திங்கள், 22 பிப்ரவரி, 2021

பாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மகிழ்ச்சியையும் அன்பையும் சேர்த்து வைப்பதில் பயனில்லை. அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 


******




சமீப மாதங்களில் மின்னூல் வாசிப்பு அதிகரித்திருக்கிறது - எனக்கும் இல்லத்தரசிக்கும்.  சஹானா இணைய இதழில் மாதா மாதம் மின்னூல்களைத் தேர்வு செய்து அதற்கான விமர்சனங்களை தரச் சொல்லி போட்டி வைக்கிறார்கள். முடிந்தவரை இருவருமே எழுதி வருகிறோம்.  எங்கள் இல்லத்திலிருந்தும் சில மின்னூல்கள் போட்டியில் உண்டு.  இந்த ஃபிப்ரவரி மாத போட்டியில் இருப்பது Adhi’s Kitchen Recipes (ஆதியின் அடுக்களையிலிருந்து) மின்னூல்.  படிக்க விருப்பம் இருப்பவர்கள் சுட்டி வழி தரவிறக்கம் செய்து படிக்கலாம்.  இந்த நாளில் நாங்கள் இருவரும் கற்பகாம்பாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பான “பாசிமணி” எனும் மின்னூலுக்கு முகநூலில் பகிர்ந்த விமர்சனம் இங்கே ஒரு சேமிப்பாகவும், உங்கள் பார்வைக்காகவும்! முதலில் இல்லத்தரசியின் விமர்சனம், அதைத் தொடர்ந்து எனது விமர்சனம்.  


*******





நூல்:  பாசிமணி

வகை:  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர்: கற்பகாம்பாள் கண்ணதாசன்

பக்கங்கள்:  72

வெளியீடு:  அமேசான்

விலை:  ரூபாய் 49/- மட்டும். 

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே!


பாசிமணி



இந்த நூல் எட்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. நூலின் தலைப்பைப் போல பலவித மணிகளை கோர்த்த பாசிமணிச் சரமாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான மனிதர்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது.


நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் பின் உள்ள அவர்களின் வாழ்க்கையும், அவர்களின் மனநிலையும், சந்திக்கும் சவால்களையும் கண்முன்னே காட்சிபடுத்துகிறார் ஆசிரியர்.


பாசிமணி:  நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு கல்வி கற்க வைக்க அவள் ஆசிரியர் கமலம் செய்த மெனக்கெடல்கள் வெற்றி பெற்றதா என்பது தான் கதை.


காதலுடன் காஃபி: கோயில் திருவிழாவில் சந்தித்த ஒரு பெண்ணை பற்றி விவரித்து அவளுடன் காதல் கொண்ட இளைஞன். இந்த காதல் இறுதியில்  என்னவாயிற்று?

விடியும் வரை: சுமதி என்ற பெண்ணின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வு தான் கதை. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்! என்று சொல்வார்களே! இவளுக்கு வாய்த்த கணவன்?


துணிக்கடையில் ஒருநாள்: துணிக்கடைக்குச் சென்று நமக்கு வேண்டிய உடை கிடைக்கும் வரை தேடுவோம்..ஆனால் இதுமாதிரி பலவித மனிதர்களை அன்றாடம் பார்க்கும் அந்தக் கடையில் வேலை செய்யும் பணியாளரின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?


நூறு ரூபாய் நோட்டு: சிலநேரங்களில் சாலையில் ரூபாய் நோட்டு தென்படும்..என்றாவது இதை தவற விட்டவரின் மனநிலையை நினைத்திருப்போமா?


அம்மாவுக்கு: கடிதம் எழுதுவது பொய்த்து விட்ட இந்த காலத்தில் ஒரு பெண் தன் உணர்வுகளை, மகிழ்ச்சியை கடிதம் மூலமாக வெளிப்படுத்துகிறாள்.


கூடு விட்டு கூடு பயணம்: வீட்டில் செல்ல மகளாக வளர்ந்த பெண் ஒருவள், தனியே முதன்முதலாக வெளியில் சென்று விட்டு வருகிறாள். அவளின் வெளியுலக அனுபவம் தான் கதை.


ட்வீட் ட்வீட்:


சின்னஞ்சிறு குருவியோடு சாரதாம்மா என்பவர் இணைத்துக் கொண்ட பந்தத்தை அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.


மொத்தத்தில் வாசிக்க  சுவாரஸ்யமான புத்தகமாக இருந்தது. ஆசிரியருக்கு பாராட்டுகள். அட்டைப்பட ஓவியமும் அழகு. பாராட்டுகள்.


நட்புடன்


ஆதி வெங்கட்.


******


மொத்தம் எட்டே எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது.  கதை மாந்தர்களாக சாதாரண மனிதர்களே கதையின் பிரதான கதாபாத்திரமாக அமைத்திருப்பது நன்று ஒவ்வொரு கதையும் சிறப்பாகவே இருக்கிறது.  எனக்கு அனைத்து கதைகளுமே பிடித்திருந்தன என்றாலும் ஒரு சில கதைகள் மிகவும் பிடித்தன.  எட்டு கதைகளில் சில கதைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். ஒரு வாசகனாக ஒரு சிறுகதையில் எதை எதிர்பார்ப்பேனோ அதையே தானும் எழுத முயற்சித்திருப்பதாக தனது முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் கற்பகாம்பாள் கண்ணதாசன். அந்த முயற்சியில் வெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது.


நூலின் தலைப்பாக வைத்திருக்கும் “பாசிமணி” தான் தொகுப்பிலிருக்கும் முதல் கதை. தன்னிடம் இருக்கும் ஊசி, சுறுக்குப்பை, மர சீப்பு, பாசி மணிகள் போன்ற பொருட்களை விற்க அல்லாடிக் கொண்டிருக்கும் தேவயானி.  கடைவீதியில் தன்னை பள்ளியில் சேர்த்து எட்டாப்பு வரை படிக்க உதவியாக இருந்த ஆசிரியர் கமலத்தினைப் பார்க்கிறாள் தேவயானி.  தான் தான் மேலே படிக்க முடியவில்லை, தனது மகளாவது மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கமலத்தின் உதவியைக் கோருகிறாள் தேவயானி - இந்த நிகழ்வினை வைத்து எழுதியது தான் முதல் சிறுகதை.  மிகவும் சிறப்பாக இருக்கிறது கதை.  


துணிக்கடையில் ஒரு நாள்: ஒரு துணிக்கடையில் பணிபுரியும் ஒருவர் - நாள் முழுவதும் பல வாடிக்கையாளர்களுக்கு துணிகளை அலுக்காமல், சலிக்காமல் காண்பித்துக் கொண்டிருப்பது அவர் வேலை.  தீபாவளிக்காக, அவர் வீட்டிலிருக்கும் மனைவிக்கும் குழந்தைக்கும் எப்படி துணி எடுத்தார் எனும் யதார்த்தம் சொல்லும் கதை.  


கூடுவிட்டு ஒரு பயணம்:  சிறு வயதிலிருந்தே அம்மா, அப்பாவின் கட்டுக்குள் அடங்கி இருந்த ஒரு பெண் - ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து மேலே படிக்க ஆசைப்பட, அவர் முதன் முதலில் தன்னந்தனியாக சென்று வந்த நிகழ்வினைச் சொல்லும் கதை!  சிறப்பாக எழுதி இருக்கிறார் - முதல் முதலாக தனியாகச் செல்லும் ஒரு பெண்ணின் பதட்டத்தினை! 


அம்மாவுக்கு…:  எப்போதும் வீடியோ காலில் பேசும் ஒருவர் அப்படி இல்லாமல் ஒரு கடிதம் அனுப்பினால்!  அதுவும் தனியாக இருக்கும் பெண்மணிக்கு - எழுதிய பெண்ணுக்கு கடிதம் பெற்றுக் கொண்ட பெண்மணி கொடுத்த மனோதைரியம், பேசும்போது சொல்வதைக் காட்டிலும் கடிதம் வழியே மட்டுமே சில உணர்வுகளைக் கடத்த முடியும் என்று சொல்லும் அந்தப் பெண் - என்ன சொன்னார்?  அந்த இரண்டு பேருக்குமான உறவு என்ன என்பதை “அம்மாவுக்கு…” என்ற சிறுகதை வாயிலாக மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். 


ட்வீட் ட்வீட்:  ஒரு வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணி - வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டுக்கு வந்து செல்லும் குருவி, வீட்டில் குட்டி போட்டிருக்கும் சுண்டெலி என அனைத்திடமும் பேசிக் கொண்டிருக்கார் - அனைத்திற்காகவும் கடவுளை வேண்டிக் கொள்கிறார் - அப்படியான ஒரு கதாபாத்திரம் குறித்த சிறுகதை தான் இந்த ட்வீட் ட்வீட் கதை!  மிகவும் அழகாகவும் பாந்தமாகவும் சொல்லி இருக்கிறார் இந்த கதையை.  


மற்ற கதைகளும் நன்றாகவே இருந்தன என்றாலும் அம்மாவுக்கு கதை எனக்கு மிகவும் பிடித்த கதையாகச் சொல்வேன்!  மொத்தமாக 72 பக்கங்களே கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பினை நீங்களும் தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே! 


வெங்கட் நாகராஜ்


*******

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


https://venkatnagaraj.blogspot.com/p/blog-page.html


என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. நல்ல நூல் அறிமுகங்கள்.
    நூலை தறவிறக்கம் செய்துவிட்டேன்.
    விரைவில் வாசிக்கிறேன் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு


  2. எப்படி உங்களால் எழுதிக் கொண்டும் அதே நேரத்தில் நிறைய புத்தகங்களும் படிக்க முடிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... எனக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்குப் பிடித்ததை மட்டுமே செய்கிறேன் - தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. சுறுசுறுப்பாக படிப்பதே பெரிய விஷயம்.  படித்ததை பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ள செயல்.  பாராட்டுகள் திரு அண்ட் திருமதி வெங்கட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது பாராட்டிற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  7. அழகிய விசயங்களைப் பகிர்ந்திருக்கிறீங்கள். உண்மைதான் நமக்குப் பிடிச்ச வேலைகளைச் செய்யும்போது உற்சாகமாகவும், சந்தோசமாகவும் சோர்வில்லாமலும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....