வியாழன், 30 ஜூலை, 2026

கதம்பம் - Additive Colours - குரு பூர்ணிமா - ஆதி வெங்கட்

 அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*********


Additive Colours - 28.07.2026:








Red, blue, green இந்த மூன்று நிறங்களும் தான் Additive colours! இவற்றில் வேறு நிறங்களை சேர்ப்பதால் புதிய நிறம் உண்டாகிறது! எந்த இரண்டு நிறங்களைச் சேர்ப்பதால் புதிய நிறம் உருவாகிறதோ, அந்த இரண்டு நிறங்களும் இடம்பெறணும்! அவற்றோடு புதிய நிறமும் இருக்கணும்! என்ற இலக்கை வைத்து மகள் டிசைன் செய்த ஆடைகள்! 


இதைக் கேட்டதும் எனக்குத் தோன்றியது என்னவென்றால் பெற்றோரின் வழியே பிள்ளைகள் இவ்வுலகில் ஜனிக்கிறார்கள்! அவர்கள் எந்தவொரு சூழலிலும் பெற்றோரையும் பெருமைப்படுத்தணும், பிள்ளைகளும் தனித்தன்மையோடு மிளிரணும்! என்ன நான் சொல்வது சரி தானே...:)


********


குரு பூர்ணிமா - 29.07.2026:




இன்று தான் வேதங்களை நான்காக தொகுத்து தந்தவரும், ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படும் லட்சம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தை உலகுக்கு தந்தவருமான வியாச மகிரிஷி அவதரித்த தினம்! உலகுக்கே குருவான இவர் அவதரித்த திருநாளை குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது! இன்றைய நாளில் நான் மதித்து வணங்கும் குருக்களுக்கு என் வந்தனங்கள்! 🙏 🙏

*******

கங்கா ஆத்து சமையல் - 29.07.2026:



இன்னிக்கு சமையல அம்மா(மாமியார்) பார்த்தா ‘என்ன! இன்னிக்கு கங்கா ஆத்து சமையலான்னு கேட்பா!’ சட்டுன்னு அவா பேர் எனக்கு ஞாபகம் இல்ல! அம்மா எப்பவும் சொல்வாளேன்னு நானும் ரொம்ப நாளா யோசிச்சு பார்க்கறேன்! கங்கான்னு தான் சொன்ன ஞாபகம்!


அவா ஆத்துல கஷ்ட ஜீவனம்னு  கொஞ்சமா காய் வாங்கி அதுலயே கறியும் அதையே போட்டு குழம்பும் பண்ணி இப்படி காலத்த ஓட்டுவாளாம்! எப்பக் கேட்டாலும் வெண்டக்கா சாம்பார், வெண்டக்கா கறி, கத்திரிக்கா சாம்பார், கத்திரிக்கா கறி இப்படித்தான் சொல்வான்னு சொல்லியிருக்கா. இன்னிக்கு எதேச்சையா குழம்பும் கறியும் வெண்டக்காயா போனதும் எனக்கு அம்மா சொன்னதெல்லாம் தான் ஞாபகம் வந்துடுத்து!


இடைவெளி - 29.07.2026:


எத்தனையோ நெருக்கடியான சூழலிலும், வீட்டின் பரபரப்பான நேரத்திலும், இடைவிடாத வீட்டு வேலைகளுக்கு நடுவிலும், வீட்டுப் பெரியவர்களையும் கவனித்துக் கொண்டு, அவர்களின் Hallucinationsகளுக்கு மத்தியிலும் தொடர்கள், சிறுகதைகள், பதிவுகள் என்று தொடர்ந்து எழுதியிருக்கேன்! அதிகாலை நேரத்தில் அவர்கள் யாரையும் தொந்தரவு செய்துவிடாமல் சமையல் மேடை மீது அமர்ந்து கொண்டு டைப் செய்திருக்கிறேன்! 


எனக்கென்று ஒரு android phone வாங்கியது முதல் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ‘ஒரு விரல் புரட்சி’யாக செல்ஃபோனில் தான் பதிவுகளை எல்லாம் டைப் செய்து வந்திருக்கிறேன்! எதற்காக இந்தக் கதைகள்?? எல்லாம் தான் எங்களுக்குத் தெரியுமே  என்கிறீர்களா?? உண்மை தான்!


சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு தம்பதி சமேதராய் வருகை தந்திருந்த வலைப்பதிவர் ‘நெல்லைத் தமிழன்' அவர்கள் கூட அப்படித்தான் சொன்னார்! அவரை நான் பார்த்தது முதல்முறை என்றாலும் எங்கள் இருவரின் பதிவுகள் வழியே எங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தார்! நீங்களும் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன்!


அவரே இன்று எங்கள் வலைப்பூவில் வெங்கட், ஆதி வெங்கட் பதிவுகள் வெளிவந்து நாளாகி விட்டதே! இத்தனை இடைவெளி இருக்காதே! என்று அன்போடு விசாரித்திருந்தார்! உண்மை தான்! நேரம் எப்படி மின்னல் வேகத்தில் செல்கிறது என்று தெரியவில்லை…:) அத்தனை நெருக்கடியிலும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்த நான் தான், இப்போது சிலநாட்களாக எழுத்திலிருந்து விலகி இருந்திருக்கிறேன்! 


இன்றைய குரு பூர்ணிமா நாளில் இனி! தொடர்ந்து எழுத ஆர்வம் வர வாக்தேவியின் அருட்கடாட்சமும் வியாச மகிரிஷியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கணும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்! 🙏 🙏


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

29 ஜூலை 2026



5 கருத்துகள்:

  1. //நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். //

    ஆமாம். நல்லதொரு வாசகம்தான்,

    பதிலளிநீக்கு
  2. Additive colours பற்றி தெரிந்து கொண்டேன். அதற்கான உங்கள் விளக்கம் ரசனை.

    பதிலளிநீக்கு
  3. கங்கா ஆத்து சமையல் நெகிழ்ச்சி...நாங்களும் அபப்டி இருந்திருக்கிறோம்.

    உங்கள் மெனுவில் வெண்டைக்காய் மோர்க்குழம்பும் சேர்த்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  4. நெல்லைத்தமிழன் தம்பதிகள்  வருகை -  மகிழ்ச்சி. 

    முகநூலிலும் உங்கள் பதிவு எதுவும் சமீபத்தில் என் கண்ணில் படவில்லை.  இந்த கலர் சமாச்சாரம் எழுதி இருந்ததை நேற்று பார்த்தேன்.  நீங்கள் எழுதி என் கண்ணில் படவில்லையா, நீங்களே எழுதவில்லையா, தெரியவில்லை. 

    குருபூர்ணிமா நாளில் மீண்டும் தொடங்கி இருப்பது சந்தோஷம்.  இனி இடைவெளியின்றி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....