[அடிக்கத் தயாராக இருக்கும் பெண்கள்
பட உதவி: கூகிள்]
என்ன
தலைப்பு இப்படி இருக்கேன்னு அதிர்ந்துட்டீங்களா? அதுக்குதானே இந்த தலைப்பே! இந்த மாதம் எட்டாம் தேதி ஹோலிப் பண்டிகை. ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உத்திரப்
பிரதேசத்தில் உள்ள மதுரா நகரின் அருகில் இருக்கும் “பர்சானா” என்ற இடத்தில் இதற்கான
தயாரிப்புகள் ஆரம்பித்து விடும்.
எதுக்குன்னா “லட் மார் ஹோலி” விளையாடத்தான். ஹிந்தியில் “லட்” என்றால் பெரிய குச்சி. “மார்” என்றால் அடிப்பது. பெரிய குச்சிகளால் அடித்து, கலர் பொடி தூவி
விளையாடுவது தான் இந்த ”லட் மார் ஹோலி”.
[அப்படி போடு... - பட உதவி: கூகிள்]
கிருஷ்ண
பகவான் அவருடைய காதலி ராதாவின் கிராமமான பர்சானாவிற்கு வந்து அவரை கிண்டல் செய்ய, பர்சானாவில்
உள்ள பெண்கள், அவரைத் துரத்தியடித்தார்களாம். அன்றிலிருந்து இன்று வரை கிருஷ்ண பகவானின் ஊரான ”நந்த்காவ்ன்” கிராமத்திலிருந்து
ஆண்கள் எல்லாம் பர்சானாவிற்கு வர, அந்த ஊர் பெண்கள் அவர்கள் மீது கலர் பொடி தூவி அடித்து
அனுப்புவார்கள்.
[பட உதவி: கூகிள்]
முன்பெல்லாம்
சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டது. உத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து
மாநிலமான ஹரியானாவில் கூட இந்த “லட் மார் ஹோலி” நடக்கிறது. கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத்
துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள். முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள் – அவருடன் கல்யாணம்
ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள். ஆனாலும் அடி விழுந்து விடும்!
என்
அலுவலகத்தில் இருந்த நண்பர் ”ஆசாத் சிங்” ஒவ்வொரு லட் மார் ஹோலி முடிந்தபின்னும் அலுவலகம்
வரும்போது கை-கால்கள் வீங்கியபடி வருவதைப் பார்த்து “என்ன இப்படி வீங்கியிருக்கே?”ன்னு
கேட்டால் சந்தோஷமாய் பதில் சொல்வார் – “என் மனைவியும் மற்ற முறைப்பெண்களும் துரத்தித்
துரத்தி அடித்தனர்.
எவ்வளவு நேரம் தான் தடுக்க முடியும்? சில அடிகள் விழத்தானே செய்யும்!”. சில கிராமங்களில் முறைப் பெண்கள் மட்டுமல்லாது எல்லாப் பெண்களும் ஊரில் உள்ள
ஆண்களை துரத்தி அடிக்கிறார்கள்!
[தண்டாய் - பட உதவி: கூகிள்]
[பாங்க் பக்கோடா - பட உதவி: கூகிள்]
”அடியெல்லாம்
வாங்குகிறார்களே, எதுவும் சாப்பிடக் கிடையாதா?” என்றால், ஆண்கள் எல்லோரும் ”தண்டாய்”
எனப்படும் ஒரு குளிர்பானத்தினை அருந்துவார்கள். “பாங்க்” என்று அழைக்கப்படும் கஞ்சா இலைகளை அரைத்து பால்/லஸ்ஸி கலந்து தயாரிக்கப்படும் இந்த குளிர்பானத்தினை
குடித்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் – சிரிக்க ஆரம்பித்தால் சிரித்துக் கொண்டே
இருப்பார்கள், அழுதால் அழுது கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் இந்த இலைகளை வைத்து பஜ்ஜி செய்தும் சாப்பிடுவார்கள்.
இந்தப்
பதிவினைப் படிக்கும் ஆண்களின் மனதில் நிச்சயம் இப்படி ஒரு எண்ணம் ஓடும்... “நல்லவேளை
நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, தப்பித்தோம்!" என்று. பெண்களுக்கும் ஆற்றாமை இருக்கும் “அட இப்படி
ஒரு வாய்ப்பு நமக்கு இல்லையே!”ன்னு.
இங்க
இப்படின்னா, நம்ம ஊர்க்காரர் ஒருத்தர், நம்ம ஊர்ல இல்லாத இந்த ஹோலியை எப்படி அனுபவிச்சு
இருக்கார் பாருங்க! கலர் கலரா பொடி தூவி, கண்ணாடி மாற்றி, கண்ணாலே நடனமாடி [பின்ன இவரை
நடனமாடச் சொன்னா இவரு என்ன பண்ணுவார் பாவம்!], காற்றிலே வட்டம் போட்டு, அசத்தி [!] இருக்கார் பாருங்க!
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.டிஸ்கி: சரியான சமயத்தில் பாட்டினை நினைவூட்டிய ”மன்னை மைனர்” RVS அவர்களுக்கு நன்றி!!!!



