செவ்வாய், 7 மே, 2013

திருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்


இன்று [07.05.2013] திருவரங்கம் அரங்கநாதன் ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரைத் தேர் திருவிழா.  இச்சமயத்தில் நான் திருவரங்கத்தில் இருப்பதால், தேர் திருவிழாவினை நேரடியாகக் காண முடியாத வலையுலக நண்பர்களும் கண்டுகளிக்கவே சுடச்சுட இப்பகிர்வு.





கடந்த 29.04.2013 அன்று ஆரம்பித்த இந்தச் சித்திரைத் தேர் திருவிழாவிற்கு இன்னுமொரு பெயர் உண்டு. அது விருப்பன் திருநாள். உல்லூக்கான் படையெடுப்பின் போது திருவரங்கத்தினை விட்டுச் சென்ற நம்பெருமாளும், உபயநாச்சியார்களும் பாதுகாப்பிற்காகப் பல இடங்களுக்குச் சென்று திருமலைக்காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு விஜயநகர மன்னர்களின் உதவியால் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1371-ஆம் ஆண்டு திருவரங்கம் வந்தடைந்தது வரலாறு.



விஜயநகரப் பேரரசின் சங்கமசூல மன்னன் இரண்டாம் ஹரிஹரன். அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி. 1383-ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திருவிழா தான் இந்த சித்திரைத் தேர் திருவிழா. அவர் பெயராலேயே விருப்பன் திருநாள் என்றும் வழங்கப்பெறும் இந்தத் திருநாள், இவ்வருடம் இன்று தேருக்குப் பிறகு பதினோறாம் நாளான 09.05.2013 அன்று முடிவடையும்.





எட்டாம் திருநாளான நேற்று நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் நான்கிலும் உலா வந்து வையாளி கண்டருளி கண்ணாடி அறை சேர்ந்த வைபவமும் நடைபெற்றது.





இன்று காலையிலேயே ஆறு மணிக்கு முன்னரே தேர் வைபவம் தொடங்கிற்று. கையில் கேமராவுடன் சென்று வளைத்து வளைத்து பல காட்சிகளை படம் பிடித்து வந்தேன். திருவரங்கம் முழுவதுமே அலையலையாக மக்கள் வெள்ளம் திரண்டு வந்தபடியே இருந்தார்கள். இன்று திருச்சி நகரத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டதால் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது. சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் நேற்று மாலையிலிருந்தே வரத் தொடங்கி கிடைக்கும் இடத்தில் தங்கி தேரில் பவனி வரும் நம்பெருமாளைக் கண்ணாரக் கண்டு களிக்க தயாராக இருந்தனர்.





கோவில் யானையான ஆண்டாள் முன்னே வர, ஆண்டாளின் பின்னே தீயணைப்புத் துறையினரின் ஒரு வண்டியும், பெருந்திரளான மக்களை வழிப்படுத்த காவல் துறையினரும், வேத கோஷங்கள் முழங்குபவர்களும், கோலாட்டம் ஆடியபடி, அரங்கனின் பெருமைகளைப் பாடியபடியே வரும் பொதுமக்களும், அவர்களுக்குப் பின்னே வெள்ளைக் குதிரையும், அவர்களுக்குப் பின்னர் சித்திரைத் தேர் அசைந்து அசைந்து ஓடி வந்ததைக் காண முடிந்தது.



அடிக்கும் சித்திரை வெயிலில் தேர் இழுப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேர்வைக் குளியல். அவர்களுக்கு சேவை செய்ய, நிறைய பேர் பெரிய பதாகைகளைக் கொண்டும், பனையோலை விசிறிகள் கொண்டும் விசிறிக்கொண்டு இருந்தார்கள். தேர் பிடித்து இழுக்கும் மக்களுக்கு தம்மால் ஆன தொண்டு செய்வதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. வேர்வைக்குளியலில் இருக்கும் அவர்களுக்கும் தென்றலாய் காற்று வீசுவதில் மகிழ்ச்சி.






தேர் வடம் பிடித்து இழுக்கிறோமோ இல்லையோ, அந்த வடத்தினைப் பிடித்தாலே போதும் என பலர் அதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு 98 வயது தாத்தாவும் வடம் பிடித்து விட்டதாக மனம் நிறைவோடு சொன்னார். வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருக்க தேரினைத் திருப்புமுன் அவர் வீட்டு வாயில் வரையில் தேர் வடம் பிடித்து எடுத்துக் கொண்டு வந்ததை அவரும் தொட்டு விட்டாரே!





வரும் வழியெல்லாம் நீர்மோர், பானகம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் என தேர் பார்க்க வந்த மக்களுக்கு பலர் விநியோகம் செய்ததைக் காண முடிந்தது. கூடவே, சாப்பிட்ட பின் இலைகளையும், பாக்கு மட்டை தட்டுகளையும், பிளாஸ்டிக் குப்பிகளையும், ஆங்காங்கே குப்பைக்கூடைகள் வைத்திருந்தாலும் தெருவில் வீசியபடி சென்றனர் மக்கள். சுத்தம் என்பது வீட்டு வரையில் தான் என்பது நம் இந்தியர்களுக்கு பால பாடமாயிற்றே……





ஹனுமார் வேஷம் கட்டிய பலரைப் பார்க்க முடிந்தது. ஹனுமார் வேஷம் போட்டு ராம நாமம் சொல்லியபடியே வீடுவீடாக கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள்! ஒவ்வொரு மூலையிலும் தேர் திரும்ப கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. அப்படி ஓர் மூலையில் நான் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒருவர் எனக்கு ஆணைகள் பிறப்பித்தபடியே இருந்தார் – “நேரா வரும்போது நல்லா Zoom பண்ணி எடுங்க, அப்பதான் பெருமாளை புகைப்படம் பிடிக்க முடியும்!, இந்தாப்பா பலூன் விற்கிறவரே, தள்ளி நில்லு, நீங்க படம் எடுங்க, ம்ம்ம்… அப்படித்தான், என்ன ஒழுங்கா வந்ததா?”. 






கிழக்குச் சித்திரை வீதியில் தொடங்கிய தேர் ஓட்டத்தினை ஆரம்பித்திலிருந்து பார்க்கவில்லை. தெற்குச் சித்திரை வீதி தொடக்கத்திலிருந்து பார்த்து படங்கள் எடுத்தபடியே வந்து பிறகு ரங்கா ரங்கா கோபுரம் வழியே உத்திர வீதி மூலம் வந்து மேற்குச் சித்திரை வீதிக்கு வந்து விட்டேன். தேரின் முன்னேயும் பின்னேயும் மக்கள் கூட்டம் – கால் வைக்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம். தேருக்கு முன் தெருவிலேயே பலர் தேங்காய் உடைத்தும், சூடம், ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தியும், பழங்களை நிவேதனம் செய்தும் கொண்டிருந்தார்கள்.  தெருவிலேயே சூடங்களைக் கொளுத்தி வைப்பதால் தேரின் கூட வரும் மக்கள் காலில் பட்டுச் சுட்டுவிடக் கூடும் அபாயம் இருக்கிறது. அதனால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வேப்பிலைகளால் சூடத்தினை அணைத்துக் கொண்டே இருந்தார்! தேரின் பின்னால் வந்த ஒருவர் “செருப்புப் போட்டுக்கொண்டு தேரின் பின்னாலே வரக்கூடாது என என்னைத் திட்டினார்.



திருவிழாவினைக் காண வந்திருக்கும் கிராமத்து மக்கள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தானியங்களையும், பசுமாடு, கன்றுகளையும் நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோவில் கொட்டாரத்தில் சேர்க்கிறார்கள். போலவே தேரடியிலும் கோவில் கொடிமரத்திற்கு அருகிலும் பலர் தனது தலையிலேயே தேங்காய்களை உடைத்துக் கொள்வதையும் பார்க்க முடிந்தது.



தேரோடிய இன்று நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வந்தால் கைசிக ஏகாதசி அன்று சுற்றி வந்தால் எப்படி மோக்ஷம் கிடைக்குமோ அதே பலன் இன்றும் கிடைக்கும் என இந்நாளிலும் மக்கள் நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வருகிறார்கள்.





காற்றாடிகள், பலூன்கள், சூடம், தேங்காய், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பஞ்சு மிட்டாய், என பல வகையான விஷயங்களை விற்கும் வியாபாரிகள் பலரைப் பார்க்க முடிந்தது. சிலரைப் பார்த்தால், இன்று மட்டுமே வியாபாரி ஆனது போலத் தெரிந்தது….



சென்ற வருடம் கூட தேர் தனது நிலைக்குத் திரும்ப வெகு நேரம் ஆனதென்றும், இந்த வருடம் மிகச் சீக்கிரமாகவே தேர் நிலைக்குத் திரும்பி விட்டதென்றும் மக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை தலைநகரமே திருவரங்கத்திற்கு வந்துவிட்டதாலோ?



என்ன நண்பர்களே திருவரங்கம் தேரினை நீங்களும் கண்டு களித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை…..



நட்புடன்



வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து……

திங்கள், 6 மே, 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்




மஹாகும்பமேளாவிற்குச் சென்று வந்தேன் என இத்தனை பகுதிகளாகச் சொல்லிக் கொண்டிருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே... ஆனால் விழாவினைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் தரவில்லையே என உங்களில் சிலராவது நினைத்திருக்கக் கூடும். நீங்கள் நினைத்தது டெலிபதி போல எனக்கும் தெரிந்துவிட்டதால், மஹாகும்பமேளா எனும் பிரம்மாண்டத்தினைக் கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.


பட உதவி: கூகிள் ஆண்டவருக்கு நன்றி.


  • மகரசங்கராந்தி நாளான ஜனவரி 14 ஆம் தேதி துவங்கி மஹா சிவராத்திரி நாளான மார்ச் 10 ஆம் தேதி வரை 56 நாட்கள் நடைபெற்றது மஹா கும்பமேளா. 
  • இந்த கும்பமேளாவில் பங்குபெற்ற மக்களின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். இதில் வெளி நாட்டவர்கள் மட்டுமே பத்து லட்சம். மௌனி அமாவாசை தினமான ஃபிப்ரவரி 10 ஆம் தேதி மட்டும் இங்கே வந்த மக்களின் தொகை மூன்று கோடி. 
  • மேளாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி – 1200 கோடி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களுக்கு மேளா சமயத்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு. 
  • உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு வரிகள் மூலமும் மற்ற வழிகளிலும் கிடைக்கக் கூடிய தொகை 12000 கோடி என மதிப்பிடப்பட்டது. எத்தனை கோடி அரசுக்குப் போனது மீதி எங்கே போனது என்ற விவரம் எல்லாம் வல்லவனுக்கே வெளிச்சம்! 
  • போடப் பட்ட புதிய சாலைகள் – 156 கிலோ மீட்டர். புதிய தண்ணீர் குழாய்கள் – 575 கிலோ மீட்டர். புதிய மின்சாரக் கம்பிகள் 800 கிலோ மீட்டர். புதியதாய் திறக்கப்பட்ட மின்சார விநியோகக் கூடங்கள் – 48. 
  • பாதுகாப்பிற்கு பணியில் இருந்த காவல்காரர்கள் 30000 பேர். தவிர மத்திய அரசின் 72 படைகள். அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் 120. 
  • இத்தனை பேருக்கும் உணவு, சுகாதார வசதிகள் என அனைத்தும் செய்ய நிச்சயம் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அமைக்கப்பட்ட தற்காலிக பொது கழிப்பறைகள் மட்டுமே 35000. இருந்தும் பல மக்கள் வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்தியிருந்தது கண்கூடு! 
  • 24 மணி நேர மருத்துவ வசதி, எப்போதும் பணியில் 25 மருத்துவர்கள், 120 ஆம்புலன்ஸ் வண்டிகள், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை என நிறைய ஏற்பாடுகள். 
  • காணாமல் போனவர்கள், வழி தவறிப் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்ய வசதிகள். 
  • பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்.... 
  • மஹாகும்பமேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு 1936 ஹெக்டேர். 
  • மேளாவினைப் பற்றிய தகவல்களை நேருக்கு நேர் ஒளிபரப்பு செய்ய ஊடகங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.

இப்படிப் பட்ட பிரம்மாண்டமான கும்பமேளாவில் சில சிக்கல்களும், விபத்துகளும் ஏற்படாமலில்லை. அலஹாபாத் ரயில் நிலையத்தில் நடந்த விபத்து உங்களுக்கும் தெரிந்திருக்குமென்பதால் அதைப் பற்றி இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.

இந்த கும்ப மேளா சமயத்தில் நாங்களும் அங்கே சென்று, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் சங்கமத்தில் குளித்து விட்டு வந்தது மட்டுமல்லாது உங்களுக்கும் அங்கிருந்து சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே....

காலையில் சங்கமத்தில் நீராடி மாலையில் அலஹாபாத் நகரில் இருக்கும் சங்கர் விமான மண்டபம், மற்றும் படே ஹனுமான் கோவில் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அன்றிரவே புது தில்லி திரும்பினோம். வழக்கம் போல பீஹாரிலிருந்து வருகின்ற வண்டியில் வந்ததால் பீஹாரிகளின் குட்கா வாசத்தோடு தில்லி வந்து இறங்கியபோது நாங்களும் ஒரு வித மயக்கத்தில் இருந்தோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

மீண்டும் சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணம் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 3 மே, 2013

ஃப்ரூட் சாலட் – 44 – 20 ரூபாயில் அகில இந்தியா – கலக்கல் சாவித்ரி - மனைவி



இந்த வார செய்தி:

எனது பதிவுகளில் முன்பே ஒரு முறை சொல்லி இருக்கிறேன், நான் தில்லியில் இருப்பது புகழ் பெற்ற பிர்லா மந்திர் கோவில் அருகே என. இது பிரபலமான ஒரு சுற்றுலா தலம். கரோல் பாக் பகுதியில் இருக்கும் அனைத்து சுற்றுலா ஏற்பாடு செய்யும் நபர்களும் சுற்றுலா பயணிகளை தினசரி தில்லி தர்ஷன்அழைத்துச் செல்லும் போது முதலில் வருவது பிர்லா மந்திர் தான். இங்கேயும், இன்னும் மற்ற சுற்றுலா தலங்களிலும் மிட்டாய்க் கடையில் உள்ள தின்பண்டங்களை ஈக்கள் மொய்த்துக் கொள்வது போல உங்களை மொய்த்துக் கொள்ள பல விற்பனையாளர்கள் காத்திருப்பார்கள்.

10 ரூபாயில் மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய கைவிசிறி, சிறிய கைப்பைகள், ஸ்டாப்லர் மெஷின் போல உருவத்தில் இருக்கும் கையடக்க தையல் மிஷின், கூலிங் கிளாஸ், இந்தியா பற்றிய புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை விற்கும் வியாபாரிகள் இங்கே இருப்பார்கள். அது போன்ற ஒரு விஷயத்தினை விற்கும் போது அவர்கள் இப்படிச் சொல்லித் தான் மக்களை கவர்ந்து இழுப்பார்கள்! எப்படி என்றால்,

“20 ரூபாயில் அகில இந்தியா, 20 ரூபாயில் அகில இந்தியா

என்னடா, இந்தியாவின் மதிப்பு 20 ரூபாய் தானா என அதிர்ச்சி அடைந்து விட வாய்ப்புண்டு. அவர்கள் விற்கும் பொருள் ஒரு சாதாரணமான, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு பொருள். காமிரா வடிவில் இருக்கும் இந்த பொருளில் View Finder, மேலே ஒரு திருகு குழல், முன் புறம் பிளாஸ்டிக்-ஆல் ஆன லென்ஸ் என அனைத்தும் உண்டு. View Finder-ல் கண்ணை வைத்து மேலே உள்ள குழலை திருகினால், உள்ளே ஒரு மெல்லிய நாடாவில் பதித்து வைத்திருக்கும் அகில இந்திய சுற்றுலா தலங்களின் படங்கள் ஒவ்வொன்றாய் உங்கள் கண் முன்னே விரியும்.

ஒரு நாள் இப்படி விற்கும் நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் போது அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீங்களே இதை செய்வீங்களா, எங்கேயிருந்து வாங்குவீங்க, எவ்வளவு ரூபாய்க்கு வாங்கி 20 ரூபாய்க்கு விக்கறீங்க? ஒரு நாளைக்கு எத்தனை விக்க முடியுது உங்களால?போன்ற கேள்விகள்.

தில்லியின் சதர் பஜார் பகுதியில் இருக்கும் மொத்த விலைக் கடைகளில் வாங்கி வந்து தான் விற்கிறார்கள். அடக்க விலை இவருக்கு 12 முதல் 15 வரை. ஆக ஐந்து முதல் எட்டு ரூபாய் வரை நிகர லாபம். நாள் முழுவதும் கையில் பல வரைபடங்கள், புத்தகங்கள், விரல்களில் நாடாக்களில் தொங்கிக் கொண்டு இருக்கும் இக்காமிராக்கள் என அலைந்து அலைந்து விற்றால் 100 முதல் 200 ரூபாய் வரை லாபம் பார்க்க முடிகிறது எனச் சொன்னார். அதற்குள் ஒரு பேருந்து வந்து அங்கே நிற்கவே சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டு இருந்தார்கள். மீண்டும் அறைகூவல் விடுக்கத் தொடங்கினார் அந்த வியாபாரி...... “20 ரூபாயில் அகில இந்தியா......
    
இந்த வார முகப்புத்தக இற்றை:

கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவது பலவீனத்தின் அடையாளம்.  - அரவிந்தர்.

இந்த வார குறுஞ்செய்தி

WHEN WE CAN’T LAUGH AGAIN ON THE SAME JOKE, WHY DO WE CRY AGAIN AND AGAIN FOR ONE AND THE SAME PAIN…. 

ரசித்த புகைப்படம்: 


இந்தப் புகைப்படத்தினை நான் மிகவும் ரசித்தேன். கூடவே அதில் இருக்கும் வார்த்தைகளை!

ரசித்த பாடல்:

இந்த வார ரசித்த பாடலில் ஆண்டவன் கட்டளை எனும் பட்த்திலிருந்து டி.எம். சௌந்தர்ராஜன் குரலில் இந்தப் பாடல். நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு!



ரசித்த காட்சி:

ஒண்ணும் ஒண்ணும் மூணு, ரெண்டும் ரெண்டும் அஞ்சு, மூணும் மூணும் எட்டு, எட்டும் நாலும் பத்து....  அட இது என்ன கணக்கு?  பாருங்களேன் சாவித்ரி மற்றும் மனோரமா நடிப்பில் இந்த சுவையான காட்சியை..... 




படித்ததில் பிடித்தது:

பில் கிளின்டனும் ஹிலாரி கிளின்டனும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். பெட்ரோல் போடுவதற்கு ஒரு பங்க் சென்ற போது அங்கிருந்த ஒரு நபரை அடையாளம் கண்டு கொண்ட ஹிலாரி, அவரை தனது கணவருக்கு “இவர் ஹென்றி, என்னுடைய கல்லூரித் தோழர்என அறிமுகம் செய்து வைத்தார்.

திரும்பி வரும்போது பில் கிளின்டன் நீ அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், இந்நேரம் ஒரு பெட்ரோல் போடுபவரின் மனைவியாக இருந்திருப்பாய் எனப் புன்னகையோடு சொல்ல, அதற்கு ஹிலாரி கிளின்டன் சொன்ன பதில்.... 

இல்லை நான் அவரை திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகியிருப்பார்!

நீதி: பொண்டாட்டி கிட்ட சும்மா வாயக் கொடுத்து மாட்டிக்கக் கூடாது....

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.