ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BE THE TYPE OF ENERGY THAT NO MATTER WHERE YOU GO, YOU ALWAYS ADD VALUE TO THE SPACES AND LIVES AROUND YOU.


******




சென்ற வாரத்தில் நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதலாம் பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  இல்லாதவர்கள் இந்தப் பக்கத்தில் முதல் பகுதியை படித்து, இந்தப் பகுதியைத்  தொடரலாம். இனி பயணத் தொடர் நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில்! - வெங்கட் நாகராஜ் 


******


இந்தப் பயணத்தினைத் தொடங்குவதற்கு முன்னதாக, மேகாலய அரசின், தில்லி நகரில் உள்ள, பிரதிநிதி அலுவலகத்தில் (Resident Commissioner) முன் விசாரணைகள் செய்து கொண்டு தான் இந்தப் பயணத்தை முடிவு செய்தோம். அவர்களின் அறிவுரைப்படி, CLARA TOURS AND TRAVELS எனும் நிறுவனத்தில் (அவர்களது இணையதள முகவரி - Best Tour Agency in Meghalaya, India - Clara Tours), Mr Brandon என்பவரிடம் முன்கூட்டியே பேசி மின்னஞ்சல் மூலம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். ஏற்பாடுகள் செய்யும் போது  அசாம் (கௌஹாத்தி) மற்றும் மேகாலயா செல்பவர்கள் அங்கு சென்று சேரும் நேரத்திற்கு, 72 மணி நேரம் முன்னதாக “கொரோனா இல்லை” என்பதற்கான சான்றிதழைக் கட்டாயம் பெற்றாக வேண்டும். இல்லையேல் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் காக்க வைத்து, பரிசோதனைக்குப் பின் முடிவுகள் சாதகம் இல்லையேல் நேரடியாக முகாமுக்கு அனுப்பி விடுவர்.  அவசர மருத்துவ ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) தயார் நிலையில் விமான நிலையத்தில் உள்ளன. ரயில் நிலையத்திலும் இதே கெடுபிடி தான்.


மேகாலயா செல்ல கீழே உள்ள அனைத்தும் தேவை என்பதை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்: : 


  1. தொற்றில்லா பரிசோதனை முடிவு 

  2. Arogya Setu செயலி - தங்களது அலைபேசியில் 

  3. மின் அழைப்பு (E-Invite) - தங்களின் சுற்றுலா நிறுவனத்தின் உதவியுடன் அல்லது மேகாலயா சுற்றுலா செயலின் மூலம் பெற வேண்டும் 



கௌஹாத்தி விமான நிலையம் - படம் இணையத்திலிருந்து...


அனுமதிச்சீட்டு ஒன்று - உங்கள் பார்வைக்கு...


இரு மாநிலங்களிலும், எவ்வித தடங்கலுமின்றி, இந்த விதிகள் கடுமையாய் கடைபிடிக்கப்படுகிறது. தில்லியிலிருந்து விமானம் மூலம் அசாம் மாநிலத்திலுள்ள கௌஹாத்தியின் Lokpriya Gopinath Bordoloi International Airport-இல் தரையிறங்க, ஓட்டுநர் திரு மனோஜ் ராய் மேகாலயா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் - எங்களை அன்புடன் அலைபேசி வழி அழைத்தார்.  எங்களது சுற்றுலாவிற்காக, செய்து கொண்ட தீநுண்மி பரிசோதனை முடிவுகளைக் காண்பித்து, விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் வந்தடைந்தோம்.



எங்கள் ஓட்டுநர்...





கௌஹாத்தி - ஷில்லாங் சாலை - ஒரு பறவைப்பார்வை... 

படம் இணையத்திலிருந்து...


இருநாட்கள் மன அழுத்தங்களால் மிகவும் களைப்புடன் சோர்ந்திருந்த எங்களை - ஓட்டுநரின் மிக நேர்த்தியான இயக்கத்தாலும், இயற்கை அன்னையின் வருடலாக கிடைத்த இதமான, மிதமான காற்றாலும் அந்த கௌஹாத்தி - ஷில்லாங் செல்லும் அட்டகாசமான சாலைப் பயணம் மகிழ்வித்தது. அருமையான சாலைகள் வளைந்து வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்ததால், எங்களுக்கு மிகுந்த மனநிறைவுடன் இருந்தது அந்தப் பயணம்.  



உணவகத்தின் மெனு அட்டை...


நாங்கள் சாப்பிட்ட உணவு - DUM ALOO BIRYANI


உண்ட பிறகு சுவைத்த Mouth Freshner...

10 ஏப்ரல் அன்றிலிருந்து எங்கள் சுற்றுலா பொதி (TOUR PACKAGE) துவங்கியது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மகிழுந்தில் பயணப்பட்டோம். அட பசியை அறியவில்லையே எவரும்! ஆனாலும் தொப்பை எனும் மத்திய முனையம் (Kendriya Terminal) அழைப்பு விடவே, ஜீவா ரெஸ்டாரன்ட் (JIVA RESTAURANT) என்னும் உணவகத்தில் (முழுக்க சைவம்) -  சைவம் மட்டுமே கொண்ட உணவகம் - எந்தவித மன உளைச்சலும் இன்றி அங்கே பசியாறினோம். வாய்க்கு ருசியாக இருந்தது மட்டுமல்லாமல் பணப்பையும் அதிகமாய் கரையவில்லை. அதன்பின் முழுமையாய் தொடங்கியது எங்களின் ”துன்பத்தில் இன்பம் கொடுத்த மனதுக்கினிய சுற்றுலா”. 


சாலையில் பயணிக்கும் இந்த நேரத்தில், சற்றே மேகாலயாவின் விவரங்கள் குறித்துப் பார்க்கலாம்.  அசாம் மாநிலத்தில் இருந்து பிரித்து, ஷில்லாங் நகரைத் தலைநகராக கொண்டு, தனி மாநிலமாக, மேகாலயா நிர்மாணம் ஆனது 21 ஜனவரி 1972 அன்று. KHASI, GARO மலைப் பகுதிகளையும் பள்ளத்தாக்குகளையும் உள்ளடக்கியது இந்த மேகாலயா. KHASI மற்றும் JANTIA பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி. பெரும்பாலாக KHASI மற்றும் ஆங்கில மொழியும், ஓரளவு GARO மொழியும் வழக்காடு மொழிகள். பிரதான தொழில் விவசாயம். அடுத்து சுற்றுலா. அனைத்து சுற்றுலா தலங்களும் நேர்த்தியாய் நிர்வகிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் வாகன நிறுத்த கட்டணமும் நுழைவுக் கட்டணமும் கட்டாயம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் புகைப்படக் கருவிகளுக்கும் கட்டணம் உண்டு. இவை அனைத்தும் நாம் தான் தரவேண்டும் பயணப் பொதியில் (Tour Package) வராது. 


மேகாலயாவில் வடக்கில் அசாம் தெற்கில் வங்கதேசமும் எல்லைகள். இங்கு அதிகமாய் விளையும் பொருட்கள் - அரிசி, உருளைக்கிழங்கு, அன்னாசி (கற்கண்டாய் இனிக்கிறது), மிளகு, மஞ்சள், பாக்கு,  செம்பருத்தி, தேஜ் பத்தா எனும் பிரியாணி இலை மற்றும்  வாழை.  அனைத்து தங்குமிடங்களுக்கான கட்டணம், வாகன வாடகை, உபசரிப்பாக காலை சிற்றுண்டி (Complimentary Breakfast) ஆகியவை மட்டுமே பயணப்பொதியில் அடங்கும். 4 இரவு 5 பகல் மூன்று பேருக்கு மொத்தம் ரூபாய் 37 ஆயிரம் மட்டும் ஆனது. அதிக எண்ணிக்கையில் குழுவினர் இருந்தால் ஒரு ஆளுக்கான கட்டணம் குறையலாம்! இது உங்கள் தகவலுக்காக!  சரி சரித்திரம் பூகோளம் கணக்கு வழக்குகளை ஒதுக்கிவிட்டு, வாருங்கள் சுற்றிச் சுற்றி வரலாம் சுற்றுலா எப்படி இருந்தது என்ற தகவல்களை….  


அடுத்த பகுதியில் பார்க்கலாமா? 


மேலும் பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் இரண்டாம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்...


28 கருத்துகள்:

  1. தேவையான தகவல்களுடன், 'சுவை'யான மற்றும் அழகிய படங்களுடன் சுவாரஸ்யமாகச் செல்கிறது.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சொல்லிச் செல்லும் நடையழகு படங்களும் அழகு.
    தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் நடையழகும் படங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    பயணத்தொடர் மிக அழகாக ஆரம்பித்திருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. எவ்வளவு கட்டுப்பாடுகள்... அனைத்தையும் தாண்டி அந்த அழகான வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் செல்லும் போது மனச் சோர்வை கண்டிப்பாக போக்கியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

    இடையிடையே வரும் நல்ல தமிழ் வார்த்தைகளை ரசித்தேன். பயணத்திற்கு ஆகும் செலவுகள் குறித்து விபரமாக சொல்லியிருப்பதும் சிறப்பு. மேலும் மேகாலயாவின் இயற்கை அழகை காண நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி சொன்ன தகவல்களும் பதிவும் தங்களுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. நல்ல தகவல்கள். ரொம்பவே கம்மிதான் போல பயணச் செலவு!!!

    கௌஹாத்தி, ஷில்லாங்க் சாலை வாவ்!!! என்ன அழகு!

    தம் ஆலூ ப்ரியாணி நாவூறுது! சைவ உணவகம் இருந்ததே பெரிய விஷயம் தனன்..

    அழகான விவரணம். எழுத்தாளுமை!

    தொடர்கிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்களுடன் அருமையான பயணக் கட்டுரை . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தேவையான தகவல்கள். அருமையான சுருக்கமான எழுத்து. பயணம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பயணுள்ள தகவல்களுடன் சுவையான நடை.
    உணவகத்தில் உணவின் விலை குறித்தும் முக்கிய இடங்களின் நுழைவுச்சீட்டு விலையையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுழைவுச் சீட்டு விலைகள் - சேர்க்க முயல்கிறேன் அரவிந்த்.

      தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பாதுகப்பாக பயணம் தொடரட்டும்.


    ஒரு கேள்வி நீங்கள் செல்லும் பயணம் எல்லாம் அரசுதுறையைச் சார்ந்த பயணமா? அப்படி இல்லை என்றால் இந்த கொரோனா காலத்திலும் இப்படி பயணம் செய்வது ஆர்வமா அவசியமா ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை முழுவதும் படிக்க வில்லை என்று தோன்றுகிறது. இந்தப் பயணம் நான் செய்த பயணம் அல்ல! நண்பர் சென்று வந்ததைக் குறித்து எழுதி இருக்கிறார் மதுரைத் தமிழன். நான் பயணித்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மிகப் பயனுள்ள தகவல்களை,
    தமிழ்ச் சொற்கள் ஊடே கூட வர
    நேர்த்தியாகச் சித்தரித்திருக்கும் திரு சுப்பு சுப்ரமணியத்துக்கு மிக நன்றி. மிக அழகான சாலைகள்,உணவகம்

    எல்லாம் கொண்ட பிரதேசம் மேகாலயா.

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. படங்களும் பயணத்தைத் தொகுக்கும் விதமும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பயணத் தொடர் அருமை.
    தேவையான செய்திகள் அடங்கிய பதிவு.
    உணவு படம் , செலவு கணக்கு எல்லாம் அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த தகவல்களும், படங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அழகான எழுத்து நடை. நல்ல விவரணம்.

    தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. இந்தப் பகுதியைப் படித்தேன். கருத்திட விட்டுப்போய்விட்டது.

    தம் ஆலு பிரியாணி, கர்நாடகாவின் புளிஹோரையை நினைவுபடுத்தியது.

    தொடரில் வரும் தமிழ் வார்த்தைகளை ரசிக்கிறேன். நல்லா எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....