செவ்வாய், 26 ஜனவரி, 2016

புதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.....


தென்னையும் சூரியனும் விளையாடிய கண்ணாமூச்சி....

சென்ற வருடம் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சூழ்நிலைக் கைதியாக இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை. அதன் பிறகு தீபாவளி சமயத்தில் தமிழகம் வரும்போது புதுக்கோட்டை வருகிறேன் என்று புதுக்கோட்டை நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். அவர்களும் நிச்சயம் சந்திக்கலாம் வாருங்கள் என்று பதில் தந்தார்கள்.  அதே சூழல் தீபாவளி சமயத்திலும் என்னை தமிழகம் வர விடவில்லை! ஏதோ அன்னிய நாட்டு சூழ்ச்சியோ என்று கூடத் தோன்றியது.




இரை தேடும் மயில் - வீட்டின் அருகே இருக்கும் பல மயில்களில் ஒன்று!

அதன் பிறகு பொங்கல் சமயத்தில் தமிழகம் வருவது முடிவானதும் நண்பர் கஸ்தூரி ரெங்கனின் ஃபேஸ்புக் உள்டப்பியில் 17-ஆம் தேதி புதுக்கோட்டை வந்தால் நண்பர்களைச் சந்திக்க இயலுமா என்று 13-ஆம் தேதி கேட்டிருந்தேன். 15-ஆம் தேதி காலை வரை தகவல் இல்லாததால், கஸ்தூரி பணிச்சுமையில் பார்த்திருக்க மாட்டாரோ என்று யோசித்தேன். என்னிடமும் அவர்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் இல்லாததால் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!



சாலை ஓரப் பூ ஒன்று - பூவா [அ] காயா?

ஆனால் 15-ஆம் தேதியே அலைபேசியில் ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. பேசியது கஸ்தூரி ரெங்கன். 17-ஆம் தேதி சந்திக்க முடியுமா என்பதை முத்துநிலவன் ஐயாவிடம் பேசிய பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருந்தார். சிறிது நேரத்திலேயே சகோதரி கீதா 17-ஆம் தேதிக்கு பதில் 24-ஆம் தேதி புதுகை வர இயலுமா எனக் கேட்க, 24-ஆம் தேதியே வருகிறேன் எனச் சொல்லி விட்டேன்.  அதற்குப் பிறகு அவர்கள் சொன்னது தான் கொஞ்சம் உதறல் எடுக்க வைத்தது! வேறொன்றுமில்லை, வீதிகலை இலக்கியக் களம் 24-ஆம் தேதி நடத்தப்போகும் 23-ஆவது இலக்கியக் கூட்டத்தில் அடியேன் “சிறப்பு விருந்தினர்என்று சொல்லி விட்டார்.   



அழைப்பிதழ்....

அதன் பிறகு நடுநடுவே அலைபேசியில் அழைத்தும், மின்னஞ்சல் மூலம் கூட்டத்திற்கான அழைப்பிதழும் அனுப்பி தொடர்பில் இருந்தார். முத்துநிலவன் ஐயாவும், நண்பர் கஸ்தூரி ரெங்கனும் அலைபேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள்.  24-ஆம் தேதி காலையில் திருவரங்கத்திலிருந்து டவுன்பஸ் மூலம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கே தயாராக இருந்த புதுக்கோடை பேருந்தில் [One to One!] அமர்ந்து கொண்டேன். 09.30 மணிக்கு தான் கூட்டம் ஆரம்பிக்கும் என்றாலும், கூட்டம் ஆரம்பிக்கும் முன்னரே சென்று சேர்ந்து விடவேண்டும் என்ற காரணத்தினால் முன்னரே புறப்பட்டேன்.


சிறப்பான பணியில் ஈடுபட்டிருக்கும் விதைக்கலாம் குழுவினர்...... ஆலங்குடியில் மரம் நடு விழா....

மத்தியப் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேருந்து TVS Toll Gate-ல் சிலரை ஏற்றிக் கொண்ட பிறகு வேறு எங்கும் நிறுத்தாது நேரே புதுக்கோட்டையில் தான் நிறுத்தினார்கள் – காலை 08.30 மணிக்கே புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தள்ளி விட்டார்கள்!  கஸ்தூரி தான் பாவம் – ஆலங்குடியில் விதைக்கலாம்குழுவினரோடு மரம் நடும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் என்னை பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்ல முடியவில்லையே என்று தவித்தார்.  கவலை வேண்டாம், உங்கள் சீரிய பணியை முடித்து பொறுமையாக வாருங்கள், எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது எனச் சொல்லி, அபிராமி உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டேன்.  பூரி-மசாலா மற்றும் ஒரு காபி! நன்றாகவே இருந்தது!


பேருந்து நிலையத்தில் நானும் தமிழ் இளங்கோ ஐயாவும்.....

புதுகை புதிய பேருந்து நிலையத்தின் மேலே இருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு சமையற் கலைக் கல்லூரியில் தான் அன்றைய நிகழ்வு என்பதால், அங்கே செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு மீண்டும் வந்தேன். கல்லூரி பேருந்து நிலையத்தின் முதல் மாடியில் என்பதால் அங்கே வர, கீழேயே காத்திருக்க போடப்பட்டிருக்கும் இருக்கை ஒன்றில் திருச்சி வலைப்பதிவர் தமிழ் இளங்கோ ஐயா அமர்ந்திருந்தார்.  முன்னரே அவரைச் சந்தித்து இருப்பதால் நேரடியாக அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.  அங்கே எதிரே அமர்ந்திருந்த ஒரு இளைஞரிடம் தனது கேமராவினைக் கொடுத்து எங்கள் இருவரையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுக்கச் சொல்லி அந்த நினைவையும் சேமித்துக் கொண்டோம்.



சகோதரி கவிஞர் மு. கீதா....


வரும் கால இலக்கியவாதி - ஜெய்குட்டி - கவிஞர் வைகறையின் வாரிசு....


கவிஞர் வைகறை....

09.30 மணிக்கு சகோதரி கீதா அவர்கள் வந்து சேர, அவருடன் நிகழ்வு நடக்கும் முதல் மாடிக்குச் சென்று சேர்ந்தோம். இந்த மாதக் கூட்டத்தினை சகோதரி கீதாவுடன் சேர்ந்து நடத்த இருக்கும் கவிஞர் வைகறை குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.  ஒவ்வொருவராக வந்து சேர “படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களது வாசிப்பனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.  அதன் பிறகு வீதி கலை இலக்கியக் களத்தின் 23-வது கூட்டம் சகோதரி கீதா அவர்களின் வரவேற்புரையோடு துவங்கியது.



தலைமை தாங்கிய திருமிகு குருநாத சுந்தரம் அவர்கள்.....


படித்ததில் பிடித்தது - வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட திரு நடராஜ்...



படித்ததில் பிடித்தது - வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்ட திரு தமிழ் இளங்கோ அவர்கள்...

கவிஞர் சோலச்சியின் பாடல், கவிஞர் நிலாபாரதி அவர்கள் “வீணா போன வேட்டிமற்றும் சடுகுடுஎன்ற தலைப்பில் வாசித்த கவிதைகள், புதுகை செல்வா அவர்கள் எழுதிப் படித்த தலைப்பிடப்படாத கதை, மாணவர் சாம்ராஜ் அவர்கள் வாசித்த அவரது எட்டாவது கவிதை, திரு செல்வகுமார் அவர்கள் பகிர்ந்து கொண்ட கர்ப்பம் யாதெனில்?  மற்றும் புகை படிந்த போதிமரங்கள் கவிதைகள், திரு கிருஷ்ண வரதராஜன் அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், திரு நசிகேதன் அவர்கள் பகிர்ந்து கொண்ட “உப்பு வேலிநூல் அறிமுகம், நண்பர் கஸ்தூரி ரெங்கன் அவர்கள் பகிர்ந்து கொண்ட இலக்கியவாதி Thomas Hardy அவர்களின் அறிமுகம் என ஒவ்வொரு நிகழ்வினையும் மேடையில் அமர்ந்து ரசித்தேன்.



புத்தகங்கள் - நினைவுப் பரிசாக - முத்துநிலவன் ஐயாவிடமிருந்து.....


பூங்கொத்து - நண்பர் செல்வக்குமார் அவர்களிடமிருந்து.....



சந்திப்பில் கிடைத்த பொக்கிஷங்கள்......



மற்றுமோர் அன்புப் பரிசு - நண்பர் கஸ்தூரி ரெங்கன், சகோ மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள் தந்தது - புத்தக ஆசிரியர் தில்லி நண்பர் ஷாஜஹான்....

அதன் பிறகு முத்துநிலவன் ஐயா, “சிறப்பு விருந்தினர்பற்றிய அறிமுகம் செய்து, அட அதாங்க..  என்னைப் பற்றிய ஒரு அறிமுகம் செய்து சில புத்தகங்களையும் [கொடுத்த புத்தகங்கள் படத்தில்] கொடுத்து என்னை திக்குமுக்காடச் செய்தார்.  நண்பர் செல்வகுமார் ஒரு அழகிய பூங்கொத்து தர, நண்பர் கஸ்தூரிரெங்கனும் அவரது துணைவி மைதிலியும் தில்லி நண்பர் ஷாஜஹான் அவர்கள் எழுதிய “சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன்புத்தகத்தினை பரிசளித்தார்கள்.



சுவைமிகு வாழைப்பூ வடை.....  படம் இணையத்திலிருந்து....

நிகழ்வின் போது நடுவே கவிஞர் நீலா ஆலங்குடியில் துவங்கி உள்ள இயற்கை உணவகத்திலிருந்து காய்கறி சூப், நவதானிய சுண்டல்,வாழைப்பூ வடை, வரகரசி பாயாசம் ஆகிய இயற்கை உணவுகளை ருசிக்கத் தந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு நானும் தமிழ் இளங்கோ ஐயாவும் திருச்சி திரும்ப தயாரான போது, ‘மதிய உணவினைமுடித்த பிறகு தான் அனுப்புவோம் என அன்புக் கட்டளையோடு அபிராமி உணவகத்தில் சுவையான மதிய உணவினையும் முடித்துக்கொண்டபிறகு தான் எங்களை வழியனுப்பினார்கள். 



நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருடனும் ஒரு புகைப்புடம் - நினைவுக்காக....  

தமிழ் இளங்கோ ஐயாவும் நானும் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வரை சேர்ந்து வந்து அதன் பிறகு அவரவர் வழி பயணித்தோம்.  பேருந்தில் பயணித்த போது கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பதிவாக வந்தாலும் வரும்!




நாள் முழுவதும் மிகச் சிறப்பாக அமைந்து, கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்வித்தது என்று சொன்னால் மிகையாகாது.  நண்பர்களுடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என ஆசைப்பட்டாலும் ஒவ்வொருவரும் வீடு திரும்பி அடுத்த வேலைகளைக் கவனிக்க வேண்டுமே என்ற நினைவோடு நானும் புறப்பட்டேன்.  இந்த நாளை இனிய நாளாக்கித் தந்த புதுகை நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி......  இந்த நாள் என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து......

இச்சந்திப்பினைப் பற்றி நண்பர்கள் ஏற்கனவே எழுதிய பதிவுகளின் சுட்டிகள் ஒரு தொகுப்பாக, சேமிப்புக்காக இங்கேயும்.....

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23

வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!
வெங்கட் அவர்களுக்கு வீதி யில் வரவேற்புப் பூங்கொத்து!

புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம்.23


58 கருத்துகள்:

  1. அட! அருமையான சந்திப்பு. அதுவும் மேடையில் வெங்கட்ஜி! ஆஹா!! பதிவர் விழா போலவே இருக்கிறதே!! புதுக்கோட்டைக்காரர்களே "புது" "கோட்டைக்காரர்கள்"தான். அசத்திவிடுவார்கள்!! பிற பதிவுகள் இனிதான் பார்க்க வேண்டும்...அசத்தலான அழகான விதத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடையில் வெங்கட் ஜி! - எனக்கே அதிர்ச்சி தான் அது! வெட்கமும் கூட :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  2. அருமையான பகிர்வு. நல்ல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. வாழ்த்துகள். சந்திப்பு இனிமையாக முடிந்ததில் மகிழ்ச்சி. நேத்தும் பதிவர் சந்திப்புப் போல! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றும் பதிவர் சந்திப்பு - உண்மை தான்! :) பதிவர் சந்திப்புகள் தொடர்கின்றன!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
  3. இனிய சந்திப்பினைப் பகிர்ந்த விதம் அழகு..

    குடியரசு தின நல்வாழ்த்துகள்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் புதுக்கோட்டையில் நடந்த வீதி கலை இலக்கிய களத்தின் 23 ஆவது இலக்கிய கூட்டத்தின் தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தார். மிக்க மகிழ்ச்சி. பலர் அறியாத அரிய தகவல்களை சுவையாய் பதிவிடுவோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு தான். வழக்கம்போல் படங்களும் தகவல்களும் அருமை. பாராட்டுக்கள்!

    குடியரசு நாள் நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. நன்றி..வெங்கட்ஜி...
    தங்கள் வருகையில் மகிழ்ந்தோம்...
    பதிவிலோ உற்சாகம்...
    தங்களைப் போன்றோர் தரும் அனுபவ பகிர்வுகள் எம்மை வளர்த்தெடுக்கின்றன...

    நன்றிகள்...மீண்டும் சந்திப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.

      நீக்கு
  6. இனிமையான சந்திப்பு... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. அருமையாக இருக்கின்றது வெங்கட் சார்.இதயங்களை இணைய வைக்கும் இணையம் என சொல்லும் படி உங்கள் நெகிழ்ச்சிக்கட்டுரை இருக்கின்றது.

    பதிவுகள் தொடரட்டும்,பயணங்கள் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  8. படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. இனிமையான சந்திப்புகள். மகிழ்நிறை தளத்தில் சுருக்கமாகப் படித்தேன். இங்கு விளக்கமாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. புதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு – தலைப்பு சரிதான். அன்று அங்கு இலக்கிய வீதிக்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர் வலைப்பதிவர்கள்தான். உங்களுக்கே உரிய பயணநடையில் சுவையான பதிவு. முன்பு ஒருமுறை திருச்சியில் உங்களைச் சந்தித்த போது சரியாகப் பேச முடியாமல் போயிற்று. புதுக்கோட்டையில் நிறையவே உங்களிடம் பேசி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் சந்திப்பில் அத்தனை பேச முடியவில்லை எனும் வருத்தம் எனக்கும் உண்டு..... இச்சந்திப்பில் கொஞ்சம் பேசினோம். மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  11. சக பதிவர்கள் உங்களை அசத்தி விட்டார்கள் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  12. மிகவும் அருமையான சந்திப்பினை அழகான படங்களுடன் நவதானிய சுண்டல் + வாழைப்பூ வடை போல ருசியாகவும், வரகரசி பாயாசம் போல இனிமையாகவும் தந்துள்ளீர்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  13. //”வீதி” கலை இலக்கியக் களம் 24-ஆம் தேதி நடத்தப்போகும் 23-ஆவது இலக்கியக் கூட்டத்தில் அடியேன் “சிறப்பு விருந்தினர்”//

    உயர்ந்த மனிதருக்கான, மிக உயர்ந்த, பொருத்தமான சிறப்பான தேர்வுதான் இது. தேர்வுக்குழுவினருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  14. //புத்தகங்கள் - நினைவுப் பரிசாக - முத்துநிலவன் ஐயாவிடமிருந்து.....//

    //பூங்கொத்து - நண்பர் செல்வக்குமார் அவர்களிடமிருந்து.....//

    திருச்சி முதல் தலைநகர் டெல்லி வரை அனைவருக்கும் இதில் பெருமையோ பெருமைதான்.

    ஸ்பெஷல் பாராட்டுகள், ஜி.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  15. தென்னையும் சூரியனும் விளையாடிய கண்ணாமூச்சி....
    என்ற முதல் படமும் .....

    இரை தேடும் மயில் - வீட்டின் அருகே இருக்கும் பல மயில்களில் ஒன்று!
    என்ற இரண்டாம் படமும் மிக அருமையாக உள்ளன.

    தங்களுக்கு என் இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் மகிழ்ச்சியளிக்கும் படங்களுக்கும் பாராட்டுகள் + நன்றிகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  16. நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி நண்பர் வெங்கட் அவர்களே! உங்கள் படங்களும், பதிவும் பார்த்து மகிழ்ந்தேன். பதிவுகளில் “வீணாப் போன வேட்டி” எனும் தனது கவிதையோடும் சில படங்களோடும் பதிவிட்டுள்ள சகோதரி நிலாபாரதியின் பதிவையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன் - http://muthubharathi13.blogspot.com/2016/01/blog-post_25.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் நிலாபாரதி அவர்களது பதிவினையும் இப்போது சேர்த்து விட்டேன். தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

      நீக்கு
    2. தங்களது மீள் வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா

      நீக்கு
  17. புதுகைப் பதிவர்களின் விருந்தோம்பல் எப்போதுமே சிறப்புதான்! வீதி இலக்கிய அமைப்பும் மாதம் தோறும் கூட்டங்கள் நடத்தி சிறப்பாக செயல்படுகின்றது. சிறப்பான அனுபவங்களை சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  18. வாழ்த்துகள் ஜி தாங்கள் தீபாவளிக்கு ஊருக்கு செல்லாததற்க்கு காரணம் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதிதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி..... ஹாஹா :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  19. புதுக்கோட்டை நண்பர்களின் விருந்தோம்பலுக்கு ஈடுஇணை இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  20. தாங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  21. அருமையான சந்திப்பு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  22. வழக்கமான பதிவுகளைப் போலவே தங்களது புதுக்கோட்டைப்பதிவு அருமையான படங்களுடனும் நுட்பமான செய்திகளுடனும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  23. இனிமையான சந்திப்பைச் சொல்லும் அருமையான பதிவு! புதுக்கோட்டையும் புதுதில்லியும் சங்கமம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  24. வாழ்த்துக்கள் வெங்கட். நாங்கள் நேரில் கலந்து கொண்டு ரசித்தது போல உணர்வினை தந்தது பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  25. உங்கள் பதிவுகளுக்கும் படைப்புகளுக்கும் கிடைத்த அங்கீகாரம் குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி......

      நீக்கு
  26. சாலையோரப் பூ ஒன்று. அதன் பெயர் 'துத்தி'. Piles- க்கு அதன் இலை அருமையான மருந்து. உடனே அனுபவமான்னு கேட்காதீங்க. கேள்வி ஞானம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ பற்றிய மேலதிகத் தகவலுக்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      கேள்வி ஞானம் தான்! ஒத்துக்கறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  28. அன்புள்ள அய்யா,

    வீதி கலை இலக்கிய அமைப்பின் சார்பாக நடந்த நிகழ்வில் தங்கள் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். புதுக்கோட்டை வலைப்பதிவர்களின் கோட்டைதான்...! வாழ்த்துகள்!

    நன்றி.

    த.ம.11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....