திங்கள், 21 ஜனவரி, 2019

பீஹார் டைரி – வெந்நீர் ஊற்று – குதிரை வண்டி பயணம்…



வாங்க... ஜாலியா ஒரு குதிரைப் பயணம் போகலாம்...

ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா பார்த்த பிறகு அடுத்ததாக எங்கே என்ற கேள்வி பிறந்தது – ராஜ்கீர் பகுதியில் இன்னும் சில இடங்கள் உண்டு பார்க்க என்றாலும் நாங்கள் சென்ற இடம் ஒரு கோவில் – அங்கே வெந்நீர் ஊற்றும் இருக்கிறது – அங்கே தான் செல்ல வேண்டும். அங்கே செல்வதற்கு முன்னர் வேறு சில விஷயங்களைப் பார்க்கலாம்.



இப்படி நிறைய வண்டிகள்....

ராஜ்கீர் பகுதியில் இருக்கும் ஒரு வசதி பற்றி தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். பீஹார் மாநிலத்தின் போக்குவரத்து வசதிகள் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை! பயணத்திற்கான வசதிகளை மிகவும் மோசமாக வைத்திருக்கிறது பீஹார் அரசாங்கம். இத்தனை வருடங்கள் ஆன பிறகும் போக்குவரத்து வசதிகள் இல்லாதிருப்பது ஒரு குறை தான். ஆனால் இந்த ராஜ்கீர் பகுதியில் மாற்று ஏற்பாடு இருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ராஜ்கீர் பகுதி முழுவதிலுமே நிறைய குதிரை வண்டிகள் – அழகான குதிரை வண்டிகள் நிறையவே இருக்கின்றன. அதிலே ஏறிக்கொண்டு பயணிகள் ராஜ்கீர் முழுவதும் சுற்றிப் பார்க்கிறார்கள். ராஜ்கீர் முழுவதும் இந்த குதிரை வண்டிகள் தான் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்....

நாங்கள் வாகனத்தில் பயணித்த போது, பல குதிரை வண்டிகளைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வண்டியும் மிகச் சிறப்பாக அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். பயணிகளும் தங்களது வாகனங்களை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு, இது போன்ற குதிரை வாகனங்களில் பயணிப்பதை அதிகம் விரும்புகிறார்கள். பயணத்தில் இந்த மாதிரி அனுபவமும் நமக்குக் கிடைப்பது நல்ல விஷயம் தானே.  நகரங்களில் வாழும் மக்கள் – குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்த குதிரை வண்டி பயணங்களை நிச்சயம் பார்த்திருக்க வாய்ப்பில்லை – பார்க்கவே முடியாத போது பயணம் எப்படி? குழந்தைகளும் பெரியவர்களும் ஒரு சேர இந்த குதிரை வண்டிப் பயணங்களை பெரிதும் விரும்பிச் செய்வதை எங்களால் பார்க்க முடிந்தது. குதிரை வண்டிகள் செல்வதை நான் எங்கள் வாகனத்திலிருந்து படம் எடுத்தேன். அப்படி எடுத்த சில படங்கள் இந்தப் பதிவில் உண்டு – வெளியிடாத படங்களும் நிறையவே உண்டு!  முடிந்தால் ஒரு ஞாயிறில் வெளியிடுகிறேன்.


ஜுஹாட் வண்டி.... அட்டாச்மெண்ட் பைக்கிலும்...

சரி குதிரை வண்டிப் பயணத்திலிருந்து வெந்நீர் ஊற்றினைப் பார்க்கச் செல்லலாம். இந்த வெந்நீர் ஊற்று இருக்கும் இடத்தினைப் பொதுவாக ப்ரஹ்ம குண்ட் என்று அழைத்தாலும், இங்கே சப்தரிஷி குண்ட், ப்ரஹ்ம குண்ட், சூர்ய குண்ட் போன்ற 22 குண்ட் உண்டு.  குண்ட் என்ற வார்த்தைக்கு குளம் என்ற அர்த்தம். சிங்கங்களின் வாயிலிருந்து தண்ணீர் குளத்தில் விழுந்து ஓடிக் கொண்டிருக்கும். இந்த அமைப்பிற்கு Dhதாரா எனப் பெயர். இப்படி மொத்தம் 52 Dhதாரா–க்கள் இங்கே இருக்கின்றன. இந்த ப்ரஹ்ம குண்ட்-ல் விழும் நீர் நல்ல சூடாக இருப்பதால் இதனை வெந்நீர் ஊற்று என்று அழைக்கிறார்கள். பொதுவாக கந்தகம் இருக்கும் பகுதியில் உள்ள நீர் நல்ல சூடாகவே இருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் இப்படியான வெந்நீர் ஊற்றுகள் உண்டு – டேஹ்ராடூன், மணாலி போன்ற சில இடங்களில் ஏற்கனவே வெந்நீர் ஊற்று பார்த்ததுண்டு.


எங்களை முந்திப் போயிடுவீகளா நீங்க!....

ப்ரஹ்மாவின் புத்ரனாகிய வசு ஒரு சமயம் இங்கே யாகம் வளர்த்த போது, தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாராம். தேவர்கள் வரும்போது குளிக்க வசதியாக இந்த இருபத்தி இரண்டு குளங்களை ப்ரஹ்மா அமைத்ததாக ஒரு கதை. சப்தரிஷி குண்ட்-ல் குளித்து பிறகு ப்ரஹ்ம குண்ட் மற்றும் இதர குண்ட்-களில் குளித்து இங்கே இருக்கும் லக்ஷ்மி நாராயண் கோவிலில் வழிபடுகிறார்கள். நாங்கள் சென்றபோதும் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் குளிக்கவில்லை. வேடிக்கைப் பார்த்து விட்டு வந்துவிட்டோம். இங்கே குளிக்கும் முன் சங்கல்பம் செய்து வைக்கிறேன் என்ற பெயரில் நிறைய பணம் பறிப்பதையும் பார்க்க முடிந்தது. இது போன்று சுற்றுலா பயணிகள் வரும் இடங்களில் இப்படியும் சிலர் இருப்பதைத் தவிர்க்க முடியாது. எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. சுற்றுலா வருபவர்களை ஏமாற்றும் விதத்தில் பலரும் நடந்து கொள்கிறார்கள்.


ப்ரஹ்ம குண்ட் பகுதி கடைகள்....

ப்ரஹ்ம குண்ட் பகுதியில் சில நிமிடங்கள் இருந்த பிறகு வெளியே இருந்த கடை ஒன்றில் தேநீர் அருந்தினோம். கூடவே பிஸ்கெட், கேக்ஸ் போன்றவை மட்டுமே கிடைத்தது. சரியான உணவகங்கள் இல்லாத காரணத்தினால் அன்றைக்கு மதிய உணவு சாப்பிட முடியவில்லை. ராஜ்கீர் இன்னும் சில இடங்களும் உண்டு என்று சொல்லி இருந்தேன். அப்படி பார்க்க வேண்டிய இடங்களாக சிலவற்றை பட்டியல் இடுகிறார்கள். அப்படி பட்டியல் இடப்படும் இடங்களில் ஒன்று ஸ்வர்ண் Bபண்dடார்! அதாவது தங்க விற்பனை நிலையம்! அங்கே தங்கம் பெரும் அளவில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதனை எடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒருவருக்கும் தங்கம் கிடைக்கவில்லை என்றும் எங்கள் ஓட்டுனர் சொல்லிக் கொண்டு வந்தார்.


குல்லட் என அழைக்கப்படும் தேநீர் குவளை....

இந்த ஸ்வர்ண் Bபண்dடார் ஒரு குகை. கி.பி. மூன்றாம்/நான்காம் நூற்றாண்டு காலத்தில் முனி வைரதேவா என்ற ஜெயின் முனி அவர்களால் அமைக்கப்பட்ட குகை என்றும் இங்கே நிறைய தங்கம் சேமித்து வைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். இங்கே தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்று தெரிந்ததால் பலரும் இங்கே தங்கத்தினைத் தேடினார்கள் என்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில், குகையை வெடி வைத்து தகர்த்து தங்கத்தினை எடுக்க முயற்சி செய்தார்களாம். இன்றைக்கு வரை தேடினாலும் தங்கம் என்னவோ கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்.  நாங்கள் சென்ற போது மாலை நேரம் ஆகிவிட்டதால் குகைக்குள் சென்று பார்க்கவில்லை. மேலும் தங்கம் மீது என்றைக்குமே எனக்கு ஈர்ப்பு இருந்ததில்லை! ஹாஹா…

நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வெந்நீர் ஊற்றா ஆஹா தொட்டி வேற அடுக்கி வைச்சிருக்கீங்க போல எல்லாரும் எடுத்துக் கொள்ளவா?!!!!!!...கொஞ்சம் எடுத்து வந்துக்கலாம்..ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவை தேநீர் குவளைகள். வெளியே கடையில் இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. சூப்பர் குன்ட்...இதற்கும் கதை ஸ்வாரஸ்யம்! குதிரை வண்டிகள் சூப்பரா ரொம்ப அழகாக இருக்கின்றன ஜி...நம்ம ஊர் வண்டியில் ஒரே ஒரு முறை பயணம் செய்ததுண்டு இருந்தாலும் பாவம் குதுரை என்று தோன்றியதால் அப்புறம் இல்லை.

    ஸ்வர்ண பண்டார்...ஆ குகையா....அழகா இருக்குமோ...

    எனக்கும் தங்கத்தில் ஈர்ப்பு சுத்தமா கிடையாது ஜி!!!

    நல்ல தகவல்கள். ராஜ்கீர் என்று வாசிக்கும் போதே ராஜ்கிரா என்றுதான் டக்குனு வாசிக்கத் தோனுது...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சில இடங்களில் குதிரை வண்டி பயணம் சென்றது உண்டு. தலைநகரில் கூட வெகு காலம் சதர் பஜார் பகுதியில் குதிரை வண்டிகள் இருந்தன. இப்போது இல்லை.

      ஸ்வர்ண பண்டார் குகை படம் இணையத்தில் பார்த்தேன். அழகாக இருக்கிறது. உள்ளே சென்று இருந்தால் இன்னும் தகவல்கள் தெரிந்து கொண்டு இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. குட்மார்னிங். ரேக்ளா வண்டி போல அழகாய் இருக்கிறது அந்த வண்டிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். ஆமாம். எனக்கும் ரேக்ளா வண்டிகள் நினைவுக்கு வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. குண்ட் என்பதோடு ஒரு ட சேர்த்தால் தெலுங்கில் குளம்! வெந்நீர் ஊற்றுகள் ரொம்ப சௌகர்யம்! சட்டன ஒரு வாளி எடுத்துவந்து விளாவி குளித்து விடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல மொழிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையது தானே...

      ஒரு வாளியில் எடுத்து விளாவி குளிக்கலாம்... ஹாஹா.... அக் குளத்தில் பலர் குளிக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அந்த குகைக்குள் சென்று பார்த்திருக்கலாம்... இன்னார் கண்களுக்குதான் தங்கம் தெரியும் என்று உண்டாம்.... உங்கள் கண்களுக்கு தென்பட்டிருந்தால்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னார் கண்களுக்கு மட்டுமே தங்கம் தெரியுமா.... இது தெரியாமல் போச்சே..... ஹாஹா... எடுத்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. என்னைப்போலவே தங்களுக்கும் தங்கத்தில் ஈர்ப்பு இல்லாததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசு தங்கம் போன்று இருந்தால் போதும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. அழகான படங்களுடன் பதிவு அருமை.

    //நாங்கள் சென்ற போது மாலை நேரம் ஆகிவிட்டதால் குகைக்குள் சென்று பார்க்கவில்லை. மேலும் தங்கம் மீது என்றைக்குமே எனக்கு ஈர்ப்பு இருந்ததில்லை! ஹாஹா…//

    மாலை நேரம் இல்லையென்றால் குகைகுள் சென்று பார்த்து இருக்கலாம்.
    குகை இருட்டாய் இருக்கும் இல்லையா?
    தங்கத்தின் மேல் ஈடுபாடு இல்லாதது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைம்மா தற்போது விளக்குகள் போட்டு இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. இந்தக் குதிரை வண்டிப் பயணத்தைப் பார்த்தபோது, நான் 2008ல், தில்லியில் ரிக்‌ஷாக்களைப் பார்த்து, ரிக்‌ஷா பயணம் செய்து புகைப்படம் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி மட்டும் அல்லாது வட இந்தியா முழுமையாக ரிக்‌ஷாக்கள் நீக்கமற நிறைந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் இடத்தை பாட்டரி ரிக்‌ஷாக்கள் எடுத்துக் கொள்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. ஜெயின் முனிக்கு எதுக்குத் தங்கம்?!! ஒரு வேளை அதன் பின் வந்தவர்கள் யாரேனும் சேர்த்து வைச்சுருக்கலாமோ?...இல்லை குகை ஒரு வேளை தங்கம் போன்று மின்னுமாக இருக்குமோ உள்ளே!! நீங்கள் போய்ப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் இன்னும் கூடுதல் தகவல்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு வழிபாட்டு தலமாக இருந்ததாகவும் தெரிகிறது. மேலதிக தகவல்கள் உள்ளே சென்று இருந்தால் பகிர்ந்து இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  12. PETA இந்த குதிரை வண்டிகளை எதிர்த்து வழக்கு எதுவும் போடவில்லையா? மேனகா காந்திக்கு தெரு நாய்கள் உரிமை முக்கியம். ஆனால் குதிரை வண்டி ஒட்டக வண்டி காளை வண்டி போன்றவை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. அரசியல்வாதிகள் செலக்டிவ்.... வழக்கு யாரும் போட்டு இருப்பதாக தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  14. அருமை சார்... மீண்டும் வலைப்பூ என்ட்ரி கொடுத்திட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மகிழ்ச்சி ஸ்ரீ... தொடர்ந்து எழுதுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. குதிரை வண்டிகளை பார்த்ததும் பல வருடங்கள் முன்பு பல்லாவரத்தில் இருந்து பம்மல் வரை ஒரு டொக்கு விழுந்த குதிரை வண்டியில் பயணம் செய்தது நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் நினைவுகளை மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. அனைத்து போக்குவரத்து வசதியும் இருந்தால் நம் பகுதிபோல் குதிரை வண்டிகளும் மறைந்திருக்குமோ ?படங்களுடன் பகிர்ந்தவிதம் அருமை வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போக்குவரத்து வசதி இருந்து இருந்தால் இவை மறைந்து இருக்கக்கூடும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ர்மணிஜி.

      நீக்கு
  17. நிறைய தகவல்கள் அறிந்தேன் வெங்கட்ஜி.

    குதுரை வண்டி பார்க்கவே வித்தியாசமாக அழகாக இருக்கின்றது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய வண்டிகள் தான். நன்கு பராமரிப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  18. குதிரை வண்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது. முதல் முறை வெந்நீர் ஊற்று பார்த்தது நல்ல அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நீங்கள் வெந்நீர் ஊற்று முதல் முறை பார்த்தது இங்கு தானா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....