புதன், 7 ஏப்ரல், 2021

ஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உனக்குக் கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சி கொள்! ஏனெனில் உனக்கு சாதாரணமாகத் தோன்றும் வாழ்க்கையானது பலருக்குக் கனவாக இருக்கிறது.


******


ஜனநாயகக் கடமை!





காலையில் எழுந்து முதல் வேலையாக கடமையாற்றியாச்சு! வெயிலுக்கு முன்பே சென்று வரலாம் எனவும், அப்புறம் கூட்டம் வந்து விடலாம் என்றும் கிளம்பி விட்டேன்..🙂 செல்லும் வழியெங்கும் முகக்கவசம் அணிந்த தம்பதியர், இருசக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று கொண்டிருந்தனர்.


பூத் ஸ்லிப் இல்லையென்றால் ஓட்டு போட முடியாது என்று வழியில் ஒருவர் சொல்ல, பூத்துக்கு சிறிது தூரத்தில் ஒரு கும்பல்..என்னுடைய வாக்காளர் அட்டையை காண்பித்து தேடினால் கிடைக்கவில்லை..🙂 


அங்கு பணியிலிருந்த பெண்மணி ஆதிலஷ்மியா! நோட்டுல எழுதி வெச்சிருக்கேன்ப்பா! இருங்க பார்க்கறேன்! என்று தேடினார்..! கணவர் பெயர் வெங்கட்ராமனா? ஆமாங்க மேடம்! என்றேன்.. நம்பர் மட்டும் தான் தெரிந்தது..ஸ்லிப் எடுக்க முடியலை..🙂


அதற்குள் ஒருவர் நம்பர் சொல்லி ஓட்டு போட்டதாகச் சொல்ல..நானும் அப்படியே என்னுடைய நம்பர் சொன்னதும் குறித்து சரி பார்த்துக் கொண்டும் ஓட்டும் போட்டு விட்டேன்..


உள்ளே சானிடைசர் தரப்பட்டது! கிளவுஸும் தரப்பட்டது! வெளியே வரும் போது அதற்கான குப்பைத்தொட்டியில் போடும்படியும் சொல்லப்பட்டது! ஆனால் மக்கள் வழக்கம் போல் அதை வீட்டிற்கே எடுத்துச் சென்றும், வழியில் விட்டெறிந்தும் தன்னை யாரென்று நாட்டுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர்..!


பூத் ஸ்லிப் கிடைக்காத வெறுப்பில் 'ஒருவர் நாடு இப்படித் தான் போயிட்டிருக்கு' என்றும், மற்றொரு குடும்பம் 'வாங்க வீட்டுக்கு திரும்பிப் போவோம்! நாடு நாசமா போனா எனக்கென்ன' என்று சொல்லிக் கொண்டும், இரண்டு நிமிட இடைவெளியில் நான் சாதித்துக் காட்டுகிறேன் பார்! என்று முண்டியடித்துக் கொண்டும் சென்ற மக்கள்!!!


எல்லாவற்றையும் கடந்து வெளியில் வந்ததும், வழியெங்கும் கல்யாணம் முடிந்ததும் 'என்ன  மாப்பிள்ளை வந்துட்டாரா! மாட்டுப்பொண்ணு வந்துட்டாளா! என்று கேட்பது போல் என்ன ஓட்டு போட்டாச்சா! ஓட்டு போட்டாச்சா! என்று மகிழ்ச்சியுடன் கடந்த பலர்..🙂


நம் உரிமையை விட்டுக் கொடுக்காமல் ஒரு விரல் புரட்சி செய்வோம்! நல்லதே நடக்கட்டும்!


இப்படியும் சிலர்!


எனக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து அழைப்பு. ஆதார் கார்ட் இருந்தா ஓட்டு போடலாமா? என்றார்.  அது தான் 10 க்கும் மேற்பட்ட டாக்குமெண்ட்ஸை காண்பித்து ஓட்டுப் போடலாம் என்று சொல்லியிருக்காங்களே! என்று சொன்னேன்.


நீங்க எப்படி ஓட்டுப் போட்டீங்க?? என்று அவர் கேட்டதும், இன்று நடந்த கதையைச் சொன்னேன். ஓ! இவ்வளவு இருக்கா!! எங்க வீட்டுக்காரர் இதுக்கெல்லாம் மெனக்கெட மாட்டார் என்று சொன்னார்.


அதெல்லாம் பெரிய விஷயமில்லை! கூட்டமும் இல்லை! போய் ஓட்டு போட்டுட்டு வந்துடுங்க! என்று சொன்னேன். அடுத்த கேள்வியாக இங்க இருக்கிற எல்லாருக்குமே ஒரே பூத் தானா! என்று கேட்டார்..இப்படி வரிசையாக அவர் கேட்டுக் கொண்டே வந்த போதெல்லாம் நான் பூத் ஸ்லிப் தான் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.🙂


பின்பு தான் விஷயம் தெரிந்தது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்காமலேயே ஆதார் கார்டை காண்பித்து வாக்களிக்கலாம் என்று நினைத்திருக்கிறார்..!! ஆச்சரியமாக இருந்தது..!!படித்தவர்கள் இவர்களுக்கே இந்த அளவு தான் புரிதல் இருக்கிறது..!!


அவரிடம் எடுத்துச் சொல்லி முதலில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கச் சொன்னேன். அதுக்கெல்லாம் 'எங்க அவரு' அலைய மாட்டார்! வீட்டுக்கே வந்து கேட்டு அப்ளை பண்ணிப்பாங்களா! என்று கேட்கிறார். நெட்ல பண்ணலாமே! என்றேன்.. அதுக்கு நேரம் இல்லை!!! என்கிறார்.


இப்படிப்பட்ட  புரிதல் கொண்டவர்களால் நம் ஓட்டுரிமை தான் வீணாக்கப்படுகிறது..🙁 பள்ளியிலிருந்து நமக்கான உரிமைகளும், கடமைகளும் சொல்லித் தரப்பட வேண்டும்.


நண்பர்களே, இந்த நாளின் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


16 கருத்துகள்:

  1. நாங்களும் எப்போதுமே முதலில் சென்று வாக்களித்து விடுவது வழக்கம்.  இந்த முறையும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கடமையை நிறைவேற்றியமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. ஓட்டுரிமை பற்றி ஒரு பாடத் திட்டமே வைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடத் திட்டம் வைக்க வேண்டும் - உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. இப்போதுள்ள தலைமுறைகள்/முந்தைய தலைமுறைகளுக்கு வேண்டுமானால் இப்படி ஒரு பாடத்திட்டம் இல்லையே என்று தோன்றலாம். நாங்க படிச்சப்போக் குடியுரிமைப் பாடம் என்றே ஒரு பாடம் தினம் தினம் கடைசி வகுப்பில் நடைபெறும். அதில் குடியுரிமைச் சட்டம்/மற்றச் சட்டங்கள்/தனி நபர் உரிமை என்பதில் ஆரம்பித்துக் குடியரசுத் தலைவர்/பிரதமர்/ பாராளுமன்றம்/அதன் இரு சபைகள்/அவற்றின் வேலைகள்என்று ஆரம்பித்துப் பின்னர் மாநிலங்களுக்கான சட்ட மன்றங்கள்/ஆளுநர்/அவர் வேலை என்று முதல்மந்திரி/மற்ற மந்திரிகள்/மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி என அனைத்தும் சொல்லிக் கொடுத்தார்கள். அதோடு கூடச் சாலை விதிகள்/முதல் உதவி/கூட்டங்களில் உதவுதல்/தீயணைப்பு/அவசர கால நடவடிக்கை என அனைத்தும் நாடகங்களாகவும் திடீர் எனப் போடப்பட்ட திட்டங்களாகவும் செய்முறை வடிவிலும் செய்து காட்டுவார்கள். இந்தப் பாடத்திட்டங்களின் புத்தகங்கள் த.நா.குமாரசுவாமி., தா.நா.சேனாபதி, கே.ஸுமுகி, ஸி.கே தேவகி ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுக் கிடைத்தன. இதெல்லாம் எனக்குத் தெரிந்து எழுபதுகள் வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தன.

      நீக்கு
    3. மேலதிகத் தகவல்கள் நன்று கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சென்னையிலும் நெல்லையிலும்தான் குறைந்த அளவு வாக்குப்பதிவு. நெல்லையிலாவது பலர் வேலைக்காக வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கலாம், கொரோனா காலத்தில் வரமுடியாது இருந்திருக்கலாம்.

    தொலைக்காட்சியில் பார்த்ததில், arrangements நன்றாக இருந்ததுபோலத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பேர் பேசுவதை மட்டுமே செய்கிறார்கள் - வாக்குப்பதிவு செய்வதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. முயன்று ஓட்டளித்ததற்கு வாழ்த்துகள் அன்பு வெங்கட்.

    சிலசமயங்களில் எங்களுக்கும் ஸ்லிப் கிடைக்காமல், அங்கே பெயர் இல்லாமல்
    வோட் அளிக்க முடியாமல் போய் இருக்கிறது.

    வோட் அளிக்க முடிந்த சமயங்களுக்கு நன்றியாக
    நினைத்துக் கொள்கிறேன்.
    ஜன நாயகம் தழைக்க வேண்டும் என்றால் இந்தக் கடமை உணர்ச்சி வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா. ஓட்டளித்தது ஆதி! நான் இல்லை.

      உங்கள் அனுபவங்களையும் சொன்னதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நானும் காலையிலேயே சென்று வாக்கு செலுத்தினேன்.
    மாற்றுத்திறனாளிகளையும் அங்கு நன்கு கவனித்துக்கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் வாக்களித்தது அறிந்து மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. நாங்கள் உள்நாட்டுக்கடமைகளை முடிச்சுட்டு அன்னிக்குப் போய் நாட்டுக்காகவும் கடமை ஆத்திட்டு வந்தோம். கூட்டமெல்லாம் இல்லை. காத்தாடிட்டு இருந்தது. பூத் ஸ்லிப் கொடுக்கலை. ஆனாலும் தேடிக் கண்டு பிடிச்சுட்டோமுல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் வாக்களித்தது அறிந்து மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....