வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ரா - ரா - ரா - நட்பும் காதலும்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட் குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


சிறந்த பக்குவம் என்பது, சொல்வதற்கு நம்மிடையே பதில்கள் நிறைய  இருந்தும், புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தைத் தேர்ந்தெடுப்பது ஆகும்.


******





படம்: இணையத்திலிருந்து...



ராகேஷ்: உத்திரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்திலிருந்து, தன்னுடைய முயற்சியால் கல்லூரிப் படிப்பினை முடித்து, பொதுத் தேர்வுகள் எழுதி அதில் தனது தீவிர முயற்சியால் வெற்றி பெற்றி தலைநகர் தில்லியில் பணியில் அமர்ந்த ராகேஷ்.  தன்னுடைய கிராமத்திற்கே உரிய நகைச்சுவை பேச்சும், வட்டார வழக்கும், கிராமியப் பழமொழிகளும் என கலகலப்பாக இருக்கும் நபர்.  தன்னைச் சுற்றி எப்போதும் நட்பு வட்டம் இருக்க வேண்டும் என நினைக்கும் கலகலப்ரியா ரகம்.  என்னதான் இந்தியத் தலைநகருக்கு வந்து விட்டாலும், இன்னமும் கிராமத்தின் மணம் மாறாத ஒரு இளைஞன். எப்போதும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திளைத்திருப்பவன்.  


ராஷ்மி: மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் படித்து, இந்தியாவின் தலைநகர் தில்லிக்கு பணி நிமித்தம் வந்த பெண்! எளிதில் அனைவருடனும் பழகிவிடக்கூடிய பெண் - அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.  ஆங்கிலத்தில் சொன்னால் Outgoing Character! என்னதான் எல்லோருடனும் சரிசமமாக பழகினாலும், தனது எல்லை என்ன என்பது தெரிந்தவள். எல்லை மீறினால் எப்படி அதைத் தடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்தவள். சில விஷயங்களில் அவளுக்கு பயமுண்டு - அப்படியான விஷயங்களில் ஒன்று பல்லி - மற்றொன்று பேய்! பேய்க்கு பயம் என்பது பலருக்கும் இருப்பது! பல்லி பயம் சிலருக்கு மட்டுமே! அந்த சிலரில் ராஷ்மியும் ஒருத்தி!


ராஜூ:  தலைப்பில் இருக்கும் மூன்றாம் ரா! ராகேஷ் உத்திரப் பிரதேசத்திலிருந்து என்றால், ராஜூ ஆந்திரப் பிரதேசத்திலிருந்து.  பிறந்ததிலிருந்தே மகா சோம்பேறி!  தனது வேலைகளைக் கூட வேறு யாராவது செய்து தரமாட்டார்களா என்று காத்திருப்பவன். சிறு குடும்பத்திலிருந்து வந்தவன் - கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை! வீட்டில் செல்லப் பிள்ளை!  படித்த போதும் அனைத்துமே ஆண்கள் மட்டுமே படித்த பள்ளியிலும், கல்லூரியிலும்! அதனால் பெண்கள் என்றால் ரொம்பவே ஈர்ப்பு!  எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.  பெண்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் போதும், கல்லூரி பாஷையில் சொல்வதால், கடலை வறுக்க ஆரம்பித்து விடுவான்! தீயும் வரை!  


ரா - ரா - ரா: ராகேஷ் - ராஷ்மி - ராஜூ என்கிற இந்த மூன்று ”ரா” க்களும் ஒருவருக்கொருவர் சந்திக்க வேண்டிய கட்டாயம் - மூவருக்கும் மத்திய அரசுப் பணி கிடைக்க, பணியில் சேரும் முன்னர் பயிற்சிக் காலம் - மூன்று மாதங்கள் - தத் தமது ஊர்களை விட்டு, உறவினர்களை விட்டு, தனியே வேறு மாநிலத்தில் பயிற்சி பெற வேண்டும்.  அப்படி பயிற்சி பெற்ற இடம் சண்டிகட்(ர்).  மூன்று மாத பயிற்சிக் காலத்தில் மூவருக்கும் நல்ல நட்பு ஏற்பட, தலைநகரில் பணிக்குச் சேர்ந்த பிறகும் ஒரே இடத்தில் வீடு பார்த்து தங்கினார்கள்.  ஒரே கட்டிடத்தில் இரண்டு வீடுகள் - ஒரு வீட்டில் ராஷ்மி தனியாக இருக்க, மற்ற வீட்டில் ராகேஷ் - ராஜூ ஆகிய இருவரும்!  சமையல் மட்டும் ஒன்றாக - ஒரே வீட்டில்!  நட்பும் வளர்ந்து வந்தது - நடுநடுவே ராகேஷ் தனது குறும்புத் தனத்தால் மற்றவர்களை கலவரப் படுத்துவதும் தொடர்ந்தது!  அப்படி ஒரு சம்பவம்…


தற்கொலையும் பேயின் உலாவும்:  மூன்று பேரும் சமைத்தபடியே ஒரு மாலையில் பேசிக் கொண்டிருக்க, பேய் பற்றிய பேச்சு வந்தது.  ராகேஷ், தனது குறும்பு கொப்பளிக்க, ராஷ்மியிடம் - “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?  நீ இருக்கிற வீட்டில் முன்னாடி இருந்த பெண்மணி தூக்கு மாட்டிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்! அவங்க இப்பவும் ஆவியா அலையறாங்கன்னு சொல்லிக்கறாங்க! உனக்கு ஏதாவது தெரியுமா?  ராத்திரில எதாவது வித்தியாசம் தெரியுதா?”  என்று சிரிக்காமல் சொல்ல, அப்போதைக்கு பயம் இல்லாதது போலக் காண்பித்துக் கொண்டாலும் இரவு உணவு முடித்து, வீட்டுக்குச் செல்ல, அவளுக்கு உதறல் ஆரம்பித்தது.  எந்த சப்தம் கேட்டாலும், பேய் உலாத்துகிறதோ என்ற சந்தேகம்!  இரவு முழுக்க தூங்க முடியாமல், பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறாள் ராஷ்மி - அதுவும் நல்ல குளிரில்! அடுத்த நாள் ராஷ்மிக்கு நல்ல ஜூரம்!  தனது குறும்பு இந்த மாதிரி விளைவை ஏற்படுத்த, ராகேஷ் ராஷ்மியிடம் உண்மைச் சொன்னதோடு, அவளை மருத்துவரிடமும் அழைத்துச் சென்றிருக்கிறான்.  என்னதான் விளையாட்டு என்றாலும், சில சமயங்களில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை ராகேஷ் அப்போது தான் புரிந்து கொண்டான்!  ஆனாலும், ராகேஷ் - ராஷ்மி நட்பு பிறகும் தொடர்ந்தது!


நட்பா? காதலா? ராகேஷ் - ராஷ்மி நட்பு இப்படி இருக்க, ராஜூ - ராஷ்மி நட்பு என்ன ஆனது?  ராஷ்மி ராகேஷ், ராஜூ இருவரிடமும் நட்பு பாராட்டினாலும், ராஜூவுக்கு இருந்த அனுபவத்தில், இப்படியான பெண்ணுடன் பழகியதே இல்லை என்பதால் ராஷ்மி தன்னிடம் கொண்டிருந்த நட்பை, காதல் என நினைத்து, அதனை அவளிடம் ராகேஷுக்குத் தெரியாமல் சொல்ல, அங்கே ஆரம்பித்தது பிரச்சனை. ”ராஜூ, நான் உன்னிடமும் ராகேஷுடனும் பழகுவது நட்பாக மட்டுமே! வேறு எந்த கற்பனையும் செய்து கொள்ளாதே!  எனக்கு கல்லூரி காலத்திலிருந்தே என்னுடன் படித்த பெங்காலி நண்பருடன் காதல் இருக்கிறது.  விரைவில் எங்கள் திருமணம் - அவர்கள் வீட்டிலும், எங்கள் வீட்டிலும் கூட சொல்லி விட்டோம்!  அதனால் வேறு எந்த கற்பனையும் செய்வது தேவையில்லாதது! இப்போதும் நாம் நட்பாகவே இருக்கலாம்!” - ராஷ்மி தனது நிலையை மிகத் தெளிவாக சொல்லி விட்டாலும், ராஜூ அதைக் கேட்கும் நிலையில் இல்லை.  மீண்டும் மீண்டும் சொன்னதோடு, ராகேஷ் மூலமும் தனது நிலையை எடுத்துச் சொல்ல, ராஜூ கேட்கவில்லை.  காதல் தோல்வி எனச் சொல்லிக் கொண்டு Crate Crate - ஆக Beer, மது பழக்கத்தைத் தொடங்கி விட்டான். ராஜூவின் காதல் என்ற பார்வையால் நட்பு தொலைந்து விடும் அபாயம். 


எத்தனை சொல்லியும் ராஜூ கேட்கவில்லை - மதுப் பழக்கம் தொடர்ந்தது.  ராஷ்மி தொடர்ந்து ராகேஷ் - ராஜூ வீட்டிற்கு வந்து சமையல், சாப்பாடு என நட்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.  ராஜூ வாங்கி வைத்திருக்கும் மதுக்குப்பிகளை உடைத்து எறிந்து விடுவாள் - தன்னால் நண்பன் உடலைக் கெடுத்துக் கொள்வதில் அவளுக்கு விருப்பமில்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காததால் அந்த வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட காதலும் போனது…  நட்பும் போனது! பல சமயங்களில் ராஜூ போன்ற இளைஞர்கள் செய்யும் தவறே, சரியான புரிதல் இல்லாதது தான். 


இன்றைக்கு ராஷ்மி அவளது கல்லூரி கால காதலனுடன் திருமணம் புரிந்து கொண்டு குழந்தைகளும் பெற்று விட்டாள்.  ராஜூ வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குழந்தைகளும் பெற்றுக் கொண்டான்.  காதல் இல்லை நட்பு மட்டும் என்று சொன்ன ராகேஷ் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது புரியாத புதிர் தான்!  பல சமயங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளே புரியாத புதிர் தானே! 


******


நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


14 கருத்துகள்:

  1. ராகேஷுக்கு இன்னமும் தகுந்த பெண் கிடைக்கவில்லை என்று (மட்டும்) நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாசகமும் அதற்கேற்ற கதையும் சிறப்பு சார்.
    வாழ்க்கையில் பலருக்கு வெளியே சொல்ல முடியாத ரகசிய ஆசைகளும் அதனால் ஏற்பட்ட கவலைகளும் இருக்கும்.
    அதுபோல ராக்கேஶுக்கு என்ன பிரச்சனையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      சொல்ல முடியாத ரகசிய ஆசைகள் - இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ராகேஷ்க்கு 'பேய்' பிடித்து விட்டது போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராகேஷ்க்கு பேய் பிடித்து விட்டது போல! ஹாஹா... இருக்கலாம் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரொம்ப வித்தியாசமான நிகழ்வுதான். பெண்களோடு பழகும் சந்தர்ப்பமில்லாதவனிடம் பெண்களால் நட்போடு பழக முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான நிகழ்வு தான் - ம்ம்ம். நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆரம்ப வாசகம் வழக்கம்போல அருமை!
    சரளமான நடையுடன் வித்தியாசமான கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்து கொண்ட விஷயம் குறித்த உங்கள் கருத்திற்கு நன்றி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //எவ்வளவு சொல்லியும் கேட்காததால் அந்த வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட காதலும் போனது… நட்பும் போனது! பல சமயங்களில் ராஜூ போன்ற இளைஞர்கள் செய்யும் தவறே, சரியான புரிதல் இல்லாதது //

    வாசகத்திற்கு ஏற்ற கதை.
    புரிதல் இல்லாமல் போவதுதான் பல உறவுகள் பிரிவதற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ராகேஷ் ராஷ்மியைக் காதலித்திருப்பான். வெளியே சொல்லி இருக்க மாட்டான். நல்ல முக்கோணக் காதல் கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கோணக் காதல் - :) இருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றிற்று கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....