் அங்கே படங்களும் காணொளிகளும் எடுத்தோம்.  அந்த நினைவுகளுடன் மெல்லா கிராமத்தினை நோக்கி நகர ஆரம்பித்தோம். அந்த மாலை வேளையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைய ஆரம்பித்தது.  காட்டாற்றில் ஓடும் நீரின் சலசலப்பு, எங்கோ மறைந்து இருக்கும் பறவையின் குரல், மரங்களில் உள்ள இலைகள் தங்களுக்குள் இரகசியம் பேசுகிறதோ என்று நினைக்கும் அளவிற்கு கேட்கும் மெல்லிய சப்தங்கள் என அத்தனையும் ரம்மியம்.  


அந்தக் காட்டுப் பாதையில் மெதுவாக நடந்து, ஒருவர் பின்னர் ஒருவராக சென்று கொண்டிருந்தோம். கிராமத்தினை நோக்கிப் போகிறோம் என்பதற்கு எந்த வித அறிகுறியும் இல்லை - ஒரே பாதை தான் என்பதால் மனதில் ஒரு தைரியம். கூடவே நண்பர் Bபிஷ்ட் எங்களுக்கெல்லாம் முன்னோடியாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது தந்த நம்பிக்கை உடன் முன்னேறிக் கொண்டிருந்தோம்.  சுமார் ஒரு மணி நேரத்தில் நாங்கள் கிராமத்தினை வந்தடைந்தோம்.  இங்கே ஒரு விஷயமும் சொல்ல வேண்டும்.  காலை தேவரியா தால் பகுதியில் சாப்பிட்ட பிறகு வேறு எதுவும் சாப்பிடவில்லை என்ற விஷயம் தான் அது.  நாங்கள் குகை நோக்கிச் செல்லும்போதே கிராமத்தில் சொல்லி வைத்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  அடுத்த பகுதியில் கிராமத்தில் பார்த்த அனுசுயா தேவி ஆலயம் குறித்தும், நாங்கள் சாப்பிட்ட உணவு குறித்தும் சொல்கிறேன்.  அது வரை பயணத்தில் கூடவே இணைந்திருங்கள் நண்பர்களே.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

24 ஏப்ரல் 2026


6 கருத்துகள்:

  1. எவ்வளவு குறுகிய பாதை!  அருமையான இடம்.  நீர் விழுவது அழகு.  அருவி சத்தத்தையும் மீறி உங்கள் ஓம் ஒலி கேட்கிறது.   மஹாதேவ் என்று சொல்பவர்தான் நண்பர் பிஷ்ட் இல்லையா? 

    பதிலளிநீக்கு
  2. மூன்றாவது காணொளி பிரமிக்க வைக்கிறது.  எவ்வளவு குறுகிய இடங்கள்..  கொஞ்சம் தப்பினாலும்..   அம்மாடி..  துணிச்சலாக ஏறி இருக்கிறீர்கள்.   'வீடியோ எடுப்பதில் கவனமாக இருக்கிறீர்களே பாதையைப் பாருங்கள்' என்று மனம் பதைத்தது. 

    பதிலளிநீக்கு
  3. நான்காவது காணொளி இன்னும் பிரமிக்க வைக்கிறது..  ​நீங்கள் வந்த வழியே திரும்பி வருவீர்களா, அப்படியே சென்று இறங்க வழி இருக்கிறதா என்று பார்த்தேன்.  உங்கள் ஹர் ஹர் மஹாதேவ் இந்தப் பக்கம் வரை கேட்கிறது. 

    பதிலளிநீக்கு
  4. ஐந்தாவது காணொளியில் விறகு விறகாக போட்டிருக்கிறார்களே சிலாம்பு குத்தாதோ!   ஒரு பக்கம் முதல் காலை வைத்ததும் நொடித்து விடாதோ என்கிற கவலை ஒருபுறம் என்றால், இங்கே காமிராவைப் பார்த்து கை காட்டியபடிம் புன்னகைத்துக் கொண்டு வரும் நீங்கள் எல்லாம் இன்னொரு பக்கம்..  'அட... கையை அப்புறம் ஆட்டலாம், பார்த்து வாங்கப்பா' என்று நான் சொன்னது உங்களுக்கு கேட்டதோ?!!

    பதிலளிநீக்கு
  5. அருவி - யாரோ மேலே குழாயை மூட மறந்து சென்று விட்டது போல கீழே கொட்டுகிறது.  அடடா...  வீணாகிறதே என்கிற எண்ணம் மனதில்!  அவ்வளவு உச்சியில் அவ்வளவு தண்ணீர் எங்கிருந்து, எப்படி!

    பதிலளிநீக்கு
  6. உண்மையிலேயே அருமையான அனுபவமாக இருந்திருக்கும்.  சாதனைப் பயணம்.  உங்கள் பயணங்கள் அந்த மஹாதேவ் உங்களுக்கு கொடுத்துள்ள பரிசு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....