சனி, 20 மார்ச், 2021

காஃபி வித் கிட்டு - 103: நான்கட்டாய் - நாயும் நாயும் - Mae Toi - பிஜ்ஜா - ஓவியமும் கவிதையும் - Strike


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்! ஆனால், மன்னிக்கவும், மறக்கவும் ஒரே காரணம் தான் - அன்பு! அன்பு மட்டும் தான்!!


*****



இந்த வாரத்தின் உணவு - நான்கட்டாய்:





தில்லியின் வீதிகளில் இந்த நான்கட்டாய் செய்து விற்பதை இப்போதும் பார்க்க முடியும்.  காலை/மாலை நேர தேநீருடன் இந்த ”நான்கட்டாய்” எனும் பிஸ்கூட் (Biscuit என்பதை வட இந்தியர்கள் இப்படியே அழைப்பது வழக்கம்! நம்மைப் போல பிஸ்கட் என்று சொல்வது சுட்டுப் போட்டாலும் இவர்களுக்கு வராது!)  மைதா, கோதுமை போன்றவற்றில் செய்யப்படும் இதைச் செய்வது சுலபம் தான். இணையத்தில் செய்முறை நிறையவே இருக்கிறது.  விருப்பமிருப்பவர்கள் செய்து பார்க்கலாம்! சுவைக்கலாம்!  என்னடா இது, வெறும் பிஸ்கட்-க்கு இப்படி ஒரு அறிமுகம் தேவையா? என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு பதில் - பெயருக்காகவே இதனை இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்! 


ராஜா காது கழுதை காது - நாய், நாயைப் பார்த்து தான் குரைக்கும்:





எங்கள் பகுதியில் ஒரு பெண்மணி, தினமும் மாலை வேளைகளில் வீட்டில் சாதம் வைத்து, ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அவர் வீட்டின் அருகே இருக்கும் வீதியில் இருக்கும் நாய்களுக்கு வழங்குவது வழக்கம்.  செல்லங்களுடன் பேச்சுவார்த்தையே நடத்துவார்! ஒரு செல்லத்திற்கு வைப்பதை அடுத்த செல்லம் சாப்பிட வந்தால், “ஏண்டா, இப்படி அடுத்தவன் சாப்பாட்டுக்கு ஆசைப் படறே, நீ தான் சாப்பிட்டாச்சே, இவன் சாப்பாட்டில வாயை வச்ச, நான் பொல்லாதவளா ஆகிடுவேன்!” என்றெல்லாம் அந்தச் செல்லங்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.  ஒரு நாள், அந்தப் பெண்மணி, செல்லங்களுக்கு உணவு கொடுத்து விட்டு, பாதையோரம் அமர்ந்து இருந்த போது இரண்டு சிறுமிகள் அந்த வழியே சென்றவர்கள், பெண்மணியிடம் “Aunty, அந்த நாய் என்னப் பார்த்து குரைத்தது!” என்று சொல்ல, அதற்கு அந்தப் பெண்மணி சொன்னது, ”நாய், நாயைப் பார்த்து தான் குரைக்கும்!”  


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பிஜ்ஜா:


பிஸ்கூட் மாதிரியே வட இந்தியர்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு ஆங்கில/இதாலிய வார்த்தை - PIZZA :)  இதனை இந்த ஊரில் பிஜ்ஜா என்று தான் சொல்கிறார்கள் - எத்தனை படித்தவர்களாக இருந்தாலும் இப்படிச் சொல்வதைப் பார்க்க முடிகிறது!  பொதுவாகவே இந்த பிஜ்ஜாவை விரும்பி உண்பவர்கள் இப்போது அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். Pizza Hut, Dominos என பல நிறுவனங்கள் இந்தியாவிலும் கடை திறந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அதிலும் அவர்கள் செய்யும் விளம்பரம் தான் எத்தனை எத்தனை - விளம்பரங்கள் மூலமாகவே மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்களோ என்று கூட தோன்றுகிறது - சுவைக்கு அடிமையாக இருப்பதை விட அதிகமாக!  தலைநகரின் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக இந்த பிஜ்ஜா Delivery Boys வண்டிகள் பறப்பதைப் பார்க்கும் போது மக்கள், நம் ஊர் உணவை மறந்தே விட்டார்கள் என்று கூட தோன்றுவதுண்டு!  என்ன, தில்லி வாசிகள் இந்த பிஜ்ஜாவிலும் பனீர் பயன்பாட்டினைத் தொடங்கி விட்டார்கள் - பனீர் பிஜ்ஜா!  


பின் குறிப்பு: பிஜ்ஜா எண்ணங்கள் இன்று வரக் காரணம் கடந்த வியாழனன்று வாழ்க்கையில் இரண்டாம் முறையாக பிஜ்ஜா சாப்பிட்டது தான்!  அலுவலகத்தில் ஒரு பார்ட்டி - பிஜ்ஜா தான் மெனு! பல வருடங்களுக்கு முன்னர் தில்லியின் மால் ஒன்றில் உண்டது! அதற்குப் பிறகு இப்போதே!  எனக்கு ஏனோ பிஜ்ஜா பிடிப்பதில்லை! 


இந்த வாரத்தின் விளம்பரம் - Mae Toi - Worthiness!


பொதுவாகவே தாய்லாந்தின் தாய் இன்சூரன்ஸ் விளம்பரங்கள் மனதைத் தொடும் விதமாக இருக்கும்.  இந்த விளம்பரமும் அப்படியே.  மனதைத் தொடும் விளம்பரம் - கடலைப் பார்த்தவுடன் அம்மாவும், குழந்தைகளும் ஒரு சில நொடிகள் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட்டு, பிறகு குதூகலத்துடன் கடலை நோக்கி ஓடும் காட்சி - ஆஹா…  சில நிமிடங்கள் என்றாலும் மனதைத் தொடும் விளம்பரம் - பாருங்களேன்!




இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - ஓவியமும் பின்னூட்டமும்





2013-ஆம் ஆண்டு, இதே நாளி, என் வலைப்பூவில் 1957-ஆம் ஆண்டின் “சுதேசமித்திரன்”  பத்திரிகையில் வெளிவந்த ஒரு ஓவியத்தினைக் கொடுத்து (ஓவியம் கீழே!), அதற்கான கவிதை/கதைகள் எழுத அழைப்பு விடுத்திருந்தேன்.  அந்தப் பதிவின் பின்னூட்டமாக தில்லி நண்பர் “பத்மநாபன் அண்ணாச்சி” எழுதிய பின்னூட்டமும் கவிதை ஒன்றும் கீழே!


(என்னடா இது! இந்த மனுஷன் நம்மை ஒரு பத்து வயது குறைய வைத்து விடுவார் போலிருக்கிறதே!)


ஓவியனின் தூரிகையை ரசிப்பதா! இல்லை

அவன் வரைந்த காரிகையை ரசிப்பதா!


சேலையை ரசிப்பதா! இல்லை

வனச் சோலையை ரசிப்பதா!

அன்னத்தை ரசிப்பதா! இல்லை

அவள் கன்னத்தை ரசிப்பதா!


அந்த தண்மலரை ரசிப்பதா! இல்லை

இந்தப் பெண்மலரை ரசிப்பதா!

நகையாடும் மங்கையினை ரசிப்பதா! இல்லை

மென்னகையோடும் மலர்முகத்தை ரசிப்பதா!


நீரோடை சலசலப்பை ரசிப்பதா! இல்லை

மேலாடை வனவனப்பை ரசிப்பதா!

நீல்வான மேகத்தை ரசிப்பதா! இல்லை

அன்னத்தின் மோகத்தை ரசிப்பதா!


ஓவியனின் தூரிகையை ரசிப்பதா! இல்லை

அவன் வரைந்த காரிகையை ரசிப்பதா!


(அண்ணாத்தே! நான் இப்படி எல்லாம் ரசித்தேன் என்று போட்டுக் கொடுத்துடாதீங்க.)


முழுப்பதிவையும் படிக்க சுட்டி கீழே!


கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு!


இந்த வாரத்தின் WhatsApp Status - Strike in India:


Milk Traders spill milk on the road, during their strike.


Vegetable vendors throw vegetables during their strike.


God knows when the Bank employees will learn….!!



*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


34 கருத்துகள்:

  1. பிஸ்கட் வகையறாக்களின் மீது எப்போதும் பெரு விருப்பம் இருந்ததில்லை!  வயிற்றை அடைக்கும் என்றே தோன்றும்.  ஆனால் சமீப காலமாக pizza மேல் விருப்பம் வந்து மாதத்துக்கு ஒன்றோ இரண்டோ  சாப்பிடுகிறேன்!!!  செல்லங்களுக்கு உனவு வைப்பவர் கமெண்ட் புன்னகைக்க வைத்தது. கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்கட் மீது எனக்கும் பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை. Pizza எனக்குப் பிடிப்பதில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நாய், நாயைப் பார்த்துக் குரைத்தது. அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதியை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    நான்கட்டாய் பிஸ்கூட் (பிஸ்கட்) நல்லா இருக்கிறது.
    வீதிகளில் இருக்கும் நாய்களுக்கு உணவு கொடுக்கும் அம்மா நல்ல சேவை பாராட்டவேண்டும்.
    விளம்பர காணொளி தாயின் பாசத்தை காட்டுகிறது. கடலை நோக்கி குதுகலத்தோடு போய் விளையாடுவது அருமை. அண்ணாச்சியின் கவிதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. பிஸ்கட் பார்க்க அழகாக இருக்கிறது.அதற்கு நான்கட்டாய் என்ற பெயரும் வித்தியாசமாக உள்ளது.எங்கள் வீட்டிலும், இந்த பிஸ்கட் குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம்.

    ராஜா காதுவில் அந்த பெண்மணி சொன்னது நகைச்சுவையாக இருந்தது. நாய்களுக்கு உணவூட்ட மல்லுகட்டி பேசிய கோபத்தில் அப்படிச் சொன்னாரோ என்னவோ...:))

    Pizza இங்கும் அனைவருக்கும் விருப்பம். இந்த ஒரு வருட கொரோனா காலகட்டத்தில் நாங்கள் அதனருகில் செல்லவேயில்லை. ஆனால் இங்கும் அதன் உலா எப்போதும் போல் வந்தபடிதான் உள்ளது.

    பின்னோக்கிச் பதிவில் சகோதரர் பத்மநாபன் அவர்களது கவிதை அட்டகாசமாக இருந்தது. ரசித்தேன். அவருக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //”நாய், நாயைப் பார்த்து தான் குரைக்கும்!” // - அடடா... எவ்வளவு நல்லவர் அந்தப் பெண்மணி. அவர் வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் என்ன பாடு படுகிறார்களோ

    பிஸ்கட், நான் பேக்கரியில் விரும்பிச் சாப்பிடும் வெனிலா வாசனை யுள்ள பிஸ்கெட் போலவே இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் என்ன பாடு படுகிறார்களோ - ஹாஹா....

      பேக்கரி பிஸ்கட் - இங்கே தில்லியில் வீட்டின் அருகே ஒரு பேக்கரி இருக்கிறது - அங்கேயும் பிஸ்கட் நன்றாக இருக்கும். பொதுவாக பிஸ்கட் அதிகம் வாங்குவதில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பிட்சா.... என்னவோ எனக்கு இது அவ்வளவாகப் பிடிப்பதில்லை (பஹ்ரைனில் வாரம் ஐந்து முறையும் சாப்பிட நினைத்தாலும் பிரச்சனையில்லை..எங்கள் கம்பெனி கடையில் சாப்பிடலாம்). நம்ம ஊர்ல மட்டும்தான் பனீர் பிட்சா உண்டு. (நாம் சீஸுக்குப் பதில் பனீர் உபயோகிப்பதால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் சீஸ் பிட்சா கிடைக்கிறதே! நாங்கள் இங்கே இந்தியாவில் வாங்கினதே இல்லை.

      நீக்கு
    2. கம்பெனி கடை - அது சரி! எனக்கும் அதன் சுவை பிடிப்பதில்லை நெல்லைத் தமிழன். இங்கேயும் சீஸ் பீட்சா கிடைக்கிறது. பனீர் பீட்சாவும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆமாம் கீதாம்மா. இங்கேயும் சீஸ் பீட்சா கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. பிஜ்ஜா என்ன சுவையோ, பிடிப்பதில்லை... விளம்பரம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீட்சா சுவை எனக்கும் பிடிப்பதில்லை தனபாலன். விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மதுரை ஹோட்டல்களில் இப்பொழுது சோறு கேட்பவனை வினோதமாக பார்க்கிறார்கள் ஜி.

    பிரியாணி, குஸ்கா, ப்ரை ரைஸ், நூடூல்ஸ், சிக்கன் ரைஸ் இதுதான் மதிய வேளைகளில் உணவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே இப்படித்தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சார்.
    வாசகம் மிக அருமை.
    மன்னிக்க ஒரே காரணம் தாந், அன்பு மற்றும் மனிதர்கள் வேண்டும் என்பதே.
    எனக்கு பீட்ஸா மிகவும் பிடிக்கும், ஆனால், என் கல்லீரல் தான் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி ஸ்டிரைக் செய்கிறது பீட்ஸா சாப்பிட்டால்.
    வங்கிப்பணியாளர்கள் தங்களின் ஆதங்கத்தை உணர்ந்துகொண்டோம்.
    அதில் வங்கி கணக்கில் உள்ள பொதுமக்களின் பணமும் அடக்கம், எனவே அதை தூக்கி எரிந்து ஸ்டிரைக் பண்ண முடியாது சார்.
    பிஸ்கெட் சூப்பர், டில்லி வரும்போது சாப்பிட்டுப் பார்க்கனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நான்கட்டாய்.. பிஜ்ஜா.. சுவாரஸ்யமான தொகுப்பு. வாசகம் நன்று. விளம்பரம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இந்த வகை பிஸ்கூட்டுகள் டின் டின்னாகப் பண்ணி வைச்சிருக்கோம். மாலைவேளைத் தேநீரோடு நன்றாக இருக்கும். சுடச்சுட பேக்கரியிலிருந்து வரும். சுவை நன்றாகவே இருக்கும். மாவு, வெண்ணெய், சர்க்கரை/உப்பு, இஞ்சி அல்லது சுக்கு போன்றவை நாமே கொடுத்துடலாம். அந்தக் காலத்து பிரிட்டானியா பிஸ்கட் டின் (பத்துப்படி டின் என்போம்.) களில் போட்டு நிறைய வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டின் டின்னாக - :) இப்போதும் இங்கே சில வீடுகளில் இப்படி உண்டு கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நாங்க அம்பேரிக்காவில் பிட்சா சாப்பிடுவது தான். அநேகமாய் மாதம் ஒரு நாள் கண்டிப்பாக இருக்கும். இங்கே சமீபத்தில் தான் ஒரே முறை ஶ்ரீரங்கம் ஒயாலோவில் வாங்கிட்டு (சின்னதே 250 ரூ) விலையும் பிடிக்கலை. சாப்பிடவும் பிடிக்கலை. அப்புறம் வாங்கினதே இல்லை. சென்னையில் இருந்தவரை வாங்கினதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் சுவைத்ததில்லை. தில்லியில் இதுவரை இரண்டே இரண்டு முறை தான் சுவைத்தேன் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பீட்சா, வாரம் ஒரு நாள் இங்கே சாப்பிடுவார்கள். எனக்கு ரசிப்பதில்லை.
    அந்த வாசனை நம்முடனேயே இருப்பது
    போல ஒரு பிரமை.
    திரு பத்மனாபனின் சொல்லோவியம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீட்ஸா பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது இங்கேயும். எனக்கு தான் பிடிப்பதில்லை வல்லிம்மா.

      சொல்லோவியம் அழகு - நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. தாய் இன்ஷுரன்ஸ் மனதை நெகிழ வைத்தது. நிக நன்றி மா.
    தில்லியின் பிஸ்கட்கள் நன்றாக இருக்கும். 50 களிலிருந்து சென்னை வரும் தில்லி அத்தையும், பிறகு மாமாவும் ஒரு சம்புடம் நிறையக் கொண்டுவருவார்கள்.
    அப்போது அந்த வெண்ணெய் பிஸ்கட் வாசம் வீடு நிறையும்.
    பழைய நினைவுகளுக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய் இன்ஷூரன்ஸ் விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. மனதை நெகிழ வைக்கும் விளம்பரம் தான் வல்லிம்மா.

      தில்லி பிஸ்கெட்ஸ் - தில்லி வந்த புதிதில் சுவைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. அந்த நாய் பராமரிப்புப் பெண்மனீக்கு இன்னும் கொஞ்சம் மனித நேயமும் இருக்கலாமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னும் கொஞ்சம் மனித நேயமும் இருக்கலாமோ// - லாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....