திங்கள், 9 செப்டம்பர், 2013

SETC பேருந்தும் சில கசப்பான அனுபவங்களும்



கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபகுதி 1


கேரளாஒவ்வொரு முறை கேரளம் செல்லும்போதும் சபரிமலை செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை மனதுக்குள் வந்து போகும். ஆனாலும் இந்த 42 வருட வாழ்க்கையில் ஒரு முறையும் அங்கே செல்ல வாய்ப்பு அமையவில்லைஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்வது தான் பொருந்தும். நேற்று வெளியிட்ட எங்கே செல்லும் இந்தப் பாதை? பகிர்வில் நான் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் சபரிமலை செல்லும்போது எடுத்தவை.


சமீபத்திய ஜம்மு-காஷ்மீர் பயணத்தின் போது உடன் வந்திருந்த கேரள நண்பர்சாரே, நீங்கள் கேரளா வரணும், பின்னே சபரிமலைக்குச் செல்லணும்என அன்போடு அழைக்க, சரி சென்றுவிடுவோம் என முடிவு எடுத்தேன். சென்னையில் மனைவியின் உறவினர் வீட்டு திருமணம் இருக்க, கூடவே பதிவர் சந்திப்பும் சென்னையில் இருக்க, இதே பயணத்தில் சபரிமலைக்கும் சென்று வந்துவிடுவோம் என முடிவு செய்து அதற்கேற்ப, தில்லியிலிருக்கும் போதே பேருந்தில் முன்பதிவு செய்து விட்டேன்.

அம்மாவின் தொகுதி [எதுக்கு இந்த அரசியல்!] திருவரங்கம் என்றான பின், திருவரங்கத்திலிருந்தே, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், திருவனந்தபுரம், பெங்களூரூ போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு நாளும் திருவரங்கத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்குச் செல்லும் பேருந்து இருக்கிறது. அதில் முன்பதிவு செய்து வைத்தேன். பயணம் செய்ய வேண்டிய நாள் வரவும் இரவு 08.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றேன்காலியாக இருந்த புதிய SETC பேருந்து என்னை வரவேற்றது.

SETC ஊழியர் ஒருவரிடம்எத்தனை மணிக்கு வண்டி புறப்படும்?” எனக் கேட்க, ”08.30க்கு டைம் சார், ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு எடுத்துடுவோம்என்று பவ்யமாய் பதிலளித்தார். சொன்னது போலவே இரவு 08.40 மணிக்கு திருவரங்கத்திலிருந்து இரண்டே இரண்டு பயணிகளோடு பேருந்து புறப்பட்டது. ”இரண்டு பேருக்கு ஒரு வாகனமா?” என்ற எண்ணத்தோடே பயணித்தேன். இரவு 09.10 மணிக்கு திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்தினை அடைந்தது பேருந்து.

அங்கு சென்றபிறகுமதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம்என்று கூப்பாடு போட ஆரம்பித்தார் பேருந்தின் நடத்துனரும் இன்னுமொரு ஆளும். தமிழகத்தில் எல்லா பேருந்து நிலையத்திலும் இது போல ஒரு ஆள் ஒவ்வொரு பேருந்திற்கும் கூவிக் கூவி ஆள் பிடிப்பார். அதற்கு ஏதோ கொஞ்சம் காசு கொடுப்பார்கள் [இவருக்கு எங்களது பேருந்து நடத்துனர் இருபது ரூபாய் கொடுத்தார்]. கூவியபடியே இருக்க, பேருந்து ஓட்டுனரிடம்எத்தனை மணிக்கு சார் இங்கேயிருந்து வண்டி எடுப்பீங்க?” என்றபோது 09.30 மணிக்கு டைம் சார். இன்னும் பத்து நிமிஷத்தில கிளம்பிடுவோம் எனச் சொன்னபோது மனதில் ஒரு திருப்தி.

09.30 மணி இருக்கும், SETC அலுவலகத்திலிருந்து கையில் ஒரு சீட்டோடு ஒருவர் ஓடி வந்து நடத்துனரிடம் கொடுத்து ரகசியமாக ஏதோ சொல்லிச் சென்றார். “என்ன சீட்டு அது?” என்று எட்டிப் பார்க்க, 10.30 மணி திருவனந்தபுரம் பேருந்திற்கு முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகளின் பெயர் பட்டியல். ரகசியமாய்ச் சொன்னது – “10.30 க்கு செல்ல வேண்டிய பேருந்து வராதுஅதுனால, நீங்களே காத்திருந்து அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!”

08.30 மணிக்கு திருவரங்கத்திலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி 20 நிமிடம் வரை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உட்கார்ந்திருப்பத்தில் என்ன பலன்? இந்த நேரத்தில் நிச்சயம் கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்திருக்கலாம். இது போன்று செய்வது சரியில்லையே என பேருந்து நடத்துனரிடம் கேட்க, “எங்க கிட்ட கேட்டு என்ன சார் பண்ண முடியும்?, அவங்க சொல்றதை தான் நாங்க கேட்க முடியும், இன்னிக்கு நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க, நாங்க இங்கேயே தானே வேலை செய்யணும்?” என்று சற்றே எரிந்து விழுந்தார்.

நேரக் காப்பாளர் அறையில் சென்று நேரக் காப்பாளரைக் கேளுங்க சார், எங்களைக் கேட்காதீங்கஎன்று ஓட்டுனரும் சொல்ல, நேராகச் சென்று நேரக் காப்பாளரிடம் கேட்க, அவரும் திமிராக, “அப்படித் தான் சார். 10.30 மணி பஸ் வரலைன்னா இப்படித்தான் செய்வோம். உங்களுக்கு வேணாம்னா நீங்க வேற பஸ்ல போய்க்கோங்க, நீங்க ஆன்லைன்ல முன்பதிவு செய்ததால, காசும் திரும்பி தரமுடியாது!” என்று அலட்சியமாக பதில் சொல்கிறார். தனியார் பேருந்துகளில் தான் இப்படி அடாவடியாக பேருந்து நிரம்பும் வரை கிளம்ப மாட்டார்கள் என SETC பேருந்தில் முன்பதிவு செய்தால் இவர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது!

இன்னும் சில பயணிகளும் சேர்ந்து சத்தம் போட, கொஞ்சம் சுதாரித்துநீங்க போய் உட்காருங்க சார், தோ கிளம்பிடலாம்என கொஞ்சம் இறங்கினார். இதற்கே பத்து மணி ஆகிவிட, அதற்குள் முன்பதிவு செய்திருந்த நான்கு பயணிகள் சற்று முன்பாகவே வர அவர்களுடன் தான் பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்து அதன் பின்னர் தான் பேருந்து இயக்கப்பட்டது.

திருவரங்கத்திலிருந்து மொத்த இருக்கைகளும் நிரம்பாது என்பதால், மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்தும் பயணிகளை ஏற்றிக்கொள்வது என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான் என்றாலும், இப்படியா ஒரு மணி நேரம் அங்கே நிறுத்தி வைப்பது? முன்பதிவு செய்யும்போதே சொல்லிவிடலாமே அல்லது ரயில்களுக்குக் கொடுக்கும் பயண அட்டவணை போல, பேருந்திற்கும் எங்கே எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடலாமே? அது குறிப்பிட்டு விட்டால் விரைவாகச் செல்ல நினைப்பவர்கள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே?

இப்படி சில அனுபவங்களுக்குப் பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் SETC பேருந்து பயணிகளைச் சுமந்தபடி தனது பயணத்தினைத் தொடங்கியது.  பேருந்தில் எனக்குக் கிடைத்த மற்ற அனுபவங்களையும் சபரிமலை பயணம் பற்றியும் இந்த “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைபயணத் தொடரில் பார்க்கலாம்.

தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை?



 
சமீபத்திய பயணத்தில் எடுத்த புகைப்படங்கள் சில இன்றைய ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவை அனைத்தும் ஒரு சாலையில் செல்லும் போது எடுக்கப்பட்டவை.

சாலையின் இருமருங்கிலும் எத்தனை எத்தனை மரங்கள், மலைகள், மலைகளினூடே தவழ்ந்து செல்லும் மேகங்கள் என ஒரு சுகானுபவம். அந்த சாலையிலேயே ஒரு மலையில் ஒரு சிறுவீடு அமைத்து தங்கிவிடலாமோ எனக் கூடத் தோன்றியது!

இதோ உங்கள் ரசனைக்கு…..


வாழ்க்கை வளைவுகள் நிறைந்தது என்று சொல்லாமல் சொல்கிறதோ இந்தப் பாதை…..


வளைவுகள் மட்டுமல்ல, பல சமயங்களில் நேர்க்கோடு போல சென்றுவிடவும் வாய்ப்புண்டு……


சாலையின் இருமருங்கிலும் மரங்களால் ஒரு மறைப்பு – என்னதான் காரில் ஏ.சி. இருந்தாலும் இந்த இயற்கையின் குளிர்ச்சிக்கு ஈடாகுமா?


மேகம் தழுவி இந்த மரங்களையும் மலையையும் கிச்சு கிச்சு மூட்டுகிறதோ?


மேகம் கருக்குது மழை வரப் பாக்குது வீசி அடிக்குது காத்து… காத்து… மழைக்காத்து!


இது போன்ற சாலையும் இந்த காரும் இருந்துவிட்டால், சென்று கொண்டே இருக்கலாம்!


மலைகளினூடே மேகக் குவியல்.


முக்கோணத்தின் வழியாக மலைகளும் மேகங்களும்.

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? இந்த இடத்திற்குச் சமீபத்தில் சென்று வந்தேன். சென்ற இடம் என்ன? அதைப் பற்றிய பயணக் கட்டுரைகள் உண்டா? என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் – ஒரு பயணத் தொடர் பதிவுகளாக!

மீண்டும் உங்களனைவரையும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – இவர்களைச் சந்திப்போமா? [புகைப்படங்கள் தொகுப்பு – 4]

பதிவர் சந்திப்பில் நான் எடுத்த சில புகைப்படங்களை இது வரை மூன்று பகுதிகளாக வெளியிட்டு விட்டேன். இன்னும் பல படங்கள் இருக்கின்றன. அவை அவ்வப்போது தொடரும். அந்த வரிசையில் அடுத்த பன்னிரெண்டு படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு.


இதில் நான் வெளியிட்டுள்ள பல பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது இவர்களை என்றாவது சந்திக்க முடியுமா என்று நினைத்ததுண்டு. இந்த பதிவர் சந்திப்பில் பலரைச் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரே ஒரு குறை தான். காமெராவும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்ததில் பல பதிவர்களுடன் பேச முடியவில்லை. சில பதிவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டதில் மனதில் கொஞ்சமாக திருப்தி.

இன்னும் பலருடன் பேச என்றாவது வாய்ப்பு கிடைக்கும்.  அந்நாளில் பேசுவோம்! இன்று புகைப்படங்களைப் பார்ப்போம்.


கவியாழி கண்ணதாசன் – காலையில் குர்தா பைஜாமா – மாலையில் Pant – Shirt! – டிரஸ் மாத்தறதுக்காகவே வீட்டுக்குப் போனாரோ?


பாரதிராஜா குரலில் பேசிய குடந்தையூர் ஆர்.வி. சரவணன்


கோவை ஆவி – நிஜ ஆவியோன்னு பயந்துடாதீங்க கால் எல்லாம் இருக்கு! கோவை ஆனந்த விஜயராகவன் எனும் கோவை ஆவி!


”கனவு மெய்ப்பட” ரூபக் ராம் – இவரது நல்ல கனவுகள் மெய்ப்படட்டும்…..


”இரவின் புன்னகை” வெற்றிவேல் – இவரது கவிதைகளின் ரசிகன் நான்….


பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் – வலைப்பூக்கள் வைத்திருக்கும் பலரது பதிவுகள் பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வலைப்பூவிற்குச் சொந்தக்காரர்…..


வால் பையன் வலைப்பூவின் சொந்தக்கரார்.




கற்போம் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் மாத இதழ் வைத்திருக்கும் பிரபு


”சூரியனுக்கே டார்ச் அடிக்கற பயலுக” என தனது தளமான கோகுலத்தில் சூரியன்-ல் சொல்லும் ”வெங்கட்”


மயிலறகு வலைப்பூ வைத்திருக்கும் திரு மயிலன்


கடல் பயணங்கள் வலைப்பூவில் எழுதி வரும் திரு சுரேஷ் குமார்

என்ன நண்பர்களே, புகைப்படங்களை பார்த்தீர்களா?  பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இன்னும் சில பதிவர்களை அடுத்த பகுதிகளில் சந்திப்போம்…..

அதுவரை……

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.