அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அன்பு மகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
திருச்சி காவிரி ஆற்றின் கரையில் குடமுருட்டிப் பாலத்தின் அருகே கடந்த வருடம் ஃபிப்ரவரி மாதம் (9 ஃபிப்ரவரி 2025) சுமார் 18.6 கோடி ரூபாய் செலவில் 4.2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒரு சுற்றுலாத் தலம் - திருச்சி பறவைகள் பூங்கா. திறந்ததிலிருந்து பலரும் சென்று வந்து காணொளிகள் போடுவதை முகநூலிலும் இன்ஸ்டாவிலும் பார்த்தாலும் ஏனோ இது வரை சென்று வரும் வாய்ப்பு அமையவில்லை. கடந்த சனிக்கிழமை மகளின் பிறந்த நாள் அன்று அவளை அழைத்துக் கொண்டு மேலூர் ஸ்ரீ சஞ்சீவன ஆஞ்சனேயர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து நேராக குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள இந்த திருச்சி பறவைகள் பூங்காவிற்கு சென்றோம். அங்கே கிடைத்த அனுபவங்கள் இன்றைக்கு பதிவாக - படங்கள் மற்றும் காணொளிகளுடன் உங்கள் பார்வைக்கு!
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் வழி கோயம்புத்தூர் செல்லும் சாலையில் சில நிமிடங்கள் பயணித்தால் குடமுருட்டி பாலம் வரும். அந்தப் பாலத்தினைத் தாண்டியவுடன் நம் வலப்புறம் வருவது தான் இந்த பறவைகள் பூங்கா. அழகிய நுழைவாயில் வழி உள்ளே சென்று வாகன நிறுத்தத்தில் நம் வாகனத்தினை நிறுத்தி உள்ளே சென்றால் இடப்புறம் நுழைவுச் சீட்டு வழங்குமிடம் இருக்கிறது. இங்கே ஒவ்வொருவருக்குமான நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லலாம்! நுழைவுச் சீட்டு கட்டணம் எவ்வளவு? பெரியவர்களுக்கு 200 ரூபாய்! சிறுவர்களுக்கு 150 ரூபாய்! - இதுவே அறிமுக சலுகை விலையாம்! சரி பரவாயில்லை என்று நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைவதற்கு முன் சீட்டில் இருக்கும் QR Code Scan செய்கிறார்கள். உள்ளே நுழையும் இடத்தில் ஒரு பெண் ஆளுக்கு இரண்டு கீரைத் தண்டுகளைத் தருகிறார். நெருப்புக் கோழிக்கு உணவு என்று சொல்கிறார்.
ஆங்காங்கே Photo points உண்டு. நுழைந்ததும் இடப்புறம் இருக்கிறது நெருப்புக்கோழி எனும் Ostrich. நீண்ட கழுத்தைத் தூக்கினால் என்னை விட உயரமாக, பெரிய வாயுடன் இருக்கிறது. மண்டையில் நொங்கென்று ஒரு போடு போட்டுவிடுமோ என்ற எண்ணத்துடன் அதன் இருப்பிடம் நோக்கி நகர்ந்தால் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது ஒரு நெருப்புக்கோழி. மற்ற இரண்டும் வெயிலுக்கு இதமாக மர நிழலில் நின்று கொண்டிருக்கிறது. கொடுத்த கீரைத் தண்டை ஒரு பக்கமாக வைக்க “டொக்” என்று ஒரு கொத்து, கீழே போட்டுச் சென்றது. “காலையில இருந்து இதையே தான கொடுத்துத் தொலைக்கிறாங்க! எவ்வளவு தான் சாப்பிடறதாம்?” என்று அலுத்துக் கொண்டது போல எனக்குத் தோன்றியது. வரிசையாக ஈமு கோழி, விதம் விதமான புறாக்கள், கிளிகள் என பல பறவையினங்கள் மட்டுமல்லாது, முயல்கள், பாம்பு, ஆமை, மீன்கள் என பலவும் அதற்கான இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
பல நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட உயிரினங்கள், மாறுபட்ட சூழலில், சீதோஷ்ணத்தில் கொண்டு வந்து விடப்பட்டதாலோ என்னவோ, சோம்பிக் கிடந்தன. இல்லை வெய்யில் காரணமாக அப்படி இருந்தனவோ தெரியவில்லை. மீன்களுக்கென்று ஒரு தனி இடத்தில் aquarium - எத்தனை வகை மீன்கள் என்று கணக்கில்லாமல் நிறையவே அழகாகவே இருந்தன. ஒன்றிரண்டு பாம்புகளும் பார்த்தோம் - அது தேமேவென, சமத்தாக சுருண்டு படுத்துக் கிடந்தது! “என்ன பார்க்கற, சுருண்டு கிடக்கேனே, ஒண்ணும் பண்ணமாட்டேனோ என்று நினைக்கறயா? கண்ணாடி அறையிலிருந்து வெளியில மட்டும் விட்டுப் பாரு மாமு!” என்று சொன்னதோ என்று எனக்கு ஒரு சம்சயம்! விதம் விதமான உயிரினங்கள், அவற்றின் கூடுகளை என்னதான் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்றாலும் தொடர்ந்து அவற்றைச் செய்ய பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும், சில இடங்களில் பறவைகளின் எச்சத்தின் வீச்சம் நன்கு தெரிந்தது.
அங்கே இளைப்பாறவும், கொரிக்கவும், பானங்கள் குடிக்கவும் வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள். வாங்கிக் கொண்டு அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட்ட பின்னர் தொடர்ந்து சுற்றி வரலாம். ஐந்து வகை நிலப்பரப்பைக் குறிக்கும் வண்ணம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து ஒரு பகுதியை அமைத்திருக்கிறார்கள். அங்கே விதம் விதமான கிளிகள் வளர்த்து அவற்றை பார்க்க வரும் நபர்கள் உணவும் அளிக்கும் வண்ணம் வைத்திருக்கிறார்கள். அந்த இடத்திற்குள் நுழையுமுன்னர் கைகளைக் கழுவிச் சுத்தம் செய்வதோடு, நம் காலணிகளும் சுத்தம் செய்தபின்னரே அனுமதிக்கிறார்கள். கை நிறைய விதைகள் தந்து கையை மூடி வைத்துக் கொள்ளுங்கள், இரண்டிரண்டாக மற்ற கை உள்ளங்கையில் வைத்துக் கொண்டால் உள்ளே இருக்கும் பறவைகள் உங்கள் கைகளில் அமர்ந்து கொத்தித் தின்னும்! நிறைய பறவைகள் இருக்கிறது - ஒரு முறை மட்டுமே விதைகள் தருவோம் - அதனால் கவனமாக வைத்துக் கொண்டு கொடுத்தால் கடைசி வரை பறவைகளுக்கு உணவு தரலாம் என்று சொல்லி அனுப்புகிறார்கள்.
மகள் சில விதைகள் மட்டுமே கொடுத்தாள் - பழக்கம் இல்லாததால் கொஞ்சம் அசூயை இருக்க, அதற்கு மேல் கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை. அதனால் இரண்டு கை நிறைய விதைகள் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பறவைகளுக்கு கொடுத்தேன். இரண்டு கைகளையும் நீட்ட இரண்டு கைகளிலும் கிளிகள். சிறிய, பெரிய கிளிகள் என அனைத்தும் கை மீதும், தோள்களிலும் அமர்ந்து கொள்ள அவற்றுக்கு விதைகளை உணவாக அளித்தேன். அந்தக் கிளிகள் எத்தனை அறிவானவை என்பதை அப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. விதைகளை ஒரு கொத்து, மேல் பாகத்தில் உள்ள தோல் தனியாக, உள்ளே இருக்கும் பருப்பை மட்டுமே உண்கிறது. மற்றவற்றைச் சீண்டக் கூட இல்லை. பிரித்து உண்ண அதற்குத் தெரிந்திருக்கிறது. போலவே கைகளில் விதை இல்லாமல் வெறும் கையை நீட்டினால் கை மேல் வந்து அமர்வதே இல்லை! விதை இருந்தால் மட்டுமே நம் கைகளில் வந்து அமர்கிறது! ஆறறிவு என்று பீற்றிக் கொள்ளும் மனித இனம் பலரிடம் ஏமாந்து போக, ஐந்தறிவு என்று சொல்லப்படும் இந்த உயிரினங்கள் சாமர்த்தியமாக இருக்கின்றன. அந்தப் பகுதியை விட்டு வெளியே வரும் இடத்தில் சோசியல் மீடியா பக்கங்களில் எங்களைப் பற்றி எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன் நம்மை அனுப்புகிறார்கள்.
ஒவ்வொரு இடமாகப் பார்த்து விட்டு, வெளியே வந்தால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் செலவழித்திருக்கிறோம். இன்னமும் கூட நின்று நிதானித்து பார்க்கலாம் என்றாலும் கோடை தனது ரூபத்தினைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டது என்பதால் அதிக நேரம் அங்கே இருக்க முடியவில்லை. அந்த இடத்தில் எடுத்த படங்கள் மற்றும் காணொளிகள் உங்கள் பார்வைக்கு இந்தப் பதிவில் பகிர்ந்து இருக்கிறேன். திருச்சி வரும் வாய்ப்பு இருந்தால், விருப்பம் இருந்தால் சென்று வாருங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
8 ஏப்ரல் 2026

























படங்கள் யாவும் துல்லியம். அருமை. விரல்கள் நிஜமாகவே லேசாய் திடுக்கிட வைக்கின்றன!
பதிலளிநீக்குஅமர்ந்து கொள்ளும் அளவு பெரிய கூழாங்கற்களா அவை? நான் ஏதோ முட்டைகள் வடிவம் என்று நினைத்தேன்.
கிளிகளின் சல்லாப ஊடல் வார்த்தைகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குஓ.. இங்குதான் கிளிகளுடனான அந்த விளையாட்டா? பேஸ்புக்கிலும் இன்ஸ்ட்டாவிலும் பார்த்தேன்.
பதிலளிநீக்குஇந்த மாதிரி மீன்களை திருநாகேஸ்வரம் கோவில் குளத்திலும் பார்த்தேன்.
பதிலளிநீக்குஆக, ரோஷ்ணியின் பிறந்த நாளை சுவாரஸ்யமாகக் கொண்டாடி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.