சனி, 24 ஏப்ரல், 2021

காஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந பிச்சமூர்த்தி - வாக்கியம் - BABRU - மனிதர்கள் - ஊரடங்கு



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மண்டேலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அவமானங்களால் மட்டுமே வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கிறது. சிலரை புரிந்து கொள்ளவும் முடிகிறது.


******



இந்த வாரத்தின் ரசித்த பாடல் - Bபாஜ்ரே (da)தா சிட்டா


சமீப நாட்களாக இந்தப் பாடல் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது.  பலரும் இந்தப் பாடலுக்கு இன்ஸ்டாவில் ரீல் தயாரித்து வெளியிடுகிறார்கள்.  எங்கே பார்த்தாலும் இந்தப் பாடல் தான்.  தமிழில் ”எஞ்சாயி எஞ்சாமி” பாடல் என்றால் இங்கே வடக்கில் இந்த Bபாஜ்ரே (da)தா சிட்டா பாடல்!  கேட்டுப் பாருங்களேன்!

*****


இந்த வாரத்தின் கேள்வி பதில்:


கேள்வி:  யாரோ உங்களிடம் சொன்ன மறக்க முடியாத வாக்கியம் எது?




பதில்: அந்த “யாரோ” வேறு யாருமில்லை. என் அன்புத்தந்தை சொன்ன “எது உனக்கு சுவையாகத் தெரிகிறதோ அதைக் குறைவாகச் சாப்பிடு.  அதுவே சுவைகுறைந்ததாக இருந்தால் அதிகம் சாப்பிடு” என்ற வாக்கியந்தான். ஆரோக்கியமாக இருக்க , இதுதான் வழி என்று அன்றே சொன்னார் அப்பா.


பாகற்காய் கசந்தாலும், விரும்பிச் சாப்பிடு. அதுவே ஐஸ்கிரீமாக இருந்தால், மிகக் குறைவாகச் சாப்பிடு என்று ஒரு விளக்கமும் தந்தார். அன்று சொல்லிய சமயம் எனக்கு இந்தப் புத்திமதி சுவையாகத் தெரியவில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து, இந்தச் சொற்களின் வலிமையை நன்கு உணர்கிறேன். அதன்படி வாழவும் கற்றுக் கொண்டேன்.. வாழ்ந்தும் வருகிறேன்.  நாவடக்கம்தானே நம்மை நல்வழிப்படுத்துகின்றது - பேச்சில் மாத்திரமல்ல, உண்ணுவதிலும்தான்!


*****


இந்த வாரத்தின் உணவு - BABRU:





வட இந்தியாவின் சில பகுதிகளில் கச்சோரி என அழைக்கப்படும் உணவின் ஒரு மாற்றமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பூரி போன்ற ஒரு உணவு - கருப்பு உளுந்து சேர்த்தது - இந்த (B)ப(B)ப்ரு! இதில் ஒரு Variant ஆக இனிப்பு (B)ப(B)ப்ரு-உம் செய்வார்கள்.  இனிப்பு (B)ப(B)ப்ரு சாப்பிட்டதில்லை! மற்றது சாப்பிட்டு இருக்கிறேன். 


*****


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - நெஞ்சில் சுரந்த அருள்:


2013-ஆம் ஆண்டு இதே நாளில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.


ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். விழுந்தடித்து ஓடும் நக்ஷத்திரங்களையும், மசிச்சித்திரங்கள் போன்ற மரங்களையும், நீர்ப்பரப்புகளையும் இருளைப் பிளந்து செல்லும் ‘சர்ச்லைட்’ வெளிச்சத்தையும் மாறி மாறிப் பார்க்கும் லயத்திலிருந்த என்னை, ஒரு குழந்தையின் அழுகை சப்தம் பிடித்திழுத்தது. ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்த கழுத்தை உள்ளுக்கிழுத்தேன்.


இப்படி ஆரம்பிக்கிறது கதை. குழந்தை அழுதது எனச் சொன்னது உலர்ந்த சரீரத்தோடு கூடிய நாயுடு ஸ்திரியின் ஒன்பது மாதக் குழந்தை. பிள்ளைக்குக் ”கொஞ்சம் எடுத்து விடேன்” என ஒரு கிழவி சொல்ல, “எல்லாம் ஆயிடுச்சு, மொக்கு மொக்குன்னு குடிச்சுட்டுக் கத்துது. இம்மே பாலில்லே; ரத்தம் தான் வரும்” என்று சொல்கிறாள் அந்தத் தாய். அக்குழந்தை பாலில்லாத மார்பின் வேதனையை அறியாது ஸ்திரீயின் மடிமீது போய் ஏறிற்று. அதை அவள் அலுப்புடன் தள்ள, ஐந்து நிமிஷம் விடாது அலறித் தீர்த்து பிறகு தூங்கி விட்ட்து.


பின்பக்கத்திலிருந்து “ளொள், ளொள்” என்று இருமிக்கொண்டே ஒரு குழந்தை அழத்துடங்கிற்று. நாங்கள் அதை முதலில் சட்டை செய்யவில்லை. அடுத்தாற்போல, கரகரப்பான ஒரு ஆண்பிள்ளைக் குரல், “ஆராரோ ஆரிர்ரோ ஆளப் பொறந்தானோ....  அடிச்சாரைச் சொல்லியளு ஆக்கினைகள் பண்ணி வைப்போம்” என்று குழந்தையை சமாதானப்படுத்த முயன்றதும் எழுந்திருந்து திரும்பிப் பார்த்தேன். நாயுடு ஸ்த்ரீயும் எழுந்து பார்த்தாள்.  


முழுப்பதிவும் படிக்க சுட்டி கீழே…


நெஞ்சில் சுரந்த அருள் - ”தாய்” சிறுகதை


*****


இந்த வாரத்தின் கதை மாந்தர்கள் - என் இஷ்டம் நான் சுத்துவேன்:




சென்ற வாரத்தின் இறுதியில் (வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை காலை வரை) ஊரடங்கு உத்தரவு அறிவித்திருந்தார்கள்.  பலரும் இந்த உத்தரவை ஏற்று வீட்டிற்குள் இருந்தாலும், நிறைய பேர் இந்த உத்தரவை ஏற்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  தேவையோ இல்லையோ வாகனத்தில் ஊர் சுற்றுவது தில்லி வாசிகளுக்கு கை வந்த கலை!  ”சலோ ஏக் ட்ரைவ் சல்தே ஹேன்” என்று புறப்பட்டு விடுவார்கள்.  அதுவும் மாஸ்க் அணியாமல் வந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஊர் சுற்ற, பணியில் இருந்த காவலர்கள் நிறுத்தினார்கள் - அந்தப் பெண்ணும், ஆணும் பிலுபிலுவென, காவலர்களுடன் சண்டை பிடித்தார்கள் - அதுவும் காவலர்கள் நீதிமன்ற உத்திரவு பற்றி சொன்ன பிறகும்!  அதுவும் குறிப்பாக அந்தப் பெண்மணி பேசியது - “நாங்க காருக்குள் மாஸ்க் போட மாட்டோம் - உன்னால என்ன பண்ண முடியும்?  அது மட்டுமல்ல! நான் என் கணவனுக்கு (?) முத்தம் கூட கொடுப்பேன்!” அதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!  ஔகாத் மே ரஹோ (Be within your Status!)” என்று சண்டையிட, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ததோடு கைது செய்திருக்கிறார்கள்.  சண்டையிட்டவர்களும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.   காணொளி பார்க்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்! இப்படி


*****


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - பொறுப்புள்ள அம்மா:


இந்த வாரத்தின் விளம்பரமாக ஒரு ஃபிலிப்பைன்ஸ் விளம்பரம்.  மருத்துவமனையில் பணிபுரியும் தாய், தனது குழந்தையின் பள்ளியில் நடக்கும் எந்த வித விழாக்களிலும் பங்கு பெற முடிவதில்லை.  ஆனாலு அந்தக் குழந்தையின் புரிதல் மிகவும் பிடித்திருந்தது. பாருங்களேன்!

*****


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - ஊரடங்கு:


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக, ஊரடங்கு என்ற தலைப்பிட்ட கவிதை.  நிதிஷ் எழுதிய கவிதை, தில்லியின் தற்போதைய ஊரடங்கு நிலைக்கு பொருத்தமானது!  கவிதை சொல்வனம் தளத்திலிருந்து....



ஊரடங்கு





இரயில் பாதை பூவோடு

வண்டுகள் தூங்கும்

இந்த ஊரடங்கில்

ஒருநாள் மழையும்

பெய்து அடங்கியது.

விடுமுறை சிறுமி

முதல்முறை பறக்கவிட்ட

பட்டத்தை பார்த்து

கோழிகளும் கொக்கரித்து கொண்டாடின

கோவில்களே பூட்டப்பட்டு புண்ணியங்களை சேர்த்தாலும்,

முகம்மூடா மூடர்கள் சிலர்

சுற்றித்திரிந்து பாவங்கள் செய்தனர்.

அப்பாவிகள்

கால்கடக்க காத்திருந்தது கடற்கரை.

சிறுவர் பூங்காவின் புற்கள்

சிறுவனின் வெட்டபடாத தலைமுடியைப்போல

வளர்ந்து காட்சியளித்தன.

மூடப்பட்ட திரையரங்குகளில் மூட்டைப்பூச்சிகளின் ஆடலும் பாடலும்.

இன்னும் சில நாட்கள்

சிறுவனாக நானும்

அலைப்பேசியில்

என் கவிதையும்.


  • கெ.ம.நிதிஷ்.

*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


24 கருத்துகள்:

  1. கதம்பச் செய்திகள் நன்று.

    கொரோனா பயம் இந்தியர்களுக்கு கிடையாது இது மிகப்பெரிய அழிவைச் சந்தித்த பிறகு உணர்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுவையாகத் தெரிவதை குறைவாகவும், சுவை இல்லை என்று நினைப்பதை அதிகமாகவும் சாப்பிடுவது பற்றி என் அம்மா சொல்வார்.  நானும் என் மகன்களுக்குச் சொல்கிறேன்.  அவர்கள் கேட்டால்தானே!

    முத்தம் கூட கொடுப்பேன் -  சென்ற வார வைரல் செய்தி!

    கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை - அதுவே தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இன்றைய கதம்பம் நன்று.

    காலையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகுதான் உங்கள் தந்தை சொல்லைப் படித்தேன். இனி கடைபிடிக்கவேண்டியதுதான்.

    அரசின் சட்டத்தை மதிக்கத் தெரியாதவர்களை, பேசாமல், இராணுவத்திற்கு முன்பு செல்லும் படையில் போரின்போது சேர்த்துவிட வேண்டியதுதான். இவர்களால் நாட்டுக்குக் கேடுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. காஃபி வித் கிட்டு பதிவும் நன்றாக உள்ளது.

    இந்த வார கேள்வி பதில் நன்றாக உள்ளது. நாவை கட்டுப்படுத்தினால் உடல்/மன பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம்தானே...

    கச்சோரி உணவு இங்கும் கிடைக்கிறது. எப்போவோ சாப்பிட்டிருக்கிறோம். சுவை நன்றாக இருக்கும்.

    ஒரு தாயின் பாசத்தை விளக்கும் கதை.. ரசித்தேன். அந்தப்பதிவுக்கு சென்று முழுக்கதையையும் படித்து வந்தேன்.இவரது கதைகள் ஒரு சில நானும் படித்துள்ளேன்.

    ரசித்த விளம்பரத்தில் அந்த சிறுவர் அழகாக உள்ளார். நன்றாகவும் நடித்துள்ளார். நானும் விளம்பரத்தை ரசித்தேன்.

    கவிதை ரத்ன சுருக்கமான வரிகளில் நன்றாக உள்ளது. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஐம்பொறிகளுக்கும் விருந்து. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. காஃபி வித் கிட்டு நன்றாக இருக்கிறது. சுவையான சிக்கரி சேர்க்காத, கறந்த பாலில் போட்ட காஃபி. விளம்பரம் இனித் தான் பார்க்கணும். பார்க்கிறேன். இங்கேயும் பொதுவாகப் பலரும் மாஸ்க் போடாமலேயே வருகின்றனர். சொல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. மாஸ்க் - பலரும் அணிவதில்லை. வேதனையான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நல்லா இருந்தது விளம்பரம். குட்டிப் பையன் நல்லா நடிச்சிருக்கான். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட்,
    மிக மிகச் சுவையான பதிவு. சாலையில் சண்டை போட்ட நேரமாவது முகமூடி போட்டிருக்கலாம்.
    என்ன தான் சுதந்திரம் என்றாலும் சட்டத்தை மதிக்காதவர்கள்
    இருந்துதான் என்ன லாபம்.
    சிறுவன் இருக்கும் காணொளியும்
    மிக நன்றாக இருந்தது.
    தங்கள் தந்தையின் சொற்கள் எப்போதும் காக்கப் படவேண்டியவை.

    பப்ரூ எப்படிச் செய்வது என்று பார்க்கப் போகிறேன்.
    வெகு சுவையான காஃபி வெங்கட்.
    நன்றி மா. பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. பதிவில் சொல்லி இருக்கும் அப்பா - என் அப்பா அல்ல! படித்ததில் பிடித்தது - தன் அப்பா சொன்னதாக சொன்னவரின் பெயரும் கீழே கொடுத்திருக்கிறேன்.

      பப்ரூ செய்து விட்டுச் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்ல தொகுப்பு. உங்கள் பதிவை ரொம்ப நாட்கள் தவற விட்டு விட்டேன். அந்த பொறுப்புள்ள அம்மா விளம்பரத்தை பார்த்த பிறகு மகளின் ஞாபகம் வந்தது. வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. கண்ணீர் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது.

    நன்றி

    எனது பதிவு

    https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது சிகரம் பாரதி. உங்கள் பதிவும் நன்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. உங்கள் அப்பா சொல்லியிருப்பது மிகவும் சரியே. கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

    விளம்பரம், கவிதை எல்லாமே அருமை. இன்னும் மக்கள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்

    அனைத்தும் ரசித்தேன் வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா சொன்னதாக எழுதி இருப்பது என் அப்பா சொன்னது இல்லை துளசிதரன் ஜி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்து இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வெங்கட்ஜி விளம்பரம் செம மனதை நெகிழ்த்திவிட்டது. குழந்தை செம...

    கவிதை அந்த தில்லி நிகழ்வு...பொருத்தம் அங்கு மட்டுமல்ல நம் நாடு முழுவதுமே என்றுதான் சொல்ல வேண்டும்.

    இங்கு வார இறுதி மட்டுமல்ல எல்லா நாட்களிலும் வார இறுதி போன்று கட்டுப்பாடுகள் கொண்டு வரப்போவதாகத் தெரிகிறது...மக்கள் கேட்கவில்லை என்றால் அரசு கொஞ்சம் ஏகாதிபத்தியத்தைக் கையில் எடுத்துதான் ஆக வேண்டும்...பின்னே சுதந்திரம் கொடுத்தால் உயிர் அல்லவா ரிஸ்க் ஆக இருக்கிறது.

    நம் வீட்டிலும் உங்கள் தந்தை சொன்னதுதான்...சுவையாக இருக்கு என்று அதிகம் உண்டு அவஸ்தைப்படுவது நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ளவர்களும் தானே..

    எல்லாமே ரசித்தென் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....