அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு உரிய நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - பலாச்சுளை:
சில வருடங்களுக்குப் பிறகு இந்த முறை தமிழகத்தில் இருக்கும்போது பலாச்சுளை சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. குடியிருப்பில் இருக்கும் நண்பருடைய தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து பழம் எடுத்து வந்து சுளைகளைக் கொடுத்துச் சென்றார். நெய்வேலி நகரிலிருந்த வரை சாப்பிட்ட பலாச்சுளை, மாம்பழம், சீதாப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றிற்கு அளவே இல்லை. தலைநகர் சென்ற பிறகு பலாச்சுளை சாப்பிடுவதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம். தமிழகம் வரும்போதும் எப்போதாவது தான் இப்படி பலாச்சுளை சாப்பிட வாய்ப்பு கிடைக்கும். இந்த முறை வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அடுத்த வாய்ப்பு - பலாச்சுளை சாப்பிட - எப்போதோ? தலைநகரில் இருப்பதில் சில லாபங்கள் என்றால் இப்படிச் சில இழப்புகள்!
******
ராஜா காது கழுதைக் காது - பொறக்கும்போதே வண்டியோடவா பிறந்தோம்:
பத்து பதினைந்து வயதிருக்கலாம் அந்தச் சிறுவனுக்கு. காலில் செருப்பில்லை! கைகளில் ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசி! யாருடனோ கோபமாக பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். “என்னை வண்டில ஏத்தலை இல்ல! நீங்க வண்டில ஏத்தலைன்னா என்ன? எனக்கு ஆண்டவன் கொடுத்த காலு இருக்கு! என்னால நடக்க முடியும்! என்ன பொறக்கும்போதே வண்டியோடவா பிறந்தோம்?” என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான். எதிர்முனையில் யாரோ? என்ன நடந்ததோ? ஆனால் கேட்ட கேள்வி சரிதானே! பிறக்கும்போதே வண்டியுடன் யாரும் பிறக்கவில்லையே!
******
பின்னோக்கிப் பார்க்கலாம் - ஸ்வீட் கடை:
2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட ஒரு பதிவு பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம். அவ்வப்போது முகப்புத்தகத்தில் எழுதிய சில விஷயங்களைத் தொகுத்து வலைப்பூவிலும் வெளியிட்ட நாட்கள் அவை. அப்படி எழுதிய விஷயங்களின் தொகுப்பை 2016-ஆம் வருடம் இதே நாளில் எழுதி இருக்கிறேன். அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே…
சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் திருச்சியில் இருக்கும் ஒரு மிகப்பழமையான கடை பற்றி படித்தேன். அந்த பழமையான கடை – மத்தியப் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. அக்கடைக்கு நான் பலமுறை சென்றிருக்கும் என்.எஸ்.பி. சாலையிலும் ஒரு கிளை இருக்கிறது. திருச்சியில் பல இடங்களுக்கும் சுற்றி இருக்கிறேன் என்றாலும் இக்கடை பற்றி நான் அறிந்ததில்லை. நண்பரின் வலைப்பதிவில் பார்த்தபிறகு தான் அக்கடைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நேற்று என்.எஸ்.பி. சாலை செல்ல வேண்டிய வேலை இருந்தது. கடை பற்றிய நினைவு வரவும், அக்கடையைப் பார்க்கவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்துவிட்டேன். கடை கடை என சொல்கிறேனே, என்ன கடை என்று இதுவரை சொல்லவில்லையே..... கடல் பயணங்கள் வலைப்பூவில் எழுதும் நண்பர் சுரேஷ் குமார் அவர்கள் சொன்ன “மயில் மார்க் மிட்டாய் கடை” தான் அது. 1953-ஆம் வருடம் திறக்கப்பட்ட கடை அது.
அந்த கடையில் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகைகள் கிடைக்கிறது என்றாலும், நேற்று நான் வாங்கியது – Kaju Maadhulai, Mango Burfi, Ellu Murukku, Bangalore Murukku, Karasev, Maida Biscuit – அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் – விலையும் அதிகமில்லை....... இங்கே இணைத்திருக்கும் படங்கள் – காஜு மாதுளை, மாங்கோ பர்ஃபி மற்றும் எள்ளு முறுக்கு! Bangalore Murukku –அரிசி மாவு மற்றும் ராகி மாவு, பச்சை மிளகாய் சேர்த்து செய்வார்களாம்.
முழுப்பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே…
தை பூரி – ஸ்வீட் எடு கொண்டாடு – மதுவும் மாதுவும்
******
இந்த வாரத்தின் விளம்பரம் - நல்லாசிரியர்:
ஒவ்வொரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு உண்டு என்பதைச் சொல்லும் ஒரு சிறந்த விளம்பரம். பாருங்களேன்.
இந்தக் காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், நேரடியாக யூட்யூபில் இங்கே பார்க்கலாம்!
******
இந்த வாரத்தின் ஹிந்தி - சில உறவுகளுக்கான ஹிந்தி வார்த்தைகள்:
சமீபத்தில் அலைபேசி/WhatsApp வழி ஒரு காணொளி வந்தது. பொதுவாக இப்படி வரும் காணொளிகளில் பலவற்றை, நான் பார்ப்பதே இல்லை. பெரும்பாலும் அடுத்தவர்களுக்கு சலாஹ் (யோசனை) சொல்லும் காணொளிகள் தான் - யோசனை சொல்பவர்கள் அவற்றை நிச்சயம் பயன்படுத்தி பயனடைந்தார்கள் என்று சொல்லவே முடியாது - வருவதை அப்படியே தள்ளி விட்டுவிடுவார்கள் - அது மட்டுமே அவர்கள் வேலை! இந்தக் காணொளி ஒரு பெண் தனக்குக் கிடைத்த உறவுகள் குறித்து சொல்கிறார். முழுவதும் ஹிந்தியில் என்பதால் இங்கே பகிரவில்லை. உறவுகளின் பெயர்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
ननद - நனத் - கணவரின் சகோதரி (நாத்தனார்)
भाभी - Bhabhi - பாபி - மூத்த சகோதரனின் மனைவி - அண்ணி
जेठानी - Jethani - ஜேட்டானி - கணவரின் மூத்த சகோதரரின் மனைவி
देवरानी - Devraani - தேவராணி - கணவரின் இளைய சகோதரரின் மனைவி
सास - Saas - சாஸ் - மாமியார்.
बहू - Bhahu - பகு - மருமகள்
இன்னும் சில உறவுகளின் ஹிந்தி பெயர்களை பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன்.
******
இந்த வாரத்தின் உணவு - கடா ப்ரஷாத் (Kadha Prasad):
ஒவ்வொரு குருத்வாராவிலும், இந்த கடா ப்ரஷாத் இல்லாமல் இருக்காது. வருகின்ற அத்தனை பேருக்கும் இந்த கடா ப்ரஷாத் கிடைக்கும். மிகவும் குறைவான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டாலும் இதன் சுவை அமோகமாக இருக்கும் - இதற்குத் தேவையான பொருட்கள் அதிகமில்லை - கோதுமை மாவு, சர்க்கரை, நெய் மற்றும் நீர்! குருத்வாராவில் கிடைக்கும் பிரசாதம் (கடா ப்ரஷாத்) மிகவும் குறைவு என்றாலும், சாப்பிட்டு சில மணி நேரம் வரைக்கும் அதன் சுவை நாவில் நின்று கொண்டே இருக்கும்! குருத்வாரா செல்லும்போதெல்லாம் இதனை வாங்கிச் சுவைக்காமல் வந்ததில்லை. குருத்வாரா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.
******
இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை - தடுப்பூசி:
பல வருடங்களாக நட்பில் இருக்கும் நண்பர் முரளி முகநூலில் எழுதிய தடுப்பூசி குறித்த இற்றை ஒன்று உங்கள் பார்வைக்கு! நண்பரின் எழுத்தினை ஏற்கனவே இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்! சிறப்பாக எழுதுபவர் அவர்.
பகவத் க்ருபையால் நேற்று இரண்டாம் ஏற்பளவு (second dose) Covaxin ஏற்கும் பேறு கிட்டியது. (Strict ஆகப் பார்ப்பதில்லை. 45 வயதின் கீழுள்ள எனக்கும் ஊசியை 'சுருக்'க்கினார்கள்!!!). ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தூய்மையாகவும் வைத்திருந்தார்கள், விரைவாகவும் நிறைவேற்றினார்கள். நிறைய google செய்து கெட்டுப்போகாதீர்கள். "கொரோனா ஒரு வியாதியே அல்ல, அரசின் சதித்திட்டம், ஊசி போட்டுக்கொண்டால் உதிரம் உறைகிறது, தினமும் காலையில் புண்ணாக்கு/பருத்திக்கொட்டை இவற்றைப் போட்டு அரை மணி நேரம் கொதிக்க வைத்து 15 நாள் வெறும் வயிற்றில் குடித்தால் கொரோனா நிவாரணமடைகிறது" இப்படி மறைகழன்றவர்களின் பல கருத்துக்கள் வலைத்தளத்தில் உலா வருகின்றன. "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்று நரிவெருஉத்தலையர் புறநானுற்றில் அறிவுறுத்தியதைப்போல நல்லது செய்ய இயலாவிட்டாலும் 'net'இல் வதந்தி பரப்பி கெட்டது செய்யாதிருக்க அனைவரையும் அரங்கன் அருளட்டும். "உஷாராக இருப்பது உங்கள் கடமை; உங்கள் உயிர் உங்கள் உரிமை".
அலோபதி/ஹோமியோபதி/சித்தா/யுனானி இதில் எது உங்கள் உடல்நிலைக்கு சேருகிறதோ அதைக்கொண்டு விரைவாக நலம் பெறுக. எந்த அரசுக்கும் உங்களை வதைப்பது எண்ணமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்க. சரியோ, தவறோ, உலகம் இந்த திக்கில்தான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது. வல்லுநர்கள் தங்கள் மனசாட்சியை உபயோகித்திருப்பர் என்று அறிந்து நடக்க. எங்கேயோ வூஹானில் இருந்தது, சிங்கப்பூரில் இருந்தது, பிரேசிலில் இருந்தது என்ற செய்தியாக இருந்தது, தற்சமயம் நம் அண்டையில் சம்மணம் இட்டு அமர்ந்திருக்கிறது. "Be careful" என்ற வடிவேலுவின் வசனத்தை அவரவர்கள் தங்களுக்குத் தானே சொல்லிக்கொண்டு பாதுகாப்பாக இருக்க. "மேயற மாட்டுக்கு கொம்புல (owner) புல்ல சுத்தி அனுப்ப முடியாது". "Smart ஆக இருக்க வேண்டியது மக்களின் கடமை. Government can only guide.
இருந்தாலும் கொரோனா சில நன்மைகளையும் அருளிச்செய்துள்ளது.
பல IT நிறுவன தொழிலாளர்கள் தங்கள் ஊர் சென்று WFH செய்வதால் summer இலும் metro water கிடைக்கிறது.
சில பறவைகளின் கீச்சுக் குரலைக் கேட்க முடிகிறது
டெங்கு/சிக்கன் குனியா போன்றவைகளின் பயம் மக்கள் மனதிலிருந்து அகன்று விட்டது
2 wheeler இல் வெளியே சென்று வந்தால் முகத்தில் 1/2 இன்ச் இருக்கும் கரி கோட்டிங் 1/4 இன்ச்சாக குறைந்துள்ளது.
வெங்கடேஷ் பட்டின் வழிகாட்டுதலின் படி மனைவியால் செய்யப்பட்டு சில வித்தியாசமான ஏதோ பெயரிடப்பட்ட தின்பண்டங்கள் கிடைக்கின்றன!!!
All is well that ends well.
******
நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து...
பலாச்சுளையின் படம் மிகக் கவர்கிறது. பைக்கின் படமும் அங்ஙனமே...!
பதிலளிநீக்குஆசிரியரின் பங்கு காணொளியைப் பார்த்ததும் என்று டெய்லி ஹண்ட்டில் வந்தததாக வாட்ஸாப்பில் அந்த 'ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பு ' செய்தி நினைவுக்கு வந்தது!
உறவு முறைகள் டிக்ஷனரி பின்னர் தொடர்ந்தீர்களா? சாஸ் என்றால் மாமியார்... சட்னி என்றால் மாமனாரா?!!
வழக்கம்போல முரளியின் எழுத்துகள் மிகவும் ரசிக்க வைத்தன.
ஸ்ரீராம்! // சட்னி என்றால் மாமனாரா?!!// ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
பலாச்சுளை மற்றும் பைக் படங்கள் இணையத்திலிருந்து தான் ஸ்ரீராம். கடா ப்ரஷாத் படமும்.
நீக்குஉறவு முறைகள் - டிக்ஷனரி இனிமேல் தொடர வேண்டும்.
சட்னி என்றால் மாமனாரா? ஹாஹா.
நண்பர் முரளியின் எழுத்தினை ரசித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சட்னி என்றால் மாமனாரா? :) நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குபலாச்சுளை படம் கவர்கிறது. மாயவரத்தில் இருக்கும் போது பலா சீஸனில் இரண்டு மூன்று நண்பர்கள் வீட்டிலிருந்து கொடுத்து விடுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருக்கும்.
காணொளி அருமை. குருத்வாரா பிரசாதம் சாப்பிட்டு இருக்கிறேன், நன்றாக இருக்கும்.
முகநூல் நண்பர் பதிவு அருமை.
நெய்வேலியில் இருந்தவரை பலாவிற்கு கவலையில்லை. தில்லி சென்ற பிறகு சுவைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது கோமதிம்மா.
நீக்குகடா பிரஷாத் - சிறப்பாக இருக்கும்.
நண்பர் முரளியின் முகநூல் பகிர்வை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குநண்பர் முரளி அவர்களின் எழுத்தை வாசித்திருக்கிறோமெ உங்கள் தயவினால்...மிக நன்றாக நகைச்சுவையாக எழுதுபவர்...இன்றைய பகுதியையும் ரசித்தேன்.
கடா பிராஷாத் - கிட்டத்தட்ட நேரடியாக கோதுமை மாவில் செய்யும் ஹல்வா போன்ற இனிப்பு இல்லையா? நான் முதல்முறை (குருத்வாராவில் இல்லை, உறவினர் குருத்வாரா பிரசாதம் என்று கொடுத்தார்) செம டேஸ்ட். என் பாட்டி உறவினர் யாரேனும் எதிர்பாராமல் வந்தால் டக்கென்று கோதுமை மாவை நெய்யில் வறுத்து சர்க்கரை போட்டு நெய் விட்டு ஹல்வா போன்று செய்வார். என்ன அதில் கொஞ்ச்ம முந்திரி வறுத்துப் போடுவார். உறவினர் கொடுத்த பிரசாதத்தில் பருப்பு இல்லை ஆனால் செம டேஸ்ட்.
கீதா
வணக்கம் கீதா ஜி.
நீக்குநண்பர் முரளியின் பகிர்வை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.
கடா ப்ரஷாத் - நேரடியாக கோதுமை மாவில் செய்வது தான். முந்திரி இல்லாமல்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
திருச்சி ஸ்வீட் கடையில் வித்தியாசமான ஸ்வீட்ஸ்...அந்தப் பதிவும் பார்த்தேன்.. ஸ்வீட் நல்லாருக்கு...பங்களூர் முறுக்கா? அதுவும் நல்லாருக்கு. இங்கு கிடைக்கிறது ஆனால் வாங்கியதில்லை. ராகி மாவு போட்டு இங்கு நிறைய ஸ்வீட், உப்பு பதார்த்தங்கள் கடைகளில் பார்க்க முடிகிறது.
பதிலளிநீக்குதஹி பூரி - தை பூரி - ஹா ஹா ஹா ஹா இங்கு நம்மவர்கள் ஹிந்தி வார்த்தைகளை எழுதுவதே வேடிக்கையாஅக இருக்கும்..
ஹிந்தி வார்த்தைகளில் கணவனின் சகோதரமனைவி தெரிந்து கொண்டேன்.
பலாச்சுளை மிகவும் பிடிக்கும். இங்கும் கிடைக்கிறது. படம் செமையா இருக்கு..
நல்லாசிரியர் காணொளி மிக அருமை!
கீதா
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கொரோனா சில நன்மைகள் : உண்மை தான்...
பதிலளிநீக்குகாணொளியும் மற்ற பகுதிகளும் அருமை...
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பலாச்சுளை நான் இந்த வருடம் சாப்பிடவில்லை .காய்கறி
பதிலளிநீக்குவாங்குவதற்கே வாச்மேன் தயவு தேவை
காஜு மாதுளை, கேள்விப்பட்டதில்லை நானும் திருச்சி என்பதால் இந்தக் கடையைப் பார்த்த ஞாபகம் இல்லை ...ம் எப்போ கொரோன போகுதோதெரியலை வீட்டு எல்லையே தாண்ட முடியலை
மற்ற விவரங்கள் அழகான தொகுப்பு
இங்கே பலாச்சுளை மற்றும் நுங்கு வீட்டிற்கே வந்ததால் சுவைத்தேன். வெளியே செல்வது மிகவும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே.
நீக்குதிருச்சி கடை - இரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் வலப்பக்கம் இருக்கிறது. அது தவிர என்.எஸ்.பி. சாலையில் ஒரு கிளையும், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு கிளையும் தற்போது இயங்குகின்றன.
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பலாச்சுளை வீட்டிலேயே மரங்கள் இருப்பதால் வருடம் தோறும் சுவைப்பதுண்டு மட்டுமில்லை பல வித செய்முறைகளும் செய்வதுண்டு.
பதிலளிநீக்குநல்லாசிரியர் காணொளி மிகவும் ரசித்தேன்.
கொரோனா நன்மைகள் இருப்பதாயினும், விரைவில் ஒழிந்து நார்மல் வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோமோ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.
ஸ்வீட் எல்லாமே புதுமையாக இருக்கின்றன.
எல்லாமே அருமை
துளசிதரன்
பலாமரம் வீட்டில் இருப்பதால் - ஆமாம் வீட்டிலேயே இருப்பதால் விதம் விதமாக சுவைக்க முடியும்.
நீக்குகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரொம்பப் பிடிச்சது பலாச்சுளை. 2,3 வருஷங்கள் ஆகிவிட்டன, சாப்பிட்டு. மயில் மார்க் கடைக்குப் போகணும்னு தெப்பக்குளம் பக்கம் போறச்சே எல்லாம் நினைச்சுப்பேன். ஆனால் மறந்துடும். முக்கியமாக் காஜூ மாதுளை எப்படி இருக்குனு பார்த்தாகணும். :)
பதிலளிநீக்குகாஜூ மாதுளை - :) வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள் கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காஃபி வித் கிட்டு - பல்சுவை. நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஇந்த வருடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பலாப்பழம் வாங்கினேன். நன்றாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 450 ரூபாய்க்கு இரண்டு பலாப்பழங்கள் வாங்கினேன். முதன் முறையாக சொதப்பிவிட்டது.
நீங்க நுங்கையும் சுவைக்க மறந்துடாதீங்க.
மயில் மார்க் கடையில், பூந்தி வாங்கிச் சாப்பிட்ட நினைவு (திருச்சிக்கே உரிய பூந்தி...பெரிது பெரிதாக இருக்கும்)
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குபலாப்பழம் வாங்கியே பல வருடங்கள் ஆகிவிட்டது. நெய்வேலி சென்றால் நண்பர்கள் வீட்டிலிருந்தே பழம் கிடைத்து விடும் இப்போதும்! போகத் தான் இயலவில்லை.
இந்த சீசனில் நுங்கும் சுவைத்து விட்டேன். ஒன்று ஐந்து ரூபாய். சுவையாகவே இருந்தது.
ஆமாம் மயில் மார்க் பூந்தி பெரியதாக இருக்கும். நானும் சுவைத்திருக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பலாப்பழம் உங்களுக்கு வந்ததின் படமா? சூப்பர். நல்ல சுவையான பலாப்பழமாக இருந்திருக்கும். படத்தைப் பார்த்தவுடன் இன்னொரு பலாப்பழம் வாங்குவோம் என்று தோன்றுகிறது. மாத இறுதியில் வாங்க முயலணும். (கொண்டுவருவதுதான் கஷ்டம். பெண், வண்டியைக் கொண்டுவருவாள். ஆனால் இப்போ வருவது கடினம். இத்தனைக்கும் வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுதான்)
பதிலளிநீக்குஇந்தப் படம் இணையத்திலிருந்து - சுவைப்பதில் இருந்த ஆர்வத்தில் படம் எடுக்கவில்லை. முடிந்த போது வாங்குங்கள். இப்போது ரிஸ்க் எடுக்க வேண்டாம் நெல்லைத்தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹிந்தியில் உறவு முறைகள் பயனுள்ள தகவல்கள்.
பதிலளிநீக்குஉறவு முறை தகவல்கள் - பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பலாச்சுளையை எங்கள் கிராமத்தில் சுவைத்த அனுபவம் உண்டு. டெல்லி வந்த பிறகு பலாச்சுளையை எப்பொழுது பார்த்தேன் என்றுகூட நினைவில் இல்லை.
பதிலளிநீக்குகிராமத்தில் சுவைத்த பலாச்சுளை - இனிமை தான். தில்லியில் எங்கே? கிடைக்க வாய்ப்பே இல்லையே இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இந்தியில் உறவு முறைகள் பிரமாதம். புனியாத், ஹம்லோக் காலத்திலிருந்து
பதிலளிநீக்குசந்தேகம் எனக்கு. தேவர் தேவர் என்கிறார்களே என்று:)
காணொளி எப்பொழுதும் போல் சிறப்பு.
மாதுளை முந்திரி சுவாரஸ்யம்.
தேவர் - கணவரின் இளைய சகோதரர்.
நீக்குகாணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பலாச்சுளை கிடைத்தது அற்புதம். இங்கேயே இருந்து இன்னும் கொஞ்சம்
பதிலளிநீக்குஉங்களுக்குக் இடைக்க வாழ்த்துகள். திருச்சி ஸ்வீட் கடை
பார்த்த நினைவில்லை.
நண்பர் முரளியின் பதிவு வெகு சிறப்பு. நல்ல எழுத்து வன்மை.
உங்கள் நண்பர்கள் அனைவரும்
வல்லமை கொண்டவர்கள்.
நன்றி வெங்கட்.
நண்பர் முரளியின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சிறு வயதில் கிராமத்திலிருந்து நிறைய பலா பழங்கள் வரும். அதை ஒரு சாக்கு போட்டு மூடி வைத்து விட்டு வாசனை வந்ததும் தரையில் ஒரு சாக்கு அலது பேப்பரை விரித்து அதன் மீது பலா பழத்தை வைத்து கைகளில் எண்ணைய் தடவி கொண்டு அம்மாவும், மாமாவும் பலா பழத்தை நறுக்கி, சுளைகளை எடுப்பார்கள். ஆனால் எனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால் நாலு சுளைகளுக்கு மேல் அம்மா தர மாட்டாள். என் கணவருக்கு மிகவும் பிடிக்கும்.குழந்தைகளுக்கு பிடிக்காது என்பதால் சாப்பிட ஆசை வரும் பொழுதெல்லாம் நாலே நாலு சுளைகள்
பதிலளிநீக்குவாங்கி தேனோடு சாப்பிடுவேன்.
திருச்சியில் வசித்திருந்தாலும் மயில் மார்க் மிட்டாய் கடைக்கு போனதில்லை.
பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி பானும்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.