செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

கதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - காணொளி - சுந்தர வீதி



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட அந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Nothing is permanent in this world.  Just be a good person.  Love who you can, Help where you can, Give what you can. 


******




புளியோதரை புராணம் - 13 ஃபிப்ரவரி 2021:





சில வருடங்களுக்கு முன் என் கணவர் அப்போது வேலை செய்த செக்‌ஷனில் மாதம் ஒருமுறை அவரவர் மாநில உணவுகளை எல்லோருக்கும் சேர்த்து கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதுவும் பத்து பேருக்கு!!


ஒவ்வொருவரின் மாநில உணவுகளில் என் கணவரின் முறையும் வந்தது. நானும் அதற்கேற்றாற் போல் திட்டமிட்டு முதல் நாளே புளிக்காச்சல் என்று சொல்லக்கூடிய புளியோதரை மிக்ஸும், இனிப்புக்காக கடலைப்பருப்பு போளியும் தயார் செய்து கொண்டேன்.


குறிப்பிட்ட நாளன்று அதிகாலை முதல் திட்டமிட்டபடியே எலுமிச்சை சாதம், கொத்தமல்லி சாதம், புளியோதரை, தயிர் சாதம். தொட்டுக்கையாக உருளைக்கிழங்கு கறி, அப்பளம், வெங்காய தயிர்பச்சடி, ஊறுகாய் என எல்லாவற்றையும் தயார் செய்து பேக் பண்ணிக் கொடுத்து விட்டேன் 🙂


மாலையில் வந்த என் கணவர், எல்லோருக்குமே தாராளமாக இருந்ததாகச் சொல்லி மீதம் இருந்ததை ஒரு சிலர் அவர்கள் வீட்டுக்கும் எடுத்துச் சென்றதாகவும் சொன்னார். அடுத்த நாள் 'பாபிஜி (அண்ணி) கிட்ட கொடுங்க' என்று திரும்பித் தந்த டப்பாவில் Haldiram-இன் ஸ்வீட் பாக்ஸ் இருந்தது 🙂


அம்மாவின் அன்பு - 13 ஃபிப்ரவரி 2021:


என் அம்மாவிடம் யாரேனும் ஒருவர் தான் கருவுற்றிருப்பதாக சொல்லி விட்டால் போதும், முதலில் புளிக்காச்சல் செய்து ஒரு பாட்டிலில் எடுத்துக் கொண்டு, அதனுடன் ஏதேனும் ஒரு இனிப்பும் செய்து, இரண்டு முழம் பூவுடனும் கிளம்பி விடுவார்! எனக்கு தான் அந்த பாக்கியம் கிட்டவில்லை!


ஆதி’ஸ் கிச்சன் - காணொளி - இந்த வாரம் - 13 ஃபிப்ரவரி 2021:





பொதுவாக புளியோதரை எல்லோருக்குமே பிடித்தமானதாக இருக்கும். கோவில் பிரசாதத்தில் துவங்கி பிரயாணங்கள், லஞ்ச் பாக்ஸ் வரை இடம் பிடிக்கும் புளியோதரை. எனக்கு என்னவோ அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை 🙂


இந்த வாரம் Adhi's kitchen சேனலில் புளியோதரை தான் ஸ்பெஷல் 🙂 பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


How to make puliodharai mix at home by Adhi venkat/lunch box menu/புளியோதரை மிக்ஸ்/Tamarind rice!!



இந்த வாரத்தின் வாசிப்பனுபவம் - சுந்தர வீதி - அகிலாண்ட பாரதி





கோட்டை  வீட்டின் மூத்த மருமகளான சரோஜா, தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டாரை விட்டு தன் ஒரே மகன் வெங்கடேஷுடன் வாழும் நிலை.


இப்படியே பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஓடி விட்டதாக கதையின் வழியாகச் சொல்கிறார். தற்சமயம் காலில் அடிபட்டு மருத்துவமனையிலிருந்து நேராக கோட்டை வீட்டின் அவுட் ஹவுஸில் சில நாட்கள் தங்க வைக்கப்படுகிறார். இது நாத்தனார் மகனான கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாடு.


இங்கிருக்கும் நாட்களில் அக்கம் பக்கத்து மனிதர்களும், அவர்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் பேச்சும் சரோஜாவுக்கு ஆறுதலாகவும், ஒரு மாறுதலாகவும் இருக்கிறது. தன் வாழ்விலும் மாற்றம் நிகழாதா என்று நினைக்கிறாள்.


சரோஜாவுக்கு வாழ்க்கையில் இதுவரை எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை! வாயில்லா பூச்சியாக கணவன் ரங்கராஜன்! அண்ணியை வாழ விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்ட  இரு நாத்தனார்கள்!  எதையும் கண்டுகொள்ளாத மாமியார். சில வருடங்களிலேயே நடத்தையில் சந்தேகப்பட்டு கோட்டை வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இத்தனை வருடங்கள் கழிந்த பின்னும் மாறாத புகுந்த வீட்டு மனிதர்கள்! ஒரே ஆறுதலாக வாயில்லா ஜீவனான மகன் வெங்கடேஷ்.


சரோஜாவின் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா? மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ்ந்தாளா? என்பதை புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


கதை முழுவதும் வட்டார வழக்கில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பெயர் என்பது  சுவாரஸ்யம்..சுக்கு காபி வீடு,  நசுனாரி வீடு, எலியர் வீடு, தூக்குச்சட்டி வீடு என்று பலப் பெயர்கள். அதற்கு பெயர்க்காரணங்கள்! என்று கிராமத்து மனிதர்களுக்கே உண்டான சொலவடைகள்! “சுந்தர வீதி” என்ற தலைப்பில் அழகாக கதையை சொல்லிச் சென்ற விதம் அருமை. ஆசிரியர் அகிலாண்ட பாரதி அவர்களுக்கு, பாராட்டுகள்.


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

      நீக்கு
  2. அம்மாவின் புளியோதரை என்றுமே ஸ்பெஷல்.  நான் நல்ல புளிக்காய்ச்சல், புளியோதரையின் ரசிகன்!

    சுந்தர வீதி சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அம்மாவின் புளியோதரை என்றுமே ஸ்பெஷல்/ - உண்மை.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மிக அருமையான பதிவு.
    அம்மாவின் அருமை ஆதிக்குக் கிடைக்காதது
    வருத்தம் தான்.
    புளிக்காய்ச்சல் மிக அருமையாகத் தயாரித்திருக்கிறார்.
    வண்ணமும் செய்முறையும் மிக சிறப்பு.

    சுந்தர வீதி!! அதை எழுதியவர் பெயரும் இப்போதுதான் தெரியும்.
    நல்ல வாசிப்பனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    புளிக்காய்ச்சல் நன்றாக உள்ளது. நீங்கள் செய்து தந்து உங்கள் கணவரின் அலுவலக நண்பர்களால் பாராட்டை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .

    நம் அம்மாக்கள் செய்த புளியோதரை மிக்ஸ், புளியோதரை சாதம் என எதுவுமே மறக்க இயலாததுதான்.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள வருத்தம் புரிகிறது. உங்கள் அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு துணையாக எப்போதுமே இருக்கும்.

    சுந்தர வீதி கதை நன்றாக உள்ளது. வாழ்க்கையில் சோகமும், இன்பமும் எப்போதும் இணைந்து வருவதே இறைவன் தந்த வரம். கதம்ப பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹர்ன் ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. இன்றைய தலைமுறையினர் புளியோதரையை விரும்புவதில்லை.

    விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதிவிலக்குகள் உண்டு என்றாலும் நீங்கள் சொல்வது சரி தான் - பெரும்பாலோனோர் விரும்புவதில்லை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. பயணங்களில் புளியோதரை விட சிறந்தது எதுவுமில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்களும் புளியோதரையும் பிரிக்க முடியாதவை - நம் ஊரில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. ஆரம்ப வாசகம் மிக அருமை!
    தங்கள் கணவர் வெங்கட்டின் அலுவலக நண்பர்களுக்கு நீங்கள் செய்து கொடுத்த ஐட்டங்கள் எல்லாம் சூப்பர் ஆதி! அதுவும் இந்த புளிக்காய்ச்சல் படம் மிகவும் ஈர்க்கிறது. உடனேயே செய்து ருசிக்கத் தூண்டுகிறது! கதம்பத்தில் புளிக்காய்ச்சலால் அதிகமாகவே மணம் கமழ்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  9. புளிக்காய்ச்சல் எப்போதுமே வீட்டில் இருக்கும்படியாக செய்து கொள்வேன்..காரணம் குழம்பு வைக்காது அப்பளத்துடன் தொட்டுக்கொள்ளவும் மோர் சாதத்திற்கு ஊறுகாய் இல்லாத குறையை இது போக்கும் என்பதாலும்...கல்லில் பிசைவதால்தான் கோவில் புளியோதரைக்கு அத்தனை சுவை என என் நண்பன் சொல்வான்..அது நிஜமா என சமையல் வல்லுநர்கள்தான் சொல்லவேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புளிக்காய்ச்சல் எப்போதுமே வீட்டில் இருக்கும்படியாக செய்து கொள்வேன்// இது நல்ல விஷயம். பல சமயங்களில் உதவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  10. கதம்பம் அருமை மேடம்.
    புளிக்காய்ச்சல் தற்போது எனக்கு ஒத்துக்கொள்வதில்லை, பல் கூசுகிறது.
    எனவே எலுமிச்சை சாதம் மட்டுமே உண்கிறேன்.
    மின் நூல் அரிமுகம் சிறப்பு.
    நூலை தரவிறக்கம் செய்துவிட்டேன். விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயணங்களுக்கு மிகவும் உகந்தது புளியோதரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. புளிக்காய்ச்சலை முகநூலிலும் பார்த்தேன். விமரிசனம் நன்றாக இருப்பதோடு கதையைப் படிக்கத்தூண்டுகிறது. வாய்ப்புக் கிடைக்கணும். புளியோதரையைக் கல்லில் கலப்பதாகத் திரு ரமணி சொல்லுகிறார். எல்லா இடங்களிலும் அப்படிக் கலப்பதில்லை. மதுரையில் அழகர் திருநாள் எதிர்சேவையின் போது எங்க அப்பாவின் நண்பர் பரமசாமியின் வீட்டு மண்டகப்படிக்கு அம்மாதான் புளியோதரை கலக்கச் செல்வார். ஒரு பெரிய
    ஓலைப்பாயை விரித்துப் போட்டு அதில் அன்னத்தைக் கொட்டித் துளாவிப் பரப்பி இருப்பார்கள். புளிக்காய்ச்சலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலப்பார்கள். அந்தப் புளிக்காய்ச்சலில் மஞ்சள் பொடி சேர்த்துப் புளிப்பு, உப்பும் மட்டுமே இருக்கும். நெய்யில் நல்ல முழு மிளகை வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். பின்னர் நல்லெண்ணெயில் தாளிதம் செய்து வேர்க்கடலை/முந்திரிப் பருப்புச் சேர்த்துக் கலப்பார்கள். மிளகாய் வற்றலுக்கு நோ. சொல்லப் போனால் கருகப்பிலை கூட இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளியோதரை - மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....