சனி, 8 மே, 2021

காஃபி வித் கிட்டு-109 - தமிழகத்தில்… - தடுப்பூசி - தோஷா - வானமே வண்ணமாய் - Mother’s Day - மின்புத்தகம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணத்தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


RESPECT THE PERSON WHO EXPECT A SMILE FROM YOU…  AND SURPRISE THE PERSON WHO NEVER EXPECTED ANYTHING FROM YOU!


******




இந்த வாரத்தின் எண்ணங்கள் - தமிழகத்தில் நான்


தலைநகர் தில்லியின் சூழல் மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. பொதுவாகவே தீநுண்மியின் தாக்கம் அதிகம் என்றாலும், எனக்குத் தெரிந்த, என்னுடன் பணிபுரியும் நண்பர்கள், நெருங்கிய நட்பு வட்டம் என தாக்கம் மிகவும் அருகேயே வந்து விட்டது. அதுவும் இழப்புகள் குறித்து பேசாமல் இருப்பதே நலம் என்று தோன்றிவிட்டது. தினம் தினம் உயிரிழக்கும் நண்பர்களின் பட்டியல் பார்க்கும்போதே மனது பதட்டம் அடைந்து விடுகிறது.  கடந்த ஏப்ரல் மாதம் பதினைந்து தேதியிலிருந்தே எனக்கு நெருக்கமான சிலரின் உயிரிழப்பு மனதை அதிகமாகவே பாதித்தது.  என்னுடன் பணிபுரிந்த ஒரு தோழி - சில உடல் உபாதைகள் இருந்தாலும், நன்றாகவே இருந்தவர் - இந்த தீநுண்மி காரணத்தால் இறைவனடி சேர, அந்த இழப்பு மிகவும் பாதித்தது.  தொடர்ந்து கேட்கும் செய்திகள் அனைத்துமே பாதிப்பை அதிகமாக்கும் விதமாகவே இருந்தது.  எனது அலுவலக நண்பர்கள் பலரும் தொடர்ந்து பாதிப்புக்கு உண்டாகி இருக்கிறார்கள் - கூடவே நிறைய உயிரிழப்புகள்! வீட்டின் அருகே இருக்கும் நண்பர்களும் பாதிப்பிலிருந்து சமீபத்தில் தான் மீண்டு இருக்கிறார்கள்.  எனக்கும் ஜுரம் மற்றும் இருமல் வர, உடனடியாக பரிசோதனை செய்து கொண்டேன்.  RT-PCR சோதனை செய்து கொண்டாலும், சூழல் காரணமாக பரிசோதனை முடிவுகள் எனக்குத் தெரிய அதிக நேரமானது.  


முடிவுகள் தெரியும் வரை மனதில் குழப்பம்.  வீட்டினருக்கும் சொல்லாமல், உணர்வுகளை எனக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தேன்.  நல்ல வேளையாக 72 மணி நேரத்திற்குப் பின்னர் முடிவு வந்தது - தொற்று இல்லை என! அடுத்த நாளே திருச்சிக்குச் சென்று விட முடிவு செய்து விமானத்தில் தில்லி-திருச்சி செல்வதற்கு முன்பதிவு செய்து விட்டேன். தில்லியிலிருந்து சென்னை வந்து, திருச்சிக்கு விமானம் பிடித்து வீடு சேர்ந்த பிறகு தான் மனதில் கொஞ்சம் நிம்மதி.  மதியம் 03.35 மணிக்கு தில்லியில் விமானம் புறப்பட்டது - திருச்சி வந்து இறங்கிய போது இரவு 09.20! பத்து மணிக்குள் வீடு சேர்ந்தேன்! தமிழகம் வந்த பிறகு, ஒரு வாரம் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் ஒரு அறையில் இருக்க வீட்டினர் உடன் தொடர்பு இல்லாமல் இருந்தது கடினமாகவே இருந்தது - என்னை விட வீட்டினருக்கு! :) கொஞ்சம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.  தற்போது நலம்!  அனைத்தும் நன்மைக்கே!


நண்பர்கள் அனைவரும் கவனமாக இருங்கள்.  தீநுண்மி குறித்த விழிப்புணர்வுடன் இருங்கள்.  தலைநகரின் சூழலை நேரில் பார்த்ததால் சொல்கிறேன் - கவனம் தேவை.  சூழல் குறித்துச் சொல்லி உங்களை பயமுறுத்த வேண்டாம் என பல விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை.  கவனமாக இருங்கள் - நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் கவனமாக இருக்க வலியுறுத்துங்கள்.  முகக் கவசமும் போதிய இடைவெளியும் கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!


*****


இந்த வாரத்தின் தகவல்: தடுப்பூசி - கோவேக்ஸின்


ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி தலைநகர் தில்லியின் Dr.Ram Manohar Lohia Hospital வளாகத்தில் முதலாவது முறை தடுப்பூசி - COVAXIN போட்டுக் கொண்டேன்.  அது குறித்து லட்சங்களில் ஒருவன் என்ற தலைப்பில் ஒரு பதிவும் எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாம். மே மாதம் ஒன்றாம் தேதி இரண்டாவது Dose போட்டுக் கொள்ள வேண்டியது - ஆனால் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததால் வெளியே செல்ல வில்லை. இணைய தளங்களில் வரும் செய்திகள் - குறிப்பாக தடுப்பூசி தட்டுப்பாடு பற்றிய செய்திகள் மனதுக்கு உற்சாகம் தருபவையாக இல்லை.  பலரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை - தங்களுக்கு தெரியாத செய்திகளை நேரில் பார்த்தது போல பரப்பிக் கொண்டிருக்கிறார்களே! திருச்சியில் எங்கே COVAXIN போடுகிறார்கள் என்ற தகவலை, தோழி ஒருவர் விசாரித்து, ஒரு தனியார் மருத்துவமனையிலும், உறையூரில் இருக்கும்  அண்ணல் காந்தி பொது மருத்துவமனையிலும் கிடைக்கிறது என்று சொல்லி இருந்தார்.  நேற்று தனியார் மருத்துவமனையில் விசாரிக்க COVAXIN இல்லை COVISHIELD தான் இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள்.  சரி அரசு பொது மருத்துவமனைக்கே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தேன். 


காலையில் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டு, மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொண்டு பத்து நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து இருந்துவிட்டு வீடு திரும்பினேன்.  பத்து கிலோமீட்டர் தொலைவு வீட்டிலிருந்து மருத்துவமனை.  வீட்டிலிருந்து புறப்பட்டு, ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்ப ஆன மொத்த நேரம் ஒன்றரை மணி நேரம் மட்டுமே!  ஊசி வலியில்லாமல் போட்டுவிட்ட அந்த முன்களப் பணியாளாராகிய செவிலியருக்கு மனம் நிறைந்த நன்றி.  இரண்டு ஊசிகளும் போட்டுக் கொண்டு விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  முடிந்த வரை தீநுண்மியின் பாதிப்பு இல்லாமல் இருக்க இந்த தடுப்பூசி பயன்படும் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் நண்பர்களே!  அன்று ஒரு பெண்மணி - திருவரங்கத்தில் பேசியது - ராஜா காது கழுதைக் காது செய்தியாக இருந்தாலும் இங்கேயே - “என்ன ஆச்சு, ஊசியா போட்டுக்கிட்ட, ஊசி போட்டுக்காத, ஜூரம் வந்துடும்! விவேக் செத்ததே ஊசியால் தான்” என்று அவரே எல்லாம் தெரிந்த எமதூதன் மாதிரி சொல்லிக் கொண்டிருந்தது கேட்க, அவருக்கு எப்படிச் சொல்லி  புரிய வைப்பது என்று தோன்றியது. விவேக் எத்தனை தான் மக்களுக்குப் புரியும் படி பல நல்ல விஷயங்களைச் சொல்லி இருந்தாலும் நம் மக்களுக்குப் புரிந்தால் தானே!


*****


இந்த வாரத்தின் உணவு - TOSHA:





பனீர், மைதா, பால் போன்ற சில பொருட்களைக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பு இந்த தோஷா!  சர்க்கரைப் பாகில் ஊறிய இந்த தோஷா நன்றாகவே இருக்கும்.  செய்முறை இணையத்தில் உண்டு.  ஆசையிருப்பவர்கள் தேடலாம் - செய்யலாம் - சுவைக்கலாம்!


*****


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - வானமே வண்ணமாய்:


2016-ஆம் ஆண்டு இதே நாளில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.


ஃபேஸ்புக் – முகப்புத்தகத்தில் பல குழுமங்கள் உண்டு. குறிப்பாக புகைப்படங்களுக்கான குழுமங்கள் சிலவற்றில் நானும் இருக்கிறேன் – ”எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்று சொல்லிக் கொள்ளும் விதத்தில் மட்டுமே! குழுமத்தின் மற்ற உறுப்பினர்கள் அங்கே பகிர்ந்து கொள்ளும் படங்களை ரசிப்பதோடு சரி. சில நேரங்களில் மட்டும் Like Button-ஐ சொடுக்குவதுண்டு.....  எனது படங்களை நான் பகிர்ந்து கொண்டது ஒரு முறையோ இரு முறையோ தான்.


ஒவ்வொரு வார இறுதியில் ஒரு மையக்கரு கொடுத்து அதற்கு தகுந்த புகைப்படங்களை, உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்வார்கள்.  இது சுமார் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுவருகிறது. இந்த வாரம் அவர்கள் கொடுத்திருக்கும் மையக்கரு – வானமே வண்ணமாய்..... 


மையக்கரு எனக்கும் பிடித்த ஒன்றாக அமைந்திருக்க உடனேயே ஒரு படத்தினை – அருணாச்சலப் பிரதேசம் சென்றிருக்கும் போது எடுத்த படம் ஒன்றினை பகிர்ந்து கொண்டேன்.  நான் பயணிக்கும் பல சமயங்களில் மாலை நேரம் அல்லது காலை நேரம் – சூரியன் உதிக்கும் நேரமோ அல்லது மறையும் நேரமாகவோ அமைந்துவிட்டால் அச்சூரியன் வானத்தில் ஏற்படுத்தும் வர்ணஜாலத்தினை புகைப்படம் எடுக்காமல் விட்டதில்லை. அப்படி பல படங்கள் என்னிடத்தில் உண்டு. 


முழுப்பதிவும் படிக்க சுட்டி கீழே…


வானமே வண்ணமாய்


*****


இந்த வாரத்தின் கதை மாந்தர்கள் - நான் ஏன் போடணும் மாஸ்க்:


விமானத்தில் பணிப்பெண்கள் எவ்வளவு தான் சொன்னாலும் கேட்காமல் மாஸ்கை கழுத்தில் அணிந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் - பல முறை சொன்ன பிறகு கேட்ட கேள்வி தான் - நான் ஏன் மாஸ்க் போடணும்? இதில் அவருக்கு பயமா இருக்காம் - 36000 அடி உயரத்தில் விமானத்தில் பறக்கும்போது மூச்சுத் திணறிய ஒருவர் தொண்டையைச் செருமிய போது அவர் கேட்ட கேள்வி - “அப்பப்ப இப்படி செய்யறீங்களே?  உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? கொரானா இருக்கா?  உங்களைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு!”  அதற்கு அந்த விமானப் பணிப்பெண் - ”அவருக்கு என்ன இருக்கு இல்லைன்னு உங்களுக்குத் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? நானும் சொல்லிட்டே இருக்கேனே - மாஸ்க் போடாமலே தான் இருக்கீங்க?” என்று கேட்டபோது, எனக்கு சிரிப்பு - நல்ல கேள்வி கேட்டம்மா! நெத்தில அடிச்ச மாதிரி! 


*****


இந்த வாரத்தின் ரசித்த காணொளி - Mother’s Day:


நாளை Mother’s Day கொண்டாட்டங்கள் என எல்லா இடங்களிலும் பார்க்கிறேன்.  நாளைக்கான ஒரு காணொளி இன்றே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் - பார்த்து ரசிக்கலாமே!  எல்லா அம்மாக்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!




*****


இந்த வாரத்தின் மின்புத்தகம் - சஸ்பென்ஸ்:


இந்த வாரம் ஒரு மின்புத்தகத்தினை வெளியிட உதவி செய்தேன்.  மனதுக்கு மகிழ்ச்சி.  மின்புத்தகம் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்டவர்களே சொல்வது தானே முறை!  அதனால் தகவலுக்காக காத்திருங்கள்! 


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

28 கருத்துகள்:

  1. கவனமாக இருங்கள் வெங்கட்.  எத்தனை நாட்கள் விடுப்பு?  மே மாதம் முடிந்து பணிக்குத் திரும்புவது போல இருந்தால் நலம்.  தொற்றின் வீரியம் கொஞ்சம் குறையும் என்று சொல்கிறார்கள்.

    இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுகொண்டாயிற்று என்பது நிம்மதி.  நாங்களும் போட்டுக்கொண்டோம்.

    டோஷா என்றால் த்ரிஷா நினைவுக்கு வருகிறார்!  இந்த வாரத்தின் மின்புத்தகம் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பி விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோஷா - த்ரிஷா! ஹாஹா.. அனுஷ்கா நினைவுக்கு வரவில்லையா ஸ்ரீராம்! மறந்தால் தானே நினைப்பதற்கு என்று சொல்கிறீர்களா?

      தடுப்பூசி - நல்லது. உங்கள் பதிவிலும் படித்தேன்.

      மாதக் கடைசி வரை - பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உறவினர்களின் இழப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது...

    தொற்று இந்த மாத இறுதியில் குறைந்து விடும் என்கிறார்கள்... முழுவதுமாக ஒழியட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவினர்கள்/நண்பர்கள் என பெரிய பட்டியல் - அச்சம் தான் தனபாலன்.

      தொற்று ஒழியட்டும் - அதுவே எல்லோருடைய பிரார்த்தனையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் வெங்கட்ஜி

    அதுவும் இழப்புகள் குறித்து பேசாமல் இருப்பதே நலம் என்று தோன்றிவிட்டது. தினம் தினம் உயிரிழக்கும் நண்பர்களின் பட்டியல் பார்க்கும்போதே மனது பதட்டம் அடைந்து விடுகிறது. //

    அதே! நீங்கள் சொல்லியிருப்பது போல் பகிராமல் இருப்பதே நல்லது. நல்ல விஷயங்களைப் பேசுவோம்.

    ஹப்பா உங்களுக்குத் தொற்று இல்லை என்றாகி நீங்கள் இப்போது நலம் என்பது கேட்டு மகிழ்ச்சி. உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த நேரத்தில் குடும்பத்தோடு இருப்பது மனதிற்கு இதம். அவர்களுக்கும் மன நிம்மதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      இழப்புகள் குறித்து பேசாமல் இருந்தாலும், நினைக்காமல் இருக்க முடியவில்லை. தினம் தினம் கேட்கும் செய்திகள் அப்படி. நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கும்.

      தொற்று - நல்லவேளை இல்லை. தில்லியில் பரவல் மிக அதிகம். எனது வீட்டின் மேலே இருக்கும் நண்பர்கள் வீட்டில் அனைவருக்கும் தொற்று. மிகவும் கஷ்டப்பட்டார்கள். தொற்று பாதிப்பு ஏற்பட்ட பல நண்பர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கோவேக்சின் கிடைத்ததா சூப்பர் ஜி ஆனால் இப்போது அது தட்டுப்பாடு ஆயிற்றே...கோவிஷீல்டும் என்று தெரிகிறது.

    நாங்களும் கோவாக்சின் தான் ரெஜிஸ்டர் செய்தோம் ஆனால் அங்கு சென்று உள்ளே போகும் போது கோவிஷீல்டுதான் இருக்கு என்றார்கள். வேறு வழி ஏதோ ஒரு வேக்சின் என்று போட்டுக் கொண்டாயிற்று.

    நீங்கள் போட்டுக் கொண்ட சுட்டியை வாசித்தேன்

    //பொதுவாகவே சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு மருத்துவமனையை நாடாதவன் நான். ஜூரம் என்றால் கூட முடிந்த வரை வீட்டு/நாட்டு மருத்துவம் தான்.//

    ஹா ஹா நம்ம் வீட்டுக் கதையும் அதே தான்...

    ஜி நாங்கள் போட்டுக் கொண்டதும் அரசு மருத்துவமனையில் தான். இரு தடுப்புகள் வைத்திருந்தார்கள் ஒன்று கோவேக்சின், மற்றொன்று கோவி ஷீல்ட். நாங்கள் நின்று கொண்டிருந்த பொது (ஒரு குறிப்ப்ட்ட தூரம் வரைதான் கட்டம் போட்டு நிற்க வைத்திருந்தார்கள் அப்புறம் எல்லாம் வழக்கமான க்யூ....ஒட்டிக் கொண்டு, எட்டிப் பார்த்தல், நான் உங்கள் முன் என்று சொல்லி சண்டை போடுவது இப்படி..)
    ஒரு குழு சிபாரிசு குழு வந்தது...அப்போதுதான் கோவாக்சின் தடுப்பிற்குள் ஒரு நீல நிற டப்பா (ஊசி டப்பா) கொண்டு சென்று வைக்கப்பட்டதைப் பார்த்தோம். சரி நாம் ரெஜிஸ்டர் செய்ததுதான் என்று நினைத்தால் அது அந்தக் குழுவினரை அங்கு கொண்டு சென்று போட வைத்தார்கள். எங்கள் டர்ன் வந்த போது கோவிஷீல்ட் தடுப்பிற்கு அனுப்பிவிட்டார்கள்! கர்ர்ர்

    சில நிமிடங்கள் காத்திருந்த போது, பத்துப் பன்னிரெண்டு பேர் கொண்ட குழு வந்தது. வரிசையின்றி, அவர்களில் இரண்டு பேரும், காத்திருந்தவர்களில் இரண்டு பேர் என உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்கள் - அவர்கள் அனைவரும் சிபாரிசில் வந்தவர்கள் - சிபாரிசு இல்லா இடம் ஏது - இறப்பதற்கு மட்டும் தான் இன்னும் சிபாரிசு வரவில்லை! அங்கே வந்து தங்கள் திறமைகளைக் காண்பித்த சிலரையும் பார்க்க முடிந்தது - ”நான் இந்த மந்திரியின் நான்காம் மனைவியின் ஐந்தாம் தம்பி, எனக்கு முதல்ல ஊசி போடுங்க” போன்ற கேடுகெட்ட கதைகள் தான்! //

    அதே அதே ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் டோஸ் எனில் கோவிஷீல்ட் தான் என்று சொன்னார்கள் திருச்சி மருத்துவமனையில். நான் இரண்டாவது டோஸ் என்பதால், அதுவும் முதல் டோஸ் கோவேக்ஸின் என்பதால் போட்டு விட்டார்கள். பெரிய மருத்துவமனையில் பிரச்சனைகள் இல்லை. திருவரங்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கும்பல் அதிகம். ஐந்து மணி நேரம் கூட ஆகிறது கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மாஸ்க் பற்றி சொல்லவே வேண்டாம் ஜி மக்கள் இன்னும் உணரவில்லை.

    காணொளி ரசித்தேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஸ்க் - அதை கழுத்தணி போலவே பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனை தான் கீதாஜி.

      காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அட! சஸ்பென்ஸ் என்னவென்று சொல்லிடலாமா இல்லை என் சீனியர் பானுக்கா வந்து சொல்லட்டுமா!!!?

    மிக்க நன்றி வெங்கட்ஜி!!!!! அக்காவும் நானும் சேர்ந்து எழுதிய கதை - எபியில் வந்தது - ப்ளஸ் நம்ம ஏரியாவில் சொல்லப்பட்ட கதைக் கருவுக்கு நாங்கள் இருவருமே எழுதிய தனி தனிக்கதைகள் என்று அக்கா முனைந்து வெளியிட உங்களைத் தொடர்பு கொண்டு வெளியிட்டதற்கு அக்காவுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நான் முனைந்திருப்பேனா என்றால் கண்டிப்பா இல்லை என்றே சொல்வேன். ஸோ அக்காவுக்கும் உங்களுக்கும் தான் க்ரெடிட்ஸ்

    மிக்க நன்றி ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானும்மா பொதுவாக இங்கே வருவதில்லை - எப்போதாவது வந்தால் உண்டு. :) எல்லோருக்கும் அவரவர் வேலை - நேரம் கிடைக்க வேண்டுமே!

      விரைவில் உங்கள் மின்னூலும் வெளிவர வாழ்த்துகள் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கவனமாக இருங்கள் ஐய்யா.
    என் முழு குடும்பத்திற்கும் இரு வாரங்கள் முன்பு காய்ச்சல் வந்தது.
    மூன்று நாட்களில் சரியானபோதிலும் இரு வாரங்களாக எங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்.
    நிலமை விரைவில் சீராக வேண்டிக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் கவனமாகவே இருங்கள் அரவிந்த். விரைவில் நலம்பெற வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெங்கட்... நீங்க எழுதியிருப்பது எனக்கு இன்னமுமே கவலையா இருக்கு. நீங்க ரொம்ப ஜாக்கிரதையானவர் என்பது என் எண்ணம். நீங்க எழுதியிருப்பது மாதிரி ஒரு சில உறவினர்களும் மறைந்துவிட்டனர். ரொம்பவே கடினமான காலம்.

    விவேக் எபிசோடுக்குப் பின், எனக்கு இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள அவ்வளவு பயம். பையனிடமும் சொல்லிக்கொண்டுதான் சென்றேன். இரண்டாவது தடுப்பூசி இரண்டாம் நாள் சிறிதே வலி இருந்தது, மற்றபடி ஒன்றும் செய்யவில்லை.

    லிஃப்ட் உபயோகிப்பதை நிறுத்திவிட்டேன். இரு வாரங்களுக்குப் பிறகு, இன்றுதான் லிஃப்ட், 2 பலாப்பழம் கொண்டுவந்ததனால் உபயோகித்தேன் (வேறு யாரையும் அனுமதிக்கவில்லை).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாகவே இருக்கிறேன் நெல்லைத்தமிழன். நன்றி.

      கடினமான காலகட்டத்தில் தான் அனைவருமே இருக்கிறோம். விரைவில் சூழல் சரியாக வேண்டும் - சரியாகும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

      தடுப்பூசி - போட்டுக்கொண்டது நல்லது.

      அலுவலகத்தில் நான் லிஃப்ட் பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தற்போது திருவரங்கம் குடியிருப்பிலும் பயன்படுத்துவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. டோஷா - நான் இப்போது ஏங்குவது சென்னை தோசைக்காகத்தான்... எனக்கு டோஷா வேண்டாம் ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை தோசைக்கான ஏக்கம் - இன்னும் சில காலம் அதற்கு வாய்ப்பில்லை! வீட்டு தோசை உண்டு மகிழ்ச்சியுடன் இருங்கள் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தாங்கள் தில்லியில் இருந்து, தமிழகம் வந்தடைந்தது அறிந்து மகிழ்ந்தேன்
    நானும் இரண்டு தவனைகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன்
    தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இன்னும் நம் மக்களிடைய வரவில்லை
    கவனமாக இருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாட்ஸப் வழியான விசாரிப்பிற்கும் நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு - மெத்தப் படித்தவர்கள் கூட இப்படி இருக்கிறார்கள் என்பது வேதனை.

      அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. நீங்களும் குடும்பத்தினரும் கவனமாக இருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்று உங்கள் பதிவை கண்டதும் அதில் பகிரப்பட்ட விஷயங்களை படித்ததும் மனதிற்கு கவலையாக இருந்தது. தற்சமயம் நீங்கள் குடும்பத்துடன் தங்கள் ஊரில் நலமாக இருப்பது குறித்து சந்தோஷம் அடைந்தேன். தங்கள் மனைவி, மற்றும் குடும்பத்திற்கும் மகிழ்வாக இருக்கும். பத்திரமாக இருங்கள். விடுமுறை இந்த மாதிரி நமக்கு தேவைப்படும் போது எடுப்பவைகளை எடுத்து உடல்/மன நலம் பேணுங்கள். இரண்டு தடுப்பூசியும் நல்லபடியாக போட்டுக் கொண்டமைக்கு சந்தோஷம். இந்த தொற்று விரைவில் குறைந்து, முற்றிலும் அகல இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளோம். அனைத்தும் நலமாக நடக்கும்.

    காஃபி வித் கிட்டுவில் மற்ற பகுதிகளும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தற்போது நலமாகவே இருக்கிறேன். தொற்று விரைவில் அகலவேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும்.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அபு வெங்கட் நலமாக இருங்கள்.
    நீங்கள் தில்லியை விட்டு வந்ததே பெரிய நன்மை. தடுப்பூசியும் போட்டாச்சு. அது இரண்டாவது நன்மை.

    இங்கே தொற்று குறைந்திருப்பதாகச் சொல்லி எல்லோரும் விளையாட்டு,
    ,வெளியே , நடைப் பயிற்சி என்று போக ஆரம்பித்தாச்சு

    பேரனும், மாப்பிள்ளையும் அலுவலகம் போக வேண்டும்.

    காது கொடுத்துக் கேட்க முடியாமல்
    செய்திகள் நெருங்கியவர்களிடமிருந்து வருகின்றன.

    நிறுத்த முடியவில்லை. இனிமேல் அதைப் பகிர்வதாகவும் இல்லை.

    இறைவன் காக்கட்டும். வெளியே எங்கேயும் போகாமல்
    வீடே காப்பு என்றுதான் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக இருக்கிறேன் வல்லிம்மா. நீங்களும் பத்திரமாக இருங்கள்.

      நல்லதே நடக்க வேண்டும் - நல்லதே நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வெங்கட் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    இங்கு வந்தது நல்லது.
    நிறைய கேள்வி படும் செய்திகள் கவலை கொடுக்கிறது.
    உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

    //எல்லா அம்மாக்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!//

    நன்றி. காணொளி நிறைய விஷயங்களை அழகாய் சொல்கிறது பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாகவே இருக்கிறேன் கோமதிம்மா.

      காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. காய்ச்சல் வந்தாலே தொற்றுதான் எனும் ஐயம் இப்போது அனைவருக்குமே வருகிறது. தனிமைப்படுத்திக் கொண்டதும் சரியே. நலமென அறிந்து நிம்மதி. தடுப்பூசியின் இரண்டாவது தவணையையும் போட்டுக் கொண்டது அறிந்து மகிழ்ச்சி.

    சுற்றியுள்ளோர் கொரானாவினால் பாதிக்கப்படும் செய்திகள் நம்மைப் பதட்டத்திலேயே வைத்திருக்கின்றன. விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பப் பிரார்த்திப்போம்.

    தோஷா இனிப்பு இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காய்ச்சல் வந்தாலே கொஞ்சம் பயம் தான் வருகிறது - அனைவருக்குமே!

      தோஷா - புதிய இனிப்பை உங்களுக்குச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....