ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 93
இந்தப்
பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின்
சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற
தலைப்பின் கீழே இருக்கிறது.
தக்ஷிணேஸ்வர் காளி கோவில்....
தக்ஷிணேஸ்வர்
காளி கோவிலில் சில நிமிடங்கள் இருந்து காளியுடன் கொஞ்சம் அளவளாவிய பிறகு
அங்கிருந்து புறப்பட்டோம். கங்கையின் கரைக்கருகே
இருக்கும் குறுகிய சந்துகள் வழியே எங்களை அழைத்துக் கொண்டு சென்றார் எனது தில்லி
நண்பர் – இவரை சென்ற பகுதியில் பார்த்தோம். வழியில் ஒரு சிறிய நடைபாதைக் கடை –
தள்ளு வண்டியில் வைத்து தேநீர் விற்பனை! அங்கே சில யுவன்களும் யுவதிகளும் அமர்ந்து
ஒரு கையில் சிகரெட் புகைய மற்ற கையில் ”குல்லட்” தேநீர். ஆண் பெண்
வித்தியாசமில்லாது “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என்ற விளம்பரத்தினை மீண்டும் காட்சிப்படுத்திக்
கொண்டிருந்தார்கள்.
”குல்லட்” எனும் மண் கோப்பையில் தேநீர்
எங்களுக்கும் தேநீர் அருந்த அவசியம் இருக்கவே
பக்கத்தில் நின்று மூன்று லால் சாய், மூன்று தூத் சாய் சொன்னோம். எங்களுடன் இருந்த
மலையாளி ஒருவர் அந்த யுவதிகள் சிகரெட் புகைப்பதை படம் எடுக்க புகைப்படக் கருவியை எடுக்க
பாய்ந்து தடுத்தேன்! இருப்பதோ வெகு அருகில், எதற்கு வம்பு என்று அவர்களைத் தடுத்தது
நல்லதாகப் போயிற்று! என்னதான் பெங்காலி மொழி பேசும் நண்பர் உடன் இருந்தாலும், இந்த
மாதிரி சமயங்களில் பிரச்சனை வந்தால் அதைத் தடுக்க முடியாது – அதுவும் மேற்கு வங்கத்தில்!
யார் என்ன பேசுகிறார் என்பதே புரியாத போது என்ன செய்ய முடியும்! பெரும்பாலும் இந்த
மாதிரி பயணங்களில் அடுத்தவர்களை படம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கங்கையில் ஒரு குளியல் போடலாமா?
மீன் வாங்கிட்டு, இப்படியே இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகுச் சவாரி செய்யலாம்!
கரையில் அமர்ந்து சிலர் அரட்டை அடிக்க, சிலர் சிந்தனையில் இருக்க, சிலர் கடலை வறுக்கிறார்கள்!
தேநீர் அருந்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.
எங்களை அவர் அழைத்துச் சென்றது பழைய கொல்கத்தாவின் சந்துகள் வழியாக. ஏழு சகோதரிகள்
மாநிலப் பயணத்தில் எங்கேயும் Shopping என்று பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை. மொத்தம்
பதினைந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருந்த நாங்கள், வீடு திரும்பும்போது ஏதாவது
வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என கேரள நண்பர்கள் சொல்லி இருந்தார்கள்! அதனை dhதாdhதாவிடம்
சொல்லி இருந்ததால் அவர் எங்களை ஒரு ஸ்பெஷல் கடைக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருந்தார். அந்த கடையை நோக்கி தான் நாங்கள் சென்று கொண்டிருந்தோம்.
சந்து சந்தாக இருக்கும் இடங்களில் நடந்து....
பெண்களின் கழுத்திற்கு சங்கை உவமையாக
சொல்வது கவிஞர்கள் வழக்கம். இராமயணத்தில் கூட
இந்த உவமைகள் உண்டு என்பதை பார்த்திருக்கிறேன். இணையத்தில் சங்கு கழுத்து எனத் தேடிய
போது கிடைத்த ஒரு கவிதை கீழே…
சந்தனமும் சவ்வாதும்
சண்டையிட்டுக் கொண்டன
மணப்பதில்
யார் உசத்தி?
அவள் இருப்பதை
மறந்துவிட்டீர்களே!
சாந்தப்படுத்தியது
காற்று!
முகவரித் தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
காற்று
கைப்பிடித்துச் சென்று
காட்டியது
மொட்டை மாடியில்
நீ கூந்தல்
உலர்த்திக் கொண்டிருந்தாய்!
காற்று
உன் கழுத்தில் பட்டதும்
அழகிய ஓசையாய்
மாறிற்று
உனக்குத் தான்
சங்கு கழுத்தாயிற்றே!
- இராதே [தலைப்பில் சுட்டினால் இவரது
வலைப்பூவுக்குச் செல்லலாம்!]
இதுல ட்ரயின் வருமா? கண்டிப்பா வரும்! சர்க்குலர் ட்ரயின்!
நிறைய பேர் நடுவுல உட்கார்ந்து சாவகாசமா பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள்!
சங்கு கழுத்து என்று மட்டும் உவமை சொன்னால்
போதாது என மேற்கு வங்கத்தவர்கள் இந்த சங்கை வைத்து பெண்களின் கைகளுக்கு வளையலும் செய்கிறார்கள்
என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது. உங்களில்
சிலருக்குத் தெரிந்திருக்கலாம்! பலருக்கு என்னைப் போல தெரியாமல் இருக்கலாம்! சங்கு
கொண்டு வளையல் செய்யும் ஒரு இடத்திற்கு தான் எங்களை அழைத்துச் சென்றார் பெங்காலி நண்பர்.
எங்களை அழைத்துச் சென்ற குறுகிய வீதியில் சங்கு வளையல் செய்யும் நிறைய வீடுகள் இருந்தன. அப்படி இருந்த வீடுகளில் அவருக்குத் தெரிந்த ஒரு
இடத்திற்குச் சென்று பார்த்தோம்.
எது சரியாக இருக்கும்? தேர்ந்தெடுக்கும் நண்பர்.....
சங்குகளை சின்னச் சின்ன வளையமாக வெட்டி,
அதை ஒரு மெஷின் கொண்டு நேர்த்தியாக கை வளையல்களாகச் செய்து தருகிறார்கள். மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளோடு பார்க்கவே அழகாய்
இருக்கிறது இந்த சங்கு வளையல்கள். சங்கு வளையல்கள்
பார்க்க மிகவும் அழகாய் இருந்தாலும், இதை பராமரிப்பது கொஞ்சம் கடினமான வேலை – மிகச்
சுலபமாக உடைந்து விடும் தன்மையுடையது – கீழே விழுந்தால் உடைந்து விடும். பத்திரமாக
வைத்துக் கொள்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்! எனது நண்பர்கள் வாங்கிக் கொள்ள, நான் வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தேன். அளவினையும், அதில்
இருக்கும் வேலைப்பாடுகளையும் பொருத்து விலை – ஒரு ஜோடி வளையல் 250 ரூபாய் முதல் கிடைக்கிறது.
வளையல் செய்ய நான் தயார் நீங்க தயாரா?
தயாராகும் சங்கு வளையல்....
சங்குகளை முன்னரே வட்ட வடிவில் வெட்டி
வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான மாடலைச் சொன்னால், நம் கண் எதிரேயே அழகாய் செய்து
தருகிறார்கள். என்ன பிரச்சனை என்றால் அந்த மெஷினில் வளையலைச் செய்யும் போது நிறைய தூசி
பறக்கிறது! மிக லாவகமாக வளையல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தேவையான வளையல்களை செய்து முடிக்க அவர் உழைப்புக்கான
ஊதியத்தினைக் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம்.
பெரும்பாலும் குறுக்குச் சந்துகள் தான் எங்கும். இதில் வாகனங்களில் செல்வது
வேலைக்கு உதவாது என்பதால் வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.
சின்னச் சின்ன சந்துகளில் நடைப்பயணம் தொடர்ந்தது....
சங்கு வளையல்கள் வாங்கியாயிற்று – அடுத்ததாய்
எங்கே சென்றோம்? இதுவும் கொல்கத்தாவின் ஒரு பாரம்பரியமான விஷயம் நடக்கும் இடத்திற்கு
தான். அந்த இடம் எந்த இடம் என்று அடுத்த பகுதியில்
சொல்கிறேன்!
தொடர்ந்து பயணிப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
