புதன், 7 மார்ச், 2012

அடி வாங்கும் கணவர்கள்!


[அடிக்கத் தயாராக இருக்கும் பெண்கள் 
பட உதவி:  கூகிள்]

என்ன தலைப்பு இப்படி இருக்கேன்னு அதிர்ந்துட்டீங்களா?  அதுக்குதானே இந்த தலைப்பே!  இந்த மாதம் எட்டாம் தேதி ஹோலிப் பண்டிகை. ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரின் அருகில் இருக்கும் “பர்சானா” என்ற இடத்தில் இதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்து விடும்.  எதுக்குன்னா “லட் மார் ஹோலி” விளையாடத்தான்.  ஹிந்தியில் “லட்” என்றால் பெரிய குச்சி. “மார்” என்றால் அடிப்பது.  பெரிய குச்சிகளால் அடித்து, கலர் பொடி தூவி விளையாடுவது தான் இந்த ”லட் மார் ஹோலி”.

[அப்படி போடு...  - பட உதவி:  கூகிள்]

கிருஷ்ண பகவான் அவருடைய காதலி ராதாவின் கிராமமான பர்சானாவிற்கு வந்து அவரை கிண்டல் செய்ய, பர்சானாவில் உள்ள பெண்கள், அவரைத் துரத்தியடித்தார்களாம்.  அன்றிலிருந்து இன்று வரை கிருஷ்ண பகவானின் ஊரான ”நந்த்காவ்ன்” கிராமத்திலிருந்து ஆண்கள் எல்லாம் பர்சானாவிற்கு வர, அந்த ஊர் பெண்கள் அவர்கள் மீது கலர் பொடி தூவி அடித்து அனுப்புவார்கள். 

[பட உதவி:  கூகிள்] 
முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டது.  உத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான ஹரியானாவில் கூட இந்த “லட் மார் ஹோலி” நடக்கிறது.  கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்.  முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள் – அவருடன் கல்யாணம் ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள்.  ஆனாலும் அடி விழுந்து விடும்!

என் அலுவலகத்தில் இருந்த நண்பர் ”ஆசாத் சிங்” ஒவ்வொரு லட் மார் ஹோலி முடிந்தபின்னும் அலுவலகம் வரும்போது கை-கால்கள் வீங்கியபடி வருவதைப் பார்த்து “என்ன இப்படி வீங்கியிருக்கே?”ன்னு கேட்டால் சந்தோஷமாய் பதில் சொல்வார் – “என் மனைவியும் மற்ற முறைப்பெண்களும் துரத்தித் துரத்தி அடித்தனர்.  எவ்வளவு நேரம் தான் தடுக்க முடியும்?  சில அடிகள் விழத்தானே செய்யும்!”.  சில கிராமங்களில் முறைப் பெண்கள் மட்டுமல்லாது எல்லாப் பெண்களும் ஊரில் உள்ள ஆண்களை துரத்தி அடிக்கிறார்கள்!

[தண்டாய் - பட உதவி:  கூகிள்]

[பாங்க் பக்கோடா -  பட உதவி:  கூகிள்]
”அடியெல்லாம் வாங்குகிறார்களே, எதுவும் சாப்பிடக் கிடையாதா?” என்றால், ஆண்கள் எல்லோரும் ”தண்டாய்” எனப்படும் ஒரு குளிர்பானத்தினை அருந்துவார்கள்.  “பாங்க்” என்று அழைக்கப்படும் கஞ்சா இலைகளை அரைத்து பால்/லஸ்ஸி கலந்து தயாரிக்கப்படும் இந்த குளிர்பானத்தினை குடித்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் – சிரிக்க ஆரம்பித்தால் சிரித்துக் கொண்டே இருப்பார்கள், அழுதால் அழுது கொண்டே இருப்பார்கள்.  ஒரு சிலர் இந்த இலைகளை வைத்து பஜ்ஜி செய்தும் சாப்பிடுவார்கள். 

இந்தப் பதிவினைப் படிக்கும் ஆண்களின் மனதில் நிச்சயம் இப்படி ஒரு எண்ணம் ஓடும்... “நல்லவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, தப்பித்தோம்!" என்று.  பெண்களுக்கும் ஆற்றாமை இருக்கும் “அட இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு இல்லையே!”ன்னு.

இங்க இப்படின்னா, நம்ம ஊர்க்காரர் ஒருத்தர், நம்ம ஊர்ல இல்லாத இந்த ஹோலியை எப்படி அனுபவிச்சு இருக்கார் பாருங்க! கலர் கலரா பொடி தூவி, கண்ணாடி மாற்றி, கண்ணாலே நடனமாடி [பின்ன இவரை நடனமாடச் சொன்னா இவரு என்ன பண்ணுவார் பாவம்!], காற்றிலே வட்டம் போட்டு, அசத்தி [!] இருக்கார் பாருங்க!



மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  சரியான சமயத்தில் பாட்டினை நினைவூட்டிய ”மன்னை மைனர்” RVS அவர்களுக்கு நன்றி!!!!

திங்கள், 5 மார்ச், 2012

ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]


[பட உதவி - கூகிள்]


மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொ.ப] என்ற பதிவின் மூலம் தனது பள்ளிப் பருவத்தினை சுவைபட எழுதிய நண்பர் கணேஷ் [மின்னல்வரிகள் வலைப்பூவின் உரிமையாளர்] இந்த தொடர் பதிவினைத் தொடரும்படி என்னையும் அழைத்துள்ளார்.  நினைவிலிருக்கும் பள்ளி நினைவுகளை, பிறப்பிடமான நெய்வேலி நகர நினைவுகளை, நான் அவ்வப்போது எனது வலைப்பக்கத்தில் ”மனச் சுரங்கத்திலிருந்து…” என்ற பகிர்வுகளில் எழுதி வருகிறேன்.  இப்போது ஒவ்வொரு வகுப்பாய் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கிறார்.  So here goes… ’என் பள்ளி நினைவுகள்’. 

[நாந்தேன்...] 

ஒன்றிலிருந்து ஐந்து வரை: 

1977-ஆம் வருடம் - எனக்கு அப்ப 6 வயது.  அப்பாவும் அம்மாவும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் துவக்கப்பள்ளியில் என்னை முதலாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள் – அதே பள்ளியில் எனது அக்காவும் படித்ததால்! முதல் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியர் திருமதி நாமகிரி.  அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத குறையே தெரியாமல் எங்களையே குழந்தைகளாகப் பாவித்தவர்.  பாதி நாட்கள் எனது வகுப்பில் இருந்து அழுதபடியே ஓடி அக்காவின் வகுப்புக்குச் சென்றுவிடுவேன்.  அவளும் ஒவ்வொருமுறையும் எனது வகுப்பில் அலுக்காமல் கொண்டு வந்து விடுவாள்.  இப்படி ஓடிப்போவது குறைந்தது ஒரு மாதமாவது நடந்திருக்கும் என அக்கா சொல்வாள்! 
[பட உதவி - கூகிள்]

பிறகு ஒரு பிடிப்பு வந்து என் வகுப்பிலேயே அமர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு நாளும் காலையில் அம்மா கொடுக்கும் மதிய உணவினை [சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று தினமும் ஏதாவது ஒன்று] ஒரு அலுமினிய தூக்கிலும், பாடப் புத்தகங்களை ஒரு அலுமினிய பெட்டியிலும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ”என்.எல்.சி. துவக்கப்பள்ளி, வட்டம்-18” செல்வேன்.  முதல் ஐந்து வகுப்புகளில் ரொம்ப சமத்து நான்….[அதற்குப் பிறகு தான் வால் முளைத்ததோ!]  எந்த விஷமமும் செய்ய மாட்டேன் என அம்மா இப்போதும் கூட சொல்வார்கள்…  ரொம்ப பொறுமைசாலி எனச் சொல்லி, அதுவும் இரண்டாம் வகுப்பு படித்தபோது பள்ளி ஆண்டு விழாவில் “கல் பொறுக்கிப் போடும்” ஒரு விளையாட்டில் பொறுமையாக பொறுக்கியும் மூன்றாம் பரிசாக, ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு பிளாஸ்டிக் கிண்ணம் [அதை பிச்சைக்காரன் கிண்ணம் என மற்றவர்கள் சொன்னது வேறு விஷயம்] பரிசாகக் கிடைத்ததை  அடிக்கடிச் சொல்வார்கள்.  [பல வருடம் அந்தக் கிண்ணத்தை  அம்மா வைத்திருந்தார்கள்…]

இந்த ஐந்து வருடங்களில் நான் மறக்க முடியாத ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.  வகுப்பு ஆசிரியராக இருந்த திருமதி எஸ்தர், ராஜேஸ்வரி, மூக்கன் [அவர் பெயர் இதுவல்ல, இது பட்டப் பெயர்!] என பலர் எனது அடித்தளத்தினை பலமாகப் போட்டவர்கள்.  நான்காவது படிக்கும்போதே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட அனுபவத்தினை ”நானும் சைக்கிளும்” என்ற பகிர்வில் எழுதி இருக்கிறேன்.  நான் படித்த இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையே இருந்ததால் வேறு பள்ளிக்கு மாற வேண்டிய சூழ்நிலை.

ஆறிலிருந்து எட்டு வரை: 

நெய்வேலி நகரின் வட்டம் – 12-இல் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் அந்த பள்ளியில் ஒரு வருடம் தான் படித்தேன்.  நான் முதலில் படித்த பள்ளியையே நடுநிலைப் பள்ளியாக ஆக்கிவிட்டதால் அங்கேயே ஏழாவதும் எட்டாவதும் படித்தேன்.  ஆறாவது படிக்கும்போது செய்த குறும்புத்தனங்கள் இன்றும் மனதில் பசுமையாக!

ரொம்பவும் பயந்த சுபாவமுடைய ஒரு ஆசிரியையை பயமுறுத்த ஒரு ஓணானை அடித்து அதை டீச்சர் மேஜையில் வைத்தது, விஷமம் செய்ததற்காக  எங்கள் எல்லோரையும் அடித்ததால் எல்லா மாணவர்களும் சேர்ந்து பப்பிள் கம் சாப்பிட்டு அதை அவர் அமரும் நாற்காலியில் ஒட்டி வைத்தது [அன்று பார்த்து அவர் பட்டுப் புடவை அணிந்து வர, அதில் ஒட்டி அந்தப் புடவை வீணானது என, எங்களுக்கு ஒரு மாதம் வரை பாடம் எடுக்க வில்லை] என்று பல குறும்புத்தனங்கள் [இப்போது நினைத்தால் வெட்கம்!]

ஏழாவது படிக்கும்போது முதலும் கடைசியுமாக பிட் அடித்த அனுபவத்தினை ”ரகசியம்… பரம ரகசியம்” என்ற பகிர்வில் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன் என்பதால் அதை இங்கே மீண்டும் எழுதாது விடுகிறேன். 

எட்டாவது படிக்கும் போது இத்தனை நாள் இருபாலர்களும் படிக்கும் பள்ளியில் படித்து விட்டு அடுத்தது ஆண்கள் மட்டுமே படிக்கும் வட்டம்-10-இல் இருக்கும் என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளிக்கு ஒன்பதாவது போகப் போகிறோம் என ஒரு கலக்கம்… :)

[பட உதவி:  என் நண்பன் C. குமார்]

ஒன்பதிலிருந்து பன்னிரெண்டு வரை:

எட்டாம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் இப்போது வேறு வகுப்புகளுக்கு  சென்றுவிட, புதிய நண்பர்கள், புதிய சூழல் என ரொம்பவே பயமுறுத்தியது.  ஆனால் வீட்டிலிருந்து வெகு அருகிலேயே பள்ளி, அதுவும் ஷிஃப்ட் முறை [காலை எட்டு மணி முதல் மதியம் 12.40 வரை தான்] என்பதால் சற்றே நிம்மதி [நிறைய விளையாடலாமே!] பள்ளிக்குள்ளே ஹேண்ட் கிரிக்கெட் விளையாடி, கையை சிவப்பாக்கியது இன்று நினைத்தாலும் வலிக்கிறது!].  ஆங்கில இலக்கணம் சுலபமாகக் கற்றுக்கொடுத்த திரு. பி.ஒய். சுந்தரராஜன் அவர்கள் பற்றி நான் எழுதிய பதிவு ”அறுபத்தி ஆறு தொண்ணூத்தி ஒன்பது” படித்துப் பாருங்களேன்!

பத்தாம் வகுப்பில் விழுந்து விழுந்து படித்தேன்! [அட கீழே இல்லைங்க!] முக்கியமான வகுப்பல்லவா அதனால் முழுமூச்சில் படித்தேன்.  ஆனாலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை.  அதனால் மனமுடைந்தது நான் மட்டுமல்ல – என் பெற்றோர்களும் தான்.  இருப்பினும் பதினொன்றாம் வகுப்பில் முதல் க்ரூப்பே கிடைத்தது. 

பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் படித்த என்னை பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டார்கள்.  முதல் சில மாதங்களில் தட்டுத் தடுமாறினேன்.  அதனால் ட்யூஷன் சேர்ந்து படித்தேன்.  காலை முதல் மாலை வரை பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் அலைந்தது இன்னும் நினைவில் நிற்கிறது.  பனிரெண்டாவது வகுப்பில் நன்கு படித்து[!] எதிர்பார்த்த மதிப்பெண்கள் வாங்க முடியாததால் நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை அறிவியல் [கணிதம்] படித்தது தனிக்கதை.  அது இங்கே அவசியம் இல்லை!  [பள்ளி பற்றி தான் எழுத வேண்டும் என்பதால்! :)]

மின்னல் வரிகள் கணேஷ் அவர்கள் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்!  இது தொடர் பதிவு என்பதால் – தொடர நினைக்கும் நண்பர்கள் தொடரலாம்! 

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

வெள்ளி, 2 மார்ச், 2012

புத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்




தில்லியில் ஃபிப்ரவரி 25-ஆம் தேதி [சனிக்கிழமை] உலகப் புத்தகக் கண்காட்சி துவங்கியது.  ஞாயிறு அன்றே போக முடிவு செய்து, தில்லி வலைப்பூ நண்பர்களும் அன்றே வரமுடிந்தால் ஒரு பதிவர் சந்திப்பும் வைத்துக் கொள்ளலாம் என மின்னஞ்சல் தூது விடுத்தேன்…

உடனே பதில் வந்தது நண்பர் செந்தழல் ரவியிடமிருந்து [ஆனால் ஏனோ ஞாயிறன்று அவர் வரவில்லை]. பின்னர்  முத்துலெட்சுமி, லாவண்யா, கலாநேசன், ஆச்சி என்று ஒவ்வொருவராய் சரி எனச் சொல்ல, தமிழ்ப் பதிப்பகங்கள் இருக்கும் 10-ம் எண் அரங்கில் சந்திக்கலாம் என முடிவு செய்தோம். 

காலையிலேயே எழுந்து தயாராகி, துணைவியுடனும், மகள் ரோஷ்ணியுடனும் ஆட்டோவில் பயணித்து நுழைவாயில் எண்-7 ஐ அடைந்தோம்.  அங்கு சென்று நுழைவுச் சீட்டு [பெரியவர்களுக்கு ரூபாய் 20, குழந்தைகளுக்கு 10 ரூபாய்] வாங்கக் கேட்டபோது   சீட்டுகள் நுழைவாயில் 1 மற்றும் 2-இலும் மெட்ரோ அருகிலும் தான் கிடைக்கும் எனச் சொல்ல, பொடி நடையாக இரண்டாம் எண் நுழைவாயிலுக்கு 1 கிலோமீட்டர் நடந்தோம். 

இதை எல்லா நுழைவாயில்களிலும் கிடைக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும்.  வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் மற்ற இடங்களில் வந்து கேட்டுவிட்டு ஏமாற்றத்துடன் நடந்தனர்.  இரண்டாம் எண் நுழைவாயிலில் இருந்து உள்ளே செல்லவும் நீண்ட தொலைவு நடக்கவேண்டும் [பாட்டரி வண்டிகள் இருந்தாலும் போதிய அளவு இல்லாதது ஒரு குறை தான்].

நான் சென்று சேர்வதற்கு முன்னரே முத்துலெட்சுமி வந்து என்னை அலைபேசியில் அழைத்தார்.  அங்கு சென்றபிறகு தில்லி-ஹரியானா எல்லையில் இருக்கும் பதிவர் ஆச்சி தனது கணவர் மற்றும் பெண்ணுடன் வந்திருந்தார்.  கலாநேசன் [சரவணன்] வந்து சேர்ந்து கொள்ள அனைவருமாகச் சேர்ந்து காலச்சுவடு, பாரதி, நியூ செஞ்சுரி, கிழக்கு, சாந்தா, சந்தியா, சக்தி பதிப்பகங்கள் மற்றும் இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் ஸ்டால்களை முற்றுகை இட்டோம்.

பதிவர்கள் சேர்ந்தாலே பேச்சு இல்லாமலா இருக்கும்?  புத்தகங்கள், பதிவுலகம், ரசனைகள் என பல்துறை விஷயங்களை அளவளாவியபடியே புத்தகங்களை பார்வையிட்டோம் அவரவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கியபடியே. 

பதிவர் ஆச்சிக்கு சில வேலைகள் இருந்ததால் அவர் கிளம்பிவிட, மற்றவர்கள் தொடர்ந்தோம்.  இன்னுமொரு தில்லி பதிவர் திரு ஷாஜஹான் அவர்களையும் இங்கே சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோதே மற்றுமொரு தில்லி பதிவர் லாவண்யாவும் வந்துசேர தொடர்ந்தது புத்தகத் தேடலும், பதிவர் சந்திப்பும். 

லாவண்யா அவர்களுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பான “இரவைப் பருகும் பறவை” காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்து இருக்கிறது [விலை ரூபாய் 70/-].  

என் மகள் சோர்ந்து போய்விட, விரைவில் திரும்பவேண்டியதாயிற்று.  ஆனால் அதற்குள் சில புத்தகங்கள் வாங்கினோம் [இன்று வாங்கியதில் பல அம்மணியின் தெரிவுகள்.  நான் இன்னும் ஒருமுறை செல்ல வேண்டும்].

இன்று வாங்கிய புத்தகங்கள்:

கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் [அவரின் கரிசல் காட்டு கடிதங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்].
காட்டில் ஒரு மான் – அம்பை [வீட்டின் மூலையில் ஒரு சமையலறை படித்து ரசித்த ஒரு படைப்பு].
பிரசாதம் – சுந்தர ராமசாமி [ஒரு புளியமரத்தின் கதை படித்து அசந்து போயிருக்கிறேன்].
விந்தை மனிதர் ஜி.டி. நாயுடு – ஆ. துரைக்கண்ணு [என்ற அம்மணியோட ஊர்க்காரர்ங்கோ!]
ஒரு வண்ணத்துப் பூச்சியின் கோபம் – பசுமைக்குமார்.
ரமாவும் உமாவும் – திலீப்குமார்
ஒற்றனின் காதலி – கண்ணன் கிருஷ்ணன்
ஃபிஜித்தீவு [கரும்புத் தோட்டத்திலே] – துளசி கோபால் [அட நம்ம டீச்சர் தாங்க!]
இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் – சி. லிங்கசாமி
பாரதியார் கவிதைகள் – என்னிடம் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தினை படிப்பதற்காய் எடுத்துக்கொண்டு சென்று திருப்பித்தராத அந்த நண்பரை என்ன செய்யலாம்?

கிழக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் விற்பனைக்கில்லையாம்.  ஆர்டர் கொடுத்தால் அனுப்பி வைப்பார்களாம்.  அங்கே தான் வாத்தியாரின் நிறைய நாவல்கள் இருந்தது.  ஏக்கத்துடன் பார்த்து விட்டு வந்துவிட்டேன்.  அடுத்த முறை செல்லும்போது ஆர்டர் கொடுத்துவிட்டு வரவேண்டும்.

மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட மாலை தில்லி தமிழ் சங்கத்தில் எஸ் ரா அவர்களின் “கதை வழி நடந்தேன்” உரையாடல் இருந்ததால் கிளம்பினோம். 

அன்றைய பொழுது புத்தகத்தேடல்களுடனும், பதிவர் சந்திப்புடனும் இனிதே கழிந்தது.  இனி என்ன, வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாய் படிக்க ஆரம்பிக்க வேண்டும். நான் படிக்க ஆரம்பிக்கிறேன்...  நீங்களும் படிங்க – தொடர்ந்து எனது வலைப்பூவினையும்!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

புதன், 29 பிப்ரவரி, 2012

உடைந்த சாவி – எஸ். ரா. சொன்ன கதை


[பட உதவி:  கூகிள்]

ஒரு பிரபல அமெரிக்க வங்கியின் மேலதிகாரிஅவருக்குத் தேவையான எல்லாப் பொருளையும், வசதிகளையும் காசு கொடுத்து வாங்காது அட்டையைத் தேய்த்து வாங்கும் பணக்காரர்வசதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் எண்பதாவது மாடியில் குடியிருக்கும் அவர் ஒரு நாள் தனது குடியிருப்பிலிருந்து வெளியே வர சாவி போட்டுத் திறக்க முயற்சிக்கும்போது சாவி உள்ளே மாட்டி உடைந்து விட, உடனே அலைபேசியில் உதவியாளரை அழைத்து பூட்டைத் திறக்க ஆள் அனுப்புமாறு சொன்னார்பூட்டினை மாற்றுச் சாவி செய்து திறக்க வந்த ஆள் சொன்னார், “பூட்டினை திறக்க பத்து டாலர் கதவின் கீழ் வழியே தள்ளுங்கள்”.

அந்த அதிகாரிதான் காசே வைத்துக்கொள்ளாத ஆளாயிற்றே… ”நீ கதவைத் திற நான் அட்டையைத் தேய்த்து உனது பணிக்கான கூலியைத் தருகிறேன்என்றாராம்இல்லை ஐயாவேலை முடிந்த பின் பலர் கூலி தராததால்வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னரே கூலி வாங்குவது என எங்கள் சங்கத்தில்  முடிவு செய்துவிட்டோம்என்று அந்த நபர் சொல்ல, வந்ததே  அதிகாரிக்குக் கோபம், "நீ இல்லையென்றால் என்ன, நான் வேறு யாரையாவது வைத்து கதவினைத் திறந்து கொள்கிறேன்!" என்று கூறி அவரை திட்டி அனுப்பினார்.   அந்த நபர், "நான் சங்கத்தில் உங்களைப் பற்றி ஒரு புகார் எழுதி விடுகிறேன்எங்கள் சங்கத்து ஆட்கள் யாரும் உங்கள் பூட்டினைத் திறக்க மாட்டார்கள்" என சொல்லிச் சென்றார்.

அதிகாரி உடனே தனது கீழே வேலை செய்யும் நபரை அழைத்து, நீ வந்து மாற்று சாவி போட்டு எனது வீட்டைத் திற எனச் சொல்ல, “சார் நீங்க இரண்டு நாளுக்கு முன்னாடி நான் அலுவலக நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கேட்டபோது, அலுவலகம் முடிந்த பின் செல்லச் சொன்னீர்கள், அது போல, இதுவும் அலுவலகம் சாரா விஷயம் அதனால் அலுவலகம் முடிந்தபின் வந்து கதவினைத் திறக்கிறேன்எனச் சொல்ல, அவரையும் திட்டினார்உடனே அவரது உதவியாளர், எனக்கு இது நல்ல வாய்ப்பு, என்னைத் திட்டியது பற்றி மேலதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறேன் என சொன்னார்.

அடுத்து அந்த வங்கி அதிகாரி, தனது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை அழைத்து, தான் வீட்டினுள் மாட்டிக்கொண்டதாகவும், மாற்றுச் சாவி வைத்து திறக்கும்படி சொல்ல, காவலாளி சொன்னாராம் – “எத்தனை முறை என்னை சட்ட திட்டங்கள் சொல்லி மிரட்டுவீர்கள், இப்போது நீங்களேவீட்டின் உரிமையாளர் வீட்டிலிருக்கும்போது, காவலாளி மாற்று சாவி போட்டுத் திறக்கக்கூடாதுஎன்ற சட்டத்தினை மீறச்சொல்கிறீர்களே…  என்னால் முடியாது என்று அவரும் மறுத்து விட்டார்.

அடுத்தது அவர் அழைத்தது யாரை  என நினைக்கிறீர்கள்….  இவர்கள் எல்லோரும் வெளி ஆட்கள்என் காதலி என்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என அவளை தொலைபேசியில் அழைக்க, அவளோ , “என்னை எத்தனை முறை வரச்சொல்லிவிட்டு, அலுவல் வேலையில் மூழ்கி நீங்கள் வாராது என்னைக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள்!, அதனால் இரவு வரை காத்திருங்கள்என்று சொல்லி அலைபேசியை அணைத்தாளாம்.

இத்தனை பேரும் உதவ மறுக்க, வங்கி அதிகாரி இத்தனை நேரம் தனக்கு நடந்த அனைத்தையும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாராம்இத்தனை நாட்களாக, பணம், வசதி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைத்தோமே, சக மனிதர்களை மதிக்காது, அவமதித்து விட்டோமே, அனைவரோடும் பாரபட்சமின்றி பழகி நட்போடு இருந்திருந்தால் இன்று இப்படி ஆகியிருக்காதேஎன்று வருந்தினாராம்.

[பட உதவி:  கூகிள்]


இத்தனை காலம் எவ்வளவு தவறு செய்து விட்டோம் என அவர் உணர்ந்து வருந்திக்கொண்டிருந்த போது, ”என்னதான் இருந்தாலும் பாவம் ஒரு நாள் முழுவதும் வீட்டில் அடைந்திருப்பது கடினம் என எண்ணி”, ஒரே சமயத்தில் அவர் வீட்டின் கதவுகளைத் திறக்க வந்து சேர்ந்தார்கள்பூட்டு-சாவி பழுது பார்ப்பவர், உதவியாளர், காவலாளி மற்றும் காதலி ஆகியோர்.

திறந்து வீட்டினுள் வந்த அனைவரையும் பார்த்து அந்த அதிகாரி சொன்னார் – “இத்தனை நாட்களாக மூடனாக இருந்த என்னைத் திருந்த வாய்ப்பளித்த இந்த உடைந்த சாவிக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்உங்கள் அனைவருக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறதுஉங்களுக்கும் எனது நன்றிகள் எனச் சொன்னாராம்.

உடைந்த சாவியே உனக்கு எனது நன்றிகள்….

நாமும் சாவி உடையும் வரை காத்திருக்காது கதையின் கருத்தினைப் புரிந்து கொள்வோம்.

மீண்டும் சந்திப்போம்

நட்புடன்
வெங்கட்.